திரு நெடுங்களம் --- 0900. பஞ்சபுலனும்

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பஞ்சபுலனும் பழைய  (நெடுங்களம்)

 

முருகா!

எனது கவலைகள் பொடிபட,

தேவரீருடைய திருவடித் தரிசனத்தைத் தந்தருள்வாய்.

 

 

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன

     தந்ததன தந்ததன ...... தந்ததான

 

 

பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்

     பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப்

 

பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி

     பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக்

 

குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ

     கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங்

 

கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை

     கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய்

 

எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல

     இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல்

 

எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள

     இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம்

 

அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள

     அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா

 

அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்

     அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

பஞ்ச புலனும், பழைய இரண்டுவினையும், பிணிகள்

     பஞ்சு என எரிந்து பொடி ......ங்கம் ஆகிப்

 

பண்டு அற,  உடன் பழைய தொண்டர்கள் உடன் பழகி

     பஞ்சவர் வியன் பதி ...... டன் குலாவக்

 

குஞ்சர முகன் குணமொடு அந்தவனம் வந்து உலவ

     கொஞ்சிய சிலம்பு கழல் ...... விந்துநாதம்

 

கொஞ்ச, மயிலின் புற மெல் வந்து அருளி, என் கவலை

     கொன்று, ருள் நிறைந்த கழல் ...... இன்றுதாராய்.

 

எஞ்சி இடையும் சுழல, அம்பு விழியும் சுழல,

     இன்பரச கொங்கை கர ...... மும் கொளாமல்

 

எந்த, உடை சிந்த, பெல மிஞ்சி அமுதம் புரள,

     இந்து நுதலும் புரள, ...... கங்குல்மேகம்

 

அஞ்சும் அளகம் புரள, மென் குழைகளும் புரள,

     அம்பொன் உரு மங்கைமணம் ...... உண்டபாலா!

 

அன்பர் குலவும் திருநெடுங்கள வளம்பதியில்

     அண்டர் அயனும் பரவு ...... தம்பிரானே.

 

பதவுரை

 

எஞ்சி இடையும் சுழல --- இடையானது குறைந்து சுழலவும்,

 

அம்பு விழியும் சுழல --- அம்பினைப் போன்ற கூர்மையான கண்கள் சுழலவும்,

 

இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் எந்த --- இன்பத்தின் சாரமாகிய தனபாரங்கள் கைகள் கொள்ளாமல் ஏறவும்,

 

உடை சிந்த --- ஆடை கலையவும்,

 

பெலம் மிஞ்சிய அமுதம் புரள --- வலிமை மிகுந்த அமுதரசம் பெருகவும்,

 

இந்து நுதலும் புரள --- சந்திரனைப் போன்ற நெற்றி அசையவும்,

 

கங்குல் மேகம் அஞ்சும் அளகம் புரள --- இருண்ட மேகம் அஞ்சும்படியான கூந்தல் புரளவும்,

 

மென் குழைகளும் புரள --- மென்மையான தோடுகள் அசையவும்,

 

அம் பொன் உரு மங்கை மணம் உண்ட பாலா --- அழகிய பொன் போன்ற உருவத்தை உடைய தெய்வயானை அம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட குமாரக்கடவுளே!

 

       அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவும் தம்பிரானே --- அன்பர்கள் மகிழ்ந்து வாழ்கின்ற திருநெடுங்களம் என்னும் வளப்பம் மிக்க திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள, தேவர்களும், பிரமதேவனும் போற்றும் தனிப்பெரும் தலைவரே!

 

பஞ்ச புலனும் --- ஐம்புலன்களும்,

 

பழைய (இ)ரண்டு வினையும் ---  பழைமையாக வரும் நல்வினை, தீவினையான இருவினைகளும்,

 

        பிணிகள் --- நோய்களும்

 

பஞ்சு என எரிந்து --- பஞ்சு போல எரிந்து,

 

பொடி அங்கமாகி --- பொடி வடிவம் ஆகி,

 

         பண்டு அற --- பழமையான மூலமலம் ஆகிய ஆணவம் அற்றுப் போக,

 

உடன் பழைய தொண்டர்களுடன் பழகி --- தேவரீருடன் இன்புறுகின்ற பழமையான அடியார்களுடன் அடியேன் பழகி,

 

பஞ்சவர் வியன்பதி உடன் குலாவ --  பிரமன், திருமால், உருத்திரர், மகேசுரர், சதாசிவர் என்ற ஐந்து மூர்த்திகளின் இடமாகிய சுவாதிட்டானம் முதல் ஆக்ஞை முடிய உள்ள ஆதாரங்களில் பொருந்துமாறு,

 

குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலவ ---

அழகிய மூலாதாரத்தில் விளங்கும் யானைமுக விநாயகருடைய

கருணையைப் பெற்று,

 

