குருநாதரின் பெருங்கருணை

 

 

குருநாதரின் பெருங்கருணை

----

 

 

அடிமை வழிக்குஓர் ஆள்எனக் கொண்டு,

     அருட்பால் புகட்டி, மருட்பிறவி

அறுக்கும் படிவந்து, எழுத்து அறிவித்து,

     அஞ்சுஆறு ஏழுஎட்டுஎனும் பருவத்து

 

உடைமைப் படுத்தி, அஞ்செழுத்தும்

     உபதேசித்து, என் உயிர்க்கு உயிராய்,

உணர்வுக்கு உணர்வாய்ப் பயின்று அறியும்

     உருவில் குருவாய் உடன்கலந்து,

 

மடமை தவிர்த்து, வழிபாடு

     திருத்தி, மழலைத் திறம்திருத்தி,

மதுரக் கவி நாவரத் திருத்தி,

     வலியப் பிடிசோறு அமுதுஅருத்தி,

 

குடுமி திருத்தி எனைவளர்த்த

     குருவே வருக, வருகவே,

குடுமிச் சுடர்வேல் படை உடைய

     கோமான் வருக வருகவே.

 

         தொண்டு செய்யும் வகைக்கு என்னை ஆளாக அட்கொண்டு, அருளாகிய பாலை எனக்குப் புகட்டி, மயக்கத்தைத் தருவதாகிய பிறப்பை நான் அறுத்துக் கொள்ளும்படி வந்து, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு என்னும் வயதுப் பருவம் வந்த காலத்தில், என்னைத் தனக்கு உடைமையாகச் செய்து, எனது பக்குவ நிலைக்கு ஏற்ப ஆட்கொண்டு அருளி  (அஞ்சு வயதில் எழுத்தறிவித்தல், ஏழு வயதில் மந்திர உபதேசம் செய்து திருவைந்தெழுத்தாகிய நமசிவாய என்னும் ஒப்பற்ற மந்திரத்தை உபதேசித்து) எனது உயிருக்கு உயிராகவும், உணர்வுக்கு உணர்வாகவும் இருந்து, வெளித் தோற்றத்தில் குரு என்னும் திருவுருவத்தோடு என்னோடு கலந்து இருந்து,  என்னுடைய உயிரில் கலந்திருந்த அறியாமை என்னும் ஆணவ இருளை ஒழித்து, வழிபாட்டு நெறியிலே என்னைப் பயிற்றுவித்து, சிறுகுழந்தையைப் போல் அறியாமையால் எதை எதையோ கற்று, கற்ற வழியில் நில்லாமல், கற்றதையே பேசிக் கொண்டிருந்த என்னுடைய நிலையை மாற்றி, அறிவில் சிறந்தவனாக்கி,  நால்வகைக் கவியுள் ஒன்றாகிய இனிமை பொருந்திய மதுரகவியைப் பாடும் திறத்தை என் நாவில் நின்று உணர்த்தியருளி,  வலிந்து வந்து பிடிசோறு எனப்படும் ஞான அமுதத்தை எனக்கு ஊட்டி, என்னுடைய தலையை அலங்கரித்து, என்னை வளர்த்த குருவே வருவாயாக.  ஒளிபொருந்திய வேற்படையை உடைய கோமகனே வருவாயாக. வருவாயாக.

 

         இது குற்றாலத்திற்கு அருகில் உள்ள "திரு இலஞ்சி" என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள முருகப்பெருமான் மீது கவிராச பண்டாரத்தையா என்னும் பெரியார் பாடியருளிய "திருஇலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்" என்னும் நூலில், வாரானைப் பருவத்தில் வரும் ஒரு பாடல்.

 

         உயிர்களை ஆட்கொண்டு அருள்புரிய,  மனித வடிவில் குருநாதனாகத் திருமேனி தாங்கி, பரம்பொருளே எழுந்தருளுவான் என்பது நூல்களின் துணிபு. "அட்டாட்ட விக்கிரக லீலை" என்னும் அருட்பாடல் பாம்பன் சுவாமிகள் அருளியது. இறைவன் உயிர்களுக்கு, அறிவு விளக்கத்தைத் தரும் பொருட்டு மேற்கொள்ளும் 64 திருமேனிகளுள் "சுசி மாணவ பாவம்" என்பதும்,  "சற்குரு மூரத்தம்", "தட்சிணாமூர்த்தம்" என்பனவும் சொல்லப்படுகின்றன.

