குறட்டி --- 0902. நீரிழிவு குட்டம்

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

நீரிழிவு குட்டம் (குறட்டி)

 

முருகா!

திருவடிப் பேற்றினை அருள்வாய்

 

தானன தனத்த தான தானன தனத்த தான

     தானன தனத்த தான ...... தனதான

 

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல

     நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள்

 

நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு

     நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ

 

பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு

     பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய்

 

பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான

     பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ

 

நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத

     நாயக ரிடத்து காமி ...... மகமாயி

 

நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத

     நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி

 

வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக

     வாணுத லளித்த வீர ...... மயிலோனே

 

மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை

     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

நீரிழிவு, குட்டம், ஈளை, வாதமொடு பித்த(ம்), மூல(ம்),

     நீள்குளிர், வெதுப்பு, வேறும் ...... உளநோய்கள்

 

நேர்உறு புழுக்கள் கூடு, நான்முகன் எடுத்த வீடு,

     நீடிய இரத்த(ம்) மூளை ...... தசைதோல்சீ

 

பாரிய நவத்து வார(ம்) நாறு முமலத்தில் ஆறு

     பாய்பிணி இயற்று பாவை, ...... நரிநாய்பேய்

 

பாறொடு கழுக்கள் கூகை தாம்இவை புசிப்பது ஆன

     பாழ் உடல் எடுத்து வீணில் ...... உழல்வேனோ?

 

நாரணி, அறத்தி, நாரி, ஆறு சமயத்தி, பூத

     நாயகர் இடத்து காமி, ...... மகமாயி,

 

நாடக(ம்) நடத்தி, கோல நீலவ ருணத்தி, வேத

     நாயகி, உமைச்சி, நீலி, ...... திரிசூலி,

 

வார்அணி முலைச்சி, ஞான பூரணி, கலைச்சி, நாக

     வாள்நுதல் அளித்த வீர ...... மயிலோனே!

 

மாட(ம்) மதில்முத்து மேடை கோபுர(ம்) மணத்த சோலை

     வாகு உள குறட்டி மேவு(ம்) ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

     நாரணி --- திருமாலின் சத்தியாகியவள்,

 

     அறத்தி --- அறம் வளர்த்த நாயகி,

 

     நாரி --- அன்பின் வடிவமாக உள்ளவள்,

 

     ஆறு சமயத்தி --- ஆறுசமயங்களுக்கும் தலைவியாக உள்ளவள்,

 

     பூதநாயகர் இடத்து காமி --- பூதகணங்களுக்குத் தலைவராகிய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் விரும்பி இருப்பவள்,

 

     மகமாயி --- யாக முதல்வியானவள்,

 

     நாடக(ம்) நடத்தி --- அருள் திருவிளையாடல்களைப் புரிபவள்,

 

     கோல நீல வருணத்தி --- அழகிய நீல நிறத்தினள்,

 

     வேத நாயகி --- வேத முதல்வி,

 

     உமைச்சி --- உமாதேவி,

 

     நீலி --- காளி,

 

     திரிசூலி --- முத்தலைச் சூலத்தை ஏந்தியவள்,

 

     வார் அணி முலைச்சி --- கச்சு அணியப் பெற்ற முலைகளை (ஞானக் கலயங்களை) உடையவள்,

 

     ஞான பூரணி --- நிறைஞானப் பொருளாக உள்ளவள்,

 

     கலைச்சி --- கலைகளுக்குத் தலைவியானவள்,

 

     நாக வாள்நுதல் அளித்த வீர --- மேலான ஒளி பொருந்திய நெற்றியினை உடையவளான அம்பிகை அருளால் அளிக்கப் பெற்றவரே!

 

     மயிலோனே --- மயல்வாகனரே!