கொஞ்சிய சிலம்பு --- இனிமையாக ஒலிக்கும் சிலம்பும்,

 

கழல் --- வீரம் பொருந்திய கழலும்,

 

விந்து நாதம் கொஞ்ச --- விந்து ஒலியும் இனிமையாக ஒலிக்க

 

மயிலின் புற மேல் வந்து அருளி --- மயில் முதுகின் மீது வந்து அருளி,  

 

என் கவலை கொன்று --- அடியேனது மனக் கவலையை ஒழித்து,

 

அருள் நிறைந்த கழல் இன்று தாராய் --- திருவருள் நிறைந்த திருவடியை இன்று தந்து அருள்வீர்.

  

பொழிப்புரை

 

 

இடையானது குறைந்து சுழலவும், அம்பினைப் போன்ற கூர்மையான கண்கள் சுழலவும், இன்பத்தின் சாரமாகிய தனபாரங்கள் கைகள் கொள்ளாமல் ஏறவும், ஆடை கலையவும், வலிமை மிகுந்த அமுதரசம் பெருகவும், சந்திரனைப் போன்ற நெற்றி அசையவும்,  இருண்ட மேகம் அஞ்சும்படியான கூந்தல் புரளவும், மென்மையான தோடுகள் அசையவும், அழகிய பொன் போன்ற உருவத்தை உடைய தெய்வயானை அம்மையாரை திருமணம் செய்து கொண்ட குமாரக்கடவுளே!

 

அன்பர்கள் மகிழ்ந்து வாழ்கின்ற திருநெடுங்களம் என்னும் வளப்பம் மிக்க திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள, தேவர்களும், பிரமதேவனும் போற்றும் தனிப்பெரும் தலைவரே!

 

எனது ஐம்புலன்களும், பழைமையாக வரும் நல்வினை, தீவினையான இருவினைகளும், நோய்களும் பஞ்சு போல எரிந்து, பொடி வடிவம் ஆகி, பழமையான மூலமலம் அற்றுப் போக, தேவரீருடன் இன்புறுகின்ற பழமையான அடியார்களுடன் அடியேன் பழகி, பிரமன், திருமால், உருத்திரர், மகேசுரர், சதாசிவர் என்ற ஐந்து மூர்த்திகளின் இடமாகிய சுவாதிட்டானம் முதல் ஆக்ஞை முடிய உள்ள ஆதாரங்களில் பொருந்துமாறு, அழகிய மூலாதாரத்தில் விளங்கும் யானைமுக விநாயகருடைய கருணையைப் பெற்று, இனிமையாக ஒலிக்கும் சிலம்பும், வீரம் பொருந்திய கழலும், விந்து ஒலியும் இனிமையாக ஒலிக்க, மயில் முதுகின் மீது வந்து அருளி,   அடியேனது மனக் கவலையை ஒழித்து, திருவருள் நிறைந்த திருவடியை இன்று தந்து அருள்வீர்.

 

விரிவுரை

 

 

பஞ்ச புலனும் ---

 

ஓசை, ஒளி, நாற்றம், சுவை, ஊறு என்னும் ஐம்புலன்களே ஆன்மாவை விஷய வாதனைகளில் இழுத்து விடுவன. “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து; என்பது சிவஞானபோத எட்டாம் சூத்திரம்.

 

"ஓரஒட்டார் ஒன்றை உன்னஒட்டார், மலரிட்டு உனதாள்

சேரஒட்டார் ஐவர் செய்வது என்யான், சென்று தேவர்உய்யச்

சோர நிட்டூரனைச் சூரனைக் கார்உடல் சோரி கக்க

கூரகட்டாரிஇட்டு ஓர்இமைப் போதினில் கொன்றவனே".

                                              ---  கந்தர் அலங்காரம்.

 

பழைய இரண்டு வினை ---

 

நல்வினை, தீவினை இரண்டும் பக்குவப்படாமல் குவிந்து இருக்கும். அவ்வினை சஞ்சிதம் எனப்படும்.

 

பிணிகள் ---

 

பிறப்பு இறப்பு என்னும் உயிர் நோய்கள். பசி தாகம் முதலியன உடல் நோய்கள். காமம் கோபம் முதலியன உள்ள நோய்கள்.

 

பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி ---

 

புலன்களும் சஞ்சித வினைகளும் பிறவி நோய்களும் பஞ்சுபோல் எரிந்து பொடிபட வேண்டும். 

 

பண்டு அற ---

 

பண்டு --- பழமை. இங்கே பழமை என்பது மூலமலமாகிய ஆணவத்தைக் குறிக்கும்.