 

     திருவேரகம் என்னும் சுவாமிமலையில், முருகப் பெருமானிடம் பிரணவமந்திரப் பொருளைக் கேட்டுப் பெற மாணவ பாவத்திலே இருந்தது அந்தப் பரம்பொருள். "மாணவ பாவம்" என்றால் என்ன என்பதை உயிர்களாகிய நாம் அறிந்து விளக்கம் பெற வந்த மூர்த்தம் அது. எவ்வளவுதான் அறிவில் சிறந்தவராகக் கருதப்பட்டாலும், அவர்களுக்கும் அறிவு விளக்கம் தேவைப்படும். விளக்குக்குத் தூண்டுகோல் தேவைப்படுவது போல. அவ்வாறு தேவை உண்டாகும் போது, அதை யாரிடமிருந்து பெறுகின்றோமோ, அவரைக் குருவாக வணங்கி, மாணவ பாவத்தோடு கேட்டால்தான் பொருள் விளங்கி, அறிவு சிறக்கும்.

 

         அது போலவே,  பரம்பொருளானவர், குருநாதனாகத் திருமேனி தாங்கி, சனகாதி முனிவர்களுக்கு மெய்ப்பொருளை உபதேசித்தது தட்சிணாமூர்த்தம் என்னும் "தென்முகக் கடவுள்" திருமூர்த்தம். திருப்பெருந்துறையிலே, குருநாதனாக எழுந்தருளி இருந்து, பக்குவ ஆன்மாவாகிய மணிவாசகப் பெருமானை ஆட்கொண்டு அருள் புரிந்தது "சற்குருமூர்த்தம்".

 

         "சொல் ஆர்ந்த சற்குரு சுத்தசிவம் ஆமே" என்றும், "குருவே சிவம் எனக் கூறினன் நந்தி" என்றும் திருமூல நாயனார் தமது திருமந்திர நூலிலே தெளிவுறக் காட்டினார்.

 

         அந்த சுத்தசிவமாகிய ஐம்முகப் பரம்பொருள் தான், ஆறுமுகப் பரம்பொருளாக வந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்திதான். "தேசுதிகழ் பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதை இடப்பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி,  ஆங்கு ஒரு நாள், வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி, ஐந்து முகத்தோடு, அதோ முகமும் தந்து, திருமுகங்கள் ஆறு ஆகி" என வரும் "திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா"ப் பாடல் வரிகள் இதைனைத் தெளிவுபடுத்தும். முருகப் பெருமானுடைய திருக்கையில் விளங்கும் வேலாயுதமே, திருவைந்தெழுத்தாகிய நமசிவாயம் தான் என்பார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க

     சிவம் அஞ்செழுத்தை முந்த ...... விடுவோனே"

 

என வரும் திருப்புகழப் பாடல் வரிகளின் வழி, வேலாயுதமே திருவைந்தெழுத்து என்பதும், அதுதான், "ஞானசத்தி" என்பதும், ஆணவமே உருக் கொண்டிருந்த சூரபதுமன் மீது, அது பட்டதும், அவனை தூயவன் ஆகி, இன்றும் நாம் வணங்குகின்ற முருகப் பெருமானுடைய மயிலும் சேவலும் ஆகி, உயர் கதியைப் பெற்றான் என்பதும் தெளிவாகும். அந்த "ஆடும் பரியையும்" "அணி சேலையும் தான்" நாம் இன்று வழிபட்டு வருகின்றோம்.

 

"தீயவை புரிந்தாரேனும்,

     குமரவேள் திருமுன் உற்றால்,

தூயவர் ஆகி, மேலைத்

     தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ,

     அடுசமர் அந்நாள்செய்த

மாயையின் மகனும் ஆன்றோ

     வரம்பு இலா அருள் பெற்று உய்ந்தான்"

 

என்று நமது சொந்தப் புராணம் ஆகிய "கந்த புராணம்" கூறுமாறும் அறிக.

 

         திருஇலஞ்சி முருகன் குருநாதனாக எழுந்தருளித் தன்னை ஆட்கொண்டு அருளிய திறத்தை, கவிராச பண்டாரத்தையா என்னும் பெரியவர் மேற்குறித்த, பிள்ளைத்தமிழ்ப் பாடலில் காட்டினார்.

 

         இப் பாடலில், "உயிர்க்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய், பயின்று அறியும் உருவில் குருவாய் உடன் கலந்து" என்னும் அற்புதமான வரிகள் சிந்தனைக்கு உரியன. இறைவன் உயிருடன் அறிவில் ஒன்றாயும், உடனாயும், வேறாயும் இருப்பதன் உண்மை கூறப்பட்டு உள்ளது. 

