அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முகிலைக் காரை (திருநெய்த்தானம்)
முருகா!,
மாதர் மயலில் முழுகி இருந்தாலும்,
தேவரீரது திருவடிகளை மறவேன்.
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன ...... தனதான
முகிலைக் காரைச் சருவிய குழலது
சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ
முனையிற் காதிப் பொருகணை யினையிள
வடுவைப் பானற் பரிமள நறையிதழ்
முகையைப் போலச் சமர்செயு மிருவிழி......குழைமோதத்
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
பருகிக் காதற் றுயரற வளநிறை
துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...களிகூரச்
சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத
நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை
துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா
செகசெச் சேசெச் செகவென முரசொலி
திகழச் சூழத் திருநட மிடுபவர்
செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
கலசத் தாமத் தனகிரி தழுவிய
திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முகிலைக் காரைச் சருவிய குழல்அது
சரிய, தாமத் தொடைவகை நெகிழ்தர,
முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர்...... முகம்வேர்வ,
முனையில் காதிப் பொருகணை யினை,யஇள
வடுவை, பானல் பரிமள நறைஇதழ்
முகையைப் போலச் சமர்செயும் இருவிழி......குழைமோதத்
துகிரைக் கோவைக் கனிதனை நிகர்இதழ்
பருகி, காதல் துயர் அற, வள(ம்)நிறை
துணைபொன் தோளில் குழைவுற, மனமது...களிகூரச்
சுடர்முத் தாரப் பணி அணி ம்ருகமத
நிறைபொன் பாரத்து இளகிய முகிழ்முலை
துவளக் கூடித் துயில்கினும் உனதுஅடி...... மறவேனே.
குகுகுக் கூகுக் குகுகுகு குகு என
திமிதித் தீதித் திமிதி என் முரசொடு
குழுமிச் சீறிச் சமர்செயும் அசுரர்கள் ...... களமீதே
குழறிக் கூளித் திரள் எழ, வயிரவர்
குவியக் கூடிக் கொடுவர, அலகைகள்
குணல் இட்டு ஆடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா!
செகசெச் சேசெச் செக என முரசொலி
திகழச் சூழத் திருநடம் இடுபவர்,
செறிகண் காளப் பணிஅணி இறையவர் ...... தருசேயே!
சிகரப் பாரக் கிரி உறை குறமகள்
கலசத் தாமத் தனகிரி தழுவிய
திருநெய்த் தானத்து உறைபவ! சுரபதி ...... பெருமாளே.
பதவுரை
குகுகுக் கூகுக் குகுகுகு குகு என, திமிதித் தீதித் திமிதி என் முரசொடு குழுமி --- குகுகுக் கூகுக் குகுகுகு குகு எனவும், திமிதித் தீதித் திமிதி எனவும் ஒலிக்கின்ற முரசுகளுடன்,
சீறிச் சமர் செய்யும் அசுரர்கள் கள(ம்) மீதே ... கோபத்தோடு, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில்
குழறிக் கூளித் திரள் எழ --- பெருங்கழுகுகள் கூச்சலிட்டுத் திரண்டு எழவும்,
வயிரவர் குவியக் கூடிக் கொடு வர --- அட்ட பயிரவர்களும் ஒன்று கூடி வரவும்,
அலகைகள் குணல் இட்டு ஆடிப் பசி கெட --- பேய்கள் ஆரவாரித்து ஆடித் தமது பசியினை ஆற்றிக் கொள்ளவும்,
அயில் விடு குமரேசா --- வேலாயுதத்தினை விடுத்து அருளிய குமாரக் கடவுளே!
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழச் சூழத் திரு நடம் இடுபவர் --- செகசெச் சேசெச் செக என்னும் தாள ஒத்துடன் பறைகள் தம்மைச் சூழ்ந்து முழங்கத் திருநடனம் புரிபவரும்,
செறி கண் காளப் பணி அணி இறையவர் --- செவி உணர்வையும் கொண்ட கண்டகை உடைய பாம்புகளை அணிகலனாக அணிந்துள்ள இறைவரும் ஆகிய சிவபெருமான்,
தரு சேயே --- அருளிய குழந்தையே!
