காகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்
-----
திருக்குறளில், சுற்றம் தழால் என்னும் அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "காக்கைகள் தமக்கு உணவு கிடைத்தபோது, சிறிதும் ஒளிக்காமல் தமது இனத்தை அழைத்துக் கூடி உண்ணுகின்றன. அத்தகைய இயல்பு உடையார்க்கே செல்வம் கூடி வரும்" என்கின்றார் நாயனார்.
காக்கைகள் தமக்கு வேண்டும் இரையைக் கண்டபோது, தன் இனமான காக்கைகளைத் தானே வலிந்து கூவி, சேர்ந்து உண்டு, தனது இனத்தைப் பெருக்கிக் கொள்வதுபோல், ஒருவன் தனது இனத்தவரை வலிந்து கூவி அழைத்து, அவர்க்கு வேண்டுவன கொடுத்து, இன்சொல் கூறி, சினமும் கொள்ளாது இருப்பானாயின், சுற்றத்தவர் அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பார். அவ்விதம் அவன் இருத்தலால், பகைவர் அணுகாமையில், செல்வம் பெருகும். அதனால் அவன் அறத்தைச் செய்தல் கூடும். இன்பத்தையும் அடைதல் கூடும். இத் திருக்குறளின் வழி, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் ஒருவன் அடையும் உத்தியைக் கூறினார்.
காக்கை கரவா கரைந்து உண்ணும், ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடல்களைப் பார்ப்போம்....
ஆர்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்,
பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,
வேட்கை உடையீர்! விரைந்து ஒல்லை உண்ணன்மின்,
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.
என்று அருளினார், நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.
சுற்றத்தார், சுற்றத்தார் அல்லாதார், நாடு, மொழி, பிறப்பில் உயர்வு, தாழ்வு, வறுமை, செல்வம், இளமை, முதுமை முதலிய எவ்வகை வேறுபாடுமின்றி யாவருக்கும் உணவு அளித்தல் கடமை ஆகும். வந்தவர் யார் என்று ஏற்றத் தாழ்வு பாராமல், விருப்பு வெறுப்புக் கொள்ளாமல் மனமகிழ்ச்சியோடு, இல்லை என்று சொல்லாமல், அவரவர் குறிப்பினை அறிந்து கொடுக்கவேண்டும். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள். உண்ணத்தக்க காய்கனி கிழங்கு விதை இலை பூ முதலியவற்றை அவ்வாறே கொண்டும், ஏனையவற்றைத் தக்கவாறு சமைத்தும் உண்ணுங்கள். உண்ட மீதி, மறுவேளைக்கு ஆகும் என்றோ, மறுநாளைக்கு ஆகும் என்றோ, போற்றிப் பாதுகாத்து வைக்காதீர்கள்.
சுவையான உணவைக் கண்டவுடனே (பசி எடுக்கின்றதோ, இல்லையோ) உண்ணவேண்டும் என்னும் ஆவல் உண்டாகும். விரைந்து உண்ணவேண்டாம். விரைந்து உண்ணுவதால், உடல் நலம் கெடும். ஆர அமர இருந்து நன்றாக மென்று தின்னவேண்டும். "நுறுங்கத் தின்றால் நூறு வயது" என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
காக்கையானது உங்கள் வீட்டிலுள்ள பொருள்களைக் கவர்ந்து உண்ணும்போது ஒரு சிறிதும் கரைவதில்லை. வீட்டில் உள்ளார் காக்கையைக் கூவி அழைத்து, அதற்கென வைத்த உணவினைக் கரையாது உண்பதும் இல்லை.
ஆருயிர்கள் அனைத்தும் சிவபெருமானுக்கு அடிமை. அவனால் படைக்கப்பட்ட இந்த உலகமும், உலகியற் பொருள்களும் அவனது உடைமை. இறைவன் தந்த பொருள் இது என்று உணர்ந்து, இல்லாதவர்க்குக் கொடுத்து, தாமும் இன்புற்று, பிறரையும் மகிழ்வித்து வாழவேண்டும்.
தாமே தனித்து உண்டு வாழவேண்டும் என்னும் கரவு உள்ளம் கொண்டவர்கள், தனித்தே உண்பார்கள். இதனை, "வேறு ஒரு சாட்சி அறப் பசியாறியை" என்றார் அருணகிரிநாதப் பெருமான். பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புவதே மானிட மாண்பு.
இல்லறம் எப்படி இயன்றது என்பதைப் பட்டினத்து அடிகள், பதினோராம் திருமுறையில், "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"யில் அருளியதைக் காண்போம்....
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது,
ஆடினர்க்கு என்றும், பாடினர்க்கு என்றும்,
வாடினர்க்கு என்றும், வரையாது கொடுத்தும்,
பூசுவன பூசியும், புனைவன புனைந்தும்,
தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும்,
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்,
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி
இவ்வகை இருந்தோம்.......
