மறந்தும் பிறருக்குக் கேடு எண்ணாதே

 

 

மறந்தும் பிறரைக் கெடுக்க எண்ணாதே.

----

 

     திருக்குறளில் "தீவினை அச்சம்" அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "ஒருவன் மறந்தும் கூடப் பிறன் ஒருவனுக்குக் கேட்டினை எண்ணாது இருப்பானாக. எண்ணினால், அப்படி எண்ணினவனுக்குக் கேட்டினை அறக்கடவுளே எண்ணும்" என்று அறிவுறுத்துகின்றார் நாயனார்.

 

     ஒருவன் மற்றொருவனுக்குக் கேட்டினைத் தரும் செயலைச் செய்ய எண்ணுகின்ற அப்பொழுதே, அறக்கடவுளும் உடனே அவனுக்குக் கேட்டினைச் செய்ய எண்ணும் என்றபடி.

 

     இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்றது, பிறனுக்குக் கேட்டைத் தரும் வினையைச் செய்ய எண்ணின இவன், பிறனுக்குத் தீவினையைச் செய்வது, இடையூறு காரணமாக நிறைவேறாது போயினும் அல்லது நிறைவேற்றக் காலம் தாழ்க்கும் ஆயினும், அறக்கடவுள் அவனுக்குக் கேட்டைத் தரும் வினையைச் செய்வது தவறாது உடனே நிறைவேறும் என்பது. எனவே, தீவினையை மனத்தாலும் நினைத்தல் கூடாது.

 

 

மறந்தும் பிறன் கேடு சூழற்க, சூழின்

அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்... 

 

தையலார் கற்பு அழியச் சார்வானை, மாமதுரைத்

தெய்வமே சென்று ஒறுக்கும் செய்தியால், --- நொய்தின்

மறந்தும் பிறன் கேடு சூழற்க, சூழின்

அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு.

 

     இப் பாடலின் வழி, திருவிளையாடல் புராணத்தின் கூடல்காண்டத்தில் அமைந்துள்ள "அங்கம் வெட்டிய படலம்" காட்டப்பட்டது.

 

         பெண்களை இழிவுபடுத்துபவர்களின் நிலை என்ன என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வாட்போர் ஆசிரியர், அவரது மனைவி ஆகியோரின் இறையன்பு, எல்லோரையும் குறைத்து மதிப்பிடும் சித்தனின் எண்ணம் மற்றும் செயல்கள், சித்தனுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட தண்டனை ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது. திக்கற்ற தனது அடியவர்களைத் தெய்வமே முன்வந்து காக்கும் என்பதையும் இப்படலத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.

 

     குலோத்துங்கப் பாண்டியன் மதுரையைச் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது மதுரையில் வெளியூரினைச் சேர்ந்த வயதான வாளாசிரியன் ஒருவன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் மாணிக்கமாலை. அவ்விருவரும் இறைவனான சோமசுந்தரப் பெருமானிடம் பேரன்பு கொண்டிருந்தனர். வாளாசிரியன் மதுரை நகரின் வெளிப்புறத்தில் வாட்பயிற்சிக் கூடம் ஒன்றினை அமைத்து வாட்பயிற்சியினைக் கற்பித்து வந்தான். அவனிடம் சித்தன் என்பவன் வாட்பயிற்சி பெற்றான். நாளடைவில் அவன் வாட்பயிற்சியில் குருவினை மிஞ்சிய சீடனாக விளங்கினான். திறமைசாலியாக விளங்கிய சித்தன், கெட்ட எண்ணங்கள் மற்றும் தீய நடத்தைகள் கொண்டவனாக விளங்கினான். சிறிது காலம் கழித்து தனது குருவுக்கு போட்டியாக வாட்பயிற்சி கூடம் ஒன்றைத் தொடங்கினான். வாட்பயிற்சி கற்பிக்க அதிக ஊதியம் பெற்றான்.