சிகரப் பாரக் கிரி உறை குற மகள் கலசத் தாமத் தன கிரி
தழுவிய --- சிகரங்களை உடைய பெருத்த மலையில் வாழ்ந்திருந்த குறமகளாகிய வள்ளிநாயகியின், கலசத்தை ஒத்ததும், மாலைகளை அணிந்துள்ளதும் ஆகிய மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவரே!
திரு நெய்த்தானத்து உறைபவ --- திருநெய்த்தானம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்குபவரே!
சுரபதி பெருமாளே --- தேவர்களுக்குத் தலைவராகிய பெருமையில் மிக்கவரே!
முகிலைக் காரைச் சருவிய குழல் அது சரிய --- மேகத்தை ஒத்த கருநிறம் கொண்ட கூந்தலானது சரிந்து அவிழ,
தாமத் தொடை வகை நெகிழ் தர --- பதினெட்டுக் கோவை உள்ள இடை அணியானது நெகிழ்ந்து விழ,
முளரிப் பூவை --- தாமரை மலரையும்,
பனி மதி தனை நிகர் முகம் வேர்வ --- குளிர்ந்த சந்திரனைப் போன்றதும் ஆகிய முகத்தில் வேர்வை அரும்ப,
முனையில் காதிப் பொரு கணையினை --- போர்முனையில் எதிர்த்துப் போரிடுகின்ற அம்பினைப் போன்றதும்,
இள வடுவைப் --- மாவின் இளம்பிஞ்சினைப் பிளந்தது போன்றதும்,
பானல் பரிமள நறை இதழ் முகையைப் போலச் --- நறுமணமுள்ளதும், தேன் நிறைந்ததும், கருங்குவளை மலர் போன்றதும், தாமரை இதழைப் போன்றதும் போல் விளங்கி,
சமர் செய்யும் இரு விழி குழை மோத --- இங்கும் அங்குமாகச் சுழன்று போர் புரிவதைப் போல விளங்கும் இரு கண்டுகளும் காதில் உள்ள குழையோடு மோதவும்,
துகிரைக் கோவைக் கனி தனை நிகர் இதழ் பருகி --- பவளத்தையும், கொவ்வைக் கனியையும் போன்ற வாயிதழில் ஊறும் எச்சிலைப் பருகி,
காதல் துயர் அற --- காதல் நோயால் உண்டான துயரம் நீங்குமாறு,
வள நிறை துணை பொன் தோளில் குழைவுற --- வளப்பம் நிறைந்த இரு தோள்களையும் தழுவிக் குழைந்து,
மனம் அது களி கூர --- உள்ளமானது மிக்க களிப்பு அடையும்படி,
சுடர் முத்து ஆரப் பணி அணி --- ஒளி வீசும் முத்துமாலைகளை அணிந்துள்ளதும்,
ம்ருகமத நிறை --- கத்தூரி பூசப்பெற்றதும் ஆகிய,
பொன் பாரத்து இளகிய --- அழகிய பருத்து இளகி உள்ள,
முகிழ் முலை துவளக் கூடி துயில்கினும் --- அரும்பு போன்று குவிந்துள்ள முலைகள் துவளும்படியாகக் கூடித் துயிலும்போதும்,
உனது அடி மறவேனே --- தேவரீரது திருவடிகளை அடியேன் மறவேன்.
பொழிப்புரை
குகுகுக் கூகுக் குகுகுகு குகு எனவும், திமிதித் தீதித் திமிதி எனவும் முரசுகள் போரொலி செய்ய, கோபத்தோடு, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில் பெருங்கழுகுகள் கூச்சலிட்டுத் திரண்டு எழவும், அட்ட பயிரவர்களும் ஒன்று கூடி வரவும், பேய்கள் ஆரவாரித்து ஆடித் தமது பசியினை ஆற்றிக் கொள்ளவும், வேலாயுதத்தினை விடுத்து அருளிய குமாரக் கடவுளே!
