பொது --- 1015. இலகு வேல்எனும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இலகு வேலெனு (பொது)

 

முருகா! எனது பாதக மலங்கள் அற,

தேவரீரது பாதகமலங்களைக் கனவிலும் துதிக்கும்படி அருள்வாய்.

 

 

தனன தானன தனதன தனதன

     தனன தானன தனதன தனதன

     தனன தானன தனதன தனதன ...... தனதான

 

 

இலகு வேலெனு மிருவினை விழிகளும்

     எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும்

     இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ......மெதிர்வேகொண்

 

டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ

     னினிய மாவினை யிருளெனும் வலைகொடு

     இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம்

 

கலவி மால்கொடு கலைகளு மறிவொடு

     கருதொ ணாதென முனிவுற மருள்கொடு

     கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ......கவிழாதே

 

கருணை வானவர் தொழுதெழு மயிலுறை

     குமர கானவர் சிறுமியொ டுருகிய

     கமல தாளிணை கனவிலு நினைவுற ......அருள்தாராய்

 

பலகை யோடொரு பதுசிர மறஎறி

     பகழி யானர வணைமிசை துயில்தரு

     பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே

 

பழுதி லாமன முடையவர் மலர்கொடு

     பரவ மால்விடை மிசையுறை பவரொடு

     பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ......பெரியோனே

 

அலகை காளிகள் நடமிட அலைகட

     லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை

     அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா

 

அரிய பாவல ருரைசெய அருள்புரி

     முருக ஆறிரு புயஇய லிசையுடன்

     அழகு மாண்மையு மிலகிய சரவண ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

இலகு வேல் எனும் இருவினை விழிகளும்,

     எழுத ஒணாது எனும் இருதன கிரிகளும்,

     இசையினால் வசை பொசிதரு மொழிகளும்,...எதிர்வேகொண்டு,

 

எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என்,

     இனிய மாவினை இருள் எனும் வலைகொடு,

     இடைவிடா தெறு நடுவனும் எனவளை ......மடவார்தம்,

 

கலவி மால்கொடு,கலைகளும் அறிவொடு

     கருத ஒணாது என முனிவுற,மருள்கொடு,

     கரை இலா விதி எனும் ஒரு கடல் இடை ......கவிழாதே,

 

கருணை வானவர் தொழுதுஎழும் மயில் உறை

     குமர! கானவர் சிறுமியொடு உருகிய

     கமல தாள் இணை கனவிலும் நினைவு உற ......அருள்தாராய்.

 

பல கையோடு,ஒரு பது சிரம் அற எறி

     பகழியான்ரவு அணைமிசை துயில்தரு

     பரமன்,மால்படி அளவிடும் அரி,திரு ...... மருகோனே!

 

பழுது இலா மனம் உடையவர் மலர்கொடு

     பரவ,மால்விடை மிசை உறைபவரொடு

     பரமஞானமும் இது என உரைசெய்த ......பெரியோனே!

 

அலகை காளிகள் நடம்இட,அலைகடல்

     அதனில் நீள்குடல் நிணமலை பிணமலை

     அசுரர் மார்பகம் அளறு அது படவிடும் ....அயில்வேலா!

 

அரிய பாவலர் உரைசெய அருள்புரி

     முருக! ஆறிரு புய! இயல் இசையுடன்

     அழகும் ஆண்மையும் இலகிய சரவண ......பெருமாளே.

 

பதவுரை

 

     பல கையோடு --- இரண்டுக்கு மேற்பட்ட இருபது கைகளோடு,

 

     ஒரு ப(த்)து சிரம் அற --- பத்துத் தலைகளும் அற்றுப்போகுமாறு,

 

     எறி பகழியான் --- எறிந்த அம்பினை உடையவன்,

 

     அரவு அணை மிசை துயில் தரு பரமன் --- பாம்புப் படுக்கையில் துயில் கொள்ளுகின்ற பரமன்,

 

     மால் --- திருமால்,

 

     படி அளவிடும் அரி திருமருகோனே --- உலகை அளந்த திருமாலின் திருமருகரே!