சின்ன முட்டுக்கள் பரப்பியுள்ள பொன்னால் ஆகிய பாத்திரத்தில் அறுவகைச் சுவையுள்ள உணவினை வாளா இருந்து உண்டு பசியினைப் போக்கிக் கொள்ளாது, பசிக்கு உணவினை நாடிக் கொண்டு, ஆடி வந்தவர்க்கும், பாடி வந்தவர்க்கும், இவை இரண்டும் இன்றி மிக்க பசியோடு வாட்டம் கொண்டு வந்தவர்க்கும், அளவு அறுக்காமலும், கைம்மாறு கருதாமலும் கொடுத்து உதவியும், நறுமணப் பூச்சுக்களைப் பூசியும், அணியத்தக்க அணிகலன்களை அணிந்து கொண்டும், உயர்ந்த ஆடைகளை அரையில் உடுத்திக் கொண்டும், மனம் களிக்க, ஐம்புல இன்பங்களை நுகர்ந்தும், புதல்வர்களும், சுற்றத்தவரும் மனமகிழ்ந்து இருக்க, இவ்வாறு இனிது இருந்தோம்...
தான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெறவேண்டும் என்னும் அருள் உள்ளம் கொண்ட தாயுமான அடிகளார், எல்லோரையும் கூவி அழைக்கின்றார்.
காகம் உறவு கலந்து உண்ணக்
கண்டீர்! அகண்டா காரசிவ
போகம் எனும் பேரின்பவெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்குதையோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேர வாரும் சகத்தீரே.
என்பது தாயுமான அடிகளார் அருளிய பாடல்..
மக்கள் எங்ஙனம் வாழ்தல் வேண்டும் என்னும் மெய்ம்மையினை நூல்முறையால் உணர்த்தி அருளியது மட்டும் அன்றிச் சிற்றுயிர்களின் வாழ்க்கை வழியாகவும் சிவபெருமான் உணர்த்தி அருளுகின்றனன். அவற்றுள் ஒன்று. காகமானவை மக்கள் கரைந்து தமக்கென வைக்கப்பட்ட சிறிய அளவு உணவையும் தாமும் "காகா" எனக் கரைந்து தம் உறவுகளை அழைத்துக் கலந்து உண்ணும் முறையினை நாளும் காண்கின்றோம். அதுபோல் எங்கணும் நீக்கம் அற நிறைந்து நின்று அருள்கின்ற சிவநுகர்வு என்னும் மாறிலாப் பேரின்பப் பெருவெள்ளமானது, நனி மிகப் பொங்கி வழிந்து முழுநிறைவாய், ஒரு வடிவாய், பொதுவாய்க் கிடக்கின்றது. அந்தோ! திருவருளால் நாம் அதை நுகர்ந்து பேரின்பம் எய்திடக் கிடைத்தற்கு அரிதாய்க் கிடைத்துள்ள இம் மானிட யாக்கை இறந்துவிடுவதன் முன் உலகவரே! சேர வருவீராக.
காக்கையின் நல் இயல்புகள் குறித்து தனிப்பாடல்கள் கூறுவது காண்க.
கண்ட இரையைக் கரைந்து, கிளைக்கூட்டி
உண்டு வருதலால், ஊர்க் காக்கை --- அண்டர்க்குச்
செய்யும் பலிபூசை செய்துவர நேர்ந்ததுகாண்,
உய்யும் வழிதெரிக ஒர்ந்து. --- தனிப்பாடல்.
காலை எழுந்திருத்தல், காணாமலே கலத்தல்,
மாலை குளித்து மனை புகுதல், --- சீலமுடன்
உற்றாரோடு உண்ணல், உறவாடல், இவ்வைந்தும்
கற்றாயோ காக்கைக் குணம். --- தனிப்பாடல்.
எல்லோரிடமும் சென்று ஐயம் ஏற்று, எல்லோர்க்கும் ஊட்டித் தானும் உண்ட ஆபுத்திரன் திறத்தை "மணிமேகலை" என்னும் காப்பியம் அருளுமாறு காண்க.
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்
காணார், கேளார், கால்முடப் பட்டோர்,
பேணுநர் இல்லோர், பிணிநடுக்கு உற்றோர்,
யாவரும் வருக என்று இசைத்து, உடன்ஊட்டி
உண்டு, ஒழி மிச்சில் உண்டு, ஓடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளும் காவலன் தானென்.
இதன் பொருள் ---
மதுரைமா நகரில் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, குற்றமற்ற சிறப்பினையுடைய மாடங்கள்தோறும் சுழன்று, குருடர், செவிடர், முடவர், பாதுகாப்போர் அற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரும் வருக என்று கூறி அழைத்து அனைவரும் உண்டு எஞ்சிய உணவை உண்டு, அவ் ஓட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, உறங்குதல் செய்வான் அவ் ஆபுத்திரனாகிய காவலன் என்போன்.
பிச்சை எடுப்போரே பகுத்து உண்டு, பல் உயிர் ஓம்புகையில், நாமும் அவ்வாறே ஒழுகி இம்மை மறுமை நலன்களை இறையருளால் பெற்று இனிது வாழ்வோமாக.
No comments:
Post a Comment