செகசெச் சேசெச் செக என்னும் தாள ஒத்துடன் பறைகள் தம்மைச் சூயழ்ந்து முழங்கத் திருநடனம் புரிபவரும், செவி உணர்வையும் கொண்ட கண்டகை உடைய பாம்புகளை அணிகலனாக அணிந்துள்ள இறைவரும் ஆகிய சிவபெருமான் அருளால் வந்து அவதரித்த குழந்தையே!
சிகரங்களை உடைய பெருத்த மலையில் வாழ்ந்திருந்த குறமகளாகிய வள்ளிநாயகியின், கலசத்தை ஒத்ததும், மாலைகளை அணிந்துள்ளதும் ஆகிய மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவரே!
திருநெய்த்தானம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்குபவரே!
தேவர்களுக்குத் தலைவராகிய பெருமையில் மிக்கவரே!
மேகத்தை ஒத்த கருநிறம் கொண்ட கூந்தலானது சரிந்து அவிழ, பதினெட்டுக் கோவை உள்ள இடை அணியானது நெகிழ்ந்து விழ, தாமரை மலரையும், குளிர்ந்த சந்திரனைப் போன்றதும் ஆகிய முகத்தில் வேர்வை அரும்ப, போர்முனையில் எதிர்த்துப் போரிடுகின்ற அம்பினைப் போன்றதும், மாவின் இளம்பிஞ்சினைப் பிளந்தது போன்றதும்,
நறுமணமுள்ளதும், தேன் நிறைந்ததும், கருங்குவளை மலர் போன்றதும், தாமரை இதழைப் போன்றதும் போல் விளங்கி, இங்கும் அங்குமாகச் சுழன்று போர் புரிவதைப் போல விளங்கும் இரு கண்டுகளும் காதில் உள்ள குழையோடு மோதவும், பவளத்தையும், கொவ்வைக் கனியையும் போன்ற வாயிதழில் ஊறும் எச்சிலைப் பருகி, காதல் நோயால் உண்டான துயரம் நீங்குமாறு, வளப்பம் நிறைந்த இரு தோள்களையும் தழுவிக் குழைந்து, உள்ளமானது மிக்க களிப்பு அடையும்படி, ஒளி வீசும் முத்துமாலைகளை அணிந்துள்ளதும், கத்தூரி பூசப்பெற்றதும் ஆகிய, அழகிய, பருத்து இளகி உள்ள அரும்பு போன்று குவிந்துள்ள முலைகள் துவளும்படியாகக் கூடித் துயிலும்போதும், தேவரீரது திருவடிகளை அடியேன் மறவேன்.
விரிவுரை
இத் திருப்புகழின் முற்பகுதியில், வாழ்வில் எந்த நிலை வந்தாலும், எதை மறந்தாலும், இறைவன் திருவடியை மறவாமல் இருக்கவேண்டும் என்று அடிகளார் உணர்த்துகின்றார். "மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனுற்ற மனம் என்தனை நினைத்து அமைய அருள்வாயே" என்று ஒரு திருப்புகழில் அருணை வள்ளல் போற்றி உள்ளார்.
அடியவர்கள் எப்போதும் இறைவன் திருவடியை மறவாது இருப்பவர்கள். இந்த நிலையை அவர்கள் ஆண்டவனிடமும் வேண்டிப் பெறுவார்கள். “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல், உன்னை என்றும் மறவாமை வேண்டும்” என்று வேண்டுகின்றார் காரைக்காலம்மையார். “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்” என்கிறார் அப்பர்.
எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
எய்துக, பிறப்பில் இனிநான்
எய்தாமை எய்துகினும் எய்திடுக, இருமையினும்
இன்பம் எய்தினும் எய்துக,
வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக,
மிகுவாழ்வு வந்திடினும் வருக,
வறுமை வருகினும் வருக, மதிவரினும் வருக, அவ
மதிவரினும் வருக, உயர்வோடு
இழிவகைத்து உலகின் மற்று எதுவரினும் வருக, அலது
எது போகினும் போக, நின்
இணைஅடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம்
எனக்கு அடைதல் வேண்டும் அரசே,
கழிவகைப் பவரோகம் நீக்கும் நல்அருள் என்னும்
கதிமருந்து உதவு நிதியே
கனகஅம் பலநாத கருணைஅம் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
பெருமானே! தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற இந்த ஏழுவகைப் பிறவிகளில் எந்தப் பிறவியிலேனும் அடியேன் பிறக்கத் தயார். அது பற்றிச் சிறியேனுக்குக் கவலையில்லை. ஒருவேளை பிறவாமை வந்தாலும் வரட்டும். இம்மை மறுமையில் இன்பமே வருவதேனும் வரட்டும். அல்லது துன்பமே வருவதாயினும் சரி; அதுபற்றியும் அடியேனுக்குக் கவலையில்லை. சிறந்த வாழ்வு வந்தாலும் வரட்டும்; பொல்லாத வறுமை வருவதாயினும் நன்றே; எல்லோரும் என்னை நன்கு மதிப்பதாயினும் மதிக்கட்டும்; அல்லது சென்ற சென்ற இடமெல்லாம் அவமரியாதை காட்டி, `வராதே! திரும்பிப்போ’ என்று அவமதி புரிந்தாலும் புரியட்டும். உயர்வும் தாழ்வும் கலந்துள்ள இந்த உலகிலே மற்று எது வந்தாலும் வரட்டும்; எது போனாலும் போகட்டும். இறைவனே! எனக்கு இவைகளால் யாதும் கவலையில்லை. ஒரே ஒரு வரம் உன் பால் யாசிக்கின்றேன்.
உனது இரண்டு சரணாரவிந்தங்களையும் சிறியேன் மறவாமல் இருக்கின்ற மனம் ஒன்றுமட்டும் வேண்டும். அந்த வரத்தை வழங்கியருள வேண்டும் என்று வடலூர் வள்ளல் வேண்டுகின்றார்.
நாரதர் ஒரு சமயம் முருகனை வேண்டித் தவம் புரிந்தனர். முருகவேள் தோன்றி, “என்ன வரம்வேண்டும்?” என்று கேட்டருளினார். நாரதர், “ஐயனே! உன் திருவடியை மறவாத மனம் வேண்டும்” என்றார். முருகன் அந்த வரத்தை நல்கி விட்டு, “இன்னும் ஏதாவது வரங்கேள்; தருகிறேன்” என்றார். நாரதர் “பெருமானே! இன்னொரு வரத்தைக் கேட்கின்ற கெட்ட புத்தி வராமல் இருக்க வேண்டும்” என்று கேட்டார்.
இத் திருப்புகழின் முற்பகுதியில் பெண்களின் அழகையும், அவர் செயலையும் கூறி, அவரது முயக்கில் மயங்கி இருக்கும்போதும் முருகப் பெருமான் திருவடிகளை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று தமது உள்ள உறுதியைக் காட்டி அருளுகின்றார் அடிகளார்.
எல்லாவிதமான தீய குணங்களுக்கும், தீய செயல்களுக்கும் காரணமாக அமையும் காம உணர்வு. உள்ளத்தை மயக்கி அறிவையும் கெடுத்து, தீ நெறியில் கொண்டு சேர்ப்பது காம உணர்வு.
பொன்னாசையும் மண்ணாசையும் மனிதப் பிறவிக்கே உள்ளன. பெண்ணாசை எல்லாப் பிறவிகளுக்கும் உண்டு. எனவே, பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகிய பெண்ணாசையை இறைவன் திருவருளால் அன்றி ஒழிக்க முடியாது. இதுவேயும் அன்றி அவ்வாசை மிகவும் வலியுடையதாதலால், சிறிது அருகிலிருந்தாலும் உயிரை வந்து பற்றி மயக்கத்தைச் செய்யும். ஆதலால், இம்மாதர் ஆசை மிகமிகத் தூரத்திலே அகல வேண்டும்.
கள்ளானது குடித்தால் அன்றி மயக்கத்தை உண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை உண்டு பண்ணும். ஆதலால் இப் பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத் தரும் வலியுடைய பொருள் வேறொன்றும் இல்லை.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. --- திருக்குறள்.