 

     பழுது இலா மனம் உடையவர் --- குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள்,

 

     மலர் கொடு பரவ --- மலர்களைக் கொண்டு வழிபட,

 

     மால் விடை மிசை உறைபவரொடு --- பெருமை வாய்ந்த காளை வாகனத்தின் மீது விற்றிருப்பவராகிய சிவபரம்பொருளுக்கு,

 

     பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே --- மேலான ஞானம் இதுவே என்று உபதேசித்த பெரியவரே!

 

      அலகை காளிகள் நடம் இட --- பேய்களும் காளிகளும் நடனம் புரிய,

 

     அலை கடல் அதனில்  --- அலைகளை உடைய கடலின் இடையில்,

 

     நீள் குடல் நிண மலை பிண மலை --- நீண்ட குடல்களும், மாமிச மலைகளும், பிண மலைகளும்,

 

     அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா --- அசுரர்களின் மார்புகளும் இரத்தச் சேறுபட்டு அழியும்படியாக விடுத்து அருளிய ய கூரிய வேலாயுதரே!

            

     அரிய பாவலர் உரை செய அருள் புரி முருக --- அரிய புலவரான நக்கீரர் பாடி வழிபட அருள் புரிந்த முருகப் பெருமானே!

 

     ஆறிரு புய --- பன்னிரு திருத்தோள்களையும்,

 

     இயல் இசையுடன் அழகும் ஆண்மையும் இலகிய சரவண--- இயற்றமிழும்இசைத் தமிழும்அழகும்ஆண்மையும் அலங்கரிக்க விளங்குகின்றசரவணபவரே!

 

     பெருமாளே--- பெருமையில் மிக்கவரே!

 

      இலகு வேல் எனும் இரு வினை விழிகளும் --- வேலைப் போன்று விளங்குகின்றதும், பெரிய வினைகள் விளைவதற்குக் காரணமானதும் ஆன கண்களும்,

 

     எழுத ஒணாது எனும் இரு தன கிரிகளும் --- எழுதிக்காட்ட முடியாது என்னும்படி உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களும்

 

       இசையினால் வசை பொசி தரு மொழிகளும் --- புகழோடு, பழிச் சொற்களையும் சொல்லுகின்ற சொற்களும், (உடைய விலைமாதர்கள்)

 

     எதிர்வே கொண்டு --- தமது எதிர் வரக் கண்டு,

 

     எதிர் இலா அதி பலம் உடை --- எதிரில்லாத மிக்க ஆற்றலை உடைய

 

     இளைஞர் என் இனிய மா --- இளைஞர்கள் என்று சொல்லப்படும் இனிய விலங்குகளை,

 

     வினை இருள் எனும் வலை கொடு --- அஞ்ஞானம் என்னும் வலையில் விழவைத்து,

 

     இடை விடா தெறு நடுவனும் என --- இடைவிடாது கொல்லுகின்ற இயமன் என்று சொல்லும்படியாக,

 

     வளை மடவார் தம் --- வளைக்கின்ற பெண்களின்,

 

      கலவி மால் கொடு --- கலவியில் இச்சை கொண்டு,

 

     கலைகளும் --- அறிவு நூல்களாலும்,

 

     அறிவொடு கருத ஒணாது என --- அறிவாலும் உணர்ந்து கொள்ள முடியாது என்னும்படி,

 

     முனிவுற --- வருத்தம் கொள்ள,

 

     மருள் கொடு --- மயக்க அறிவால்,

 

     கரை இலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே --- முடிவு என்பதே இல்லாத விதி என்கின்ற ஒரு கடல் நடுவில் நான் கவிழ்ந்து போகாமல்

 

      கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர--- உள்ளத்தில் கருணை மிக்க மேலோர்கள் தொழுது வழிபடுகின்ற,மயிலின் மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     கானவர் சிறுமியொடு உருகிய கமல தாள் இணை கனவிலும் நினைவு உற அருள் தாராய்--- வேட்டுவச் சிறுமியாகிய வள்ளிநாயகியின் பொருட்டு மனம் உருகி நடந்த பாதகமலங்களை அடியேன் கனவிலும் கருதும்படியாக அருள் புரிவாய்.

