கூடி இருந்தே குடியைக் கெடுக்காதே

 

 

கூடி இருந்தே குடியைக் கெடுக்காதே

----

 

     திருக்குறளில் "புறங்கூறாமை" என்னும் ஓர் அதிகாரம். பிறரைக் கண்டபோது அவரைப் புகழ்ந்து பேசுவதும், காணாத இடத்தில், அவரை இகழ்ந்து பேசுவதும் குற்றம் ஆகும். புறம் பேசுதல் "புறங்கூறுதல்" ஆகும். பொறாமை காரணமாகப் பிறர் பொருளைக் கவர விருப்பம் கொள்ளுதல் மனத்தின் குற்றம் ஆகும். புறம் பேசுதல் என்பது மனத்தின் குற்றத்தை அடுத்து, வாக்கின் குற்றமாக வருவது.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "கூடி மகிழும்படி இனிய சொற்களைச் சொல்லி, பிறரோடு நட்புச் செய்துக் கொள்வதைத் தமக்கு நன்மை என்று அறியாதவர், புறம் பேசி, தமது சுற்றத்தாரையும் பிரிந்து போகும்படிப் பண்ணுவர்" என்கின்றது.

 

     ஒருவரோடு ஒருவர் கூடிக் களித்து, இனிய சொற்களைச் சொல்லி, நலம் பெருக வாழ அறியாதவர்கள், தாம் விரும்புகின் ஒருவரைப் பிறர் விரும்புதல் கூடாது என்னும் எண்ணத்தால், தாம் மட்டுமே ஒருவருக்கு நன்மையைச் செய்பவராகக் காட்டிக் கொண்டு, மற்ற எவரும் அவரை விட்டு நீங்கும்படி புறம் பேசியே, சுற்றத்தவரையும் பிரிந்து போகச் செய்வர். பிறர் அறியாமல் ஒருவரிடம் இல்லாத குற்றத்தையும், இருப்பதாகப் புனைந்து, மற்றொருவரிடம் கூறி, இருவருக்குள்ளும் பகைமைய உண்டாக்குவர் சிலர். இப்பட்டிப்படவர்கள் நன்றாக வாழ்பவரையும் கெடுத்து, இறுதியில் தானும் கெட்டுப் போவார்கள்.

 

     இராமாயணத்தில் வரும் மந்தரையும், மகாபாரதத்தில் வரும் சகுனியுமே இதற்கு சரியான எடுத்துக் காட்டாக விளங்குபவர்கள். மந்தரையும், சகுனியும் போன்றவர்கள் இக்காலத்தும் உண்டு. எக்காலத்திலும் இருப்பர்.

 

 

"பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர், நகச் சொல்லி

நட்பு ஆடல் தேற்றாதவர். 

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள், "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் பாடி அருளிய ஒரு பாடல்.

 

கூனி இராமன் பிரிந்து போமாறே கூறினளே,

தூநறும்பூ கொன்றைஅணி சோமேசா! - தானே

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

 

இதன் பொருள் ---

 

          தூ நறு கொன்றை பூ அணி --- தூய நல்ல அழகிய கொன்றைமலர் மாலையை அணிந்து விளங்கும், சோமேசப் பெருமானே! பக சொல்லி --- தம்மைவிட்டு நீங்குமாறு புறங்கூறி, கேளிர்ப் பிரிப்பர் --- தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர், நக சொல்லி --- கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி,  நட்பு ஆடல் தேற்றாதவர் --- அயலாரோடு நட்புக் கொள்ளுதலை அறியாதார், 

 

         கூனி --- மந்தரை என்னும் பெயரை உடைய கூனி என்பவள், தானே --- வேறு ஒருவர் தூண்டுதல் இன்றித் தானே, இராமன் --- சீராமன், பிரிந்து போமாறு --- உற்றார் உறவினர் நட்பாளர் முதலிய யாவரையும் விட்டுப் பிரிந்து காட்டிற்குச் செல்லும்படி, கூறினாள் --- (கைகேசிக்குச்) சொன்னாள் ஆகலான் என்றவாறு.

 

         இரகு குலோத்தமனான இராமபிராற்கு பட்டாபிடேக முயற்சிகள் நடக்கையில்,  இராமபிரான் தனது சிறுவயதில், வில் கொண்டு எய்த உண்டை, தற்செயலாய்த் தன் கூனின் மேல்பட வருந்திய மந்தரை என்னும் கைகேசியின் பணிப்பெண், அதனைத் தடுக்கத் துணிந்து, கௌசலை மகனாகிய இராமனிடத்தும் தன் மகனாகிய பரதனிடத்தும் வேற்றுமை நினையாத கைகேசியின் கொள்கையைத் தன் சொல்வன்மையினால் மாற்றி, இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்ல ஏவிப் பரதனுக்கு முடி சூட்டும்படி கற்பித்தாள்.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடிய நீதி சூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..

 

தக்க துரியோதனன் பால் சார்ந்த சகுனியைப் போல்,

இக் குவலயத்தில், இரங்கேசா! --- மிக்குப்

பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர், நகச் சொல்லி

நட்பாடல் தேற்றாதவர்.

 

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! இக் குவலயத்தில் --- இந்த உலகத்தில், தக்க துரியோதனன் பால் --- மேலான பதவியிலிருந்த துரியோதனனிடத்தில், சார்ந்த --- சேர்ந்திருந்த, சகுனியைப் போல் --- சகுனி மாமனைப் போல, நக சொல்லி --- மகிழும்படி இணக்கமான வார்த்தைகளைச் சொல்லி, நட்பு ஆடல் தேற்றாதவர் --- இணங்கி இருத்தலை வளர்க்கத் தெரியாதவர்கள், மிக்கு --- மிகுதியாய், பக சொல்லி --- பிரிவினை உண்டாகும்படி புறங்கூறி, கேளிர் --- உறவினரையும், நட்பினரையும், பிரிப்பர் --- வேறு பிரித்து மகிழ்வார்கள். 

         கருத்துரை --- "போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்" என்பது உலகநீதி.

 

         விளக்கவுரை --- மகாபாரதத்தில் துரியோதனன் முதலிய நூற்றுவரையும், அவர்கள் பங்காளிகளாகிய தருமன் முதலிய ஐவரையும் பகையாளிகள் ஆக்கின சகுனி மாமன், துரியோதனனுக்கு நன்மை செய்பவன் போலச் செய்த தீங்கு நாடு அறிந்ததாகும். அவர்களுள் பகையை மூட்டி, ஒரு கூட்டத்தார் மறு கூட்டத்தாரை வெறுக்கத் தூண்டினவனும் அவனே. சூதாட வேண்டினவனும் அவனே. ஐவர் அறியாமல் துரியோதனனுக்கு துர்ப் போதனை செய்து, சூதாட்டத்தில் அவர்களுடைய பத்தினியாகிய பாஞ்சாலி மற்றும் பண்ட பதார்த்தங்களை சூதில் வென்று மானபங்கம் செய்வித்தவனும் அவனே. கடைசியாகத் துரியோதனனை அவனது சுற்றத்தாரோடு அழியச் செய்து தானும் அழிவதற்குக் காரணமாயிருந்தவனும் அவனேயாம். 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...