சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாதவற்றைச் செய்தல் கூடாது

 

 

 

சிற்றின்பத்தை விரும்பி அறம் அல்லாத செயல்களைச் செய்தல் கூடாது

-----

 

     திருக்குறளில் "வெஃகாமை" என்னும் அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறள்

"அறத்தினால் வரும் நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள், பிறரிடம் உள்ள பொருளைக் கைப்பற்றுவதால் உண்டாகும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்யமாட்டார்" என்கின்றது.

 

     இங்குக் கூறி உள்ள நிலையான இன்பம் என்பது, "ஆரா இயற்கை ஆகிய அவா நீங்குவதால் உண்டாகும் நிலையான இம்மை இன்பத்தையும், மறுமை இன்பமாகிய வீடுபேற்றையும் குறித்தது. "அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்" என்றும், இன்பம் இடை அறாது ஈண்டும், அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்" என்றும் நாயனார் வலியுறுத்தி உள்ளதால், ஆசைப்பட்டால் துன்பமே வரும், ஆசையை விட்டால் நிலையான இன்பம் உண்டு என்பதைகை காட்டி நின்றது. சிறிது காலமே இருக்கும் இன்பத்தை, "சிற்றின்பம்" என்றார். அது நிலையான இன்பம் அல்ல.

 

     "ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்னும் திருமூல நாயனார் திருவாக்குக் காண்க.

 

"சிற்றின்பம் வெஃகி, அறன் அல்ல செய்யாரே,

மற்று இன்பம் வேண்டுபவர்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

வாசவன் ஓர் ஆசைகொள வந்த பலனைஇந்தத்

தேசம்அறி யாதோ? சிவசிவா! - பேசுங்கால்

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

 

 

இதன் பொருள் ---

 

     வாசவன் --- இந்திரன். ஆசை --- அகலிகைமேல் கொண்ட காதல்.

 

     இந்திரன் ஒரு ஆசையை மனத்தில் கொள்ளவும், அதனால் வந்த பயனை இந்த உலகம் அறியுமே. சொல்லப்போனால், நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள், சிற்றின்பத்தை விரும்பி அறம் அல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.

 

     பின்வருபவர்கள், பஞ்சகன்னிகைகள் என்று அழைக்கப் பெறுகின்றார்கள். இவர்களே மிகச் சிறந்த தரும்ப் பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் புராணங்களில் குறிக்கப் பெறுகிறார்கள்.

 

    1. அகலிகை,கௌதம முனிவரின் மனைவி

    2. பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்களின் மனைவி,

    3. சீதை, இராமபிரானின் மனைவி,

    4. தாரை, இராமாயணத்தில் வாலியின் மனைவி,

    5. மண்டோதரி, இலங்கேசுவரன் இராவணனின் மனைவி

 

     முதலாவதாகச் சொல்லப்பட்ட, கவுதம முனிவரின் மனைவியாகிய அகலிகை அழகில் சிறந்தவள். கற்புக்கரசி. அவளது அழகை வர்ணிக்காதவர்கள் யாருமில்லை. நாரதர் ஒருமுறை இந்திரனைக் கண்டபோது, அகலிகையின் அழகை அவனுக்கு எடுத்து உரைத்தார். அகலிகையை எப்படியாவது அடைய வேண்டும் என்று விரும்பினான் இந்திரன். பதிவிரதையான அகலிகையைச் சூழ்ச்சியின் மூலமே அடைய முடியும் என்று நினைத்து பூலோகத்துக்கு வந்தான். தான் விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தான் இந்திரன்.

 

     அதிகாலையில் ஆற்றில் நீராடி ஜபதபங்கள் செய்வது முனிவர்களுக்கு வழக்கம். இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கருதி, கவுதம முனிவரின் ஆசிரமம் முன்பு வந்து நடு இரவில் சேவல் போல் கூவினான். அதிகாலைப் பொழுது  புலர்ந்து விட்டது என்று எண்ணிய கவுதம முனிவர் ஆற்றங்கரைக்குக் காலைக் கடன் கழிக்கச் சென்றார். அகலிகையும் உடன் எழுந்து தனது காலைப் பணிகளை செய்யத் தொடங்கினாள். அந் நேரத்தில் இந்திரன் கவுதம முனிவர் வேடத்தில் உள்ளே நுழைந்தான். ஆற்றங்கரைக்கு சென்று இவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டீர்களா?” என்று கேட்டாள். இல்லை, ஏதோ பறவையின் ஒலியை கேட்டு, சேவல் என்று நினைத்து எழுந்துவிட்டேன். இன்னும் பொழுது புலரவில்லை. வா படுக்கலாம்"  என்று அருகில் அழைத்து இன்பம் கொண்டான்.

