அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விகட சங்கட (திருப்பழுவூர்)
முருகா!
விலைமாதர் கூட்டுறவு தவிர அருள்.
தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன ...... தனதான
விகட சங்கட வார்த்தை பேசிகள்
அவல மங்கைய ரூத்தை நாறிகள்
விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம்
விதம்வி தங்களை நோக்கி யாசையி
லுபரி தங்களை மூட்டி யேதம
இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர்
சகல மஞ்சன மாட்டி யேமுலை
படவ ளைந்திசை மூட்டி யேவரு
சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே
சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
மலர வுந்தியை வாட்டி யேயிடை
தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ
திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
தமையர் தம்பியர் மூத்த தாதையர்
திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான
செனம டங்கலு மாற்றி யேயுடல்
தகர அங்கவர் கூட்டை யேநரி
திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரத
முடிய அன்பர்க ளேத்த வேயரி
யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ....மருகோனே
அமர ரந்தணர் போற்ற வேகிரி
கடல திர்ந்திட நோக்கு மாமயில்
அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
விகட சங்கட வார்த்தை பேசிகள்,
அவல மங்கையர், ஊத்தை நாறிகள்,
விரிவு அடங்கிட மாற்றும் வாறுஎன ...... வருவார்தம்
விதம் விதங்களை நோக்கி, ஆசையில்
உபரி தங்களை மூட்டியே, தம
இடு மருந்தொடு சோற்றையே இடு ...... விலைமாதர்
சகல மஞ்சனம் ஆட்டியே, முலை
பட வளைந்து இசை மூட்டியே, வரு
சரச இங்கித நேத்தி ஆகிய ...... சுழலாலே,
சதி முழங்கிட வாய்ப்பண் ஆனது
மலர, உந்தியை வாட்டியே, இடை
தளரவும், க(ண்)ணை ஆட்டும் வேசியர்...உறவுஆமோ?
திகிரி கொண்டு இருள் ஆக்கியே, இரு
தமையர் தம்பியர் மூத்த தாதையர்
திலக மைந்தரை ஏற்ற சூரரை ...... வெகுவான
செனம் அடங்கலும் மாற்றியே, உடல்
தகர, அங்கு அவர் கூட்டையே, நரி
திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் ...... அடர்பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரதம்
முடிய அன்பர்கள் ஏத்தவே, அரி
அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன்...மருகோனே
அமரர் அரந்தணர் போற்றவே, கிரி
கடல் இதிர்ந்திட நோக்கு மாமயில்
அழகொடும் பழுவூர்க்குள் மேவிய ...... பெருமாளே.
பதவுரை
திகிரி கொண்டு இருளாக்கியே --- ஆழிப் படையைக் கொண்டு பகலை இருளாகச் செய்து,
இரு தமையர் -- கர்ணன், துரியோதனன் ஆகிய இரு தமையன்களையும்,
தம்பியர் --- தம்பிமார்கள் ஆகிய கௌரவர்களையும்,
மூத்த தாதையர் --- பீஷ்மாச்சாரியார், துரோணாச்சாரியார் முதலிய பெருமக்களையும்,
திலக மைந்தரை --- துரியோதனன் குமாரர்களாகிய இலக்கண குமாரன் முதலானவர்களையும்,
ஏற்ற சூரரை --- போரை ஏற்று வந்த சூரர்களாகிய
பகைவர்களையும்,
வெகுவான செனம் அடங்கலும் மாற்றியே --- திரளாக வந்த மக்களையும் மாளச் செய்து,
உடல் தகர --- அவர்களது உடல்கள் தகருமாறு புரிந்து,
அங்கு அவர் கூட்டையே --- தகர்ந்த அவர்களது உடல்களை
நரி திருகி உண்டிட --- நரிகள் பிய்த்துத் தின்னுமாறும்,
ஆர்த்த கூளிகள் அடர் பூமி --- பேய்கள் ஆரவாரம் செய்த யுத்த பூமியின்,
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய --- மையப் பகுதி அழிந்து போகும்படியாக மூட்டிய பாதப் போர் முடிவு பெறுமாறும்,
அன்பர்கள் ஏத்தவே --- அன்பர்கள் யாவரும் போற்றி செய்யவும்,
அரி அருளும் மைந்தர்கள் வாழ்த்தும் --- காலனுடைய புத்திரனான தருமனும், வாயு புத்திரனான பீமனும், இந்திரன் மகனான அருச்சுனனும் வாழ்த்தித் துதிக்கின்ற
மாயவன் மருகோனே --- மாயவன் ஆகிய திருமாலின் திருமருகரே!
