திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
அறிவு நூல்களைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளை, "கல்வி" என்னும் அதிகாரத்துள் விளக்கி அருளிய நாயனார், கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் கேட்டினை இந்த அதிகாரத்துள் அறிவுறுத்துகின்றார்.
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "கல்வி அறிவு இல்லாதவர் உயர்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், கீழ்க்குலத்தில் பிறந்து கல்வி அறிவினை உடையவர் போல் பெருமை இல்லாதவரே" என்கின்றார் நாயனார்.
சாதி உயர்ச்சி உடம்போடு ஒழியும். கல்வி உயர்ச்சி உயிரோடு செல்லும். எனவே,சாதி உயர்ச்சியால் பலனில்லை என்றார்.
கல்வி உயிரோடு செல்லும் என்பது, "ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்னும் திருக்குறளால் விளங்கும்.
திருக்குறளைக் காண்போம்...
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும்--- கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்,
கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர்--- தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
மெய்த்ததிரு வள்ளுவனார் வென்று உயர்ந்தார்,கல்விநலந்
துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார்,சோமேசா! - உய்த்துஅறியின்
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.
இதன்பொருள்---
சோமேசா! உய்த்து அறியின் --- ஆராய்ந்து அறிவோமாயின்,கல்லாதார் --- மெய்ப்பொருளைக் கற்றறியாதார்,மேல் பிறந்தார் ஆயினும் --- உயர்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும், கற்றார் பாடு அனைத்து இலர் --- அதனைக் கற்றறிந்தாரது பெருமைக்கு ஒப்ப மதிக்கத் தக்க பெருமை இலர்,
மெய்த்த திருவள்ளுவனார் --- மெய்ப்பொருளை உணர்ந்த திருவள்ளுவ நாயனார், வென்று உயர்ந்தார் --- வெற்றி பெற்று மேம்பாடு அடைந்தார், கல்வி நலம் துய்த்த --- மெய்ம்மை நாடாது கல்வி இன்பத்தையே நுகர்ந்த, சங்கத்தார் --- கடைச்சங்கப் புலவர்கள், தாழ்ந்தார் --- தாழ்வடைந்தார் ஆகலான்.
உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து. சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டமை அறிக.
மெய்த்த திருவள்ளுவனார் - செம்மைப் பொருளை உணர்ந்த திருவள்ளுவ நாயனார்.
திருவள்ளுவர் என்னும் பெயருள் "திரு" என்பது உயர்வையும், "வள்ளுவர்" என்பது வண்மையை உடையவர் என்பதையும் விளக்கி நின்றது. "தேவை, மறந்தேயும் வள்ளுவன் என்பான் ஓர் பேதை" என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுட் பகுதிக்கு உரை இயற்றிய திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் விசேடக் குறிப்பில், "அன்றி ஒலிக் குறிப்பினாலே சாதி இழிவு தோன்ற வள்ளுவன் என்பான் எனினும் அமையும்". இக் குறிப்பொலியை வடநூலார் காகுசுரம் எனக் கூறியமை காண்க என்றார்.
திருவள்ளுவ நாயனார் தாம் அருளிச் செய்த திருக்குறளை அரங்கேற்றுதற்குச் சங்கத்திற்கு வந்தபோது, சங்கத்தார் "நாங்கள் இருக்கும் இந்தச் சங்கப்பலகை உமது நூலுக்கு இடம் தருமாயின் அதைக் கொள்வோம்" என்றார்கள். அவ்வாறே நாயனார் தமது நூல் எழுதிய ஏட்டினை அப் பலகையின் மீது வைத்த அளவில், அப் பலகை அவ் ஏட்டின் அளவு சுருங்கவே, அதன் மீது இருந்த புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் பொற்றாமரையில் வீழ்ந்தார்கள். வீழ்ந்து தள்ளாடிய அப் புலவர்கள் கரையேறி நாயனாரையும் அவர் நூலையும் பலபடியாகப் புகழ்ந்தார்கள்.
அறம்பொருள் இன்பம்வீடு என்னுமிந் நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓருபேதை அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடை யார்.