 

 

பொழிப்புரை

 

     இருபது கைகளோடு, பத்துத் தலைகளும் அற்றுப்போகுமாறு, எறிந்த அம்பினை உடையவன், பாம்புப் படுக்கையில் துயில் கொள்ளுகின்ற பரமன்,திருமால், உலகை அளந்த வாமனமூர்த்தியின் திருமருகரே!

 

      குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள், மலர்களைக் கொண்டு வழிபட,பெருமை வாய்ந்த காளை வாகனத்தின் மீது விற்றிருப்பவராகிய சிவபரம்பொருளுக்கு, மேலான ஞானம் இதுவே என்று உபதேசித்த பெரியவரே!

 

       பேய்களும் காளிகளும் நடனம் புரிய, அலைகளை உடைய கடலின் இடையில், நீண்ட குடல்களும், மாமிச மலைகளும், பிண மலைகளும்,  அசுரர்களின் மார்புகளும் இரத்தச் சேறுபட்டு அழியும்படியாக விடுத்து அருளிய ய கூரிய வேலாயுதரே!

            

     அரிய புலவரான நக்கீரர் பாடி வழிபட அருள் புரிந்த முருகப் பெருமானே!

 

     பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

 

     இயற்றமிழும்இசைத் தமிழும்அழகும்ஆண்மையும் அலங்கரிக்க விளங்குகின்ற சரவணபவரே!

 

     பெருமையில் மிக்கவரே! 

 

     உள்ளத்தில் கருணை மிக்க மேலோர்கள் தொழுது வழிபடுகின்ற,மயிலின் மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     வேலைப் போன்று விளங்குகின்றதும், பெரிய வினைகள் விளைவதற்குக் காரணமானதும் ஆன கண்களும், எழுதிக்காட்ட முடியாது என்னும்படி உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களும்

புகழோடு, பழிச் சொற்களையும் சொல்லுகின்ற சொற்களும், உடைய விலைமாதர்கள், தமது எதிர் வரக் கண்டு, எதிரில்லாத மிக்க ஆற்றலை உடைய இளைஞர்கள் என்று சொல்லப்படும் இனிய விலங்குகளை, அஞ்ஞானம் என்னும் வலையில் விழவைத்து, இடைவிடாது கொல்லுகின்ற இயமன் என்று சொல்லும்படியாக, வளைக்கின்ற பெண்களின், கலவியில் இச்சை கொண்டு, அறிவு நூல்களாலும், அறிவாலும் உணர்ந்து கொள்ள முடியாது என்னும்படி,

வருத்தம் கொள்ளமயக்க அறிவால், முடிவு என்பதே இல்லாத விதி என்கின்ற ஒரு கடல் நடுவில் நான் கவிழ்ந்து போகாமல் வேட்டுவச் சிறுமியாகிய வள்ளிநாயகியின் பொருட்டு மனம் உருகி நடந்த பாதகமலங்களை அடியேன் கனவிலும் கருதும்படியாக அருள் புரிவாய்.

 

விரிவுரை

 

இலகு வேல் எனும் இரு வினை விழிகளும்--- 

 

வெல்லும் தொழிலை உடையது வேல். வேல் நீண்டு இருப்பது போல,பெண்களின் கண்கள் நீண்டு இருக்கும். வேலைப் போன்ற கண்களைக் கொண்டு, காமப் பார்வை என்னும் அம்புகளை விடுத்து, இளைஞர்களின் உயிரைக் கவர்வர் பெண்கள்.

 

இசையினால் வசை பொசி தரு மொழிகளும்--- 

 

இசை --- புகழ்.  வசை --- பழி.

 

பொருள் கொடுக்கும் வரை புகழ்ந்து பேசுதல். பொருள் தீர்ந்த பின் வசைபாடித் துரத்துதல். இருவகையாலும், காமுகரின் உள்ளத்தைப் புண்படுத்துவர் விலைமாதர்.

 

எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா எதிர்வே கொண்டு--- 

 

மா --- விலங்கு.

 

அதிபலம் உடைய இளைஞர் என்கின்ற இனிய விளங்குகள்.