 

         "வலியப் பிடிசோறு அமுது அருத்தி" என்னும் சொற்றொடரும், அற்புதமான செய்தியை நமக்கு அறிவுறுத்துவது. குழந்தையாக இருக்கும் போது, உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், உணவு இன்றியமையாதது. ஆனால், அதன் தேவை பற்றிய அறிவு குழந்தைக்கு இல்லாமையால் உணவு கொள்ள மறுக்கிறது. தாயானவள், குழந்தைக்கு வலிய சோறு ஊட்டி ஊட்டி வளரப்பாள். இது தாயின் கருணை. "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்றார் அப்பர் பெருமான். அன்னம் என்பது, உயிர்கள் அனுபவிக்க வேண்டிய வீட்டின்பத்தைக் (அருளுகின்ற திருவடி ஞானத்தைக்) குறிக்கும். உண்ணுகின்ற சோற்றை அல்ல.

 

     அன்னம் --- வீட்டின்பம்.

 

     "பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" என்னும் திருவாசகத்தில் "சோறு" என்பது பேரின்பம் என்னும் பொருள் பற்றியே வந்துள்ளது என்பதை அறிக. அன்னம் பாலித்தலை, சோறு இடுதலை, உணவு வழங்குதலை, "அமுது படைத்தல்" என்றே நமது முன்னோர் வழங்கினர். சோறு ஆக்குதலையும், அமுது ஆக்குதல் என்றே பெரிபுராணத்தில் குறிக்கப்பட்டு உள்ளதும் அறிந்து இன்புறத் தக்கது. அது குறித்தே, இறைவனை அமுதம் என்றே குறித்தனர். நாம் என்னவென்றே அறியாத தேவாமிர்தத்தை இது குறித்தது அல்ல என்பதை நன்கு உணர்தல் வேண்டும். தான் இறவாது நின்று பிறர் இறப்பை நீக்குதலால்.

 

தழைத்ததுஓர் ஆத்தி யின்கீழ்

         தாபரம் மணலால் கூப்பி

அழைத்துஅங்கே ஆவின் பாலைக்

         கறந்துகொண்டு ஆட்டக்கண்டு

பிழைத்ததன் தாதை தாளைப்

         பெருங்கொடு மழுவால் வீசக்

குழைத்ததுஓர் அமுதம் ஈந்தார்

         குறுக்கைவீ ரட்ட னாரே.

 

என்னும் அப்பர் தேவாரத்தில் "அமுதம் என்னும் சொல், வீடுபேற்றையே குறித்து வந்ததைக் கொண்டு, "சோறு" என்னும் சொல்லுக்கும் வீடுபேறு என்றே கொள்ளல் வேண்டும் என்பது பெறப்படும்.

 

         உயிர்கள் ஆணவமலத்தின் காரணமாக உண்மை அறிவைப் பெறமுடியாமல் துன்பத்திற்கு ஆளாகும். அறிவு என்று எண்ணிக்கொண்டு, அறிவில்லாத மடமை என்னும் அறிவற்ற செயல்களிலே ஈடுபட்டு, உண்மை அறிவை இழந்து அல்லல் உறும். அறிவுள்ளவர்கள் அறிவைப் புகட்டினால், அதை ஏற்க மறுப்பது உயிரின் இயல்பு. அதனால் தான், மாணவ நிலையில் இருக்கும் போது ஆசிரியர், தக்க தண்டனை வழங்கியாவது அறிவை நமக்குப் புகட்டுகின்றார். அதுபோல, உயிர்களுக்கு உண்மை அறிவாகிய அமுதத்தை, இறைவன் குருநாதனாக வந்து, வலியப் புகட்டி அறிவில் தெளிவை உண்டாக்குவதைத் தான், "வலிய பிடிசோறு அமுது அருத்தி" என்று இப்பாடலில் காட்டப்பட்டது.

 

         "குடுமி திருத்தி" என்னும் சொற்பொருளும் அறிந்து இன்புறத் தக்கது. தலைமுடி என்பது தூய்மையுடனும் அழகுடனும் இருக்க வேண்டியது அவசியம். "ஒண் சிகை ஞானம்" என்பார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அதன் தன்மை, குழந்தைக்குத் தெரியாது என்பதால், தாய் தினமும் அந்தக் குடுமி திருத்துகின்ற வேலையைச் செய்கிறாள். உயிர்களுக்கு, தலையாய அறிவு விளங்க வேண்டும். "தலை அறிவு இல்லேனை நெறி நிற்க, நீ தீட்சை தரவேணும்" என்பார் அருணகிரிநாதப் பெருமான். தீட்சை நெறியை நமக்கு வழங்கி, தலையாய அறிவை நாம் பெறுவதற்குத் துணை புரிவதைத் தான், "குடுமி திருத்தி எனை வளர்த்த குருவே" என்றார்.

 

         குருநாதர் என்பவர் எப்படி எல்லாம் இருப்பார், இருக்கவேண்டும் என்னும் தன்மையை உணர்த்துவது இந்தப் பாடல்.

 

         இது போலும், அறிவார்ந்த அருட்பாடல்களைச் சிந்தித்து, நமது அறிவை வளப்படுத்திக் கொள்வோமாக.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...