மனித்தப் பிறவியும் வேண்டத் தக்கதே
-----
சமணர்களால், கல்லில் கட்டி, கடலில் இடப்பட்ட பின், இறைவனுடைய திருவைந்தெழுத்தைத் துணையாகக் கொண்டு, பிறவிக் கடலை நீந்துவதுபோல, நீந்திக் கரை ஏறிய, அப்பர் பெருமான், திருப்பாதிரிப்புலியூரில் திருக்கோயில் கொண்டு இருக்கும் பெருமானைக் கண்டு வழிபட்டு, இனிவரும் பிறவிகளில் அடியேன் புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும், இறைவா! உனது திருவடிகளை எனது மனம் மறவாதபடியான ஒரு பெருவரத்தை அடியேனுக்குத் தந்து அருளவேண்டும், "புழுவாய்ப் பிறக்கினும், புண்ணியா! உன் அடி என்மனத்தே வழுவாது இருக்க வரம் தரவேண்டும்" என்று ஒரு வேண்டுகோளை இறைவனிடத்தில் வைத்தார்.
தில்லைக் கூத்தனைக் கண்ணாரக் கண்டு வணங்கும் பேறுபெற்ற பிறகுதான், தாம் எப்படிப்பட்ட அருமையான பிறவியை எடுத்து வந்துள்ளோம் என்று மகிழ்ந்தார். பெருமானை வழிபட்டு மகிழ்வதனானால், இந்தப் பிறவி வேண்டத்தக்கதே என்று எண்ணி மகிழ்ந்து,
"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்று அப்பர் பெருமான் பாடி, நமக்கு எல்லாம் ஒரு சிறந்த நல்வழியைக் காட்டி அருள் புரிந்தார்.
பொதுவாகவே, எல்லா அடியவர்களும் பிறவி வேண்டாம் என்றுதான் கூறிப் போந்தார்கள். ஆனால், அப்பர் பெருமான், இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபடும் பேறு கிடைக்குமானால், இந்த மனிதப் பிறவியும் வேண்டத் தக்கதே என்றார்.
கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், "சோணசைல மாலை" என்னும் நூலில், "நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும்", திருவண்ணாமலையாரை வேண்டிப் பாடிய அருமையான பாடல், அப்பர் பெருமான் தேவாரப் பாடல் கருத்தை உட்கொண்டு இருத்தலைக் காணலாம். "நால்வர் நான்மணி மாலை" என்னும் ஓர் அற்புதமான நூலைப் பாடிய சிவப்பிரகாச சுவாமிகள், பொருள் உணர்ந்து ஓதித் திருமுறைகளில் தோய்ந்தவர் என்பது இதனால் விளங்கும்.
விரைவிடை இவரும் நினைப் பிறவாமை
வேண்டுநர் வேண்டுக, மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொல் மலர்நினக்கு அணியும்
பிறவியே வேண்டுவன் தமியேன்;
இருசுடர் களும்மேல் கீழ்வரை பொருந்த
இடைஉறல் மணிக்குடக் காவைத்
தரையிடை இருத்தி நிற்றல்நேர் சோண
சைலனே கைலை நாயகனே.
இதன் பொருள் ---
சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்றல் இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடப வாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டுவோராகுக. இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.
நிறைநிலா நாளில் சூரியன், மேற்கில் அத்தகிரியை அடையும்போது, சந்திரன் உதயகிரியில் கிழிக்குத் திசையில் உதிப்பதால், இடையில் உள்ள திருவண்ணாமலைக்கு இருபுறமும் காவடியைப் போல் சூரிய சந்திரர்கள் அமைந்துள்ளதாகக் கற்பனை வளம் காட்டிப் பாடுகின்றார். காவப்படுதலின், காவடி என வழங்கும்.
காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு காடுவெட்டிய சோழன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆட்சி செய்தான். அடர்ந்த காடுகளை திருத்தி மக்கள் வசிக்கும் இடமாக மாற்றியதால் அவன் காடுவெட்டிய சோழன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிவன் அடியானாகத் திகழ்ந்தான். அவனுக்கு மதுரையில் அங்கயற்கண் அம்மையுடன் அருள்புரியும் சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. நாளுக்கு நாள் சோழனின் ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. சொக்கநாதர் சோழனுக்கு தரிசனம் தரவிருப்பம் கொண்டார். ஒரு நாள் சோழனின் கனவில் சித்தர் வடிவில் தோன்றிய சொக்கநாதர் “சோழனே! நீ மாறுவேடம் பூண்டு, யாருடைய துணையும் இன்றி மதுரை வந்து அங்கயற்கண் அம்மை உடனுறை சொக்கநாதரைத் வழிபாடு மேற்கொள்வாயாக” என்று திருவாய் மலர்ந்து அருளினார். பகை நாடான பாண்டிய நாட்டுக்கு எவ்வாறு சென்று சொக்கநாதரை வழிபடுவது என்று எண்ணிக் கொண்டிருந்த தனக்கு மாறுவேடத்தில் வருமாறு சித்தர் கூறியதை கேட்டு பெரும் மகிழ்ச்சி கொண்டான். மதுரைக்குப் புறப்பட்டான்.
அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. ஆதலால், சோழன் “பாண்டியன்தான் நம் பகைவன் என்று கருதினால், இந்த வைகையும் சொக்கநாதரை வழிபட விடாமல் தடுத்து நம்மை பகைக்கிறதே” என்று எண்ணி வருந்தினான். அப்போது சொக்கநாதர் சித்தர் வடிவில் சோழன் இருக்கும் இடத்தை அடைந்தார். “வாருங்கள் நாம் இருவரும் வைகையைக் கடந்து திருகோயிலுக்குச் செல்லுவோம்” என்று சோழனை அழைத்தார்.
கனவில் கண்ட சித்தமூர்த்தி நேரில் வரக்கண்ட சோழன் ஆச்சரியம் அடைந்தான். சித்தமூர்த்தி வைகையை நோக்க வைகையில் வெள்ளம் குறைந்தது. சோழன் பெரு வியப்புடன் சித்தமூர்த்தியைப் பின் தொடர்ந்து சென்றான். சித்தமூர்த்தி வடக்கு மதில் வாயிலை திறந்து கொண்டு சோழனை உள்ளே அழைத்துச் சென்றார். திருக்கோவிலை அடைந்த சோழன் அங்கையற்கண் அம்மையையும், சொக்கநாதரையும் மனங்குளிர வழிபாடு மேற்கொண்டான்.
காடுவெட்டிய சோழன் மகிழ்ந்து கூறியதாக, திருவிளையாடல் புராணத்தில், விடை இலச்சினை இட்ட படலத்தில் வரும் பின்வரும் பாடலைக் காண்க.
எவ்வுடல் எடுத்தேன் மேனாள்,
எண்ணிலாப் பிறவி தோறும்
அவ்வுடல் எல்லாம் பாவம்
அறம் பொருட்டாக அன்றோ?
தெவ்வுடல் பொடித்தாய் உன்றன்
சேவடிக்கு அடிமை பூண்ட
இவ்வுடல் ஒன்றே அன்றோ
எனக்கு உடல் ஆனது ஐயா.
இதன் பொருள் ---
மேல் நாள் எண் இலாப் பிறவிதோறும் --- முன்னாளில் எண்ணிறந்த பிறவிகள்தோறும், எவ்வுடல் எடுத்தேன் --- எந்த எந்த விதமான உடல்களை எடுத்தேனோ, அவ்வுடல் எல்லாம் --- அந்த உடல்கள் அனைத்தும், பாவம் அறம் பொருட்டாக அன்றோ --- தீவினையும் நல்வினையும் ஆகிய அந்த இரண்டின் பொருட்டாக அல்லவா (எடுத்தேன்), தெவ் உடல் பொடித்தாய் --- பகைவனாகிய மதவேளின் உடலைத் திருநெற்றி விழியால் பொடியாக்கிய பெருமானே! உன்றன் சேவடிக்கு அடிமை பூண்ட இவ்வுடல் ஒன்றே அன்றோ --- உனது சிவந்த திருவடிக்கு அடிமை பூண்ட இந்த உடல் ஒன்று தானே, ஐயா --- எனது ஐயனே! எனக்கு உடல் ஆனது --- எனக்கு உடலாய் நின்று பயன் தந்தது.
இதற்கு முன் எடுத்த பிறவிகள் எல்லாம் இருவினைகள் ஆகிய பாவ புண்ணியத்தின் பலனாக உண்டாகும் துக்கசுகங்களை அனுபவிக்கவே போதுமானதாக இருந்தது. சொக்கநாதரைக் கண்டு வழிபட்டு மகிழ்ந்த இந்தப் பிறவிதான், உயிருக்கு ஆக்கம் தருவதாக அமைந்தது.