 

     மாட(ம்) மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை --- மாடங்களையும், மதில்களையும், வெண்மையான மேடைகளையுபம், கோபுரமும், மணம் வீசுகின்ற சோலைகளையும் கொண்டுள்ள,

 

     வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே --- அழகு மிக்க குறட்டி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

     நீரிழிவு --- நீரிழிவு நோய்,

 

     குட்டம் --- தொழுநோய்,

 

     ஈளை --- இளைப்பு நோய், காசநோய்,

 

     வாதமொடு பித்த(ம்) --- வாயுவாலும், பித்தத்தாலும் உண்டாகும் நோய்கள்,

 

     மூலம் --- மூல நோய்,

 

     நீள்குளிர் --- கடும்குளிரால் உண்டாகும் நோய்,

 

     வெதுப்பு --- சுரநோய், வெப்பு நோய்,

 

     வேறும் உள நோய்கள் --- இன்னும் சொல்லப்படுகின்ற நோய்கள் (ஆகியவற்றுக்கு இடமானதும்)

 

     வேர் உறு புழுக்கள் கூடு --- புழுக்கள் வேர் ஊன்றி உள்ளதும் ஆகிய,

 

     நான் முகன் எடுத்த வீடு --- பிரமதேவன் படைத்தளித்த இந்த உடம்பானது,

 

     நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ --- உடல் முழுதும் பரவி உள்ள இரத்தம், மூளை, மாமிசம், தசை, சீழ் ஆகிய பொருந்தி உள்ளது.

 

     பாரிய --- பருத்து உள்ளது.

 

     நவத் துவார(ம்) நாறும் --- நாற்றதுடன் கூடிய ஒன்பது தொளைகளை உடையது,

 

      மு(ம்) மலத்தில் --- மும்மலங்களின் பிணிப்பால் உண்டாகின்,

 

     ஆறு பாய் பிணி இயற்று பாவை --- ஆறாக மிகுகின்ற பிணிகளுக்கு இடமாக உள்ள பொம்மை இது.

 

     நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான --- நரிகளும், நாய்களும், பேய்களும், பருந்துகளும், கழுகுகளும், ஆந்தைகளும் கூடி உண்பதான,

 

     பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ --- இந்தப் பாழான உடலை எடுத்து வந்து அடியேன் வாழ்நாளை வீணாக்கி உழலுதல் தகுமா? (தகாது)

 

 

பொழிப்புரை

 

     திருமாலின் சத்தியாகியவள், அறம் வளர்த்த நாயகி, அன்பின் வடிவமாக உள்ளவள்,  ஆறுசமயங்களுக்கும் தலைவியாக உள்ளவள், பூதகணங்களுக்குத் தலைவராகிய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் விரும்பி இருப்பவள், யாக முதல்வியானவள், அருள் திருவிளையாடல்களைப் புரிபவள், அழகிய நீல நிறத்தினள், வேத முதல்வி, உமாதேவி, காளி, முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், கச்சு அணியப் பெற்ற முலைகளை (ஞானக் கலயங்களை) உடையவள், நிறைஞானப் பொருளாக உள்ளவள், கலைகளுக்குத் தலைவியானவள், மேலான ஒளி பொருந்திய நெற்றியினை உடையவளான அம்பிகை அருளால் அளிக்கப் பெற்றவரே!

 

     மயல்வாகனரே!

 

     மாடங்களையும், மதில்களையும், வெண்மையான மேடைகளையுபம், கோபுரமும், மணம் வீசுகின்ற சோலைகளையும் கொண்டுள்ள, அழகு மிக்க குறட்டி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

     நீரிழிவு நோய், தொழுநோய், இளைப்பு நோய், காசநோய், வாயுவாலும், பித்தத்தாலும் உண்டாகும் நோய்கள், மூல நோய், கடும்குளிரால் உண்டாகும் நோய், வெப்பு நோய், இன்னும் சொல்லப்படுகின்ற நோய்கள் (ஆகியவற்றுக்கு இடமானதும்) புழுக்கள் வேர் ஊன்றி உள்ளதும் ஆகிய, பிரமதேவன் படைத்தளித்த இந்த உடம்பானது, உடல் முழுதும் பரவி உள்ள இரத்தம், மூளை, மாமிசம், தசை, சீழ் ஆகிய பொருந்தி உள்ளது. பருத்து உள்ளது. நாற்றதுடன் கூடிய ஒன்பது தொளைகளை உடையது. மும்மலங்களின் பிணிப்பால் உண்டாகின், ஆறாக மிகுகின்ற பிணிகளுக்கு இடமாக உள்ள பொம்மை இது. நரிகளும், நாய்களும், பேய்களும், பருந்துகளும், கழுகுகளும், ஆந்தைகளும் கூடி உண்பதான, இந்தப் பாழான உடலை எடுத்து வந்து அடியேன் வாழ்நாளை வீணாக்கி உழலுதல் தகுமா? (தகாது)

 

 

விரிவுரை

 

நீரிழிவு ---

 

நீரில் சர்க்கரை வரும் பொல்லாத நோய். இது பலரைப் பிடித்து வாட்டி வருத்தும்.

