60. தகாதவை செய்தால் கேடு

 



தானா சரித்துவரு தெய்வமிது என்றுபொய்ச்

     சத்தியம் செயின்விடாது;

தன்வீட்டில் ஏற்றிய விளக்கென்று முத்தந்

     தனைக்கொடுத் தால்அதுசுடும்;


ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனதென்

     றடாதுசெய் யிற்கெடுதியாம்;

ஆனைதான் மெத்தப் பழக்கம்ஆ னாலுஞ்செய்

     யாதுசெய் தாற்கொன்றிடும்;


தீனான தினிதென்று மீதூண் விரும்பினால்

     தேகபீ டைகளே தரும்;

செகராசர் சூனுவென ஏலாத காரியம்

     செய்தால் மனம்பொறார்காண்;


வானாடு புகழும்ஒரு சோணாடு தழையஇவண்

     வந்தவ தரித்தமுதலே!

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---

வான்நாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே! - வானவர் புகழும் ஒப்பற்ற சோழநாடு சிறப்புற இங்கு வந்து தோன்றிய முதல்வனே!

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச் சத்தியம் செயின் விடாது - தான் வழிபட்டு வரும் தெய்வம் இது என்று எண்ணி (அதன் முன்னிலையிலே) பொய்ம்மொழி கூறினால் தண்டிக்காமல் விடாது.

தன் வீட்டில் ஏற்றிய விளக்கு  என்று முத்தம் தனைக் கொடுத்தால் அது சுடும் - தன்னுடைய வீட்டிலே ஏற்றிய விளக்குதானே என்று முத்தம் கொடுத்தால் அவ் விளக்குச் சுடும்.

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யின் கெடுதி ஆம் - எப்படி இருப்பினும் உயர்நிலையில் உள்ளவர்கள் தனக்கு ஆதரவாக உள்ளவர்கள்தானே என்று கருதித் தவறு செய்தால் கேடு உண்டாகும்.

ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும், செய்யாது செய்தாற் கொன்றிடும் - யானை  நன்றாகப் பழகியிருந்தாலும் அதற்கு விருப்பம் அல்லாததைச் செய்தால் கொன்றுவிடும்.

தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் - உணவு இனியது என்று மிகைப்பட விரும்பி உண்டால் உடலுக்கு நோயையே உண்டாக்கும்.

செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் - உலக மன்னவரின் அரும்புதல்வன் நான்தானே என்று நினைத்துத் தகாத வேலைகளைச் செய்தால் அரசர் உள்ளம் பொறுக்கமாட்டார்.

ஆசரித்தல் - வழிபடுதல். தீன் - உணவு. சூனு (வட) - மகன்.

      யாவராயினும் வம்பு மீறினால் கெடுதியே உண்டாகும் என்பது கருத்து.


No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 03. ஆற்றாரும் அற்றி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...