அழுக்கினைப் போக்கி, இழுக்கினை அகற்றுவோம்.

 

 

                                   அழுக்கினைப் போக்கி இழுக்கினை அகற்றுவோம்

-----

 

     உயிருக்கு உண்டாகும் குற்றங்களை "முக்குற்றம்" என்பர் பெரியோர். அவை, காமம், வெகுளி, மயக்கம் என்பவை ஆகும்.

 

     பொருளின் மேல் செல்லும் ஆசை காமம். விரும்பியது விரும்பியவண்ணம் கிடைக்காதபோதோ, முற்றுமே கிடைக்காத போதோ உண்டாவது வெகுளி என்னும் சினம். அறியாமையால் செருக்குக் கொண்டு அறிவிழந்து நிற்பது மயக்கம். இதனை விருப்பு, வெறுப்பு, அறியாமை என்றும் கூறுவர்.

 

     அநாதியாகவே உயிருக்கு இருந்து வருகின்ற அவிச்சை என்னும் அறியாமையும், அது பற்றி "நான்" என மதிக்கும் அகப்பற்று என்னும் அகங்காரமும், அது பற்றி "எனக்கு இது வேண்டும்" என்று எழும் அவாவும், அது பற்றி பொருளின் மீது செல்லும் ஆசையும், அது பெறாத வழி உண்டாகும் சினமும் எனக் குற்றங்களை ஐந்தாக்கி, வடநூலார், "பஞ்சக் கிலேசம்" என்று சொல்லுவர். கிலேசம் என்னும் சொல்லுக்குத் துன்பம் என்று பொருள். அகப்பற்று ஆகிய அகங்காரத்தை, அவிச்சை என்னும் அறியாமைக்குள்ளும், அவாவை ஆசைக்குள்ளும் அடக்கி, திருவள்ளுவ நாயனார்,  "காமம், வெகுளி மயக்கம்" எனக் குற்றங்கள் மூன்றாக வைத்தார் எனப் பரிமேலழகர் உரை கூறுவர்.

 

     இந்தக் குற்றங்களில் இருந்து உயிர்கள் மீளமுடியாமல், பிறவி வலையில் அகப்பட்டுத் தவிக்கின்றன. பிறவித் துன்பம் தொடர்ந்து, காரண காரியத் தொடர்ச்சியாய், கடலில் அலை எழுவது போல் வந்துகொண்டே இருக்கின்றது. இது உள்ளவரையில் உயிருக்குப் பாதுகாவல் இல்லை.

 

     இந்தக் குற்றங்களை முற்றக் கடிந்து, ஆன்மா தூய்மைப்பட்டால், இறைவன் உயிருக்குக் காவலாக அமைந்து அருள்வான். "காக்கும் எம் காவலனே" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     ஐம்புல இன்பம் என்னும் சேற்றில் அழுந்தி உள்ள உயிர்கள், அந்தச் சேற்றில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றன.

 

"ஆற்றகில்லேன் அடியேன் அரசே!

     அவனி தலத்து ஐம்புலன் ஆய

சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து,

     சிவன் எம்பெருமான் என்று ஏத்தி,

ஊற்று மணல்போல் நெக்குநெக்கு

    உள்ளே உருகி ஓலமிட்டுப்

போற்றி நிற்பது என்று கொல்லோ, என்

    பொல்லா மணியைப் புணர்ந்தே"

 

என்று அழுது அடி அடைந்த அன்பராகிய மணிவாசகப் பெருமான் புலம்புவார். "ஆற்றில் ஒருகாலும், அடங்காச் சமுசாரச் சேற்றில் ஒருகாலும் வைத்துத் தேய்கின்றேன்" என்பார் வள்ளல்பெருமான்.

 

     மீளமுடியாமல் தவிக்கின்றவே அன்றி, மீள வழியே இல்லையா என்றால், வழி உண்டு. ஆனால், அதை உறுதியாகப் பற்றி இருக்க முடியவில்லை. பிறவிகள் தோறும் அனுபவித்த புலன் இன்பங்களை விடமுடிவது இல்லை. புலன் இன்பங்களை அனுபவிப்பதற்காகத் தான் பிறவி வந்தது என்றால், மனிதப் பிறவி தவிர்த்த மற்றப் பிறவிகளிலேயே இருந்து கொண்டு, மனம் போன போக்கில் புலன் இன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம்.

 

     மனிதப் பிறவி ஏன் வந்தது? பிறவிகள்தோறும் அனுபவித்து வந்த புலன் இன்பத்திலேயே முழுகி இருக்கவா? இல்லை. அவற்றில் இருந்து மீண்டு வந்து தூய்மை பெறத்தான்.