என்பது திருவள்ளுவ மாலைப் பாடல்களில் ஒன்று.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
கானத் திருநீல கண்டயாழ்ப் பாணரைப்போல்
ஞானத் தலைவருக்கு நட்பினர்ஆர்?- மானத்து
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழிலிட்டுப் பாடும் நியமம் உடையவர். அவர் நடுநாட்டிலே திருஎருக்கத்தம்புலியூரிலே அவதரித்தவர். சோழநாட்டில் உள்ள சிவத்தலங்களை எல்லாம் தரிசனம் செய்தார். பாண்டிநாட்டை அடைந்தார். மதுரைச் சொக்கலிங்கமூர்த்தியினுடைய திருக்கோயிலின் வாயிலைச் சேர்ந்தார். சிவபெருமானுடைய புகழ்களை யாழில் இட்டு வாசித்தார். சொக்கலிங்கமூர்த்தி அன்று இரவு தம்முடைய அடியார்கள் எல்லாருக்கும் கனவிலே அருளிச் செய்தபடியே அவர்கள் திருநீலகண்டப் பெரும்பாணரைச் சுவாமி சந்நிதியில் அழைத்து வந்தனர். ஆலவாய் அவிர்சடைக் கடவுளது ஆணை அது எனத் தெளிந்த பாணர் சந்நிதியிலே இருந்து யாழ் வாசித்தார். "இவருக்குப் பொற்பலகை இடுங்கள்" என எழுந்த அசரீரி வாக்கின்படியே அடியார்கள் இவருக்குப் பொற்பலகை இட்டனர். அதில் ஏறி யாழ் வாசித்தார் பாணர். பின்பு பல தலங்களையும் வணங்கினார். திருவாரூரைச் சேர்ந்தார். திருக்கோயிலின் வாயிலை அடைந்தார். யாழ் வாசித்தார். சிவபெருமான் வடதிசையிலே ஒரு திருவாயில் வகுத்தார். பெரும்பாணர் அதன் வழியே புகுந்து புற்றிடங்கொண்டாரை வணங்கினார். சீகாழியை அடைந்து திருஞானசம்பந்தப் பெருமானாரையும் வழிபட்டார். அவருடன் பிரியாதிருந்து பணியாற்றினார். அவர் திருப்பதிகங்களைத் தமது யாழிலிட்டு வாசிக்கும் பெரும்பேற்றைப் பெற்றார். திருநல்லூர்ப் பெருமணத்திலே அவருடன் சோதியில் கலந்தார்.
கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமை இலர் என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.
ஞானத்தலைவர் என்றது திருஞானசம்பந்தப் பெருமானாரை. பாடு --- பெருமை. கானம் --- இசை. கற்றார் அனைத்து --- கல்வியுடையார் பெருமை போன்ற பெருமை.
பின்வரும் பாடல்களக் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்,
ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. --- புறநானூறு.
இதன் பொருள் ---
உற்றுழி உதவியும் --- தன் ஆசிரியருக்கு ஓர் ஊறுபாடுஉற்றவிடத்து அது தீர்த்தற்கு வேண்டிய உதவிகளைச் செய்தும்; உறு பொருள்கொடுத்தும் --- மிக்க பொருளைக் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று --- வழிபாட்டு நிலைமையை வெறுக்காது கற்றல் ஒருவருக்கு அழகு; பிறப்பு ஓரன்ன உடன் வயிற்றுள்ளும் --- (அதற்கு என்ன காரணம் என்றால்,) பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு தாயின் வயிற்றுப் பிறந்தவர்களுள்; சிறப்பின் பாலால் - கல்வியின் சிறப்பால்; தாயும் மனம் திரியும் --- தாயும் மனம் வேறுபடும்; ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் --- ஒரு குடியில் பிறந்த பலருள்ளே; மூத்தோன் வருகஎன்னாது --- மூத்த பிள்ளையை வரவழைத்துச் சிறப்புச் செய்யாது; அவருள் அறிவுடையோன் ஆறு --- அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே; அரசும் செல்லும் --- அரசனும் விரும்புவான்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் --- வேறுபாடுதெரியப்பட்ட நாற்குலத்து உள்ளும்; கீழ்ப்பால் ஒருவன் கற்பின் ---கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்; மேற்பால் ஒருவனும் அவன்கண்படும் --- மேற்குலத்துப் பிறந்த ஒருவனும் இவன் கீழ்க்குலத்தான் என்று பாராது கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவான். (எனவே, இத்தகு சிறப்பு வாய்ந்த கல்வியை ஒருவன் கற்றுத் தெளிதல் அவசியம்)
திரி அழல் காணில் தொழுப விறகின்
எரி அழல் காணின் இகழ்ப --- ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு. --- நான்மணிக் கடிகை.
