திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 42 -- கேள்வி
முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமை, கல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார், இந்த அகிதாரத்தில், கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இந்தக் கேள்வியானது, கேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின், அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின், அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.
கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.
இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "எந்த அளவிலாவது நல்லவற்றைக் கேட்டு அறிக. அந்த அளவில் இருந்தே, நிறைந்த பெருமையை அது கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.
"எனைத்து" என்றது கேட்கும் பொருளைப் பற்றியும், "அனைத்து" என்பது காலத்தைப் பற்றியும் நின்றது. சிறிதளவு கேள்வியாயினும், அதுவே மழைத்துளி போலப் பெருகி,உள்ளத்தின் உள்ளே நிறைந்து,எல்லா அறிவினையும் உண்டாக்கும் என்பதால், கேள்வியை சிறிது என்று இகழல் ஆகாது என்றார்.
நல்லவை கேட்டால் பெருமை உண்டாகும். தீயவை கேட்டால் சிறுமை உண்டாகும்.
திருக்குறளைக் காண்போம்...
எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
இதற்குப் பரிமேழகர் உரை ---
எனைத்தானும் நல்லவை கேட்க--- ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க,
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்--- அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.
('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள் மேலும் காலத்தின் மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளி போல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....
அத்தனை ஈமப் பலியால் அர்ச்சித்து வேந்துரையின்
முத்திபெற்றான் சண்டன்,முருகேசா! --- நத்தி
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
இதன் பொருள் ---
முருகேசா --- முருகப் பெருமானே, சண்டன் --- சண்டன் என்பவன், அத்தனை --- சிவபெருமானை, ஈமப் பலியால் அர்ச்சித்து --- இடுகாட்டுச் சாம்பலாலே வழிபட்டு ,வேந்துரையின் --- அரசன் உரைப்படியே, முத்தி பெற்றான் --- வீடுபேற்றை அடைந்தான். நத்தி --- விரும்பி, எனைத்தானும் --- எவ்வளவு சிறியதாயினும், நல்லவை கேட்க --- நல்லவைகளைக் கேட்டறிதல் வேண்டும், அனைத்தானும் --- அந்த அளவிற்கு, ஆன்ற பெருமை தரும் --- நிறைந்த பெருமையைக் கொடுக்கும்.
சண்டன் என்பவன்,அரசன் கூறியபடியே சிவபிரானைச் சுடலைச் சாம்பரால் வழிபட்டு வீடுபேற்றை அடைந்தான். எவ்வளவு சிறிதாயினும் நல்லவைகளைக் கேட்டல் வேண்டும். அவ்வாறு கேட்பின்,அது கேட்ட அளவுக்காவது பெருமையைக் கொடுக்கும் என்பதாம்.
சண்டன் கதை
சண்டன் என்னும் ஒரு வேடன் சிங்ககேது என்னும் அரசனோடு வேட்டைக்குச் சென்றான். ஒரு கோயிலில் விழுந்து கிடந்த சிவலிங்க வடிவம் ஒன்றைக் கண்டான். அதனை விருப்பத்தோடு எடுத்துக் கொண்டுபோய் அரசன் முன்பு வைத்தான். இதனை வழிபடுவதற்குரிய முறைமைகளை அடியேனுக்கு உரைத்தருள வேண்டும் என்று அரசனைப் பார்த்து வேண்டிக் கொண்டான். அரசன், "ஓ சண்டனே நீ பூசைக்குரிய பொருள்களோடு சுடலைச் சாம்பலையும் கொண்டு இச் சிவலிங்கத்தை வழிபடுவாயாக" என்று வேடிக்கையாகக் கூறினான். வேடன் அரசன் கூறியதை உண்மை என்று நம்பினான். நாளும் சுடலைச் சாம்பலைக் கொண்டு வழிபட்டுக் கொண்டிருந்தான். ஒருநாள் சுடலைச் சாம்பல் அகப்படவில்லை. அதனால் மனம் தளர்ந்தான். இறத்தற்கு உடன்பட்ட மனைவியைக் கொன்று நீறாக்கி, அச் சாம்பரைக் கொண்டு பூசை முடித்தான். பூசை முடிவில் அவள் உயிர்பெற்று எந்நாளும் போலவே வந்து பூசைப் பொருள்களை ஏற்று நின்றாள். அவ்வாறு நின்ற மனைவியைக் கண்டு சண்டன் மகிழ்ச்சி அடைந்தான். இறுதியில் அவளோடு வீடுபேற்றைப் பெற்றான்.
பின்வரும் பாடல் இத் திருக்குளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.
உரைப்பவன்,கேட்பான்,உரைக்கப் படுவது,
உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பு இன்றி
நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு. --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
உரைப்பவன் --- அறம் கூறுபவனையும், கேட்பான் --- அதனைக் கேட்பவனையும், உரைக்கப்படுவது --- உரைக்கப்படும் அறத்தினையும், உரைத்ததனால் ஆய பயனும் --- உரைப்பதனால் உண்டாகும் பயனையும், புரைப்பு இன்றி --- குற்றமில்லா வகை ஆராய்ந்து, நான்மையும் போலியை நீக்கி --- அந் நான்கனுள்ளும் பிழைபடுவனவற்றை நீக்கி, அவை நாட்டல் --- அவையினை நிலைபெறச் செய்தல், வான்மையின் மிக்கார் வழக்கு --- ஒழுக்கத்தால் உயர்ந்தோர் கடனாகும்.
No comments:
Post a Comment