 

     தனது குருவினை மதுரையை விட்டு விரட்ட தீர்மானித்த சித்தன், தனது குருவிடம் பயின்று வரும் மாணவர்களை தன்னிடம் பயிற்சி பெற வலியுறுத்தினான். ஆனால், அவனது குருவோ சித்தனின் இத்தகைய செயல்களால் அவனிடம் வெறுப்பு கொள்ளவில்லை. குருவால் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற மமதை தலைக்கு ஏறிய சித்தன் தனது குருவின் மனைவியை அடைய விரும்பினான்.

 

     ஒருநாள் குரு வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டிற்குச் சென்று மாணிக்கமாலையிடம் தன்னுடைய விருப்பத்திற்கு உடன்படும்படி அவதூறாகப் பேசினான். மாணிக்கமாலையின் கையைப் பிடித்து இழுத்தான். அவனிடம் இருந்து தப்பித்த மாணிக்கமாலை உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். சிறிது நேரம் காத்திருந்த சித்தன் மற்றொரு நாள் மாணிக்கமாலையை கவனித்துக் கொள்வதாகக் கூறிச் சென்று விட்டான். மாணிக்கமாலை தனது நிலை குறித்து மிகவும் வருந்தினாள். நடந்தவற்றைத் தனது கணவனிடம் கூறினால், சித்தனுக்கும் கணவனுக்கும் சண்டை ஏற்படக் கூடும். சண்டையில் வயதான தனது கணவனைச் சித்தன் தோற்கடித்தால் பின் தன்னுடைய நிலை என்னவாகும் என்று பலவாறு மனதிற்குள் எண்ணினாள். இறுதியில் திக்கற்றவளாய் சோமசுந்தரப் பெருமானைச் சரண் அடைந்தாள். இறைவா, என்னையும் என் கணவனையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுஎன்று கதறினாள்.

 

     மாணிக்கமாலையின் அழுகுரலைக் கேட்டு இறைவன் அவளுக்கு உதவ அருளுள்ளம் கொண்டார். மறுநாள் சொக்கநாதப் பெருமான், வாளாசிரியரின் உருவத்தில் சித்தனின் வாட்பயிற்சி கூடத்திற்குச் சென்றார். சித்தனிடம் சித்தா! இளைஞனான நீயும், வயதான நானும் நாளை வாட்போர் புரிந்து நம்மில் வல்லவர் யார் என்பதைக் காண்போம். ஆதலால், நீ நகருக்கு வெளியே வந்து என்னுடன் வாட்போர் புரிஎன்று கூறினார்.

 

     இதனை எதிர்பார்த்து காத்திருந்த சித்தன் அதற்கு சம்மதித்தான். நாளை நடைபெறும் போரில் எளிதாக வெற்றி பெற்று வாளாசிரியனை ஊரைவிட்டு துரத்திவிட்டு மாணிக்கமாலையை அடைந்து விடவேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான்.

 

     மறுநாள் மதுரைநகரின் வெளியிடத்தில் சித்தனுக்கும், வாளாசிரியன் உருவில் வந்த இறைவனுக்கும் வாட்போர் தொடங்கியது. இருவரும் நீண்ட நேரம் போர் புரிந்தனர்.

வாளாசிரியர் உருவில் வந்த பெருமான், அங்கிருந்தோர் அனைவருக்கும் கேட்கும்படி உனது குருவின் மனைவியை விரும்பிய உள்ளத்தையும், தகாத வார்த்தை பேசிய நாவினையும், அவளைத் தொட்ட கைகளையும், கெட்ட எண்ணத்தோடு பார்த்த கண்களையும் காத்துக்கொள்என்று கூறினார். பின்னர் சித்தனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அவ்விடத்திலிருந்து மறைந்தார்.

 

     தங்களுடைய ஆசிரியரைக் காணாது வாளாசிரியரின் மாணவர்கள் திகைத்தனர். தங்களுடைய ஆசிரியரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு சென்றனர்.