 

வினை இருள் எனும் வலை கொடு இடை விடா தெறு நடுவனும் என --- 

 

இருவினைகளை அற்றால்தான் பிறவி தீரும். நல்வினை தீவினை என்னும் இருவினைகளின் வயபட்ட உயிர்கள், பிறவியினின்றும் நீங்கமாட்டா. பிறவி உள்ளவரையில் மரணபயம் இருந்து கொண்டேதான் இருக்கும். இருவினை அற்றால், எமனுக்கு வேலை அறும்.

 

வளை மடவார் தம்--- 

 

வளை மடவார் --- வளையலை அணிந்த மடவார் என்று சொல்லலாம். வளையலை அணிந்துள்ள மாதர், கற்பில் சிறந்தவராகவும் உள்ளனர். எனவே, வளையல் அணிந்த பெண்கள் என்பதை விடஇளைஞர்களை, காமுகர்களை, தமது பொருளாசை காரணமாக வளைக்கின்ற பெண்கள் என்று சொல்லலாம். 

 

கரை இலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே --- 

 

முற்பிறவியில் இழைக்கப்பட்ட வினைகளால்இப் பிறவியும்இப் பிறவியில் இழைக்கப் போகும் வினைகளால்இனி வரும் பிறவியும் ஆகதொன்று தொட்டுகாரண காரியத் தொடர்ச்சி உடையதாய்பிறவியானது முடிவில்லாமல் வருவதால்அது "பிறவிப் பெருங்கடல்" எனப்பட்டது. பிறவியைப் பெருங்கடல் என்றே எல்லா அருளாளர்களும் கூறினர். "இப்பிறவி என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி"என்றார் தாயுமானார். "பெரும் பிறவிப் பௌவம்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

பவக்கடல் கடந்து முத்தி அம் கரையில்

            படர்பவர் திகைப்பு அற நோக்கித்

தவக்கலம் நடத்த உயர்ந்து எழும் சோண

            சைலனே கைலை நாயகனே.   --- சோணசைலமாலை.

 

தோற்றிடும் பிறவி  எனும் கடல் வீழ்ந்து

            துயர்ப்பிணி எனும் அலை அலைப்ப

கூற்று எனும் முதலை விழுங்குமுன் நினது

            குரைகழல் கரை புக விடுப்பாய்

ஏற்றிடும் விளக்கின் வேறுபட்டு அகத்தின்

            இருள் எலாம் தன்பெயர் ஒருகால்

சாற்றினும் ஒழிக்கும் விளக்கு எனும் சோண

            சைலனே கைலை நாயகனே.--- சோணசைலமாலை.

 

(1)       கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே யிருக்கின்றனஞ.சமுசாரத்தில்  இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

 

(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. சமுசாரத்திலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.

 

(3)      கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. சமுசாரத்திலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.

 

(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. சமுசாரத்திலும்மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.

 

(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. சமுசாரத்திலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

 

(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. சமுசாரமும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.

 

எனவேபிறவியானது இடர்கள் மிகுந்தது என்றார் அடிகளார். கடலில் முழுகியவர்கள்ஒரு தெப்பத்தின் துணைக் கொண்டே கரை ஏற முடியும். தெப்பம் என்பது இறைவன் திருவடியே என்பதால்,

 

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர்நீந்தார்

இறைவன் அடி சேராதார்"

 

என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார்.

 

மனம் போன போக்கில் சென்றான் ஒருவன்கண்ணை இழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான். திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம்அலைமேல் மிதந்துஎதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவிஅதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.

 

எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்றுஅவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில்தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான். கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும்ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது. 

 

இருண்ட அறிவால்ஒளிமயமான உணர்வை இழந்தது.அதன் பயனாகஆழம் காண முடியாதமுன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்தஅநியாயமாகப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.

 

அகங்கார மமகாரங்கள்மாயைகாமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள்பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால்கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது தான் கண்ட பலன். அமைதியை விரும்பிஎப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடுகற்றவர் உறவில் காய்ச்சல்மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்துபொறுக்க முடியாத வேதனையில்இறைவன் திருவடிகளைக் கருதுகிறது.