இதன் பொருள் ---
திரி அழல் காணின் தொழுப --- திரியின் எரியும் சுடரைக் கண்டால், --- அது சிறிதாய் இருப்பினும் உலகத்தார் கைகூப்பி வணங்குவர்; விறகின் எரி அழல்காணின் இகழ்ப --- விறகிலே, எரியும் சுடரைக் கண்டால், அது பெரிதாயிருப்பினும் உலகத்தார் மதியாது இகழ்வர், (அது போல)ஒரு குடியில் --- ஒரே குடும்பத்தில்,கல்லாது முத்தானை கைவிட்டு --- கல்வி அறிவு இல்லாமல் ஒயதில் மட்டும் முதிர்ந்தவனைமதியாமல் விடுத்து, கற்றான் இளமை உலகு பாராட்டும் --- கல்வி அறிவு பெற்றவனது இளமைப் பருவத்தையேஉலகத்தார் பாராட்டுவர்.
திரியில் எரியும் சுடரைக் கண்டால் அது சிறிதாயிருப்பினும் உலகத்தார் தொழுவர். விறகில் எரியுஞ் சுடரை,அது பெரிதாய் இருப்பினும் தொழாது இகழ்வர். ஒரு குடும்பத்திலேயே படிக்காதவன் மூத்தவனாயினும் மதியார.; படித்தவன் இளைஞனாயினும் மதித்துப் பாராட்டுவர்.
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்,
சாலும் அவைப்படில் கல்லாதான் பாடிலன்,
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின். --- நான்மணிக் கடிகை
இதன் பொருள் ---
வால் இழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலர் --- ஒள்ளிய நகைகளை அணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன், அழகில்லாத ஆடவர்பெருமை இல்லாதவர் ஆவார்; சாலும் அவைப்படில் கல்லாதான் பாடு இலன் --- கல்வி கேள்விகளால் நிறைந்தோர் இருக்கும் அவையில் புகுந்தால், கல்வியறிவு இல்லாதவன்பெருமை இல்லாதவன் ஆவன்; கற்றான் ஒருவனும் --- கற்ற அறிவுடையான் ஒருவனும், கல்லாதார் (முன்னர்ப் படின்) --- கல்லாதவரிடம் சேர்ந்தால், பாடு இலனே --- பெருமை இலனாவன்; பேதையார் முன்னர்ப் படின் --- அறிவிலார்பால் சேரினும்;பாடு இலனே --- அறிஞன் பெருமையிலனேயாவன்.
களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும். --- நாலடியார்.
இதன் பொருள் ---
களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் --- உவர் நிலத்தில் தோன்றிய உப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும் நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்; கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் --- ஆதலால், கீழ்க்குடியிற் பிறந்தோராயினும் கற்றறிந்தோரை மேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல் உண்டாகும்.
கல்வி, மாந்தரை உயர்வகுப்பாரினும் மேலவராக மதிக்க வைக்கும்.
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணில் கடைப்பட்டான் என்று இகழார்,- காணாய்!
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல். --- நாலடியார்.
இதன் பொருள் ---
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்று இகழார் அவன் துணையா ஆறு போயற்று --- படகு செலுத்துவோன் பழைமையான சாதிகளில்,நினைக்குமிடத்துக் கடைப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்று புறக்கணியாராய் அவன் துணையாக ஆற்றைக் கடந்து போன தன்மையை ஒக்கும்; நூல் கற்ற மகன் துணையா நல்ல கொளல் --- அறிவு நூல்கள் கற்ற பெருமகன் ஒருவன் துணையாக மெய்ப்பொருள்களை அறிந்து கொள்ளுதல் என்க.
கல்விக்கு முன்,பிறப்பின் உயர்வு தாழ்வு கருதத் தக்கன அல்ல.
பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்,
கல்லாதார் வாழ்வது அறிதிரேல்,- கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று. --- நாலடியார்.
இதன் பொருள் ---
பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வது அறிதிரேல் --- பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும், கல்லாதார் நீடு வாழ்வது எங்ஙனமென்று கருதுவீர்களானால்; (அதற்குக் காரணம்) சேதனம் என்னும் அச்சேறு அகத்து இன்மையால் கோது என்று கொள்ளாதாம் கூற்று --- அறிவென்னும் அப்பிழிவு அவர்கள் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறுங்கோது என்று கருதிக் கழித்துவிடுவான் கூற்றுவன் என்பது.