 

     வாளாசிரியரின் இல்லத்தில் இருந்த அவருடைய மனைவியிடம் வாளாசிரியர் எங்கே என்று கேட்டனர். மாணிக்கமாலை வாளாசிரியர் இறைவனை வழிபடத் திருக்கோயிலுக்கு சென்றதாகத் தெரிவித்தார். அப்போது வாளாசிரியர் தனது இல்லத்திற்குத் திரும்பி வந்தார். அவரிடம் மாணவர்கள் "சித்தனைக் கொன்றபின் தாங்கள் எங்கே சென்றீர்கள்?" எனக் கேட்டனர். வாளாசிரியர் சித்தனைத் தான் கொல்லவில்லை என்று தெரிவித்தார். அப்போது மாணிக்கமாலை வாளாசிரியரிடம் சித்தன் தன்னிடம் நடந்த முறையற்ற நடத்தைகளைக் கூறினார். வாளாசியரின் மாணவர்களும், போர்களத்தில் வாளாசிரியர் மாணிக்கமாலை கூறியவாறு கூறி அவனைக் கொன்றதாகத் தெரிவித்தனர்.

 

     அப்போது வாளாசிரியர், மாணிக்கமாலையின் துயரினைப் போக்க, சோமசுந்தரர் தனது உருவத்தைத் தாங்கி வந்து சித்தனைக் கொன்றாதக் கூறினார். இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட குலோத்துங்க பாண்டியன் இறைவனின் திருவருளைப் பெற்ற அத் தம்பதியினரை வணங்கி யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து பொன்னும் பொருளும் வழங்கினான்.

 

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதுஇம்மை யேகூடல்

சொற்றதுகை கண்டோமே, சோமேசா! -- அற்றான்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

 

இதன் பொருள் ---

 

         சோமேசா! கூறை கொண்டு --- துணி மூட்டையைக் கவர்ந்து கொண்டு, ஒருவர் குற்று கொன்றது --- ஒருவரைக் குத்திக் கொன்றதனால் உண்டாகிய பயன், இம்மையே கூடல் --- இப்பிறப்பிலேயே வந்து பற்றிக் கொள்ளுதல் என்பது, சொற்றது ----- "குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எல்லாம், செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே" என்று திருப்பாட்டில் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்தது, கை கண்டோம் --- உலக அனுபவத்தில் மெய் எனவே தெரிந்துகொண்டோம்.

 

         அற்றான் --- அத்தன்மை உடைமையால், பிறன் கேடு மறந்தும் சூழற்க --- (ஒருவன்) பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தாயினும் எண்ணாதொழிக,  சூழின் --- அங்ஙனம் எண்ணுவானாயின், சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் --- (அவ்வாறு எண்ணிய) தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும் ஆகலான் என்றவாறு.

 

         கேட்டினை ஒருவன் சூழ்கின்ற பொழுதே, தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக் கடவுள் எண்ணுதலாவது அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். இதனால் தீவினையை மனத்தால் எண்ணலும் ஆகாது என்பது தெளிவாகும்.

 

     இந்த வெண்பாவில் காணும், சுந்தரர் தேவாரப் பாடல் வருமாறு...

 

குற்று ஒருவ்வரைக் கூறை கொண்டு

         கொலைகள் சூழ்ந்த களவு எலாம்,

செற்று ஒருவ்வரைச் செய்த தீமைகள்

         இம்மையே வரும் திண்ணமே,

மற்று ஒருவ்வரைப் பற்றி லேன்,மற

         வாது எழுமட நெஞ்சமே,

புற்று அரவ்வுடைப் பெற்றம் ஏறி

         புறம்ப யம்தொழப் போதுமே.

 

இதன் பொழிப்புரை ---

 

     அறியாமையுடைய மனமே!  பொருளைப் பறித்தல் வேண்டி அது உடைய ஒருவரைக் கருவியால் குற்றி , அவர் உடையைப் பறித்து, மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும், முறையில் நிற்கும் ஒருவரை முறையின்றிப் பகைத்து, அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும், மறுபிறவி வரும் வரையில் நீட்டியாது, இப் பிறவியிலேயே வந்து வருத்தும்.  இது திண்ணம். ஆதலின், அவை போல்வன நிகழாது இருத்தற்கு உன்னை அன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன். புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய, இடப வாகனாரூடர் எழுந்தருளி உள்ள திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். அவனை நினைந்து புறப்படுவாயாக.

