குறட்டி --- 0901. கூரிய கடைக்கணாலும்

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கூரிய கடைக்கணாலும் (குறட்டி)

 

முருகா!

விலைமாதர் மயக்கில் அறிவிழந்து

வாழ்நாளை வீணாக்காமல் அருள்.

 

 

தானன தனத்த தான, தானன தனத்த தான

     தானன தனத்த தான ...... தனதான

 

 

கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான

     கோடத னில்மெத்த வீறு ...... முலையாலுங்

 

கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால

     கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும்

 

சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய்

     சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர்

 

சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை

     சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ

 

தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான

     ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச்

 

சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி

     தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே

 

வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண

     மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே

 

வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ரீகை

     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

கூரிய கடைக்கணாலும், மேரு நிகர் ஒப்பது ஆன

     கோடு அதனில் மெத்த வீறு ...... முலையாலும்,

 

கோப அதரத்தினாலும், மேவிடு விதத்துள் ஆல

     கோல உதரத்தினாலும், ...... மொழியாலும்,

 

சீரிய வளைக் கையாலும், மேகலை நெகிழ்ச்சியே செய்

     சீர்உறு நுசுப்பினாலும், ...... விலைமாதர்

 

சேறு தனில் நித்தம் மூழ்கி, நாள் அவம் இறைத்து, மாயை

     சேர் தரும் உளத்தன் ஆகி ...... உழல்வேனோ?

 

தாரணி தனக்குள் வீறியே சமர துட்டன் ஆன

     ராவணன் மிகுத்த தானை ...... பொடியாக,

 

சாடும் உவணப் பதாகை, நீடுமுகில் ஒத்த மேனி

     தாது உறை புயத்து மாயன் ...... மருகோனே!

 

வாரணம் உரித்து, மாதர் மேகலை வளைக்கை நாண

     மாபலி முதல்கொள் நாதன் ...... முருகோனே!

 

வார் உறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை

     வாகு உள குறட்டி மேவு ...... பெருமாளே

 

 

பதவுரை

 

      தாரணி தனக்குள் வீறியே --- பூவுலகில் மிக்க அகந்தையை உடையவன் ஆகி,

 

     சமர துட்டன் ஆன ராவணன் --- போருக்கு வந்து எதிர்ந்த துட்டனாகிய இராவணனும், அவனுடைய

 

     மிகுத்த தானை பொடியாகச் சாடும் --- மிகுந்த சேனைகளும் அழியும்படி தாக்கிய

 

     உவணப் பதாகை --- கருடக் கொடியை உடையவரும்,

 

     நீடு முகில் ஒத்த மேனி --- நீண்ட கரிய மேகம் போன்ற திருமேனியை உடையவரும்,

 

     தாது உறை புயத்து மாயன் மருகோனே --- தேன் இருக்கும் மலரை மாலையை அணிந்த திருத்தோள்களை உடையவரும், மாயத்தில் வல்லவரும் ஆன திருமாலின் திருமருகரே!

 

      வாரணம் உரித்து --- யானையின் தோலை உரித்துப் போர்த்து,

 

     மாதர் மேகலை வளைக்கை நாண(ம்) மாபலி முதல் கொள் நாதன் முருகோனே --- பெண்களின் இடையணிகளையும், வளையல்களையும், நாணத்தையும் பிச்சையாக முன்னாளில் கொண்ட சிவபெருமானுடைய அருளால் வந்த முருகப் பெருமானே!

 

      வார் உறு தனத்தினார்கள் சேரும் --- கச்சு அணிந்து மாப்பகங்களை உடைய மாதர்கள் சேர்ந்து வாழுகின்றதும்,

 

     மதிள் --- மதில்களையும்,

 

     உப்பரீகை --- மாடங்களையும் உடையதா,

 

     வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே --- அழகு மிக்க குறட்டி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

      கூரிய கடைக் க(ண்)ணாலும் --- கூர்மையான கடைக்கண் பார்வையாலும்,

 

     மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும் --- மேருமலைக்கு நிகராகச் சொல்லக் கூடியதும், மேம்பட்டு விளங்குகின்றதும் ஆன முலைகளாலும்,

 

      கோப அதரத்தினாலு(ம்) --- இந்திரகோபம் என்னும் தம்பலப் பூச்சியினை ஒத்த சிவந்த வாயிதழ்களாலும்,

 

     மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் --- ஆல் இலைபோலப் பொருந்தி உள்ள வயிற்றின் அழகிலும்,

 

     மொழியாலும் --- பேசுகின்ற பேச்சாலும்,

 

      சீரிய வளைக் கையாலும் --- நிறந்த வளையல்களை அணிந்துள்ள கைகளாலும்,

 

     மேகலை நெகிழ்ச்சியே செய் --- இடையில் அணிந்துள்ள ஆடை நெகிழுமாறு செய்கின்,

 

     சீர்உறு நுசுப்பினாலும் --- அழகிய மெல்லிய இடையினாலும், (உள்ளம் கவரப்பட்டு)

 

     விலைமாதர் சேறுதனில் நித்த(ம்) மூழ்கி ---  விலைமாதர் தருகின்ற சிற்றின்பம் என்னும் சேற்றினில் நிதமும் முழுகி இருந்து,

 

      நாள் அவம் இறைத்து --- வாழ்நாளை வீணிலை கழித்து,

 

     மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ --- அறிவு மயக்கம் கொண்ட உள்ளத்தவன் ஆகி அடியேன் உழலுதல் தகுமா? (தகாது)

 

பொழிப்புரை

 

     பூவுலகில் மிக்க அகந்தையை உடையவன் ஆகி, போருக்கு வந்து எதிர்ந்த துட்டனாகிய இராவணனும், அவனுடைய மிகுந்த சேனைகளும் அழியும்படி தாக்கிய, கருடக் கொடியை உடையவரும், நீண்ட கரிய மேகம் போன்ற திருமேனியை உடையவரும், தேன் இருக்கும் மலரை மாலையை அணிந்த திருத்தோள்களை உடையவரும், மாயத்தில் வல்லவரும் ஆன திருமாலின் திருமருகரே!

 

         யானையின் தோலை உரித்துப் போர்த்து, பெண்களின் இடையணிகளையும், வளையல்களையும், நாணத்தையும் பிச்சையாக முன்னாளில் கொண்ட சிவபெருமானுடைய அருளால் வந்த முருகப் பெருமானே!

 

         கச்சு அணிந்து மாப்பகங்களை உடைய மாதர்கள் சேர்ந்து வாழுகின்றதும், மதில்களையும், மாடங்களையும் உடையதா, அழகு மிக்க குறட்டி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

         கூர்மையான கடைக்கண் பார்வையாலும், மேருமலைக்கு நிகராகச் சொல்லக் கூடியதும், மேம்பட்டு விளங்குகின்றதும் ஆன முலைகளாலும், இந்திரகோபம் என்னும் தம்பலப் பூச்சியின் நிறத்தை ஒத்த சிவந்த வாயிதழ்களாலும், ஆல் இலைபோலப் பொருந்தி உள்ள வயிற்றின் அழகிலும், பேசுகின்ற பேச்சாலும், நிறந்த வளையல்களை அணிந்துள்ள கைகளாலும், இடையில் அணிந்துள்ள ஆடை நெகிழுமாறு செய்கின், அழகிய மெல்லிய இடையினாலும், (உள்ளம் கவரப்பட்டு) விலைமாதர் தருகின்ற சிற்றின்பம் என்னும் சேற்றினில் நிதமும் முழுகி இருந்து, வாழ்நாளை வீணிலே கழித்து, அறிவு மயக்கம் கொண்ட உள்ளத்தவன் ஆகி அடியேன் உழலுதல் தகுமா? (தகாது)

 

 

விரிவுரை

 

கோப அதரத்தினாலு(ம்) ---

 

கோபம் --- இந்திரகோபம் என்னும் தம்பலப் பூச்சி.

 

மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் ---

 

உதரம் --- வயிறு. ஆலிலை போன்ற வயிறு.

 

சீர்உறு நுசுப்பினாலும் ---

 

நுசுப்பு --- இடை.

 

விலைமாதர் சேறுதனில் நித்த(ம்) மூழ்கி ---  

 

சேற்றில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டால், வெளியேறுவது மிகவும் அரிது. இங்கே விலைமாதர் தருகின்ற சிற்றின்பம் ஆகிய சேற்றில் விழுந்தவரும், அதில் இருந்து வெளிவருவது மிகவும் கடினம்.

 

சேறு --- நரகம்.

 

விலைமாதர் இன்பத்தில் அழுந்தி இருப்பது நரகத்தைப் போன்ற துன்பத்தையே தரும்.

