அலை நீரில் உழல் மீன்

 

 

அலை நீரில் உழல் மீன்

----

 

"நீடுபுவி ஆசை, பொருள் ஆசை, மருள் ஆகி, லை

     நீரில்உழல் மீன் அது என, ...... முயலாமல்,

காலனது நா அரவ வாயில் அடு தேரை என,

     காயம் மருவு ஆவி விழ ...... அணுகாமுன்,

காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி, ஒரு

     கால் முருகவேள் எனவும் ...... அருள்தாராய்".

 

இவை, அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ்ப் பாடலொன்றின் வரிகள்.

 

பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் அறிவு மயக்கம் கொண்டு அலைதல் கூடாது என்று முருகன் அருளை வேண்டுகின்றார் அடிகளார்.

 

பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை முதலிய மூன்று ஆசைகள் என்னும் நெருப்பு மூண்டு, அதனால் நெருப்பிலே பட்ட இரும்பைப் போல தகித்து, ஆசை பாசங்களில் அகப்பட்டு ஆன்மா துன்பத்தை அடையும்.

 

பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும்.

 

1.    உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.

 

2.   இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.

 

3.    பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும்.

 

4.    எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று பெயர்.

 

எந்தப் பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.

 

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று

நிலையாமை காணப் படும்.                --- திருக்குறள்.

 

அற்றது பற்றெனில் உற்றது வீடு’    --- திருவாய்மொழி

 

உள்ளது போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும். பிறப்பைக் கொடுக்கும்.

 

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.            --- திருக்குறள்.

 

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்

தவாஅது மேல்மேல் வரும்.              --- திருக்குறள்.

 

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின், அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

 

இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.               --- திருக்குறள்.

 

பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.

 

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை விரும்புவது பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.

 

உலகமெல்லாம் கட்டி ஆள வேண்டும். தொட்டன எல்லாம் பொன்னாக வேண்டும். கடல் மீதும் நமது ஆணை செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கு அடங்காது, கங்கு கரை இன்றி தலை விரித்து எழுந்து ஆடுகின்ற அசுரதாண்டவமே பேராசை.

 

கொடும் கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான். அவ்வழியில் ஒருவன் செருப்பை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரை மீது சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால் புண்ணியம்” என்றான்.

 

கேட்டவன் வாய் மூடுவதற்கு முன், குதிரை மீது சென்றவன் செருப்பைக் கழற்றிக் கொடுத்தான்.

 

ஐயா! குதிரையில் செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன். அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.

 

குதிரை மேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.

 

நடப்பவன் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்து, “ஐயா! தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையையும் கொடுங்கள்” என்றான்.

 

குதிரை மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.

 

நான் அடிக்கிறேன்.  நீ சிரிக்கிறாய். என்ன காரணம்?” என்று கேட்டான்.

 

இவ்வாறு கேட்டு அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும். செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன். நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதல்ல, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை என்று பெயர்.

 

கடல் என்ற புவிமீதில் அலை என்ற உருக்கொண்டு,

கனவு என்ற வாழ்வை நம்பி,

காற்று என்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு, நித்த நித்தம்

 

உடல் என்ற கும்பிக்கு உணவு என்ற இரைதேடி,

ஓயாமல் இரவு பகலும்

உண்டு உண்டு உறங்குவதைக் கண்டதே அல்லாது

ஒருபயனும் அடைந்திலேனை

 

தடம் என்ற மிடிகரையில் பந்தபாசங்கள் எனும்

தாவரம் பின்னல் இட்டு,

தாய்என்று சேய்என்று நீ என்று நான் என்று,

தமியேனை இவ்வண்ணமாய்

 

இடை என்று கடைநின்று ஏன் என்று கேளாது

இருப்பது உனக்கு அழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே!

 

என்பது "நடராசர் பத்து".