 

     வஞ்சகத்தையே தமது வாழ்நாள் செயலாகக் கொண்டு ஒழுகுபவர் உண்டு. யாரும் அறியாமல் தமது வஞ்சகச் செயலை நிறைவேற்றிக் கொள்வவதாக எண்ணிக் கொண்டு செய்வர். செய்துவிட்டுத் தமது அறிவையும் பெரிதாகப் பறைசாற்றிக் கொள்வர். அது அறிவில்லாதவர் செயல் என்று காட்டுகின்றார், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகள்...

 

 

வஞ்சித்து ஒழுகும் மதிஇலிகாள்! யாவரையும்

வஞ்சித்தோம் என்று மகிழன்மின், --- வஞ்சித்த

எங்கும்உளன் ஒருவன் காணும்கொல் என்றுஅஞ்சி

அங்கம் குலைவது அறிவு.         

 

இதன் பொருள் ---

 

     வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் --- (பொய்க்கோலம் பூண்டு) பிறரை வஞ்சித்து நடக்கும் அறிவீனர்களே!, யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் --- எல்லாரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம், வஞ்சித்த --- நீங்கள் வஞ்சித்தவற்றை, எங்கும் உளன் ஒருவன் காணும் என்று அஞ்சி --- எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றான் என்று நடுங்கி,   அங்கம் குலைவது --- (உங்கள்) உடல் பதறுவதே, அறிவு --- (உங்களுக்கு) அறிவாகும்.

 

         எங்கும் நிறைந்த இறைவன் அறியாத செயல் யாதும் இல்லையாகையால், பிறரை வஞ்சித்தோம் என்று மகிழ வேண்டாம். 

 

     நீ கெட்டுப் போனாலும்,  பெரியோர்க்குக் கேட்டினை எண்ணாதே என்கின்றது "நாலடியார்" கூறும் பாடல்...

 

தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க, தன்உடம்பின்

ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க, - வான்கவிந்த

வையகம் எல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோடு இடைமிடைந்த சொல்.    

 

இதன் பொருள் ---

 

     தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க --- ஒருவன் தான் கெடுவதாய் இருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் கெடுதலை எண்ணாது இருக்க வேண்டும்; தன் உடம்பின் ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க --- தனது உடம்பின் தசை பசியால் உலர்வதாக இருந்தாலும், நுகரத் தகாதவரது பொருளை நுகராமல் இருக்க வேண்டும்; வான் கவிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல் --- வானத்தால் கவியப் பெற்றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாய் இருந்தாலும், தனது பேச்சின் இடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாமல் இருப்பானாக.

 

     அசோகவனத்தில் சீதாபிராட்டியைக் கண்டு, மீண்ட அனுமன், அப்படியே திரும்பிப் போவது தனது வீரத்திற்கு இழுக்கு என்று எண்ணி, ஒரு அழிவை உண்டாக்கி விட்டு மீண்டால், அரக்கர்கள் போருக்கு வருவார்கள்; அதற்கேற்ற உபாயத்தைச் செய்துவிட்டுத் தான் போகவேண்டும் என்று எண்ணி, அசோக வனத்தைத் தனது கால்களால் அழிக்க முற்படுகின்றார். முற்காலத்தில் அழகிய திருக்கயிலாய மலையை, கொடுந்தொழில் உடைய இராவணன் வேரோடு பறித்தான். அந்தச் செயலுக்கு இழிவு தோன்றும்படி, தனது பெரிய கைகளால் அங்கிருந்த மண்டபங்கள் முதலானவற்றை பிய்த்து எறிகின்றார். அதைக் கண்ட அரக்கர்கள் அஞ்சி ஓடினர். பிறருக்குக் கேடு செய்தவர்கள், அந்தத் தீவினையில் இருந்து தப்ப முடியாது என்னும் பொருள்பட, "பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்" என்கின்றார் கம்பநாட்டாழ்வார். பொழில் இறுத்த படலத்தில் வரும் பாடலைக் காண்க.

 

விட்டனன்,இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்;

பட்டன, பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற;

சுட்டன பொறிகள்வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்;

கெட்டனர் வீரர், அம்மா! "பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்?"

