திருப் பெரும்புலியூர் --- 0899. சதங்கைமணி

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சதங்கைமணி  (பெரும்புலியூர்)

 

முருகா!

திருவடிப் பேற்றை அருள்.

 

தனந்தனன தானத் தனந்தனன தானத்

     தனந்தனன தானத் ...... தனதான

 

 

சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்

     சரங்களொளி வீசப் ...... புயமீதே

 

தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்

     சரங்கண்மறி காதிற் ...... குழையாட

 

இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்

     றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ

 

டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்

     றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே

 

சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்

     சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே

 

சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்

     சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே

 

பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்

     ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா

 

பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்

     பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

சதங்கைமணி வீரச் சிலம்பின் இசை பாட,

     சரங்கள் ஒளி வீச, ...... புயம் மீதே

 

தனங்கள் குவடு ஆட, படர்ந்தபொறி மால்பொன்

     சரம்கண் மறி காதில் ...... குழையாட

 

இதங்கொள் மயில் ஏர் ஒத்து, உகந்தநகை பேசுற்ற,

     இரம்பை அழகு ஆர்மைக் ...... குழலாரோடு,

 

இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை, நீசற்று

     இரங்கி இரு தாளைத் ...... தருவாயே.

 

சிதம்பர குமார, கடம்புதொடை ஆடச்

     சிறந்தமயில் மேல்உற் ...... றிடுவோனே!

 

சிவந்தகழுகு ஆட, பிணங்கள்மலை சாயச்

     சினந்த அசுரர் வேரைக் ...... களைவோனே!

 

பெதும்பை, எழு கோலச் செயங்கொள் சிவகாமி,

     ப்ரசண்ட அபிராமிக்கு ...... ஒருபாலா!

 

பெரும்புனம் அது ஏகிக் குறம்பெணொடு கூடி,

     பெரும்புலியுர் வாழ்பொன் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

     சிதம்பர குமார --- திருச்சிற்றம்பலம் என்னும் பரவெளியில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற சிவபரம்பொருள் அருளால் உதித்த குமாரக் கடவுளே!

 

     கடம்பு தொடை ஆடச் சிறந்த மயில் மேல்

உற்றிடுவோனே --- திருமார்பில் கடப்ப மலர் மாலை ஆசை, சிறந்த மயிலின் மேல் வீற்றிருப்பவரே!

 

     சிவந்த கழுகு ஆட --- சிவந்த கழுகுகள் ஆடவும்,

 

     பிணங்கள் மலை சாய --- போர்க்களத்தில் பிணங்கள் மலை போலச் சாய்ந்து கிடக்கவும்,

 

     சினந்த அசுரர் வேரைக் களைவோனே --- சினத்துடன் போருக்கு வந்த அரக்கர்களை வேரோடு களைந்தவரே!

 

     பெதும்பை --- பெதும்பைப் பருவத்தினளும்,

 

     எழு கோலச் செயம் கொள் சிவகாமி --- அழகு பொலிய வெற்றியுடன் விளங்கும் சிவகாம சுந்தரியும்,

 

     ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா --- வீரமும் பேரழகும் பொருந்தியவளும் ஆன அம்பிகையின் ஒப்பற்ற குழந்தையே!

 

     பெரும் புனம் அது ஏகிக் குறப் பெணொடு கூடி --- பெரிய தினைப்பனத்துக்குச் சென்று, அங்கு இருந்த குறமகளாகிய வள்ளிநாயகியாரோடு திருமணம் புணர்ந்தவரே!

 

      பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே --- பெரும்புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

     சதங்கை மணி வீரச் சிலம்பின் இசை பாட --- காலில் அணிந்துள்ள கிண்கிணியும், ரத்தினம் பொருந்திய வீரச் சிலம்பும் இனிய இசை பாடவும்,

 

     புயம் மீதே சரங்கள் ஒளி வீச --- தோள்களின் மீது மணிவடங்கள் ஒளி வீசவும்

 

     படர்ந்த பொறி மால் தனங்கள் குவடு ஆட --- தேமல் படர்ந்துள்ள, ஆசையை விளைவிக்கும் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாடவும்,

 

     பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட --- அழகிய அம்பு போன்ற கண்கள் மறிக்கின்ற காதுகளில் குழைகள் ஆடவும்,

 

     இதம் கொள் மயில் ஏர் ஒத்து --- இனிமை பொருந்திய மயிலின் அழகிய சாயலை ஒத்து இருந்து,

 

     உகந்த நகை பேசுற்று --- மகிழும்படியாகச் சிரித்துப் பேசுகின்,

 

     இரம்பை அழகு ஆர் மைக் குழலாரோடு இழைந்து --- அரம்பை போன்ற அழகினையும், கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் நெருங்கி இருந்து,

 

     அமளியோடு உற்று அழுந்தும் எனை --- படுக்கையே இடமாக அவர்களோடு பொருந்தி, அழுந்திக் கிடக்கும் அடியேனுக்கு,

 

     நீ --- தேவரீர்,

 

     சற்று இரங்கி --- சிறிது மனம் இரங்கி,

 

     இரு தாளைத் தருவாயே --- திருவடிகளைத் தந்து அருள்வீராக.