அமரர் அந்தணர் போற்றவே --- தேவர்களும், அந்தணர்களும் போற்றும்படியாக,
கிரி கடல் அதிர்ந்திட நோக்கும் --- மலைகளும், கடல்களும் அதிரும்படியாக நடிக்கின்ற
மாமயில் அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே --- சிறந்த மயிலின் மீது அழகுபெற அமர்ந்து திருப் பழுவூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி அமர்ந்துள்ள பெருமையில் மிக்கவரே!
விகட சங்கட வார்த்தை பேசிகள் --- நகைச்சுவையாகவும், துன்பம் தரும் வகையிலும் பேசுபவர்கள்,
அவல மங்கையர் --- அவலத்தைத் தருகின்ற பெண்கள்,
ஊத்தை நாறிகள் --- உடம்பிலும், பல்லிலும் சேரும் அழுக்கு நாற்றம் வீசுபவர்கள்.
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார் --- (ஒருவருக்கு வாய்த்துள்ள) செல்வப் பெருக்கினை மாற்றுகின்ற பேறாக உள்ளவர்கள்,
தம் விதம் விதங்களை நோக்கி --- தம்மை நாடி வருபவர்களின் நிலைமையை நோக்கி,
ஆசையில் உபரிதங்களை மூட்டியே --- (அவர்க்கு) ஆசையானது மேன்மேல் உண்டாகும்படி செய்து,
தம இடு மருந்தோடு --- தாங்கள் இடுகின்ற மருந்துடன்,
சோற்றையே இடு விலை மாதர் --- சேற்றைக் கலந்து கொடுக்கின்ற விலைமாதர்கள்,
சகல மஞ்சனம் ஆட்டியே --- எல்லாவிதமான நீராடல்களையும் செய்து,
முலை பட வளைந்து --- தமது முலைகள் படும்படி உடம்பை வளைத்து,
இசை மூட்டியே --- இசையோடு பாடிக் கொண்டே,
வரு சரச இங்கித நே(ர்)த்தியாகிய சுழலாலே --- அதனால் உண்டாகும் காம விளையாடல்களை இனிமையாகவும், நேர்த்தியாகவும் ஆடல் மூலம் புரிந்து,
சதி முழங்கிட --- தாள ஒத்து முழங்க,
வாய் பண் ஆனது மலர --- வாயில் பண்ணோடு கூடிய பாடல்கள் மலர,
உந்தியை வாட்டியே --- உந்தியை அசைத்தும்,
இடை தளரவும் --- இடை தளரவும்,
க(ண்)ணை ஆட்டும் --- கண்களை இங்கும் அங்குமாக ஆட்டிச் சாகசம் புரிகின்ற,
வேசியர் உறவு ஆமோ --- பரத்தையர்கள் உறவு (நன்மை) ஆகுமா? (ஆகாது)
பொழிப்புரை
ஆழிப் படையைக் கொண்டு பகலை இருளாகச் செய்தும், கர்ணன், துரியோதனன் ஆகிய இரு தமையன்களையும், தம்பிமார்கள் ஆகிய கௌரவர்களையும், பீஷ்மாச்சாரியார், துரோணாச்சாரியார் முதலிய பெருமக்களையும், துரியோதனன் குமாரர்களாகிய இலக்கண குமாரன் முதலானவர்களையும், போரை ஏற்று வந்த சூரர்களாகிய பகைவர்களையும், திரளாக வந்த மக்களையும் மாளச் செய்து, அவர்களது உடல்கள் தகருமாறு புரிந்தும், தகர்ந்த அவர்களது உடல்களை நரிகள் பிய்த்துத் தின்னுமாறும், பேய்கள் ஆரவாரம் செய்த யுத்த பூமியின், மையப் பகுதி அழிந்து போகும்படியாக மூட்டிய பாதப் போர் முடிவு பெறுமாறும், அன்பர்கள் யாவரும் போற்றி செய்யவும், காலனுடைய புத்திரனான தருமனும், வாயு புத்திரனான பீமனும், இந்திரன் மகனான அருச்சுனனும் வாழ்த்தித் துதிக்கின்ற மாயவன் ஆகிய திருமாலின் திருமருகரே!