 

இதன் பதவுரை ---

 

     இலங்கை தன்மேல் விட்டனன் --- (பேர்த்தெடுத்த அம் மண்டபத்தை) இலங்கை நகர் மீது வீசி எறிந்தான்; (அதனால்) விண் உற விரிந்த மாடம் --- வானத்தை அளாவும்படி பரவியிருந்த மாளிகைகள்; பட்டன பொடிகள் ஆன --- மோதப் பட்டனவாய்ப் பொடிகளாக உதிர்ந்தன; பாங்கு நின்ற பகுத்தன --- பக்கத்தில் நின்ற கட்டிடங்களும் பிளவுபட்டன; பொறிகள் வீழச் சுட்டன --- நெருப்புப் பொறிகள்  விழுவதனால், பொருள்களை எல்லாம் சுட்டு எரித்தன; வீரர் அரக்கர் தாமும் துளங்கினர் கெட்டனர் --- எதற்கும் கலங்காத அரக்கரில் உண்மையான வீரர்களும் அழிந்து ஒழிந்தார்கள்; கேடு சூழ்ந்தார் பிழைப்பரோ? --- பிறர்க்குக் கேடு செய்தவர்கள் அந்தத் தீவினைப் பயனை அனுபவியாது தப்புவார்களோ ? (தப்ப மாட்டார்கள்).

 

     இராவணன் முதலான அரக்கர்கள் போருக்கு வந்த சேனை வெள்ளத்தைக் கண், விபீடணர், "நம் முன்னர் வரும் இந்தப் படை இராவணனின் பெரிய மூலபலம் ஆகும். தீவினையானது முன் வந்து நிற்க, அரக்கர்கள் படையானது இங்கே வந்து நிற்கின்றது. ஊழ்வினை தூண்டுவதால், இப்பொழுதே இந்தப் பெரும் படைத் தொகுதியானது அழிந்துவிடும் என்று எனக்குத் தோன்றுகின்றது" என்று இராமபிரானின் திருவடிகளை வணங்கிச் சொல்கின்றார்.

 

'ஈண்டு, இவ் அண்டத்துள் இராக்கதர் எனும் பெயர் எல்லாம்

மூண்டு வந்தது, தீவினை முன் நின்று முடுக்க;

மாண்டு விழும் இன்று, என்கின்றது என் மதி; வலி ஊழ்

தூண்டுகின்றது' என்று, அடிமலர் தொழுது, அவன் சொன்னான்.

                                             --- கம்பராமாயணம், மூலபல வதைப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     அவன் --- வீடணன்; அடிமலர் தொழுது --- இராமபிரானின் திருவடி மலரில் விழுந்து வணங்கி; இவ் அண்டத்துள் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் --- இந்த அண்டம் முழுவதிலும் இராக்கதர் என்று பெயர் கொண்ட கூட்டம் முழுவதும்; தீவினை முன் நின்று முடுக்க --- அவர்கள் செய்த தீவினை முனைந்து நின்று விரைந்து உந்துவதால்; ஈண்டு --- இங்கே; மூண்டு வந்தது --- ஏற்பட்டு வந்து சேர்ந்திருக்கிறது;   இன்று மாண்டு வீழும் என்கின்றது என் மதி --- இன்றைக்கு இவ் அரக்கர் சேனை முழுவதும் இறந்து விழும் என்று என் அறிவு சொல்கிறது; வலி ஊழ் தூண்டுகின்றது --- வலிமையான் ஊழானது இங்கு வந்து இறக்க அவர்களைத் தூண்டுகின்றது. என்று சொன்னான்.

 

 

     "கேடு வரும் பின்னே, மதி கெட்டும் வரும் முன்னே" "கெடுவான் கேடு நினைப்பான்" என்பன முதுமொழிகள். முன்னர் ஒருவருக்குக் கேடு சூழ்ந்தவனுக்கு, அறக்கடவுளே கேட்டினை உண்டாக்கித் தரும். இராவணன் கேடு நினைந்தான். இப்போது அவனாகவே கெட்டுப்போகப் போருக்கு வந்துள்ளான்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...