 

ஈளை ---

 

கோழை மிகுந்து வரும் க்ஷயம், ஆஸ்துமா, இருமல் முதலிய நோய்கள்.

 

வாதமொடு பித்த(ம்) ---

 

அண்டவாதம், பட்சவாதம், கீல்வாதம், பீனசவாதம், முதலிய வாத நோய்கள். பிடிவாதமாக வீடு தங்காமல் திரிந்து பலப் பல மகளிர் உறவு பூண்பார்க்கு எய்தும்.

 

பித்தத்தால் வரும் மஞ்சள் காமாலை, மயக்கம், சுரம் முதலிய நோய்கள்.

 

மூலம் ---

 

ஆசனத் தொளையில் வரும் நோய்கள்; ரத்த மூலம்,  சீழ் மூலம், பவுத்திரம் முதலிய நோய்கள்.

 

வேறும் உள நோய்கள், வேர் உறு புழுக்கள் கூடு ---

 

அருணகிரிநாதப் பெருமான் உடலுக்கு உண்டாகும் நோய்களைப் பட்டியலிட்டுச் சில திருப்புகழ்ப் பாடல்களை அருளி உள்ளார். அவற்றில் குறிக்கப்படாத வேறு சில நோய்கள் அவ்வப்போது, காலப்போக்கில் மனித குலத்தை வாட்டி வருகின்றது.

 

காய்கறிகள், பழங்களில் புழுக்கள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு உண்ணுகின்றோம். ஆனால், நமது உடலே புழுக்கள் வாழுகின்ற கூடு போன்று உள்ளது. எனவே, புழுக்கள் வேர் உன்றி உள்ள கூடு என்றார் அடிகளார்.

 

"ஊன்ஆர் புழுக்கூடு இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே" என்றும், "பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை" என்றும் காட்டினார் மணிவாசகப் பெருமான்.

 

"எல்லாப் படியாலும் எண்ணினால், இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை, - நல்லார்

அறிந்திருப்பார், ஆதலினால், ஆம் கமல நீர் போல்

பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு".

 

என்பார் ஔவைப் பிராட்டியார்.

 

நான் முகன் எடுத்த வீடு ---

 

படைப்புக் கடவுளாகிய பிரமதேவன் படைத்தளித்தது இந்த உடம்பு. "வீடு" என்று அடிகளார் காட்டியது அறிவுறத்தக்கது. வீடு எப்போது குலையும் என்பது நமக்குத் தெரியாது. இந்த வீடு குலைந்து போவதன் முன் இறையருளைப் பெற்று உட்டவேண்டும்.

 

"ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஓட்டி, அதில் இரண்டு

கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே"

 

என்பார் அருணை வள்ளல்.

 

நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ ---

 

"சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கோடு திரியும் சிறுகுடில்"

என்பார் மணிவாசகப் பெருமான்.

 

"தோல், எலும்பு, சீ, நரம்பு, பீளை, துன்று கோழை, பொங்கு

சோரி பிண்டமாய் உருண்டு வடிவான, தூல பங்க காயம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

இந்த உடம்பானது நெடுநாளைக்கு நிற்பது என்றும், மிகவும் சிறந்தது என்றும், புனிதமானது என்றும், இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும் என்றும் கருதி அலைகின்ற அறிவிலிகட்கு அடிகள் இவ்வாறு அறிவுறுத்துகின்றனர்.

 

இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல. இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. தோல் எலும்பு உதிரம் முதலியவைகளால் ஆனது என்பார்.

 

தோல் எலும்பு நரம்பு உதிரத்தால் ஆன உடம்பு விரைவில் அழிந்துபடும் என்பதனையும் குறிப்பில் உணர்த்துகின்றனர்.  அவ்வண்ணம் அழியும் முன் உய்வண்ணம் அடைதல் வேண்டும்.