சாதல் நேரினும் கற்றல் கேட்டல் முதலிய நல்வினைகளைச் செய்து புண்ணியம் பெறுதல் வேண்டும்.
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே;
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர். --- வெற்றிவேற்கை.
இதன் பொருள் ---
நாற்பால் குலத்தில் மேற்பால் ஒருவன் --- நான்கு வகையானகுலங்களில், உயர்குலத்திற் பிறந்த ஒருவன், கற்றிலன் ஆயின் --- கல்லாதவனானால், கீழ் இருப்பவனே --- அவன் தாழ்ந்த இடத்தில் இருப்பவனே.
எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும் --- எந்தக் குலத்தில், பிறந்திருந்தாலும், யாவரே ஆயினும் --- யாராயிருந்தாலும், அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர் --- அந்தக் குலத்தில், கல்வி கற்றவரைமேலிடத்து வருக என்று அழைப்பார்.
உயர் குலத்திற் பிறந்தவன் கல்லாதவனாயின் தாழ்ந்த இடத்தில் இருக்கத்தக்கவனே. எக்குலத்தில் பிறந்திருந்தாலும் யாராயிருந்தாலும் கற்றோரை மேல் வருக என்று உபசரித்து அழைப்பார்.
யாவரே ஆயினும் என்றது, எந்த நிலைமையினர் ஆயினும் என்றபடி, தாழ்ந்த குலத்திற் பிறந்தவராயினும் இளைஞராயினும் கற்றோரை அழைப்பரென்க.
குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று. --- முதுமொழிக் காஞ்சி.
இதன் பொருள் ---
நல்ல குலம் உடைமையினும் கல்வியுடைமை சிறப்புடைத்து.
தேவரே கற்றவர், கல்லாதார் தேருங்கால்
பூதரே, முன்பொருள் செய்யாதார் - ஆதரே,
துன்பம் இலேம்பண்டு யாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது. --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
கற்றவர் தேவரே --- அறிவு நூல்களைப் படித்தவர், தேவரை ஒப்பவரே ஆவர்; கல்லாதார் தேரும் கால் பூதரே --- அவற்றைக் கல்லாதவரைப் பற்றிஆராய்ந்து பார்க்குமிடத்து பசாசுகளோடு ஒப்பவரே ஆவர்; முன் பொருள் செய்யாதார் ஆதரே --- முதுமைப் பருவம் வருதற்கு முன்பேபொருள் தேடி வைத்துக் கொள்ளாதவர்அறிவிலாரே ஆவர், பண்டு துன்பம் இலேம், வனப்பு உடையேம் என்பார்--- முன்னேநாம், துன்பம் செல்வம் உடையோமாய் இருந்ததனால் துன்பம் உடையோம் அல்லோம்,அழகுடையேம்என்று சொல்லுவோர், இருகால் எருது --- இருகால் மாடுகளுக்கு நிகராவர்.
படித்தவர் தேவர், படியாதவர் பூதபசாசுகள், முதுமைக்கு இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலார், முன்பு பொருளுடைமையால் துன்பம் அற்றோம்,முன்பு அழகுடையவராய் இருந்தோம் என்பவர் இரண்டுகால் மாடுகள்.
பொன்பெறும் கற்றான்,பொருள்பெறும் நற்கவி,
என்பெறும் வாதி இசைபெறும் --- முன்பெறக்
கல்லார், கற்றார் இனத்தர் அல்லார் பெறுபவே
நல்லார் இனத்து நகை. --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
கற்றான் பொன்பெறும் - கற்று வல்லவன்பொன்னைப் பெறுவான்; நல் கவி பொருள்பெறும் --- பாடலில் வல்லவன்(அரசனால்) எல்லாப் பொருள்களையும் பெறுவான்; வாதி என்பெறும் இசை பெறும் --- வாது செய்து வெல்ல வல்லவன்ஏது பெறுவானெனின், வெற்றி என்னும் புகழைப் பெறுபவன், முன்பெறக் கல்லார் --- காலமுண்டாக கல்வி கல்லாதாரும், கற்றார் இனத்தார் அல்லர் --- கற்றார் இனத்தில் நில்லாதவரும், நல்லார் இனத்து நகைபெறும் --- நல்லோர் கூட்டத்தின் நடுவே அவரால் நகைக்கப்படுதலைப் பெறுவர்.
