திருப்பூந்துருத்தி --- 0896. வீங்கு பச்சிள

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வீங்கு பச்சிள (திருப்பூந்துருத்தி)

 

முருகா!

அடியேன் மெய்த்தவம் புரிதற்கு

உண்மைப் பொருளை அருள்வாய்

 

 

தாந்த தத்தன தானா தானன

     தாந்த தத்தன தானா தானன

     தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான

 

 

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை

     சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர

     வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் ......உண்டுதோயா

 

வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன

     வாஞ்சை யிற்களி கூரா வாள்விழி

     மேம்ப டக்குழை மீதே மோதிட ...... வண்டிராசி

 

ஓங்கு மைக்குழல் சாதா வீறென

     வீந்து புட்குரல் கூவா வேள்கலை

     யோர்ந்தி டப்பல க்ரீடா பேதமு ...... யங்குமாகா

 

ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை

     தீர்ந்து னக்கெளி தாயே மாதவ

     மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ...... ழங்குவாயே

 

தாங்கு நிற்சரர் சேனா நீதரு

     னாங்கு ருத்ரகு மாரா கோஷண

     தாண்ட வற்கருள் கேகீ வாகன ...... துங்கவீரா

 

சாங்கி பற்சுகர் சீநா தீசுர

     ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக

     சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ ...... லங்கன்மார்பா

 

பூங்கு ளத்திடை தாரா வோடன

     மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை

     போன்ற விக்ரக சூரா ரீபகி ...... ரண்டரூபா

 

போந்த பத்தர்பொ லாநோய் போயிட

     வேண்ட நுக்ரக போதா மேவிய

     பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை,

     சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர,

     வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ்....உண்டுதோயா,

 

வேண்டு உரைத் துகில் வேறாய், மோகன

     வாஞ்சையில் களி கூரா, வாள்விழி

     மேம்படக் குழை மீதே மோதிட, ...... வண்டுஇராசி

 

ஓங்கு மைக்குழல் சாதா ஈறு என,

     வீந்து புள்குரல் கூவா, வேள்கலை

     ஓர்ந்திடப் பல க்ரீடா பேதம் ...... முயங்கும் ஆகா.

 

ஊண் புணர்ச்சியும், மாயா வாதனை

     தீர்ந்து, உனக்கு எளிதாயே மாதவம்

     ஊன்றுதற்கு மெய்ஞ் ஞான ஆசாரம்......வழங்குவாயே.

 

தாங்கு நிற்சரர் சேனா நீதர்

     உன ஆங்கு ருத்ர குமாரா! கோஷண

     தாண்டவற்கு அருள் கேகீ வாகன! ...... துங்கவீரா!

 

சாங்கிபற் சுகர் சீ நாத ஈசுரர்

     இந்த்ரன் மெச்சிய வேலா! போதக!

     சாந்த! வித்தக! சுவாமீ! நீப ...... அலங்கல்மார்பா!

 

பூங் குளத்திடை தாரா வோடு அனம்

     ஏய்ந்த செய்ப்பதி நாதா! மாமலை

     போன்ற விக்ரக சூர அரீ!பகிர் ...... அண்டரூபா!

 

போந்த பத்தர் பொலா நோய் போயிட,

     வேண்டு அநுக்ரக போதா! மேவிய

     பூந்துருத்தியில் வாழ்வே! தேவர்கள் ...... தம்பிரானே.

 

 

பதவுரை

 

      தாங்கு நிற்சரர் --- தலைமயிர் பறித்தல் முதலான சமண சமயக் கொள்கைகளைத் தாங்கி இருந்த குருமார்களோடு,

 

     சேனா நீதர் உ(ன்)ன ஆங்கு --- கூட்டமாக இருந்த நீசர்கள் நினைக்க, அங்கே எழுந்தருளி அவர்களை அழித்து ஒழிக்க,

 

     ருத்ர குமாரா --- மதுரையம்பதியில் திருஞானசம்பந்தராக எழுந்தருளிய சிவனின் திருக் குமாரமூர்த்தியே!

 

     கோஷண தாண்டவற்கு அருள் கேகீ வாகன --- பேரோலியுடன் திருநடனம் பரிந்தருளிய தாண்டவமூர்த்தியாகிய சிவபரம்பொருளுக்கு உபதேசம் புரிந்து அருளிய மயில்வாகனரே!

 

     துங்க வீரா --- மேலான வீரரே!

 

      சாங்கி --- சாங்கிய யோகம் பயின்றவர்கள்,

 

     பல்சுகர் --- சுகப்பிரமம் முதலானோர்,

 

     சீ நாத(ர்) --- திருமகள் கேள்வனாகிய திருமால்,

 

     ஈசுரர் --- சிவபெருமான்,

 

     இந்திரன் மெச்சிய வேலா --- இந்திரன் ஆகியோர் போற்றிய வேலாயுதரே!