திருவிளையாடல் புராணம், திருவாலவாய் ஆன படலத்தில் வரும் இந்தப் பாடல், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தமிழ்வேதமாகிய திருப்பதிகங்களைத் திருச்செவியில் மடுத்து அருளும் சொக்கநாதப் பெருமானுடைய திருப்புகழை நாமும் பாடி வழிபடுவோமானால் இந்தப் பிறவி விரும்பத் தக்கதே ஆகும் என்கின்றது.
பாய் உடையார் விடுத்தபழி அழல், வழுதி
உடல்குளிப்ப, பதிகம் ஓதும்
சேய் உடை ஆரணம் திளைக்கும் செவிஉடையார்
அளவிறந்த திசைகள் எட்டும்
தோய்உடையார், பொன்இதழித் தொடைஉடையார்,
விட அரவம் சுற்றும் ஆல-
வாய் உடையார் புகழ்பாடப் பெறுவேமேல்,
வேண்டுவது இம் மனித யாக்கை.
இதன் பொருள் ---
பாய் உடையார் விடுத்த பழி அழல் --- பாயை ஆடையாக உடுத்து (பொய்த் தவம் புரிந்து உழலுகின்ற) சமணர்கள் (தமது திருமடத்தின்கண் தீயிட்டதால்) உண்டாக்கி வைத்த பழிக்கு ஏதுவாகிய நெருப்பு, வழுதி உடல் குளிப்ப --- பாண்டியன் உடலில் சென்று பற்றுமாறு, பதிகம் ஓதும் --- திருப்பதிகத்தைப் பாடியருளுகின்ற, சேய் உடை ஆரணம் திளைக்கும் செவியுடையார் --- திருஞானசம்பந்தப் பிள்ளையாரின் தமிழ்வேதத்தை இடையறாது கேட்டு அருளும் திருச் செவியினை உடையவரும், அளவு இறந்த திசைகள் எட்டும் தோய் உடையார் --- எல்லையின்றிப் பரந்துள்ள எட்டுத் திக்குகளையும் பொருந்திய ஆடையாக உடையவரும் (திகம்பரர்), பொன் இதழித் தொடை உடையார் --- பொன்போன்ற கொன்றை மாலையை அணிந்தவரும், விட அரவம் சுற்றும் ஆலவாய் உடையார் --- நஞ்சினை உடைய பாம்பினால் கோலி வரையறுக்கப்பட்ட திருவாலவாய் என்னும் திருத்தலத்தைத் தமது பதியாக உடையவரும் ஆகிய சோமசுந்தரப் பெருமானுடைய, புகழ் பாடப் பெறுவேமேல் --- திருப்புகழைப் பாடுகின்ற பேற்றினைப் பெறுவோமானால், இம்மனித யாக்கை வேண்டுவது --- இந்த மனித உடம்பு நமக்கு வேண்டுவதே ஆகும்.
இதை கருத்தை, "கோயில் புராணம்" வலியுறுத்துவதையும் பின்வரும் பாடல்களால் அறியலாம்..
மண்ணில் இருவினைக்கு உடலாய்,
வான் நிரயத்துக்கு உடலாய்,
எண்ணில் உடல் ஒழிய முயல்
இருந்தவத்தால், எழில் தில்லைப்
புண்ணிய மன்றினில் ஆடும்
போது செய்யா நடம் காண
நண்ணும் உடல் இது அன்றோ,
நமக்கு உடலாய் நயந்த உடல்.
இதன் பொருள் ---
மண்ணில் இருவினைக்கு உடலாய் --- பூமியிலே புரியும் புண்ணிய பாவங்கள் ஆகிய இருவினைகளக்கு உடலாக வாய்த்தும், வான் நிரயத்துக்கு உடலாய் --- சுவர்க்க நரகங்களிலே அனுபவிக்கின்ற, புண்ணியத்தின் பயனாகிய இன்பத்தையும், பாவத்தின் பயனாகிய துன்பத்தையும் அனுபவிக்கின்ற உடலாகவும், எண்ணில் உடல் ஒழிய --- எடுத்து வந்த எண்ணில்லாத உடல்கள் (பிறவிகள்) ஒழியும்படியாக, முயல் இருந்தவத்தால் --- இப்பிறவியில் முயல்கின்ற அரும்பெரும் தவத்தின் காரணமாக, எழில் தில்லைப் புண்ணிய மன்றினில் ஆடும் --- அழகு விளங்கும் தூய திருச்சிற்றம்பலத்தில் இயற்றுகின்ற, போது செய்யா நடம் காண --- காலந்தோறும் ஒருதன்மைத்தாக அமைந்துள்ள திருக்கூத்தைக் கண்டு மகிழும்படியாக, நண்ணும் உடல் இது அன்றோ நமக்கு உடலாய் நயந்த உடல் --- வாய்த்த இந்த உடல் தானே நமக்கு விருப்பமாக அமைந்த உடல்.