கற்று வல்லவன் பொன்னைப் பெறுவான். நற்கவி செய்ய வல்லவன் அரசனாலே எல்லாப் பொருளும் பெறுவான். வாதம் பண்ணி வெல்ல வல்லவன் யாது பெறும் எனின் வென்றான் என்னும் புகழைப் பெறுவான். முன்னே இளமைக் காலத்திலே கல்லாதாரும், கற்று வல்லார் இனத்தில் நில்லாதாரும் நல்லார் இனத்தின் நடுவே இகழச்சி பெறுவர்.
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும்,காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும்,- முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும்,இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர். --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் --- கற்றறிவுடையாரை, முற்றும் விட்டு நீக்கிவாழ்பவனும்; காமுற்ற பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும் --- தான் விரும்பியவற்றை,விரும்பினாற் போல, செய்து நடக்கும்அறிவில்லாதவனும்; முட்டு இன்றி அல்லவை செய்யும் அலவலையும் --- தடை இல்லாமல்தீங்குகளைச் செய்யும் பேச்சுக்காரனும்; இ மூவர் நல் உலகம் சேராதவர் --- ஆகிய இம் மூவரும்;நல்ல உலகங்களைச்சேராதவராவார்.
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுஉடைமை
அம்மா பெரிதுஎன்று அகம் மகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்துஅழிக கற்றதுஎல்லாம்
எற்றே இவர்க்குநாம் என்று. --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
தம்மின் மெலியாரை நோக்கி --- தம்மை விடச் செல்வத்திற் குறைந்திருப்பாரைப் பார்த்து, தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க --- தாம் பெற்ற செல்வப் பொருள், அம்மா! மிகுதியாகும் என்று உள்ளம் மகிழ்ந்து கொள்க: (ஆனால்) தம்மினும் கற்றாரை நோக்கி --- தம்மை விட மிகுதியாகப் படித்திருப்பவர்களைப் பார்த்து, நாம் கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு என்று கருத்து அழிக --- நாம் படித்த படிப்பெல்லாம் இவர் படிப்புக்கு எந்த அளவின் தன்மையது என்று வருந்திச் செருக்குக் கருத்தை விட்டுவிடுக.
செருக்கும் வருத்தமும் இல்லாமல் மேன்மேலும் கற்றலிலே கருத்தூன்றி நிற்றல் வேண்டும்.
கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்,நூல்
வல்லான் ஒருவனையே மானுவரோ, - அல்ஆரும்
எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்துஓர்
வெண்ணிலா ஆகுமோ, விளம்பு. --- நீதிவெண்பா.
இதன் பொருள் ---
வானத்தில் இரவு நேரத்தில் நிறைந்துள்ள அளவில்லாத விண்மீன்கள் ஒன்றாய்த் தோன்றினாலும், ஒரு வெண்ணிலாவுக்குச் சமம் ஆகுமோ? நீ சொல்லு. அது போல, படியாதவர்கள் பலர் சேர்ந்து ஒருவரை ஒருவர் விரும்பி வாழ்ந்தாலும், கல்வியில் வல்ல பெரியார் ஒருவருக்கு ஒப்பாவார்களோ?மாட்டார்கள்.
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
ஆற்றச் சுரம் போக்கி --- மிகவும் வழியைக் கடக்கவிட்டு, உல்கு கொண்டார் இல்லை --- தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை, மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை --- ஓடத்தைச் செலுத்தி நிறுத்திய பின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல), ஆற்றும் இளமைக்கண் --- கல்வியைக் கற்றற்குரிய இளமையில்,கற்கலான் --- கல்லாதவன், மூப்பின்கண் போற்றும் --- முதுமையின்கண் கற்று வல்லவனாவான், எனவும் புணருமோ --- என்று சொல்லுதலும் கூடுமோ? இல்லை.
ஆக்கும் அறிவான் அல்லது,பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க,--- நீக்கு
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு,என்றும்
கவரார் கடலின் கடு. --- நன்னெறி.
நஞ்சை உடைய பாம்பினிடத்தே தோன்றிய பெரிய மாணிக்கத்தை இகழ்பவர் இல்லை. திருப்பாற்கடலினிடத்தே தோன்றிய நஞ்சை விரும்புபவரும் இல்லை. அதுபோல அறிவினால் அல்லாமல் பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்ளக் கூடாது.
ஆக்கும் - கல்வியால் உண்டாக்கும். மீக்கொண்ட - மேன்மையாகக் கொள்ளுகிற. அரவின் பருமணி - பாம்பின் சிறந்த மணி. கடு - நஞ்சு.
No comments:
Post a Comment