 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

 ஓரா வினையேன் உழலத் தகுமோ”  --- கந்தரநுபூதி

                                    

கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

 

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டு உள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல், பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

 

யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்

அதனின் அதனின் இலன்.            --- திருக்குறள்.

 

ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும் நீங்கினல்தான் பிறவி நீங்கும்.

 

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்

   நாமம் கெடக்கெடும் நோய்”         --- திருக்குறள்.

 

அலை மிகுந்த நீரில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உழலுகின்ற மீனைப் போல இரையையே தேடி உழலாமல் இருக்க அருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார்.

 

அலை மிகுந்துள்ள நீரில் அங்கும் இங்குமாக அலைந்து அலைந்து, அசுத்தப் பொருள்களையே உண்டு உண்டு மயங்கும் மீனானது, தனக்கு வைப்பட்ட தூண்டிலில் உள்ள பொருளையும் தனக்குக் கிடைத்த இரை என்று கருதிச் சென்று, மாண்டது.

 

அலை மிகுந்த நீர் என்றது, உலகபசுகாச தொந்தங்களை. உலகியலில் உழன்று, உலக இன்பங்களையே தேடித் தேடி அலைந்து, அந்த உலக இன்பங்களாலேயே துன்பத்தை அடைந்து, கிடைத்தற்கு அரிய உடலையும், வாழ்நாளையும் வீணுக்கு ஆக்கி, மடிகின்றவன் மனிதன்.

 

உயிர்கள் தமக்குள்ள அறிவு மயக்கத்தால், உலகியல் இன்பங்களையே தேடித் தேடி அலைந்து, திருவருள் இன்பத்தைத் தெளியாமை குறித்து, "திருவருட்பயன்" என்னும் மெய்கண்ட சாத்திர நூலில் இது குறித்துக் கூறப்பட்டுள்ளது காண்க.

 

பால்ஆழி மீன் ஆளும் பான்மைத்து, அருள் உயிர்கள்

மால் ஆழி ஆழும் மறித்து.   

 

இதன் பொருள் ---

 

திருவருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் அவ் வருளைப் பொருந்தி நின்று பேரின்பத்தை நுகர அறியாமல், மாயையின் காரியமாகிய உலகப் பொருள்களையே நுகர விரும்பி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து போய் உள்ளன. இது, பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை உண்ணும் பொருள் என்று அறியாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் நிலையைப் போன்றது.

 

அருள் உயிர்கள் --- திருவருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் (அவ்வருளை அறிந்து அனுபவியாமல்)

மால் ஆழி - (மாயை காரியமாகிய இழிந்த உலகப் பொருள்களையே விரும்பி அனுபவித்து) மயக்கமாகிய      கடலில்

மறித்து ஆழும் - மீண்டும் மீண்டும் ஆழ்ந்து உள்ளன.

 

(இது எது போலும் என்றால்)

        

பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து --- பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை நுகர அறியாமல், அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் தன்மை போன்றது.

 

மாயை உலகமாக விரிந்து நின்று, உயிர்களைக் கவர்ந்து வசப்படுத்துகிறது. மாயையின் கவர்ச்சித் தன்மையை நோக்கி அதனை "மோகினி" என அழைப்பர். நாடகமேடையில் கண்ணைக் கவரும் ஆடை அணிகளோடு ஓர் அழகு மங்கை தோன்றி ஆடுகிறாள். அவளது அழகும் ஆடலும் பார்ப்பவரைக் கவர்ந்து அவரது அறிவை வேறெங்கும் செல்லாதவாறு தடுத்துத் தம் வசப்படுத்தி விடுகின்றன. அவர்கள் தம்மை மறந்து அக்காட்சியில் ஈடுபட்டு நிற்கின்றனர். அந்நடன மங்கையைப் போல, மாயை தனது காரியமாகிய உலகப் பொருள்களால் மாந்தரின் அறிவை மயக்கி நிற்கிறது.