 

     ஆற்றங்கரை சென்ற முனிவர் இருள் விடியாதது கண்டு, குழப்பம் அடைந்து, தன் ஞானப் பார்வையால் நடந்ததை அறிந்து, வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். திடுக்கிட்ட அகலிகை அருகில் இருந்த இந்திரனைப் பார்த்தாள். அகலிகை தலைவிரி கோலமாக முனிவரின் காலில் விழுந்து தவறு நேர்ந்துவிட்டது என்று கதறினாள். இந்திரன் அஞ்சி, பூனை உரு எடுத்துப் போனான்.

 

     இந்திரனை கோபமாக அழைத்தார் கவுதம முனிவர். "மாற்றான் மனைவியின் மீது மையல் கொண்டு, செய்யத் தகாத காரியத்தைச் செய்ததால் உனது உடம்பெல்லாம் பெண் குறியாக மாறட்டும் என்று சாபம் கொடுத்தார். அகலிகையை நோக்கி கட்டிய கணவனுக்கும் அயலானுக்கும் வித்தியாசம் தெரியாத, உணர்ச்சி அற்ற நீ, உணர்ச்சி அற்ற கல்லாக மாறுவாய்என்று சாபமிட்டார். நான் தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனமே கிடையாதா என்று கதறினாள் அகலிகை. இராமபிரான் இவ்விடத்துக்கு வரும்போது அவர் திருப்பாதம் பட்டு விமோசனம் பெறுவாய் என்று கூறி வெளியேறினார் கவுதம முனிவர்.

 

     பெண்குறிகளோடு வெளியில் வர அசிங்கப்பட்டு மறைந்து வாழ்ந்தான் இந்திரன். தேவலோகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இந்திரனுக்காக கவுதம முனிவரிடம் சென்று முறையிட்டனர். சாபத்தை திரும்ப பெற இயலாது. இந்திரன், தேவகுருவிடம் சென்று விநாயக பெருமானுடைய மந்திரத்தைக் கேட்டு உபதேசம் பெற்றான்.  இந்திரன் உடலில் இருந்த பெண்குறிகள் எல்லாம் கண்களாக மாறியது. அதனால்  அவனுக்கு ஆயிரம் கண்கள் ஏற்பட்டது. "ஆயிரம் கண்ணான்" என்று இந்திரனுக்குப் பெயர் உண்டானது.

 

     சான்றோர் சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாத செயல்களைச் செய்யமாட்டார் என்பது பின்வரும் "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகள் பாடியுள்ள பாடலால் விளங்கும்....

 

சிற்றின்பம் சில்நீரது ஆயினும், அஃதுஉற்றார்

மற்றுஇன்பம் யாவையும் கைவிடுப, - முற்றும் தாம்

பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ?

பார் இன்பப் பாழ்ங்கும்பியில்.

 

இதன் பொருள் ---

 

     சிற்றின்பம் சில் நீரது ஆயினும் --- சிற்றின்பம் என்பது சில நேரமே இருக்கும் தன்மையை உடையது. என்றாலும், அது உற்றார் --- அந்த சிற்றின்பத்திற்கு ஆளானவர்கள், மற்று இன்பம் யாவையும் கை விடுப --- மற்ற எல்லா இன்பங்களையும் கைவிடுவார்கள். (ஆனால்) பேரின்பம் மா கடல் முற்றும் ஆடுவார் தாம் --- பேரின்பம் என்னும் பெரிய கடலிலே எப்போதும் முழ்கித் திளைத்து இருப்பவர்கள்; பார் இன்பப் பாழ் கும்பியில்  வீழ்பவோ --- உலக இன்பமாகிய நரகத்தில் வீழ்வரோ? (விழமாட்டார் என்றபடி)

 

     பேரின்பம் விரும்பினோர் சிற்றின்பத்தை விரும்பார். சிற்றின்பம் விரும்பினோர் மற்ற இன்பம் எல்லாவற்றையும் கைவிடுவர் என்பது கருத்து.              

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...