ஒரு தன்மைத்தாக அடைந்த திருக்கூத்து. இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து எப்போதும் ஒரு தன்மையை உடையதாகவே இருக்கும். அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப அது திருவருள் புரியும், விளக்கம் தரும். ஊன நிலையில் உள்ளவர்க்கு, ஊனத்தைப் போக்குகின்ற திருநடனம். ஊனம் நீங்கியவர்க்கு ஞானத்தை அருளுகின்ற திருநடனம். ஞானத்தைப் பெற்றோர்க்கு ஞானானந்தத்தை அருளுகின்ற திருநடனம். மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான "உண்மை விளக்கம்" என்னும் நூலில் இதன் விரிவைக் காணலாம்.
மறந்தாலும் இனி இங்கு
வாரோம் என்று அகல்வர் போல்
சிறந்து ஆர நடம் ஆடும்
திருவாளன் திருவடி கண்டு,
இறந்தார்கள், பிறவாத
இதில் என்ன பயன்? வந்து
பிறந்தாலும் இறவாத
பேரின்பம் பெறலாம்ஆல்.
இதன் பொருள் ---
மறந்தாலும் இனி இங்கு வாரோம் என்று அகல்வர் போல் --- இனி இந்தப் பூதலத்தில் மறந்தும் வந்து பிறக்கமாட்டோம் என்று இந்தப் பிறவியினை வெறுத்து வழித்துச் சென்றவர்களைப் போல, சிறந்து ஆர நடம் ஆடும் திருவாளன் திருவடி கண்டு --- உயிர்களுக்குத் திருவருள் சிறக்கத் திருநடம் புரிகின்ற திருவாளன் ஆகிய பெருமானின் திருவடிகளைத் தரிசித்து, இறந்தார்கள் --- இந்தப் பிறவியை நீத்து சிவபதத்தை அடைந்தவர்கள், பிறவாத இதில் என்ன பயன் --- மீட்டு இங்கு வந்து வினைப் பிறவியைச் சாராத தன்மையினால் என்ன பயன் உண்டு, வந்து பிறந்தாலும் இறவாத பேரின்பம் பெறலாம் (ஆல்-அசை) மீண்டு வந்து இந்த பூவுலகில் பிறந்தாலும், இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்கின்றதால் உண்டாகும் ஒழியாத பேரின்பத்தைப் பெறலாமே.
இந்த உண்மையை, தில்லையில் திருநடம் கண்டு மகிழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அனுபவித்ததாக,தெய்வச் சேக்கிழார் பெருமான் தமது பெரியபுராணத்தில் பின்வருமாறு பாடி நம்மைத் தெளிவித்து அருளுகின்றார்.
தெள்நிலா மலர்ந்த வேணியாய்! உன்றன்
திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று,
கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைம்மலர் உச்சிமேல் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார், பரவினார், பணிந்தார்.
இதன் பொருள் ---
வெண்மையான இளம்பிறை விளங்கும் திருச் சடையை உடை பெருமானே! உன்னுடைய ஆனந்தத் திருக்கூத்தைக் கண்டு வழிபாடு செய்யப் பெற்று, இந்நிலவுலகத்தில் வந்த மானிடப் பிறவியே எனக்கு மேலான இன்பம் என்று, கண்களில் இருந்து இன்பக் கண்ணீர் அருவியாகச் சொரிய, கைகளாகிய மலர்களைத் தலைமிசை வைத்துக் குவித்து, இசையோடு கூடிய அறிதற்கு அரிய திருப்பதிகத்தை இசைத்தார். போற்றினார், வணங்கினார்.
இவ்வாறு இருக்க, பிறவியை வேண்டாம் என்பது ஏன்? எத்தனை பிறவிகள் எடுத்தாலும், இறைவனை வழிபட்டு, பிறரையும் வழிபடவைத்து ஈடேற்றி, எல்லை இல்லா ஆனந்தத்தை இடையறாது அனுபவிக்கலாமே.
No comments:
Post a Comment