தேவர்களும், அந்தணர்களும் போற்றும்படியாக, மலைகளும், கடல்களும் அதிரும்படியாக நடிக்கின்ற சிறந்த மயிலின் மீது அழகுபெற அமர்ந்து திருப் பழுவூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி அமர்ந்துள்ள பெருமையில் மிக்கவரே!
நகைச்சுவையாகவும், துன்பம் தரும் வகையிலும் பேசுபவர்கள்; அவலத்தைத் தருகின்ற பெண்கள்; உடம்பிலும், பல்லிலும் சேரும் அழுக்கு நாற்றம் வீசுபவர்கள்; ஒருவருக்கு வாய்த்துள்ள செல்வப் பெருக்கினை மாற்றுகின்ற பேறாக உள்ளவர்கள்; தம்மை நாடி வருபவர்களின் நிலைமையை நோக்கி, அவர்க்கு ஆசையானது மேன்மேல் உண்டாகும்படி செய்து, தாங்கள் இட்டு வைத்துள்ள மருந்துடன் சோற்றைக் கலந்து கொடுக்கின்ற விலைமாதர்கள்; எல்லாவிதமான நீராடல்களையும் செய்வித்து, தமது முலைகள் படும்படி உடம்பை வளைத்து, இசையோடு பாடிக் கொண்டே, அதனால் உண்டாகும் காம விளையாடல்களை இனிமையாகவும், நேர்த்தியாகவும் ஆடல் மூலம் புரிந்து, தாள ஒத்து முழங்க, வாயில் பண்ணோடு கூடிய பாடல்கள் மலர, உந்தியை அசைத்தும், இடை தளரவும், கண்களை இங்கும் அங்குமாக ஆட்டிச் சாகசம் புரிகின்ற, பரத்தையர்கள் உறவு (நன்மை) ஆகுமா? (ஆகாது)
விரிவுரை
விகட சங்கட வார்த்தை பேசிகள் ---
விகடம் --- கரடுமுரடானது, நகைச்சுவை, பயங்கரமானது, உன்மத்தம் தருவது, தொந்தரவு மிக்கது.
சங்கடம் --- வருத்தம், துன்பம், இடுக்கு.
அவல மங்கையர் ---
அவலம் --- துன்பம், வறுமை, கஙலை, குற்றம், நோய், அழுகை, பயனற்றது.
விலைமாதரின் சேர்க்கை இத்தனை அவலங்களையும் உண்டாக்கும் என்பதை அருமையாக அடிகளார் விளக்கி உள்ளது காண்க.
ஊத்தை நாறிகள் ---
ஊத்தை --- உடம்பிலும், பல்லிலும் சேருகின்ற அழுக்கு.
இயல்பாகவே சேருகின்ற ஊத்தையை நாளும் கழித்துக் கொள்ளுதல் வேண்டும்.