 

மாந்தர் உலக வாழ்வில் மயங்கி, இறைவனது அருளைப் பெறவேண்டும் என்ற தெளிவு இல்லாமல், உலகப் பொருள்கள் மீது மேலும் மேலும் ஆசையைப் பெருக்கிக் கொள்கிறார்கள். நெடுகிலும் வாங்கிப் போட்ட நிலங்கள், வீடுகள், கணக்கு இல்லாத பணம் ஆகிய இவற்றை உடைய வாழ்க்கையைத்தான் சிறந்த வாழ்க்கை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். இவ்வாறு தேடிய பொருள்கள் அமைதியைத் தருவதில்லை என்பதுதான் அந்த உண்மை. கணக்கில் வாராத பணத்தை எப்படி மறைத்து வைத்துக் காப்பது என்ற கவலை பலருக்கு. போற்றிப் பாதுகாக்கும் பொருள் நம்மை விட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தினால் மன அமைதி போய் விடுகிறது. பொருள் இருந்தால் எல்லாவிதமான இன்பங்களையும் எய்தலாம் என்று எண்ணத் தோன்றும். மயக்கத்தினால் அவ்வாறு நினைத்தே பொருள்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அந்தப் பொருள்கள் நிலையானவை அல்ல. ஆதலால் அவற்றால் வரும் இன்பமும் எந்தச் சமயத்திலும் போய்விடலாம். நாம் பெறுகிற இன்பம் நிலையானதாக இருக்க வேண்டுமானால், என்றைக்கும் நிலையான பொருளோடு தொடர்பு இருக்க வேண்டும். எல்லா இன்பத்திற்கும் காரணமானதும் என்றும் நிலையானதுமான ஒன்றைப் பெற நாம் முயல வேண்டும். இறைவன் திருவருள்தான் அது. அதை மறந்து விட்டு, நிலையில்லாத பொருளுக்காக அலைகிறோம். "செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்" என மணிவாசகப் பெருமான் அருளி உள்ளது அறிக.

 

எத்தனையோ காலமாக, எத்தனையோ பெருமக்கள் திருவருளின்பம் தான் நிலையானது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அருள்மொழிகளில் நமக்கு நம்பிக்கை வரவில்லை. யார் யாரோ சொல்வதை எல்லாம் நம்பி விடுகிறோம். வானிலை அறிவிப்பாளர் அடுத்த 24 மணி நேரத்தில் சிற்சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று அறிவித்தால் அதை அப்படியே நம்பி விடுகிறோம். தேர்தலில் நிற்போர் அள்ளி வீசும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து விடுகிறோம். ஆனால், பல பெரியவர்கள் திருவருள் இன்பத்தை அனுபவமாக உணர்ந்து சொல்லியும் நாம் நம்புவதாக இல்லை. இந்த உலகம் ஐம்புல நுகர்ச்சிக்கு ஏற்ற பொருள்களைக் கொண்டிருக்கிறது. அவற்றைக் கண் முன்னாலே பார்க்கிறோம். கண்ணுக்குத் தெரியும் அப்பொருள்களிடத்திலே ஆசையும் நம்பிக்கையும் உண்டாகிறது. ஆனால், திருவருள் அனுபவம் அத்தகையது அல்ல. அது நமது புலன்களுக்கு எட்டாதது. அதனாலேயே அதனிடத்தில் நம்பிக்கை உண்டாகவில்லை.

 

மாந்தர் உயர்ந்ததாகிய திருவருள் இன்பத்தை அறியாமல், இழிந்தனவாகிய உலக போகங்களில் விருப்பம் கொண்டு வாழ்கின்றனர். இன்பத்தை அடையப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டு துன்பத்தை அடைகின்றனர். இந்நிலைமையை விளக்கிக் காட்டவே பாற்கடலில் உள்ள மீன்கள் அந்தப் பாலை உண்டு வாழாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ண அலைவதை உவமையாகக் காட்டப்பட்டது.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...