பாம்பின் வாய்த் தேரை
-----
திருக்குறளில் "நீத்தார் பெருமை" என்னும் அதிகாரத்துள்,
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு".
என்று அருளினார் நாயனார்.
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை" என்னும் சொற்றொடருக்கு, தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமை என்று பொருள் கண்டருளினார் பரிமேலழகர் பெருமான்.
மேலும், தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க, நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும், அழிதன் மாலைய ஆய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன் இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும் என்றும் விளக்கி அருளினார்.
நித்த அநித்தங்களின் வேறுபாட்டு உணர்வு, இம்மை மறுமை இன்பங்களில் உவர்ப்பு, வீட்டின்கண் ஆசை, யோகமுயற்சி என்பவை "சாதன சதுட்டயம்" எனப்படும்.
சாதனம் --- மெய்யறிவைப் பெறுதற்குத் துணை புரிபவை.
சதுட்டயம் --- நான்கு மடங்கு கொண்டது.
இதை,
"நித்திய அநித்திய நிண்ணயங்கள் தெரி விவேகம்,
மத்திய இகபரங்கள் வருபோகங்களில் நிராசை,
சத்தியம் உரைக்க வேண்டும், சமாதி என்று ஆறு கூட்டம்,
முத்தியை விரும்பும் இச்சை, மொழிவர் சாதனம் இந்நான்கே"
என்று "கைவல்லிய நவநீதம்" கூறும்.
நித்தியப் பொருள் ஒன்று மட்டுமே. அதை "ஒன்று அவன் தானே" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அந்த ஒன்று அறிவுக்கு மட்டுமே புலனாவது. அதனால் வருவது இன்பமே.
அநித்தியப் பொருள்கள் பலப்பல. அவை புலன்களுக்குப் புலனாவன. அநித்தியப் பொருள்களால் வருவது இன்பம் போன்ற துன்பமே. துக்கசொரூபமானவற்றை எல்லாம், இன்பம் தருவனவாக எண்ணி மகிழ்ந்து, இறுதியில் துன்பத்தையே சந்திப்பது ஆன்ம இயல்பு.
நாள்தோறும் பலப்பல நினைவுகளில் வாழ்க்கை நடக்கின்றது. திருவருள் துணை நின்றால், நினைப்பவை ஈடேறும். இன்பமே மிகுந்து இருக்கும். திருவருள் துணை இல்லாததால், நினைப்பவை ஈடேறுவதில்லை. இன்பத்தையும் தருவதில்லை. துன்பத்தையே தருகின்றன.
அநித்தியப் பொருள்கள் மீது கொண்ட நினைவை, அகப்பையாகவும், திருவருளைக் அதனுடைய காம்பாகவும் உருவகப் படுத்தினார் அப்பர் பெருமான். திருவருள் ஆகிய காம்பு இல்லாத அகப்பையால், கருதிய எதையும் முகக்க முடியாது. எனவே, "காம்பு இலா மூழை போலக் கருதிற்றே, முகக்கமாட்டேன்" என்றார். அப்படி, கருதியவற்றை எல்லாம் முகந்து அனுபவிக்க முடியாதபோது, "பாம்பின் வாய்த் தேரை போல, பலப்பல நினைக்கின்றேன்" என்றார்.
இதே கருத்தினை நமக்கு அறிவுறுத்துகின்ற அருணை வள்ளல் ஆகிய அருணகிரிநாதப் பெருமான், தம்மை, "அரா நுகர வாதை உறு தேரை" என்றார் தமது திருப்புகழ்ப் பாடல் ஒன்றில்.....
அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும்
அவார், கனலில் வாழ்வு என்று ...... உணராதே,
அரா நுகர வாதை உறு தேரை கதி நாடும்
அறிவாகி, உ(ள்)ள மால்கொண்டு, ...... அதனாலே
சிவாய எனும் நாமம் ஒருகாலும் நினையாத,
திமிர ஆகரனை வாஎன்று......அருள்வாயே.
திரோத மலம் மாறும் அடியார்கள், அருமாதவர்
தியானம் உறு பாதம் ...... தருவாயே.
இதன் பொருள் ---
ஆசை உண்டாகி, துன்பத்தை விளைவிக்கின்ற மண், பெண், பொன் என்ற மூன்றும் பற்றி, அதனால் வரும் வாழ்வு நெருப்பு மயமானது என்று உணராமல், பாம்பின் வாய்த் தேரை துன்புறுவது போல் துன்புற்று, அந்த நிலையில் இன்பத்தை நாடும் அறிவுடன் உள்ள மயக்கத்தைக் கொண்டு, அதனால் “சிவாய” என்ற சிறந்த மந்திரத்தை ஒரு முறையாவது நினையாத அஞ்ஞானம் நிறைந்த அடியேனை “வருக” என்று அழைத்து அருள்புரிவீர். அவ்வாறு அழைத்து, திரோதமல நீக்கமுடைய அடியார்களும், அரிய பெரிய தவசீலர்களும் தியானம் செய்கின்ற தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.