மனத்தில் நல்ல சிந்தனை உள்ளவர்க்கும் உடம்பிலும், பல்லிலும் அழுக்கு சேரும். என்றாலும் நல்லெண்ணம் இல்லாதவரிடத்தில் ஊத்தை நாற்றம் மிகுந்து இருக்கும். காரணம், அவர்கள் தூய்மையைக் கருதாதவர்கள். மேல் பூச்சுக்களால் ஊத்தையை மறைக்க முயலுபவர்கள்.
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார் ---
விரிவு --- செல்வப் பெருக்கு. அறிவுப் பெருக்கையும், கல்விப் பெருக்கையும் குறிக்கும்.
வாறு --- பேறு.
காமுகரின் விரிந்த செல்வத்தை மாற்றுகின்ற பேறாக உள்ளவர்கள் விலைமாதர்கள் என்பதைப் பின்வரும் பாடலால் ஔவைப் பிராட்டி "நல்வழி" காட்டுமாறு காண்க.
நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறுங் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் --- ஒண்தொடீ!
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம்,அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
இதன் பொருள் ---
ஒள் தொடீ --- ஒள்ளிய வளையலை அணிந்தவளே! நண்டு சிப்பி வேய் கதலி --- நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் ; நாசம் உறும் காலத்தில் --- தாம் அழிவை அடையும் காலத்திலே ; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் --- (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க் குலையும் ஆகிய) கருக்களை ஈனும் தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் --- ஞானமும் செல்வமும் கல்வியும் அழிய வரும் காலத்திலே, அயல் மாதர்மேல் மனம் வைப்பார் --- பிறமகளிர் மேல் மனம் வைப்பார்கள்.
தம இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் ---
மருத்துவர்கள் நோயைத் தணிக்க மருந்து தருவார்கள். இதுதான் உலக இயல்பு.
இந்த இயல்புக்கு நேர்மாறாக, விலை மகளிர் ஆசையாகிய நோய் உண்டாக்கும் பொருட்டு மருந்தைத் தருவார்கள்.
காமப் பற்று மிகுந்து, தன்னை நாடி வருகின்ற ஆடவரின் உள்ளத்தைத் தமது இனிய சொற்களாலும், செயல்களாலும், மயக்கி, மேலும் அவர் தமது வசமே ஆகி இருக்கும்படி, விலைமாதர்கள் "முச்சலிலம்" என்ற சொல்லப்படும், மூன்று வகையான நீர். வாய் நீர், சிறு நீர், நாத நீர் என்னும் சுரோணிதம் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கரும்புச் சாற்றில் கலந்து மருந்து செய்வார்கள். அந்த மருந்தை உருண்டைகளாகச் செய்வார்கள். அவற்றை நிழலிலே உலர்த்துவார்கள். அந்த மருந்தை உணவில் கலந்தோ அல்லது படுக்கைக்குச் செல்லும்போது தாம்பூலத்தில் வைத்தோ கொடுத்து, தம்பால் வந்த ஆடவரை காம மயக்கம் கொள்ளச் செய்வார்கள்.
மருந்து உருண்டைகளை வெய்யிலில் உலர்த்தினால் அதன் சத்துப் போய்விடும். அதனால், உயர்ந்த மருந்து உருண்டைகளையும், மூலிகைகளையும் நிழலிலே உலர்த்த வேண்டும் என்பது மருத்துவ முறை.
இதனைப் பின்வரும் பாடல்களால் அடிகளார் காட்டுவது காண்க.
நிறுக்கும் சூது அன மெய்த்தன முண்டைகள்,
கருப்பம் சாறொடு அரைத்து உள உண்டைகள்
நிழல்கண் காண உணக்கி, மணம் பல ...... தடவா,மேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம்
ஒளித்து, அன்பாக அளித்த பின், இங்கு எனை
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம்சொலி .....என ஓதி
உறக் கண்டு, ஆசை வலைக்குள் அழுந்திட
விடுக்கும் பாவிகள், பொட்டிகள், சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் .....உழலாமே
உலப்பு இன்று ஆறு எனும் அக்கரமும், கமழ்
கடப்பம் தாரும், முக ப்ரபையும் தினம்
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட .....அருள்வாயே! --- திருப்புகழ்.
மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலை திறந்த மழுங்கிகள்,
வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள், ......பழையோர்மேல்
வால நேசம் நினைந்து அழு வம்பிகள்,
ஆசை நோய் கொள் மருந்துஇடு சண்டிகள்,
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள்,.... --- திருப்புகழ்.
பழமை செப்பி அழைத்து, இதமித்து, உடன்
முறை மசக்கி, அணைத்து, நகக்குறி
பட அழுத்தி, முகத்தை முகத்து உற, ...... உறவாடி,
பதறி எச்சிலை இட்டு, மருத்து இடு
விரவு குத்திர வித்தை விளைப்பவர்,
பல விதத்திலும் அற்பர் எனச்சொலும் ...... மடமாதர்.. --- திருப்புகழ்.
மேகம் ஒத்த குழலார், சிலைப் புருவ,
வாளி ஒத்த விழியார், முகக் கமலம்
மீது பொட்டுஇடு, அழகார் களத்தில் அணி......வடம்ஆட
மேரு ஒத்த முலையார், பளப்பள என
மார்பு துத்தி புயவார், வளைக் கடகம்
வீறு இடத் துவளும் நூலொடு ஒத்த இடை ....உடை மாதர்,
தோகை பட்சி நடையார், பதத்தில் இடு
நூபுரக் குரல்கள் பாட, அகத் துகில்கள்
சோர, நல் தெருவுடே நடித்து, முலை ......விலைகூறி,
சூதகச் சரசமோடெ எத்தி, வரு-
வோரை நத்தி, விழியால் மருட்டி, மயல்
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள்......உறவாமோ? --- திருப்புகழ்.
திருடிகள், இணக்கிச் சம்பளம் பறி
நடுவிகள், மயக்கிச் சங்கம் உண்கிகள்,
சிதடிகள், முலைக் கச்சு உம்பல், கண்டிகள், ......சதிகாரர்,
செவிடிகள், மதப்பட்டு உங்கு குண்டிகள்,
அசடிகள், பிணக்கிட்டும் புறம்பிகள்,
செழுமிகள், அழைத்து இச்சம் கொளும்செயல்,...வெகுமோகக்
குருடிகள், நகைத்து இட்டம் புலம்பு கள்
உதடிகள், கணக்கு இட்டும் பிணங்கிகள்,
குசலிகள், மருத்து இட்டும் கொடும் குணர், ......விழியாலே
கொளுவிகள், மினுக்குச் சங்கு இரங்கிகள்,
நடனமும் நடித்திட்டுஒங்கு சண்டிகள்,
குணமதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள் ...... உறவுஆமோ? --- திருப்புகழ்.
திகிரி கொண்டு இருளாக்கியே ---
திகிரி --- திருமாலின் திருக்கரத்தில் உள்ள சக்கரப்படை, ஆழிப்படை.
திருமால் பட்டப்பகலை வட்டத் திகிரியில் இரவு ஆக்கிய கதை
பாண்டவர்க்கும் துரியோதனாதிகட்கும் நிகழ்ந்த பதின்மூன்றாம் நாள் போரில் கௌரவர்கள் தனுர்வேதத்திற்கு மாறாக, அதர்மத்தின் வழிநின்று, அனேக வீரர்களாக வளைந்து அருச்சுனனுடைய மகனும், மகாவீரனும், அதிரதனும் ஆகிய அபிமன்யுவைக் கொன்றார்கள். தனஞ்சயன் கண்ணனுடன் சம்சப்தகர் மீது போர் புரியச் சென்றிருந்தான். தனஞ்சயன் நீங்கிய பாண்டவர் நால்வர்களையும் அவர்கள் படைகளையும் ஜயத்ரதன் உருத்திரரது வரத்தின் வன்மையால் தடுத்து அபிமன்யுவின் வதத்திற்குக் காரணமாக நின்றான். அதனை உணர்ந்த அருச்சுனன், புத்ர சோகத்தால் பீடிக்கப்பட்டுப் பெரிதும் வருந்தி துன்பக் கடலில் ஆழ்ந்தான். ஒருவாறு தேறி சினங்கொண்டு கண்கள் சிவந்து “நாளை சூரியன் மேற்கடலில் அத்தமிப்பதற்குள் அபிமன்யுவின் வதத்திற்குக் காரணமாக இருந்த ஜயத்ரதனைக் கொல்லப் போகிறேன். அங்ஙனம் ஜயத்ரதனைக் கொல்லா விடில்..