கள் உண்டல் காமம் எமன்ப
கருத்து அறை போக்குச் செய்வ,
எள் உண்ட காமம் போல
எண்ணினில் காணில் கேட்கில்
தள்ளுண்ட விடத்தின், நஞ்சம்
தலைக்கொண்டால் என்ன, ஆங்கே
உள்ளுண்ட உணர்வு போக்காது,
உண்டபோது அழிக்குங் கள் ஊண். --- திருவிளையாடல் புராணம்.
இதன் பொருள் ---
கள் உண்ணுதலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன. அவற்றுள் கள் உணவானது, இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினாலும், கண்டாலும், கேட்டாலும் தவறுதலுற்ற இடத்திலும், நஞ்சு தலைக்கு ஏறியது போல, அப்பொழுதே, உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது. உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.
தீயைக் காட்டிலும் காமத் தீ கொடியது. தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம். காமத் தீயில் விழுந்தார்க்கு உய்வு இல்லை. தீயானது உடம்பை மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும் சுடும். அன்றியும் அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்து கொண்டால் நீருள் மூழ்கி அத்தீயினால் உண்டாகும் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத் தீயானது நீருள் மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும் - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும் காமம் சுடும். --- நாலடியார்.
தொடில்சுடின் அல்லது காமநோய் போல
விடில்சுடல் ஆற்றுமோ தீ, --- திருக்குறள்.
தீயானது தொட்டால் தான் சுடும். காமத் தீயானது நினைத்தாலும் சுடும். கேட்டாலும் சுடும். இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து சுடும். இதுவேயும் அன்றி நஞ்சு அதனை அருந்தினால் தான் கொல்லும். இக்காமமாகிய விஷம் பார்த்தாலும் நினைத்தாலும் கொல்லும் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும் பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.
உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடும், குறுகி மற்று அதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத் தீ அதே.
நெஞ்சினும் நினைப்பரோ, நினைந்து உளார் தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல்,
விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும், ஆதலால்
நஞ்சினும் தீயது நலமில் காமமே. --- கந்தபுராணம்.
அறம் கெடும், நிதியும் குன்றும்,
ஆவியும் மாயும், காலன்
நிறம் கெடும் மதியும் போகி
நீண்டதோர் நரகில் சேர்க்கும்,
மறம் கெடும், மறையோர் மன்னர்
வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும், வேசை மாதர்
குணங்களை விரும்பினோர்க்கே. --- விவேகசிந்தாமணி.
காமமே குலத்தினையும் நலத்தினையும்
கெடுக்க வந்த களங்கம் ஆகும்,
காமமே தரித்திரங்கள் அனைத்தையும்
புகட்டி வைக்கும் கடாரம் ஆகும்,
காமமே பரகதிக்குச் செல்லாமல்
வழி அடைக்கும் கபாடம் ஆகும்,
காமமே அனைவரையும் பகையாக்கிக்
கழுத்து அரியும் கத்தி தானே. --- விவேகசிந்தாமணி.
ஒக்க நெஞ்சமே! ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்,
மிக்க காமத்தின் வெம்மையால் வரும்
துக்கம் யாவையும் தூர ஓடுமே. --- திருவருட்பா.
"நெடுங்காமம் முற்பயக்கும் சின்னீர இன்பத்தின், முற்றிழாய், பிற்பயக்கும் பீழை பெரிது" என்றார் குமரகுருபர அடிகள். மிக்க காமம் என்பது, தொடக்கத்தில் விளைக்கின்ற சிறிது பொழுதே இருக்கும் தன்மையை உடைய இன்பத்தைக் காட்டிலும், பின்னர் விளைக்கின்ற நெடுங்காலம் வருத்துவதாகிய துன்பம் பெரியதாகும்.
புறப்பகை கோடியின் மிக்குஉறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றுஅஞ்சிக் காப்ப அனைத்து உலகும்
சொல்ஒன்றின் யாப்பார் பரிந்துஓம்பிக் காப்பவே
பல்காலும் காமப் பகை. --- நீதிநெறி விளக்கம்.