 

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு, எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்" என்பார் பழநித் திருப்புகழில்.

 

 

நவத் துவார(ம்) நாறும் ---

 

"ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்" என்று அப்பர் பெருமான் கூறுமாறு, இந்த உடம்பில் ஒன்பது தொளைகள், வாசல்கள் உள்ளன. அவை அனைத்தும் நாற்றத்துக்கு இடமானவையே.

 

இதனை பட்டினத்து அடிகள் பின்வருமாறு காட்டுவது காண்க.

 

"புற்புதக் குரம்பை, துச்சில், ஒதுக்கிடம்

என்ன நின்று இயங்கும் இருவினைக் கூட்டைக்

கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்

பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;

மீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி;

சளியும் நீரும் தவழும் ஒருபொறி;

உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;

வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;

சலமும் சீயும் சரியும் ஒருவழி;

உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்

சட்டகம், முடிவில் சுட்டு எலும்பாகும்"

 

இந்த உடம்பு நீர்க்குமிழியினை ஒத்தது. யாவரும் அருவருக்கத்தக்க துச்சில் என்னும் ஒதுகிடத்தை ஒத்தது. இருவினைகள் என்னும் பறவைகள் தங்கி இருக்கின்ற இந்தக் கூட்டினை நீ கல்லினும் வலியதாக எண்ணி இருக்கின்றாய். இவ்வாறு நீ நினைத்துள்ள இந்தகை கூட்டினுள்ளே, கண் என்னும் இரு பொறிகளின் வழியாக, பீளையும் அதனுடன் இயைந்த நீரும் வெளிப்படும். காது என்னும் இரு பொறிகளின் வழியாக குறும்பி வெளிப்படும். மூக்கு என்னும் ஒரு பொறியின் வழியாகச் சளியும், நீரும் இழியும். வாய் என்னும் ஒரு பொறியின் வழியாக உமிழ்நீரும், கோழையும் வெளிப்படும். பாயுரு என்னும் ஒரு பொறியின் வழியாக அபான வாயுவும், மலமும் வெளிப்படும். அபத்தம் என்னும் ஒரு பொறியின் வழியாக சிறுநீரும், சீயும் வெளிப்படும். இப்படி இந்த ஒன்பது தொளைகளின் வழியாக நாறகின்ற இந்த உடம்பானது, உயிர் நீங்கிய காலத்தில் முழுதுமாக நாறும். அதானல் ஒரு பயனும் இல்லை என்பதால், அதனை ஊர்ப்புறத்திலே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று சுட்டுவிடுவார்கள். சுட்ட பின்னர் வெறும் எலும்புதான் மிஞ்சி இருக்கும்.

 

மு(ம்) மலத்தில் ---

 

மும்மலங்களின் பிணிப்பால் இந்த நாறுகின்ற உடல் உண்டானது.

 

நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான ---

 

"காக்கை, நாய், நரி, பேய்க் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ?" என்று இரங்கினார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

"எரிஎனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும்,

     இந்த மண்ணும்

சரிஎனக்கு என்னும், பருந்தோ எனக்கு என்னும்,

     தான் புசிக்க

நரிஎனக்கு என்னும் புன் நாய் எனக்கு என்னும்,

     இந் நாறு உடலைப்

பிரியமுடன் வளர்த்தேன் இதனால்

     என்ன பேறு எனக்கே"                ---  பட்டினத்தார்.

 

 

பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ ---

 

இப்படிப் பாழாகப் போகின்ற இந்த உடம்பை எடுத்து வந்து, அதற்கெ என்று விதிக்கப்பட்ட வாழ்நாளை வீணாக்கி, அற்ப சுகங்களை நாடி உழலுதல் கூடாது. இறையருளைப் பெற்று உய்யவேண்டும்.

 

வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே ---

 

குறட்டி என்னும் திருத்தலம் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! திருவடிப் பேற்றினை அருள்வாய்


1 comment:

  1. நன்று. இப்பாடலை யாரேனும் ஒளி-ஒலி வடிவில் பாடி இருப்பார்கள். அதனையும் இணைத்தால் அழகு சேர்க்கும்.

    ReplyDelete

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...