 

நல்வினை தீவினை என்று இரு வினைகளினால் இந்த உடம்பு வந்தது. வினைப்போகம் துய்க்கும் அளவும் இது நிலைபெறும். துய்ப்பு முடிந்தவுடன் தினை அளவு நேரம் கூட இவ்வுடம்பு நில்லாது. வீழ்ந்து படும்.

 

அறம்பாவம் என்னும் அரும்கயிற்றால் கட்டிப்

புறந்தோல் போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை...   ---  மணிவாசகம்.

 

வினைப்போகமே ஒருதேகம் கண்டாய்வினைதான் ஒழிந்தால்

தினைப்போதுஅளவு நில்லாது கண்டாய்சிவன்பாதம் நினை,

நினைப்போரை மேவுநினையாரை நீங்கி நெறியில்நின்றால்

உனைப்போல் ஒருவர்உண்டோமனமேஎனக்கு உற்றவரே. ---  பட்டினத்தார்.

                                                                                             

இந்த உடம்பு ஒரு அகல். புண்ணியபாவம் அதில் விட்ட நெய். வாழ்நாள் அதில் இட்ட திரி. உயிர் எரிகின்ற விளக்கு. நெய் உள்ளவரை விளக்கு எரியும்.

 

புண்ணிய பாவம் இரண்டும் நெய்என்றுமனம்கரி,

பூட்டும் வாழ்நாள் அதில் போட்டு வைத்த திரி,

எண்ணிப் பார்க்கில் இதில் உயிர் விளக்கே சரி,

இரண்டும் போனால் விளக்குஇருக்குமோ அரிகரி. ---  அருணாசலக் கவி.

                                                                                                             

கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர--- 

 

"தேவர் அனையர் கயவர்" என்றார் திருவள்ளுவ நாயனார். எனவே, தேவர்களைக் கருணை உள்ளவராகக்  கொள்ளுவதை விட"வானவர்" என்பதற்கு, "மேலோர்" என்ற் பொருள் கொள்ளுவதும், உள்ளத்தில் கருணை மிக்க மேலோர்கள் தொழுது வழிபடுகின்றவர் முருகப் பெருமான் என்று கொள்ளுவதும் பொருத்தமாக அமையும்.

 

படி அளவிடும் அரி திருமருகோனே --- 

 

படி --- உலகம். உலகை அளந்த திருமாலின் திருமருகர் முருகப் பெருமான்.

 

திருமால் வாமனாவதாரம் செய்துமாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கிஓரடியாக இம் மண்ணுலகத்தையும்மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்துமூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.

 

திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால்மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம் யாது?  ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போதுஎண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது. 

 

ஒருவனுக்கு இரவினும் இழிவும்ஈதலினும் உயர்வும் இல்லை.

 

மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

 

தாவடி ஓட்டு மயிலிலும்தேவர் தலையிலும்என்

பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோபடி மாவலிபால்

மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்

சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.

 

வாமனாவதார வரலாறு

 

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின்மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிவாள்வலியும்தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்றுஇந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்துஅவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகிஅங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும்அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும்காசிபருக்கு அருளவும் வேண்டிதிருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகிசிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

 

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்

வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,

நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்

ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

 

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்துபொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

 

அத் தருணத்தில்வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும்வேதம் நவின்ற நாவும் ஆகசிறிய வடிவுடன் சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டுசெவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன். உன்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

 

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால்இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

 

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்துஎன் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

 

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,

வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்

ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

 

எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோதகைவுஇல் வெள்ளி,

கொடுப்பது விலக்கு கொடியோய்உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

 

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின்யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

 

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல்அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும்விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி.  வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.

 

பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ--- 

 

பழுது --- குற்றம். 

 

உயிருக்கு உள்ள ஆறுவகையான குற்றங்கள் ஆகிய,காமம், குபோதம், உலோபம், மகம், மதம், மாச்சரியம் என்பவகளை அறுத்தவர்களை குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள் அவர்கள் இறைவன் நறுமடம் மிக்க மலர்களைக் கொண்டு வழிபடுகின்றார்கள் என்கின்றார் அருணைவள்ளலார்.