உலகம் முழுவதையும் தமது ஒரு வார்த்தையினாலே தமது வசமாக்க வல்ல ஆற்றல் படைத்த முனிவரும், காமமாகிய உட்பகை தம்மை அணுகாவண்ணம் எப்போதும் வருந்தியும் தம்மைக் காத்துக் கொள்வர். ற்றதுபோல, அறிவு உடையார் வெளிப்பகை தமக்குக் கோடிக்கு மேல் உண்டானாலும் அஞைசமாட்டார். ஆனால், அகப்பகை ஆகிய காமப்பகைக்கு அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்வர்.
தீமை உள்ளன யாவையும் தந்திடும், சிறப்பும்
தோம்இல் செல்வமும் கெடுக்கும், நல்உணர்வினைத் தொலைக்கும்,
ஏம நல் நெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்
காமம் அன்றியே ஒரு பகை உண்டு கொல் கருதில். --- கந்தபுராணம்.
காமமே கொலைகட்கு எல்லாம்
காரணம், கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம்
காரணம், கூற்றம் அஞ்சுங்
காமமே கள் உண்டற்கும்
காரணம், ஆதலாலே
காமமே நரக பூமி
காணியாக் கொடுப்பது என்றான். --- திருவிளையாடல் புராணம்.
இதன் பொருள் ---
காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாய் உள்ளது. கண்ணோட்டம் இல்லாத காமமே களவு அனைத்திற்கும் காரணமாகும். கூற்றவனும் அஞ்சுதற்கு உரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும். ஆதலாலே, காமம் ஒன்றே அவை அனைத்தாலும் நேரும் நரக பூமியைக் காணி ஆட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.
கொலை அஞ்சார், பொய்ந்நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ, ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்
காமம் கதுவபட் டார். --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
காமத்திற்கு வசப்பட்டவர்கள் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல வெட்கப்பட மாட்டார்கள். தம்முடைய பெருமையைக் காத்துக்கொள்ளவும் செய்யமாட்டார்கள். திருட்டுத் தொழில் ஒன்று மட்டுமா? அதற்கு மேலும் பலவகையான தீய செயல்களையும் புரிவார். இந்தக் காம உணர்வானது பொழியோடு பாவத்தையும் தருவது ஆகும் என்றும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு இருக்க, காமத்தால் பீடிக்கப்பட்டவர்கள் வேறு என்ன தான் செய்ய மாட்டார்கள். எல்லாத் தீமைகளையும் புரிவர்.
நிலைத்த இன்பமான பேரின்பத்தில் திளைத்து இருப்பவர்கள், உலக இன்பமாகிய பாழும் சேறு போன்ற நரகத்தில் விழமாட்டார்கள். சிற்றின்பத்தை விழைபவர் மற்ற அனைத்து இன்பங்களையும் கூடவிட்டு விடுவார்கள் என்று நீதிநெறி விளக்கப் பாடல் கூறும்.
சிற்றின்பம் சில்நீரது ஆயினும், அஃது உற்றார்
மற்று இன்பம் யாவையும் கைவிடுப, - முற்றும் தாம்
பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ?
பார்இன்பப் பாழ்ங்கும்பியில். --- நீதிநெறி விளக்கம்.
பின்வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும், கந்தர் அலங்காரப் பாடலிலும் அடிகளார், இக் கருத்தைக் காட்டி உள்ளார்...
கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக்கலவிக் கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன், முதுகூளித் திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு
டிண்டிண் டெனக் கொட்டி ஆட வெம் சூர்க் கொன்ற ராவுத்தனே.
இதன் பொருள் ---
முதிர்ந்த பேய்க்கூட்டங்கள் பேரொலி செய்து, பறையை அடித்துக் கொண்டு கூத்தாட, கொடிய சூரபதுமனைக் கொன்று அருளிய சேவகரே! கற்கண்டை நிகர்த்த சொற்களை உடையவரும், மென்மையானவரும் ஆகிய பெண்களது காம்ப் புணர்ச்சி என்னும் மதுவை நிரம்ப மொண்டு குடித்ததால் உண்டாகிய வெறியில் எனது அறிவு மயங்கினாலும், வேலாயுதத்தை மறவேன்.