 

     போதக --- உபதேச குருவே!

 

     சாந்த --- சாந்தமூர்த்தியே!

 

     வித்தக --- பேரறிவாளரே!

 

     ஸ்வாமி --- உடையவரே!

 

     நீப அலங்கல் மார்பா --- கடப்பமலர் மாலை அணிந்தவரே!

 

      பூங்குளத்திடை --- தாமரை மலர்ந்துள்ள குளத்தில்,

 

     தாராவோடு அ(ன்)னம் மேய்ந்த செய்ப்பதி நாதா --- நாரைகளுடன் அன்னப் பறவைகளும் உலவும் வயலூரில் எழுந்தருளி உள்ள தலைவரே!

 

     மா மலைபோன்ற விக்ரக சூர அரி --- பெருமலை போன்ற மேனியைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவரே!

 

     பகிரண்ட ரூபா --- அண்டங்களின் வடிவானவரே!

 

      போந்த பத்தர் பொ(ல்)லா நோய் போயிட வேண்ட --- தேவரீரது திருவடியை வந்து வணங்கிய அடியவர்கள் தமது பொல்லாத பிறவி நோய் தீர வேண்,

 

     அநுக்ரக போதா --- அருள் புரிந்த ஞானமே வடிவானவரே!

 

     மேவிய பூந்துருத்தியில் வாழ்வே --- திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டிருந்த செல்வமே!

 

     தேவர்கள் தம்பிரானே --- தேவர்களின் தனிப்பெருந்தலைவரே!

 

      வீங்கு பச்சிள நீர் போல் மாமுலை --- பசுமையான இளநீரைப் போலப் பருத்து விளங்கும் பெரிய முலைகளை

 

     சேர்ந்து அணைத்து --- சேர அணைத்துக் கொண்டு,

 

     எதிர் மார்பு ஊடே பொர --- எதிரில் உள்ள மார்பில் அழுந்தும்படி வைத்து,

 

     வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் உண்டு தோயா --- விரும்பத்தக்க சருக்கரை, பால், தேன் ஆகியவற்றை ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு அதிலேயே தோய்ந்து இருந்து,

 

      வேண்டு(ம்) உரை --- விரும்பியபடி உரையாடி,

 

     துகில் வேறாய் --- ஆடைகள் வேறா,

 

     மோகன வாஞ்சையில் களை கூரா --- காம மயக்கத்தில் களி கூர்ந்து இருந்து,

 

     வாள்விழி மேம்படக் குழை மீதே மோதிட ---  ஒளி பொருந்திய கண்கள் காதில் உள்ள குண்டலங்கள் மீது மோதும்படி சுழன்றிட,

 

      வண்டு இராசி --- வண்டின் கூட்டம்,

 

     ஓங்கு மைக்குழல் --- கருமை பொருந்திய கூந்தலில்,

 

     சாதா ஈறு என வீ(ழ்)ந்து --- எப்போதும் வீழ்ந்து இருக்க,

 

     புள் குரல் கூவா --- பறவைகளின் குரலை வெளிப்படுத்தி,

 

     வேள் கலை ஓர்ந்திட --- காம லீலைகளின் வகைகளை அறிந்து,

 

     பல க்ரீடா பேத முயங்கும் --- பலவிதமான விளையாடல்களால் புணர்ந்து இருந்து,

 

      ஆகா ஊண் புணர்ச்சியும் --- ஆகாத சுகதுக்கங்களை அனுபவிப்பதும்,

 

     மாயா வாதனை தீர்ந்து --- அந்த மாயையால் உண்டான வேதனைகளும் தீர்ந்து,

 

     உனக்கு எளிதாயே --- உனது திருவடிகளை எளிதில் அடைதற்கு உரி,

 

     மாதவம் ஊன்றுதற்கு --- பெருந்தவத்தைப் புரிவதற்கு,

 

     மெய்ஞ்ஞான ஆசாரம் வழங்குவாயே --- மெய்ஞ்ஞானத்தை அடைவதற்கு உரிய ஒழுக்கத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.

 

 

பொழிப்புரை

 

     தலைமயிர் பறித்தல் முதலான சமண சமயக் கொள்கைகளைத் தாங்கி இருந்த குருமார்களோடு, கூட்டமாக இருந்த நீசர்கள் நினைக்க, அங்கே எழுந்தருளி அவர்களை அழித்து ஒழிக்க, மதுரையம்பதியில் திருஞானசம்பந்தராக எழுந்தருளிய சிவனின் திருக் குமாரமூர்த்தியே!