 

 

பொழிப்புரை

 

 

     திருச்சிற்றம்பலம் என்னும் பரவெளியில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற சிவபரம்பொருள் அருளால் உதித்த குமாரக் கடவுளே!

 

     திருமார்பில் கடப்ப மலர் மாலை ஆசை, சிறந்த மயிலின் மேல் வீற்றிருப்பவரே!

 

     சிவந்த கழுகுகள் ஆடவும், போர்க்களத்தில் பிணங்கள் மலை போலச் சாய்ந்து கிடக்கவும், சினத்துடன் போருக்கு வந்த அரக்கர்களை வேரோடு களைந்தவரே!

 

     பெதும்பைப் பருவத்தினளும், அழகு பொலிய வெற்றியுடன் விளங்கும் சிவகாம சுந்தரியும், வீரமும் பேரழகும் பொருந்தியவளும் ஆன அம்பிகையின் ஒப்பற்ற குழந்தையே!

 

     பெரிய தினைப்பனத்துக்குச் சென்று, அங்கு இருந்த குறமகளாகிய வள்ளிநாயகியாரோடு திருமணம் புணர்ந்தவரே!

 

      பெரும்புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

     காலில் அணிந்துள்ள கிண்கிணியும், ரத்தினம் பொருந்திய வீரச் சிலம்பும் இனிய இசை பாடவும், தோள்களின் மீது மணிவடங்கள் ஒளி வீசவும், தேமல் படர்ந்துள்ள, ஆசையை விளைவிக்கும் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாடவும், அழகிய அம்பு போன்ற கண்கள் மறிக்கின்ற காதுகளில் குழைகள் ஆடவும், இனிமை பொருந்திய மயிலின் அழகிய சாயலை ஒத்து இருந்து, மகிழும்படியாகச் சிரித்துப் பேசுகின், அரம்பை போன்ற அழகினையும், கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் நெருங்கி இருந்து, படுக்கையே இடமாக அவர்களோடு பொருந்தி, அழுந்திக் கிடக்கும் அடியேனுக்கு, சிறிது மனம் இரங்கி, தேவரீர் திருவடிகளைத் தந்து அருள்வீராக.

 

 

விரிவுரை

 

சதங்கை மணி வீரச் சிலம்பின் இசை பாட ---

 

சதங்கை --- பெண்களும் குழந்தைகளும் காலில் அணியும் அணிகலன்.

 

சிலம்பு --- பெண்கள் காலில் அணிந்து கொள்ளுவது.

 

புயம் மீதே சரங்கள் ஒளி வீச ---

 

சரங்கள் --- மணிகளால் ஆன வடங்கள்.

 

 

படர்ந்த பொறி மால் தனங்கள் குவடு ஆட ---

 

படர்ந்த பொறி --- படர்ந்துள்ள தேமல்.

 

குவடு --- மலை.

 

சிதம்பர குமார ---

 

சிதம்பரம் --- சித்+அம்பரம். சித்து --- அறிவு. அம்பரம் --- வான், வெளி.

 

அறிவு என்பது இங்கே மெய்யறிவைக் குறித்தது. மெய்யறிவு என்னும் ஞானாகாயப் பெருவெளியில் சிவபரம்பொருள் ஆனந்தத் திருநடனம் புரிகின்றது. அந்தப் பரம்பொருளின் திருவருளால் அவதரித்தவர் முருகப் பெருமான். உண்மையில், சிவபரம்பொருள் வேறு அல்ல. முருகப் பெருமான் அறு அல்ல. வேறாக எண்ணினால் மருள் அறிவு என்று பொருள். இரண்டும் ஒன்று என எண்ணினால் திருவருள் விளக்கம் என்று பொருள்.

 

"ஆதியும் நடுவும் ஈறும்

     அருவமும் உருவும் ஒப்பும்

ஏதுவும் வரவும் போக்கும்

     இன்பமும் துன்பும் இன்றி

வேதமும் கடந்து நின்ற

     விமல! ஓர் குமரன் தன்னை

நீ தரல் வேண்டும், நின்பால்

     நின்னையே நிகர்க்க என்றார்".

 

எனவரும் கந்தபுராணப் பாடலை எண்ணுக.

 

பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே ---

 

திருப் பெரும்புலியூர் என்பது, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) என்னும் திருத்தலத்தில் இருந்து மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது

 

இறைவர் : வியாக்ரபுரீசுவரர், பிரியாநாதர்

இறைவியார் : சௌந்தரநாயகி

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

பஞ்ச புலியூர்த்தலங்களில் பெரும்புலியூர் திருத்தலமும் ஒன்றாகும். மற்ற 4 திருத்தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) எருக்கத்தம்புலியூர், 4) ஓமாம்புலியூர்.

 

புலிக்கால் முனிவரான வியாக்கிரபாதர், தன் தந்தை மாத்தியந்தனரிடம் தில்லைக் கூத்தரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறிப் பூப் பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்கிரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் "புலிக்கால் முனிவர்" என்று அழைக்கப்பட்டார். இந்த வியாக்கிரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் திருத்தலமும் ஒன்றாகும்.

 

        

கருத்துரை

 

முருகா! திருவடிப் பேற்றை அருள்.

 

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...