 

பழைய தொண்டர்களுடன் பழகி ---

 

இருவினை ஒப்பு மலபரிபாகம் எய்திய பக்குவ ஆன்மாக்களும் அடியார்களுடன் உறவு கொண்டு இருப்பர். வாசனாமலம் எய்தாது இருக்கும் பொருட்டு “நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்பது சிவஞானபோத சூத்திரம்.

 

பண்டைக் கொடிய தீவினையும்

பழிக்கும் குலமும் நான்எனும்ஓர்

பகையும் தீர்ந்திட்டு இம்மையிலே

பரிந்து மனது குழைந்து உருகும்

தொண்டத் தொகையின் உடன்கூடி....   --- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.

 

பழைய தொண்டருடன் கூட்டு கண்டாய்...  ---  அபிராமிபட்டர்.

 

பஞ்சவர் வியன் பதி ---

 

பஞ்ச மூர்த்திகள் தங்கி உள்ள ஐந்து ஆதாரங்கள்.

 

சுவாதிட்டானத்தில் பிரமதேவரும்

மணிபூரகத்தில் திருமாலும்

அநாகதத்தில் உருத்திரரும்

விசுத்தியில் மகேச்சுரரும்

ஆக்ஞையில் சதாசிவமும்

 

எழுந்தருளி இருப்பர். அந்தந்த ஆதாரங்களிலும் சென்று அந்தந்த மூர்த்திகளின் அருள் பெற்று, மேலே பிரமரந்திரம் கடந்து, மேலைப் பெருவெளியைச் சாரவேண்டும்.

 

குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலவ ---

 

மேற்கூறிய ஐந்து ஆதாரங்களை அடைய, மூலாதாரத்தில் எழுந்தருளி உள்ள விநாயகருடைய திருவருளைப் பெறுதல் வேண்டும்.

 

சிலம்பு கழல் விந்து நாதம் கொஞ்ச ---

 

ஆறு ஆதாரமும் கடந்து மேலைப் பெருவெளியில் சென்றவுடன் அங்கே ஆனந்தக் கூத்தரது திருவடியின் சிலம்பு ஓசையும், வீரகண்டாமணியும் ஒலிக்க, விந்துநாதமும் கேட்கும்.

 

 

மயிலின் புற மேல் வந்து அருளி ---

 

புலன், வினை, பிணி, இவைகள் பொடிபடவும், ஆறாதாரம் கடந்து, நாதவொலி கேட்டு இன்புறவும் முருகன் மயில்மீது வந்து அருள் புரிவான்.

 

என் கவலை கொன்று ---

 

அடியவரது மனக் கவலையைத் தீர்ப்பதுவே ஆண்டவனுடைய கருணையின் தொழில்.

 

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி

     வாய்பாறி நிற்கும்எனை ...... அருள்கூர

வாராய், மனக்கவலை தீராய், நினைத்தொழுது

     வாரேன் எனக்கு எதிர் முன் ...... வரவேணும்...   --- நாடா பிறப்பு (திருப்புகழ்.)

 

அருள் நிறைந்த கழல் இன்று தாராய் ---

 

இறைவனுடைய திருவடி திருவருளின் களஞ்சியம்.

 

எஞ்சியிடை ......... மங்கைமணமுண்ட பாலா ---

 

தெய்வயானை அம்மை கிரியாசத்தி. கிரியாசத்தியை இறைவன் சேர்ந்த போது, அதன் அங்கங்கள் தமது நிலையினின்றும் வேறுபடும் என்பது இதன் கருத்து.

 

அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதி ---

 

திருநெடுங்களம் என்பது, சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. தொலைவு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்திருத்தலம் வழியாகச் செல்கிறது.

 

இறைவர் : நித்யசுந்தரேசுவரர், நெடுங்களநாதர்.

இறைவியார் : மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.

தல மரம் : வில்வம்.

தீர்த்தம்  : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

ரண்டு கோபுரங்களுடனும், இரண்டு திருச்சுற்றுக்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன.

 

வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன்அம்பாள் காட்சி தருகிறாள். வடக்கு வெளித் திருச்சுற்றில் அகத்தியர் ந்நிதியும், இதன் எதிரே அகத்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்திருச்சுற்றில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் ந்நிதிகள் உள்ள. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனிச் சந்நிதி உள்ளது. மேற்குத் திருச்சுற்றில் தெய்வானையுடன் முருகன் தனிச் ந்நிதி உள்ளது.

 

         உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சிவபெருமான் இலிங்கத் திருமேனியுடன் சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீசுவரர் என்று பெயர்.

 

     மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன் திருநெடுங்களத்தில் கருவறையில், சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

 

     இத்தலத்தில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல் உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

 

 

கருத்துரை

 

 

     முருகா! எனது கவலைகள் பொடிபடவும் தேவரீருடைய திருவடித் தரிசனத்தைத் தந்தருள்வாய்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...