 

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநரகம், --- ஓத அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.          --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை      

                            

பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,

பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!   --- பட்டினத்தார்.

 

நாள் அவம் இறைத்து ---

 

வாழ்நாள் சிவப் பொழுதாகக் கழிவது நன்மையைத் தரும். வாழ்நாளை வீணாக்குதல் கூடாது. அது அறிவீனம்.

 

"மா யாக்கை தனையும் அரு நாளையும் அவத்திலே போக்கு,

தலை அறிவு இலேனை, நெறி நிற்க நீ தீட்சை தரவேணும்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

நமது வாழ்நாள் மிகவும் சிறந்தது. ஒவ்வொரு கணமும் விலை மதிக்க முடியாத மாணிக்கமாகும். சிறந்த இந்த உடம்பையும் உயர்ந்து வாழ்நாளையும் வீணில் கழித்தல் கூடாது.  பயனுடையவாகப் புரிதல் வேண்டும். களியாடல்களிலும், வீண் பேச்சுக்களிலும், வம்புரைகளிலும், வழக்காடுவதிலும் நம் நாளைக் கழிப்பது பேதைமையாகும். காமதேனுவின் பாலைக் கமரில் விடுவதுபோல் ஆகும். தனியே இருந்து இதனைச் சிந்தித்தல் வேண்டும். பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரே ஈசன் கீழ்க்கணக்கில் எழுதுவான். சென்ற வாழ்நாளை மலையளவு செம்பொன் கொடுத்தாலும் திரும்ப அடைதல் இயலாது.

 

"ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்

     ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்

வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்

     வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே

வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே

     மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ

நாடு கின்றவர் நாதன்தன் நாமம்

     நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே".

 

என்பர் இராமலிங்க அடிகள்.

 

இத்தகைய சிறந்த நேரத்தைச் சிலர், பொழுதே போகவில்லை, பாழும்பொழுது என்று கூறி அல்லல் உறுகின்றனர். சிலர் வீண்பொழுது கிழிக்கின்றனர்.

 

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்

மென்றாலும் அயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்

மன்றாடு மலர்ப்பாதம் ஒருபோதும் மறவாமல்

குன்றாத உணர்வுஉடையார் தொண்டராம் குணமிக்கார்.

 

என்ற தெய்வச் சேக்கிழாரின் அருமைத் திருவாக்கை நன்கு சிந்தித்து உய்க.

 

மெய்த்தவர் அடிக்குற் றேவலின் திறத்தும்,

      விளங்கும் ஆகமஉணர்ச் சியினும்,

புத்தலர் கொடுநின் பரவுபூ சையினும்

      பொழுதுபோக்கு எனக்குஅருள் புரிவாய்;

முத்தமும் அரவ மணிகளும் எறிந்து

      முதிர்தினைப் புனத்துஎயின் மடவார்

தத்தைகள் கடியும் சாரல்அம் சோண

      சைலனே கைலைநா யகனே.

 

என்பார் "சோணசைல மாலை" என்னும் நூலில் பொழுதுபோக்கு எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற அறிவுறுத்துகின்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

இதன் பொருள் ---

 

முதிர்ந்த தினைப்புனத்தைக் காவல் செய்யும் வேடர் மகளிர், முத்துக்களையும், மணிகளையும் எறிந்து கிளிகளைத் துரத்துகின்ற சாரலோடு விளங்கும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே!  உண்மைத் தவம் உடையவர்களின் திருவடிகளை வழிபடுதலிலும், சிவாகமங்களை ஆய்ந்து ஓதி உணர்தலிலும், அன்று அலர்ந்த மலர்களால் உம்மை வழிடுகின்ற திறத்திலுமே எனது பொழுது கழியுமாறு அருள் புரவீராக.

 

எந்நேரமும் நல் நேரமாகக் கழிய வேண்டும். திருவருள் தாகம் இருத்தல் வேண்டும். எடுத்த இப்பிறப்பிலேயே பிறப்பின் இலட்சியத்தைப் பெறப் பெரிதும் முயலுதல் வேண்டும்.

 

"பொய்திகழும் உலகநடை என்சொல்கேன், என்சொல்கேன்,

             பொழுதுபோக்கு ஏது என்னிலோ,

  பொய்உடல் நிமித்தம் புசிப்புக்கு அலைந்திடல்,

             புசித்தபின் கண்ணுறங்கல்,

கைதவம் அலாமல் இது செய்தவம் அதுஅல்லவே,

             கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க்

  கண்டது இது விண்டு இதைக் கண்டித்து நிற்றல்எக்

              காலமோ அதை அறிகிலேன்"

 

என்று அறிவுறுத்துகின்றார் தாயுமானார்.