அரா நுகர வாதை உறு தேரை கதி நாடும் அறிவு ஆகி ---
பாம்பு விழுங்குகின்றபோது துன்பப்படுகின்ற தேரையின் நிலையில் இருந்துகொண்டு இன்பத்தை விரும்பும் அறிவுடையவனாகி (விடாமல் ஆண்டுகொண்டு அருள்வாய் என்று முருகப் பெருமானை வேண்டுகின்றார் அருணகிரிதாநப் பெருமான்).
பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் மகிழ்ச்சிபோல், இயமன் பாசக் கயிற்றில் அகப்பட இருக்கும் உயிர்கள், சிறுசிறு இன்பங்களைக் கண்டு மயங்கி அறிவிழந்து கேட்டினை அடைகின்றன.
ஆன்மாவானது அடையும் இந்த அவல நிலையைத் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வருமாறு பாடி அருளுகின்றார்.
செடிகொள்நோய் யாக்கைஅம் பாம்பின்வாய்த்
தேரைவாய்ச் சிறுபறவை
கடிகொள்பூந் தேன்சுவைத்து இன்புறல்
ஆம்என்று கருதினாயே,
முடிகளால் வானவர் முன்பணிந்து
அன்பராய் ஏத்தும் முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம்,
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.
இதன் பொருள் ---
முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
ஓம்பினேன் கூட்டை வாளா,
உள்ளத்துஓர் கொடுமை வைத்தே
காம்புஇலா மூழை போலக்
கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின்வாய்த் தேரை போலப்
பலபல நினைக்கின் றேனை
ஓம்பி, நீ உய்யக் கொள்ளாய்,
ஒற்றியூர் உடைய கோவே.
என்று அப்பர் பெருமான் தமது தேவாரப் பாடலில் காட்டுகின்றார்.
இதன் பொருள் ---
உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பான வளைவான செய்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டு இவ்வுடம்பினைப் பயனற்ற வகையில் பாதுகாத்துக்கொண்டு , காம்பு இல்லாத அகப்பை முகக்கக் கருதியதனை முகக்க இயலாதவாறுபோல , உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதேனாய்ப் பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை விரைவில் தான் அழியப் போவதனை நினையாது வேறு என்னென்னவோ எல்லாம் நினைப்பதுபோல எண்ணாத பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை ஓம்பி அடியேன் உய்யும் வண்ணம் ஒற்றியூர்ப் பெருமானாகிய நீ அருளவேண்டும்.
மேற்குறித்த பாடல் கருத்துக்களை வைத்து, பின்னாளில், மறைஞானசம்பந்தர் பாடிய பாடல் வருமாறு....
பாம்பு அழல் வாயினால் பற்ற, மண்டுகம்
தேம்பிடும் துயர் உறும், சீவன் தேயும் நாள்
ஓம்பிட வல்லரே, உற்ற மற்றை யார்?
போம்பொழுது அருந்துணை புரிந்த புண்ணியம். --- சிவதருமோத்தரம்.
இதன் பொருள் ---
பாம்பானது தனது கொடிய வாயினால் தவளையைப் பற்றி உண்ணப் புகவும், அந்த நேரத்தில் தவளை மெலிந்து வருந்தும். மரணம் சம்பவிக்கும் நாளில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? உற்றவர்களாக இருந்த மற்ற யாராலாவது காப்பாற்ற முடியுமா? இல்லை. இல்லை. உயிர் உடலை விட்டுப் போகும்பொழுதில் ஒப்பற்ற துணையாக வருவது, அவன் செய்த புண்ணியம் மட்டுமே ஆகும்.
"விவேக சிந்தாமணி" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
அடுகரி தொடர வீழ, ஐந்தலை நாகம் காண
இடிகிணற்று அறுகின் வேரைப் பற்றி நான்றிட, அவ் வேரைக்
கடுகஓர் எலியும் வந்து கறித்திட, அதில் நின்றோனுக்கு
இடை துளி தேன்நக்கு இன்பம் போலும்இப் பிறவி இன்பம்.