"வழக்காடு மன்றத்தில் பொய் சாட்சி சொல்லுகின்றவர்களுக்கும், தாய்தந்தையர்கள் பசித்திருக்க, தான் பசிஆற உண்ணுபவர்களுக்கும், தந்தையோடு தகாத வார்த்தைகளைப் பேசிப் பிதற்றுகின்ற பேய்த் தன்மை உடையவர்களுக்கும், தஞ்சம் என்று தன்னை அடைந்தவருக்குத் துன்பத்தை நினைக்கின்ற கொடியவர்களுக்கும், தனது மனைவியாளவள் அயலானோடு நேர்ந்து இருக்க, அவள் கையால் கொஞ்சமாவது ஒருவேளை உண்ணுகின்றவர்களுக்கும், எந்த கதியுண்டாகுமோ, அந்த கோரமான கதியை நான் அடையக் கடவேன்” என்று, இவை முதலான பற்பல சபதங்கூறி, “அந்தப் பாவியாகிய ஜயத்ரதன் கொல்லப் படாமல் இருக்கும்பொழுது ஆதித்தன் அத்தமித்தானேயானால் உடனே அக்கினியில் நான் விழுந்து உனது உயிரை மாய்ப்பேன்” என்று பயங்கரமான சூளுரைக் கூறினான்.
'சிந்து பதி ஆகிய செயத்திரதனைத் தேர்
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா,
அந்தி படும் அவ் அளவின் ஆவி கவரேனேல்,
வெந் தழலின் வீழ்வன்; இது வேத மொழி!' என்றான்.
'இன்று அமரில், வாள் அபிமன் இன் உயிர் இழக்கக்
கொன்றவனை, நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும்
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே!
'மோது அமரின் என் மகன் முடித் தலை துணித்த
பாதகனை நான் எதிர் படப் பொருதிலேனேல்,
தாதையுடனே மொழி தகாதன பிதற்றும்
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன்!
'சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன்
மாய, முன் அடர்த்து, வய வாகை புனையேனேல்,
தாயர் பசி கண்டு, நனி தன் பசி தணிக்கும்
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே!
'வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன்
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல்,
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன்!
'வினையில் என் மகன்தன் உயிர் வேறு செய்வித்தோனைக்
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மனைவி அயலான் மருவல் கண்டும், அவள் கையால்
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன்!'
எனவரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க.
பதினான்காம் நாள் பாரதப் போரில் எதிரிகளால் வெல்லப்படாதவனும், மகாவீரனும், சவ்யசாசியுமாகிய அருச்சுனன் கண்ணபிரானால் தூண்டப்படும் இரதத்தின் மீதூர்ந்துன, கௌரவ சேனையில் நுழைந்து கொழுந்து விட்டெரிகின்ற பெரிய அக்கினியைப்போல சைன்யங்களை அழித்துக் கொண்டு சென்றான். சுருதாயுதன், பூரிசிரவன் முதலிய அநேகரைக் கொன்றான். சூரர் என்று எண்ணங்கொண்ட துரியோதனாதிகளும் அவர்களின் சைன்யங்களும் அருச்சுனனை எதிர்த்து, நெருப்பை எதிர்த்த விட்டில் பூச்சிகளுக்குச் சமானமாக ஆனார்கள்.