 

இதன் பொருள் ---

 

நிலை இல்லாது சென்று கொண்டிருக்கின்ற இந்த உலகமே பெரிது எனக்கொண்ட, உலகத்து வாழும் மதியிலா மாந்தர்தம் உலக ஒழுக்கத்தினை என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். அம் மக்கட்குப் பொழுது எவ்வாறு போகின்றது என்னில், நிலையாத தத்தம் உடலின்பொருட்டு உண்ணவேண்டிய உணவினுக்கு ஓயாது அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஐயம் ஏற்று உண்பதும். உண்ட களைப்பு நீங்கியிட நன்றாய்க் கண்ணுறக்கம் கொள்ளுதலும், ஆகிய பிறப்பிற்குரிய இவைகள் வஞ்சனைச் செய்கைகள் அல்லாமல், நல்ல செய்தவம் ஆகாதல்லவா? கண்ணில்லாத குருடர்க்கும் வெட்ட வெளியாகக் கண்ட செய்தியாகும் இது. இப் பொய் ஒழுக்கினை உளமாரக் கண்டித்து விலகி அடியேன் நிற்றற்குரிய காலம் எக்காலம் என்பதை அறிகிலேன்.

 

 

வாரணம் உரித்து, மாதர் மேகலை வளைக்கை நாண(ம்) மாபலி முதல் கொள் நாதன் முருகோனே ---

 

தாருகவனத்து முனிவர்கள் பூர்வ மீமாம்சக் கொள்கை உடையவர்கள். கர்மாவே பயனைத் தரும். பயனைத் தரத் தனியே கடவுள் வேண்டியதில்லை என்று கூறும் கொள்கையர்.

 

விரதமே பரம் ஆக வேதியரும்

   சரதம் ஆகவே சாத்திரங் காட்டினர்”        --- திருவாசகம்.

 

தாருகா வனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு, கடவுளை விடவும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்து விட்டது. தவத்தில் தாங்களே சிறந்தவர்களென்றும், தங்கள் மனைவியாகிய பத்தினி பெண்களின் கற்பே உயர்ந்ததென்றும் அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர். அந்த கர்வத்தின் காரணமாக, அவர்கள் கடவுளை நினைக்க மறந்து போனார்கள்; மதிக்க மறந்து போனார்கள்.


முனிவர்களின் கர்வத்தை அகற்ற எண்ணினார் சிவபெருமான். எனவே, அவர் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து, முனிவர்கள் தவம் செய்யும் தாருகா வனத்திற்கு அனுப்பி வைத்தார். அதேபோல் சிவபெருமானும் பிச்சாடனர் வடிவம் கொண்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.

மோகினி வடிவம் கொண்ட திருமால், தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு சென்று முனிவர்களின் தவத்தையும், அவர்களின் உயர்வையும் கெடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தன்னிலை மறந்தனர். இதே வண்ணம் முனிவர்களின் குடில்களுக்குச் சென்ற பிச்சாடனர், அங்குள்ள பெண்களிடம் யாசகம் கேட்டு நின்றார். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு முனிபத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர். அவரது அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவிகள், சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் தொடங்கினார்கள். தாங்கள் வந்த வேலை முடிந்ததும், சிவபெருமானும், திருமாலும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.


இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள், தங்கள் மனைவிமார் அந்தணர் ஒருவரைப் பார்த்து மனம் மயங்கியதை எண்ணி கடும் கோபம் கொண்டனர். நடந்த செயல்கள் அனைத்துக்கும் சிவபெருமானே காரணம் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

சிவபெருமானைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வி செய்த புலி, மான், பாம்புகள், துடி, முயலகன், பூதங்கள் இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினார்கள்.

 

புலியை உரித்து தோலை உடுத்திக்கொண்டார். மழுவையும் மானையும் கரத்தில் தரித்துக் கொண்டார். பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள் புரிந்தார். கயமுகாசுரனை வதைத்துத் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.

 

குறட்டி மேவு(ம்) பெருமாளே ---

 

குறட்டி என்னும் திருத்தலம் புதுக்கோட்டைக்கு ஐந்து கல் தொலைவில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மயக்கில் அறிவிழந்து வாழ்நாளை வீணாக்காமல் அருள்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...