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு,
ஆரமும் படி, தரம் பொறியுடன் பணிகள்,
மாலை ஒண் பவளமும், பரிமளம் கலவை ....தொங்கல்ஆட,
வாள் சரம் கண், இயலும் குழை தளம்,பளக
பார தொங்கல் அணி பெண்கள், வதனங்கள் மதி,
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள ...... சங்குமோக
சார மஞ்சள் புயமும், கிளி முகங்கள் உகிர்
பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச
தாழி என்பஅல்குலும், துளிர் அரம்பைதொடை ......ரம்பைமாதர்,
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி,
ஆடல் கொண்ட மட மங்கையருடன், கலவி
தாகம் உண்டு, உழல்கினும், கழல் உறும் கழல் .....மறந்திடேனே.
--- திருப்புகழ்.
இருள் அளகம் அவிழ, மதி போத முத்து அரும்ப,
இலகு கயல் புரள, இரு பார பொன் தனங்கள்
இளக, இடை துவள, வளை பூசல் இட்டு இரங்க....எவராலும்
எழுதஅரிய கலைநெகிழ, ஆசை மெத்த, உந்தி
இனியசுழி மடுவின் இடை மூழ்கி, நட்பொடு அந்த
இதழ்அமுது பருகி, உயிர் தேகம் ஒத்து இருந்து .....முனிவு ஆறி,
முருகுகமழ் மலர் அமளி மீதினில் புகுந்து,
முகவனச மலர் குவிய, மோகம் உற்று அழிந்து,
மொழிபதற, வசம்அழிய, ஆசையில் கவிழ்ந்து .......விடுபோதும்,
முழுது உணர உடைய முது மாதவத்து உயர்ந்த
பழுதில் மறை பயிலுவ என ஆதரித்து நின்று
முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் .....மறவேனே. ---- திருப்புகழ்.
விடம் அளவி அரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென ...... அநுராகம்
விளைய, ம்ருகமத மகுள முலைபுளகம் எழ,நுதலில்
வியர்வுவர, அணிசிதற, ...... மதுமாலை
அடர் அளகம் அவிழ, அணி துகில் அகல, அமுதுபொதி
இதழ்பருகி, உருகி, அரி ...... வையரோடே
அமளிமிசை அமளிபட, விரக சலதியில் முழுகி,
அவசம் உறுகினும் அடிகள் ...... மறவேனே. --- திருப்புகழ்.
வரிபரந்து, இரண்டு நயனமும் சிவந்து,
வதன மண்டலங்கள் ...... குறு வேர்வாய்,
மணி சிலம்பு அலம்ப, அளகமும் குலைந்து,
வசம் அழிந்து, இழிந்து ...... மயல்கூர,
இருதனம் குலுங்க, இடைதுவண்டு அனுங்க,
இனியதொண்டை உண்டு, ...... மடவார்தோள்
இதம் உடன் புணர்ந்து, மதி மயங்கினும், பொன்
இலகு நின் பதங்கள் ...... மறவேனே. --- திருப்புகழ்.
திரு நெய்த்தானத்து உறைபவ ---
மக்களால் இன்றைய காலத்தில், தில்லைஸ்தானம் என்று வழங்கப்படும் இத் திருத்தலம், சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவையாற்றில் இருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவர் : நெய்யாடியப்பர், கிருதபுரீசுவரர்.
இறைவியார் : பாலாம்பிகை.
திருஞானசம்பந்தரும், அப்பரும் வழிப்பட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற சிறப்பு உடையது. திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் ஏழாவது தலம். திருவிழாக் காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய திருத்தலம்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.
அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் பாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காடசி தருகிறாள். காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான், மூலவர் கருவறைத் திருச்சுற்றில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி கொண்டு உள்ளார். முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்.
கருத்துரை
முருகா!, மாதர் மயலில் முழுகி இருந்தாலும், தேவரீரது திருவடிகளை மறவேன்.
No comments:
Post a Comment