மேற்கடலில் சூரியன் அத்தமிக்கும் முன், தனது பக்தனாகிய பார்த்தனைக் காப்பாற்றுவதற்காக கண்ணபிரான் தம்முடைய சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து இருளை உண்டு பண்ணினார். சிந்து தேசாதிபதியாகிய ஜயத்ரதன் தலையை நீட்டி சூரிய அத்தமனத்தைப் பார்த்தான். உடனே கண்ணபிரான் “அருச்சுனா! சிந்துராசன் தலையையும் கழுத்தையும் உயரத் தூக்கி சூரிய மண்டலத்தைப் பார்க்கிறான். அவனுடைய தலையை விரைவாக அரிந்து விடு” என்றார். சூரியனை மறைத்து இருளுண்டாக்கிய வாசுதேவரது கருணையை வியந்து தனஞ்செயன் வச்சிராயுதத்திற்கு நிகரானதும், தேவர்களாலுந் தாங்க முடியாததும், கூர்மையுள்ளதும், சந்தன புட்பங்களால் ஆராதிக்கப்பட்டதுமான திவ்யாஸ்திரத்தை எடுத்து விடுத்தான். அந்த அத்திரமானது விரைந்துச் சென்று, பருந்தானது மரத்தின் உச்சியிலுள்ள மற்றொரு பறவையைக் கவர்வதுபோல் ஜயத்ரதனுடையத் தலையைக் கவர்ந்தது.
அந்தத் தலை கீழே விழுவதற்குள், கண்ணபிரான் காண்டீபதரனை நோக்கி “கௌந்தேயா! இந்தத் தலையானது பூமியில் விழாதபடி நீ செய், அதன் காரணத்தைக் கூறுகின்றேன்” என்றனர். கர வேகத்தாலுஞ் சர வேகத்தாலும் மிகுந்த பார்த்தன் அநேக பாணங்களை விடுத்து அத்தலையைக் குறுக்கிலும் மேலும் கீழும் சஞ்சரிக்கும்படி செய்தான். எல்லோரும் ஆச்சரியப்படும் படியாகவும் விளையாடுபவனைப் போலவும் அருச்சுனன் அத்தலையை அம்புகளால் கீழே விழாதபடி சமந்த பஞ்சகத்திற்கு வெளியே கொண்டு போனான். பின்னர் பார்த்தன் கேசவரை நோக்கி, “எவ்வளவு தூரம் நான் கொண்டு போவேன்? ஏன் இத்தலையைப் பூமியில் தள்ளக்கூடாது? இதனை எவ்விடம் கொண்டு போகும்படிச் செய்யவேண்டும்”? என்று வினவினான்.
கண்ணபிரான், “அருச்சுனா! ஜயத்ரதனுடையப் பிதாவாகிய விருத்தக்ஷத்திரன், தன் மகனது தலையை எவன் ஒருவன் பூமியில் தள்ளுவனோ அவனுடைய தலையும் நூறு துணுக்காகச் சிதறவேண்டுமென்று சமந்த பஞ்சகத்திற்கு வெளியே கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறான். ஆதலால் ஜயத்ரதனுடையத் தலையை நீ பூமியில் விழும்படிச் செய்தால் உன் தலை நூறு துண்டாகப் போகும். இதில் ஐயமில்லை. குந்தி நந்தனா! கணைகளாலே இந்த ஜயத்ரதன் தலையை அவன் பிதாவாகிய விருத்தக்ஷத்திரன் மடியில் தள்ளு. இதனை அவனறியாதபடிச் செய். உன்னால் ஆகாத காரியம் மூன்று உலகத்திலும் இல்லை” என்றனர். கண்ணனுடைய அளப்பரும் கருணையை வியந்த அருச்சுனன், அப்படியே அந்தத் தலையை விருத்தக்ஷத்திரன் மடியில் கொண்டு போய்த் தள்ளினான். அவன் எழுந்தவுடனே அவனுடைய தலையும் நூறு துண்டுகளாக வெடித்துப் போய்விட்டது. விண்ணவரும் மண்ணவரும் புகழ்ந்தார்கள்.