இதன் பொருள் ---
ஒரு மனிதன் ஒரு காட்டிலே சென்றபோது, அவனை ஒரு யானை கண்டு துரத்த, அதற்கு அஞ்சி, அவன் ஓடி ஓர் பாழும் கிணற்றினைக் கண்டு, அதில் குதித்துத் தப்பலாம் என்று கருதிய பொழுது, கிணற்றில் உள் இருந்து ஐந்தலை நாகம் சீறுவதைக் கண்டு, கீழே விழுந்தாலும், நாகம் கடித்து இறப்பது உறுதி என்று எண்ணி, மேலிருந்து அதில் தொங்கிக் கொண்டு இருந்த அறுகின் வேரைப் பற்றிக் கொண்டு, கிணற்றின் மேலே தொங்கினான். அவனைத் துரத்தி வந்த யானையும் கோபத்தோடு மேலே நிற்கின்றது. அப்பொழுது அவன் பற்றியிருந்து அறுகின் வேரை, ஓர் எலி வந்து கடித்து அறுக்கிறது. அப்போது அந்த மனிதன், "இப்போது நாம் பற்றி உள்ள அறுகம் வேர் அறப் போகின்றது. கீழே குதித்துத் தப்பலாம் என்றால் ஐந்துதலை நாகம் சீறிக்கொண்டு நிற்கின்றது. மேலே ஏறலாம் என்றாலோ யானை நிற்கின்றது. ஆதலால், நாம் எவ்வகையிலும் உயிர் துறப்பது உறுதி" என்று நினைத்துக் கொண்டான். அந்த நேரம் பார்த்து, அவன் தலைக்கு மேல் வளர்ந்து இருந்த மலக்கிளையில் உள்ள தேன்கூட்டில் இருந்து ஒரு துளி தேன் அவனுடைய தோள் மீது விழுகின்றது. அவ்வாறு விழுந்த மாத்திரத்தில், அவன் பலவகையான இன்னல்களுக்கு இடையில் இருந்தும், தான் சாவதற்குள் அந்தத் தேனை நக்கி, அதன் இனிமையை அனுபவிக்கலாம் என்று விரும்பி, அத் தேன் துளியை நாவினால் நக்கினான்.
அந்த மனிதன் பெற்ற இன்பத்தைப் போல, உலகில் மனிதன் அனுபவிக்கின்ற இன்பம் இருக்கின்றது. கொஞ்ச நேரம் இன்பமாக இருந்தால், பின்னாலேயே துன்பம் வந்து நேருகின்றது. எந்த இன்பமும் நீடித்த இன்பமாக இருந்தது இல்லை.
எனவே, மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும், நிலையற்றதாகிய இந்த உலக இன்பத்தைப் பெரிதாக எண்ணாமல், எப்பொழுதும் நிலையான பேரின்பத்தைத் தேடவேண்டும்.
"விவேக சிந்தாமணி" என்னும் நூலில் வருகின்ற இன்னொரு பாடல்...
கொண்டு விண் படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன்தேரை,
மண்டு தேரையின் வாய்தனில் அகப்படு தும்பி,
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.
இதன் பொருள் ---
அடுத்து வருகின்ற மரணம் முதலிய துன்பங்களுக்கு உட்பட்டு இருந்தும், அற்பமாகிய போகங்களை அனுபவிக்கும் மனிதருடைய நிலையற்ற இன்பமானது எத்தகையது என்றால், தேனைப் பருகுவதற்கு வாயில் கொண்ட ஒரு வண்டு, ஒரு தவளையின் வாழில் அகப்பட, அந்தத் தவளையானது, வண்டைக் கவ்வியபடியே, ஒரு பாம்பின் வாழில் சிக்க, அப் பாம்பு அத் தவளையைக் கவ்வியபடியே ஒரு கருடன் வாயில் அகப்பட, அக் கருடன் எல்லாவற்றுடனும் அப் பாம்பை தூக்கிக் கொண்டு வானில் பறந்து செல்கின்றது. அந்த கருடனின் வாயில் அகப்பட்ட பாம்பும், பாம்பின் வாயில் சிக்கிப் பயந்து போய் உள்ள தவளையும், தவளையின் வாயில் வண்டு தனது வாயில் உள்ள தேனைச் சுவைத்து அனுபவிக்கும் அற்ப சுகத்தைப் போன்றது.
நினைவெல்லாம் "நித்தியா" என்று அமைந்துவிட்டால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை. நித்தியப் பொருளாக உள்ளவன் இறைவன்.
நினைவெல்லாம் "நித்தியாநித்தியா" என்று அமைந்துவிட்டால் எந்நாளும் துன்பமே.
நித்தியாநித்தியா = நித்திய+அநித்தியா. நித்தியமும் நாம் கண்டு அனுபவிக்கும் அநித்தியப் பொருள்கள் "நித்தியாநித்தியம்".
நித்தியம் --- தினமும், அழிவற்ற பொருள்.
No comments:
Post a Comment