 

     பேரோலியுடன் திருநடனம் பரிந்தருளிய தாண்டவமூர்த்தியாகிய சிவபரம்பொருளுக்கு உபதேசம் புரிந்து அருளிய மயில்வாகனரே!

 

     மேலான வீரரே!

 

      சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப்பிரமம் முதலானோர்,

திருமகள் கேள்வனாகிய திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகியோர் போற்றிய வேலாயுதரே!

 

     உபதேச குருவே!

 

     சாந்தமூர்த்தியே!

 

     பேரறிவாளரே!

 

     உடையவரே!

 

     கடப்பமலர் மாலை அணிந்தவரே!

 

         தாமரை மலர்ந்துள்ள குளத்தில், நாரைகளுடன் அன்னப் பறவைகளும் உலவும் வயலூரில் எழுந்தருளி உள்ள தலைவரே!

 

     பெருமலை போன்ற மேனியைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவரே!

 

     அண்டங்களின் வடிவானவரே!

 

     தேவரீரது திருவடியை வந்து வணங்கிய அடியவர்கள் தமது பொல்லாத பிறவி நோய் தீர வேண், அவர்க்கு அருள் புரிந்த ஞானமே வடிவானவரே!

 

     திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டிருந்த செல்வமே!

 

     தேவர்களின் தனிப்பெருந்தலைவரே!

 

         பசுமையான இளநீரைப் போலப் பருத்து விளங்கும் பெரிய முலைகளைச் சேர அணைத்துக் கொண்டு, எதிரில் உள்ள மார்பில் அழுந்தும்படி வைத்து, விரும்பத்தக்க சருக்கரை, பால், தேன் ஆகியவற்றை ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு அதிலேயே தோய்ந்து இருந்து, விரும்பியபடி உரையாடி, ஆடைகள் வேறா, காம மயக்கத்தில் களி கூர்ந்து இருந்து, ஒளி பொருந்திய கண்கள் காதில் உள்ள குண்டலங்கள் மீது மோதும்படி சுழன்றிட,  வண்டின் கூட்டம் கருமை பொருந்திய கூந்தலில், எப்போதும் வீழ்ந்து இருக்க, பறவைகளின் குரலை வெளிப்படுத்தி, காம லீலைகளின் வகைகளை அறிந்து, பலவிதமான விளையாடல்களால் புணர்ந்து இருந்து, ஆகாத சுகதுக்கங்களை அனுபவிப்பதும், அந்த மாயையால் உண்டான வேதனைகளும் தீர்ந்து, உனது திருவடிகளை எளிதில் அடைதற்கு உரிபெருந்தவத்தைப் புரிவதற்கு, மெய்ஞ்ஞானத்தை அடைவதற்கு உரிய ஒழுக்கத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.

 

விரிவுரை

 

புள் குரல் கூவா ---

 

பெண்களின் குரல் மிகவும் இனிமையாக பறவைகளின் குரல் போல் இருக்கும். குயில், மயில், கோழி, புறா, கிளி, காடை, அன்றில், வண்டு முதலிய பறவைகளை இங்கு கூறியுள்ளார்.  இதே போல் வேறு திருப்புகழ்ப் பாடல்களிலும் கூறி உள்ளார்...

 

அளிகாடை மயில்குயில் அன்றில் எனும்புளின்

பலகுரல் செய்திருந்து.... ---  (வரைவில்) திருப்புகழ்.

 

 

பொருகாடை குயில் புறா மயில் குக்கில்

சுரும்பினம் வனபதாயுதம் ஒக்குமெனும்படி

குரல் விடா....         ….       --- (குவளை) திருப்புகழ்.

 

 

கோமள வெற்பினை ஒத்த தனத்தியர்,

     காமனை ஒப்பவர், சித்தம் உருக்கிகள்,

     கோவை இதழ்க்கனி நித்தமும் விற்பவர், ......மயில்காடை

கோகில நல்புற வத்தொடு குக்குட

     ஆரணியப் புள் வகைக்குரல் கற்று,கல்

     கோல விழிக்கடை இட்டு மருட்டிகள், ...... விரகாலே

 

தூம மலர்ப் பளி மெத்தை படுப்பவர்,

     யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர்,

     சோலை வனக்கிளி ஒத்த மொழிச்சியர், ...... நெறிகூடா

தூசு நெகிழ்த்து ரை சுற்றி உடுப்பவர்,

     காசு பறிக்க மறித்து முயக்கிகள்,

     தோதக வித்தை படித்து நடிப்பவர் ...... உறவுஆமோ? --- திருப்புகழ்.