 

     அழுக்குச் சேர்ந்தால் போக்குவதற்குத் தண்ணீரைப் பயனபடுத்துவோம். புலன்கள் வழியே மனம் செல்லும்போது, மேலே சொன்ன, காமம் என்னும் விருப்பு, வெகுளி என்னும் வெறுப்பு, மயக்கம் என்னும் அறியாமை ஆகிய மூன்றுவிதமான அழுக்குகளும் நீங்காமல் ஒட்டிக் கொண்டே இருக்கும். இவை மனம், மொழி, மெய் என்னும் மூவிதத்தால் நிகழும். மனத்தால் உண்டான அழுக்கு. வாக்கால் உண்டான அழுக்கு. செயலால் உண்டான அழுக்கு இந்த மூன்று விதமான அழுக்கினைக் களைவதற்கு ஓர் உபாயத்தை, சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்கின்றார்.

 

திருக்குஉறும் அழுக்காறு அவாவொடு வெகுளி

        செற்றம் ஆகியமன அழுக்கைத்

    தியானம்என் புனலால்; பொய், புறங்கூறல்,

        தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை

அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;

        அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை

    அருச்சனை என்னும் புனலினால் கழுவா

        அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ?

விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன

        வெண்மதி யோடு வெண் தலையும்,

    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்

        விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,

எருக்கையும் அணிந்து, மின்னொளி கடந்த

        ஈர்ஞ்சடை, பாந்தள் நாண்உடையாய்,

    இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்

        ஈசனே, மாசிலா மணியே.       

 

     மனத்தால் உண்டாகும் அழுக்கு ஆகிய அழுக்காறு, அவா, வெகுளி, பகைமை உணர்வு ஆகியவற்றை, இறைவன் திருவடித் தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.

 

     வாக்கினால் உண்டாகும், பொய் சொல்லுதல், புறம் கூறுதல், தீய சொற்களைக் கூறுதல் என்னும் அழுக்கை, இறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.

 

     பாவச் செயல்களில் ஈடுபடுவதனால், காயத்தால்  உண்டாகும் உடல் அழுக்கை, அருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.

 

     இவ்வாறு, மன அழுக்கு, வாய் அழுக்கு, உடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைப் போக்கி, இறைச் சிந்தனையில் திளைப்பது பற்றி சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதி, உணர்ந்து, ஒழுக வேண்டியது.

 

     மனத்தை அடியாகக் கொண்டு நினைவும், அதனால், வாக்கைக் கொண்டு சொல்லும், உடம்பைக் கொண்டு செயலும் நிகழும். மனம் தூய்மையாக இருந்தால், நினைவு, சொல், செயல் ஆகியவையும் தூய்மையாக அமையும். இதனால், தனக்குக் கேடு வருவதில்லை; பிறருக்குக் கேடு விளைவதில்லை. மனம் தூய்மை அற்றுப் போனால், நினைவு, சொல், செயல் யாவும் தூய்மை இல்லாது போகும். அதனால், தனக்கும், பிறருக்கும் கேடு விளையும்.

 

     இதனைச் சுருக்கமாகத் திருவள்ளுவ நாயனார், "மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்று அருளிச் செய்தார்.

 

     மனமாசு நீங்குதலே எல்லா அறங்களுமாகும்.  மன அழுக்கு நீங்கினாலே, வாய் அழுக்கும், மெய் அழுக்கும் இல்லாது போகும்.

 

     சிறந்த அறம் எது என்பதை "அறநெறிச்சாரம்" அறிவுறுத்துமாறு காண்க.

 

"ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்

ஒன்றோடு ஒன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து --  ஒன்றோடுஒன்று

ஒவ்வா உயிர் ஓம்பி, உள் தூய்மை பெற்றதே

அவ்வாயது அறம் ஆகும்".

 

     ஒன்றோடு ஒன்று பொருந்தாத புறச்சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றோடு ஒன்று வேறுபட்ட பொருள் இவை என நன்கு ஆராய்ந்து அறிந்து, பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களைக் காப்பாற்றி, உள்ளத் தூய்மை பெற்றதே சிறந்த அறம் ஆகும்.

 

     இப்படி, அழுக்கினைப் போக்கினால், இறையருளைத் தலைப்படலாம் என்கின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து,

ஏமம் பிடித்து இருந்தேனுக்கு, எறிமணி

"ஓம்" எனும் ஓசையின் உள்ளே உறைவதோர்

தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

 

இதன் பொழிப்புரை ---

 

     `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக் கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர் ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

 

        


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...