இவ்வாறு ஜயத்ரதனுடைய வதத்தின்பொருட்டு அருச்சுனனது சபதம் நிறைவேற பகலை இரவாகச் செய்து, பகவானாகிய கண்ணபிரான் அருச்சுனனைக் காப்பாற்றினார்.
இரு தமையர் ---
கர்ணன், துரியோதனன் ஆகிய இரு தமையன்கள்.
தம்பியர் ---
தம்பிமார்கள் ஆகிய கௌரவர்கள்.
மூத்த தாதையர் ---
பீஷ்மாச்சாரியார், துரோணாச்சாரியார் முதலிய பெருமக்கள்.
திலக மைந்தரை ---
துரியோதனன் குமாரர்களாகிய இலக்கண குமாரன் முதலானவர்கள்.
அடர் பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய ---
அடர் பூமி --- போர்க்களம் ஆகிய குருக்ஷேத்திரம்.
அகடு --- நடுப்பகுதி, வயிற்றுப் பகுதி.
பூபாரம் தீர்க்க, பாரதப் போரை மூளும்படிச் செய்தவன் கண்ணன் என்பதை, சகேதேவன் வாய்மொழியாக, வில்லிபுத்தூரார் கூறுமாறு காண்க.
'நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?
--- வில்லிபாரதம், கிருட்டிணன் தூதுச் சருக்கம்.
அரி அருளும் மைந்தர்கள் ---
"அரி" என்னும் சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டும். அவற்றில், காலன், வாயுதேவன், இந்திரன் என்னும் பொருள்களும் உண்டு.
இங்கு, தருமன் என்னும் காலனுடைய மகனான தருமபுத்திரனையும், வாயுதேவன் மகனான பீமனையும், இந்திரன் மகனான அருச்சுனனையும், அரி அருளும் மைந்தர்கள்" என்று காட்டினார் அருணகிரிநாதப் பெருமான்.
பழுவூர்க்குள் மேவிய பெருமாளே ---
திருப் பழுவூர், சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். அரியலூர் - திருச்சி சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இத் திருக்கோயில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. திருச்சியிலிருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் நேரடிப் பேருந்து வசதிகள் உள்ளன.
இறைவர் : வட மூலநாதர் (வடம்-ஆலமரம்), யோகவனேசுவரர்,ஆலந்துறையார்
இறைவியார் : அருந்தவ நாயகி
தல மரம் : ஆல மரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.
பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் பாடல் பெற்ற திருக்கோயில் உள்ளது.
ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். இராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.
வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோயிலாகவே காணப்பெறுகிறது. அம்பாள் இங்கு யோகதபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தமிழில் அருந்தவ நாயகி என்று பெயர். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.
சுவாமியை தரிசிக்க திறந்தவெளி மண்டபம் தாண்டி உள்ள ஒரு வாயில் வழியே உள்ளே சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் உள் திருச்சுற்றை அடுத்து, இடைமண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் வடமூலநாதர் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் இலிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிடேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது.
திருக்கோயிலுக்கு வெளியே தல மரமான ஆலமரம் பெருத்து வளர்ந்து நிற்கிறது. தலதீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் கொள்ளிடமும் விளங்குகின்றன.
பரசுராமர், தந்தை ஆணையின் பேரில் தன் தாயைக் கொன்ற பழி தீரும் பொருட்டு வழிபட்ட தலம் இது எனப்படுகிறது. மேலப் பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்கினி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
கருத்துரை
முருகா! விலைமாதர் கூட்டுறவு தவிர அருள்.
No comments:
Post a Comment