 

        

ஆகா ஊண் புணர்ச்சியும் ---

 

ஊண் --- உயிர்கள் அனுபவிக்கும் சுகதுக்கம். ஆகாத சுகதுக்கம் என்றார் அடிகளார்.

 

உற்றதொழில் நினைவுஉரையின் இருவினையும் உளவாம்

         ஒன்று ஒன்றால் அழியாது, ஊண் ஒழியாது, உன்னில்

மற்று அவற்றில் ஒருவினைக்குஓர் வினையால்வீடு

         வைதிக சைவம் பகரும் மரபில் ஆற்றப்

பற்றியதுகழியும்இது விலையால் ஏற்கும்....

 

என மெய்கண்ட சாதிர நூல்களில் ஒன்றான சிவப்பிரகாசம் கூறுமாறு காண்க.

 

தாங்கு நிற்சரர் சேனா நீதர் உ(ன்)ன ஆங்கு ---

 

நிற்சரர் --- தலைமயிர் பறித்தில், சுடுபாறையில் இருத்தல் முதலிய விரதங்களை மேற்கொண்டிருந்த சமணகுருமார்கள்.

 

நீதர் --- நீசர். குற்றம் உள்ளவர்கள். கீழ்மக்கள்.

 

உன்ன --- நினைக்க.

 

மதுரையம்பதிக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளும் தருணத்தில், சமணர்களுக்குப் பலப்பல துர்நிமித்தங்கள் கனவில் தோன்றின. அவற்றை எண்ணி, சமணகுருமார்கள் பாண்டிய மன்னனை வெருட்டி, திருஞானசம்பந்தப் பெருமானையும் அவரது அடியார்களையும் அழிக்க நினைத்தார்கள். அவர்களைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருவருள் துணைக் கொண்டு வென்று, திருநீற்று ஒளியைப் பாண்டி நாட்டில் முன்பு போல் பரவச் செய்தார்.

 

கோஷண தாண்டவற்கு அருள் கேகீ வாகன போதக ---

 

கோஷணம் --- பேரோலி.

 

தாண்டவம் --- சிவபெருமான் உயிர்களுக்கு அநாதியே பொருந்தி உள்ள அஞ்ஞானத்தை நீக்கி, ஞானானந்தப் பெருவாழ்வைப் பெறுதல் பொருட்டு அனவரதமும் புரியும் ஆனந்தத் திருநடனம்.

 

கேகீ --- மயில்.

 

போதக --- உபதேச குருவே!

 

பத்தர் பொ(ல்)லா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா ---

 

பொல்லா நோய் --- பிறவி நோயைப் பொல்லாத நோய் என்றார் அடிகளார். பிறவி நொய் தணிந்து, பேரானந்தப் பெருவாழ்வைப் பெற்றிட வேண்டும் அடியார்களுக்கு, அருள் குருவாக மானுடச் சட்டை தாங்கி எழுந்தருளி அருள் புரிபவர் முருகப் பெருமான்.

 

பூந்துருத்தியில் வாழ்வே ---

 

திருப்பூந்துருத்தி, சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற திருத்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது.  திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

 

இரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.

 

இறைவர்  : புஷ்பவனேசுவரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.

இறைவியார் : சௌந்தரநாயகி.

தல மரம் : வில்வம்.

தீர்த்தம்  : சூரிய தீர்த்தம்.

 

அப்பர் பெருமான் திருமடம் சமைத்துத் திருத்தொண்டு புரிந்து, திருப்பதிகங்கள் அருளப் பெற்ற சிறப்பு உடைய திருத்தலம்.

        

அப்பர் உழவாரத் தொண்டு செய்த திருத்தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற திருஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது.

 

திருவையாறைத் தலைமைத் தலமாகக் கொண்டு விளங்கும் சப்தஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.

 

காசிப முனிவர் கங்கையை இத்தலத்திலுள்ள கிணற்றில் வரவைத்து அந்நீரால் இறைவனுக்கு அபஷேகம் செய்து அருள் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

 

கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பல காலம் திருமடம் அமைத்து இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்து வந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். திருஞானசம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கொண்ட அப்பர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் "அப்பர் எங்கு உற்றார்" என்று திருஞானசம்பந்தர் வினவ "ஒப்பரிய தவம் செய்தேன். ஆதலினால், உங்கள் சிவிகையைத் தாங்கும் பேறு பெற்று இங்குற்றேன்" என்று அப்பர் பதிலளித்தார். திருஞானசம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து, அப்பரை வணங்க, அப்பரும் திருஞானசம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். திருஞானசம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

 

கருத்துரை

 

முருகா! அடியேன் மெய்த்தவம் புரிதற்கு உண்மைப் பொருளை அருள்வாய்

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...