 

குற்றமற்ற அடியவர்கள் உள்ளத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்றான். அவனை அகமலரில் வைத்துப் போற்றும் அடியார்கள் ஞானபூசையைப் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

 

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்

கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்

ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.

 

என்பது அப்பர் தேவாரம்.

 

இறைவனைப் பூமாலை கொண்டு வழிபடுதல் கிரியை நெறி ஆகும். பாமலைகளைச் சூட்டி, அன்போடு உருகி வழிபடுதல் ஞானநெறி ஆகும்.

 

பூக்களால் செய்யும் அருச்சனையானதுபாக்களால் செய்யும் சிறந்த அருச்சனைக்குப் பின்பே நிறைவு பெறும். விதவிதமான பூக்களால் ஆன மாலைகளை இறைவனுக்கு அணிவித்துவிதவிதமான பூக்களால் இறைவனை அருச்சனை செய்தபின்மந்திரங்களால் அமைந்த "மந்திர புஷ்பம்" இறைவனுக்குச் சாத்தப்பட்ட பின்னரும்அருளாளர்கள் பாடிய அருளிய சிறந்த பாமாலைகளால்இறைவனை வழிபட்ட பிறகே அருச்சனையானது நிறைவு பெறுவதைக் காணலாம்.

 

நாவழுத்தும் சொல்மலரோநாள்உதிக்கும் பொன்மலரோ?

 தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே"

 

என்கிறார் தாயுமானார்.

 

இறைவனுக்கு நாவால் போற்றிப் பாடுகின்ற சொல்மலர் விருப்பமானதா? அல்லது நாள்தோறும் மலரும் மலர்கள் விருப்பமானதா? என்று தாயுமான அடிகளார் கேட்டதற்கு,  விடை பெரியபுராணத்தில் வருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக" என்று அருளிச் செய்தார் இறைவர். "சுவாமிநான் என்ன சொல்லிஎப்படி உம்மைப் பாடுவது?" என்று நாயனார் கேட்க"முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை. ஆதலாலேஎன் பெயர் பித்தன்’ என்றே பாடுவாய்" என்றார் இறைவர். அன்பினால் செய்யப்படுபவை தான்திருமுழுக்காட்டுதல் என்னும் அபிடேகம்திருமாலை அணிவித்தல்திருவிளக்கிடுதல் முதலான வழிபாடுகள். அந்த அன்பு வழிபடாகளிலும்மேலான வழிபாடாவது இறைவனைப் போற்றி உரைக்கும் புகழுரைகளே ஆகும். எனவேசொல் தமிழால் பாடுக என்று அருளினார் இறைவர். ஏன் தமிழால் பாடுக என்றார்சுந்தரரின் தாய்மொழி தமிழ். எனவேஅவர் அறிந்த மொழியால் பாடுவது,அவரது உள்ளன்பை வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கும். எனவேஇறைவனை அவரவருக்குத் தெரிந்த மொழியினால் ஆன சொற்களைக் கொண்டு வழிபடலாம் என்பது தெளிவாகும். "வேற்று மொழியால் என்னைப் பாடாதே?" என்று இறைவர் அறிவிக்கவே இல்லை. அப்படி அறிவித்தால் அவர் இறைவர் இல்லை. நான் சொல்லுகின்ற மொழியில் தான் இறைவனை வழிபடவேண்டும் என்று யாரும் வற்புறுத்துவது அழகல்ல.

 

இவ்வாறு பூவைக் கொண்டும்நாவைக் கொண்டும் இறைவன் திருவடியை வழிபட்டு உய்தி பெறாதவர்கள்உடம்புக்கு வேண்டிய இரையைத் தேடி அலைந்துவாழ்நாள் முடிவில்காக்கைக்கு இரையாகி அழிந்து ஒழிவர் என்கின்றார் அப்பர் பெருமான். 

 

பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே.          ---  அப்பர்.

 

நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர் என்பது இத் தேவாரப் பாடலால் தெளிவாகும்.

 

நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும் காண்க.

 

"பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,

     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,

     பரிமளம் மிஞ்சகடப்ப மாலையும் ...... அணிவோனே!"

 

என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

பலப்பல விதமான பசும் பொன்னால் செய்த பதக்கங்களையும்மாலைகளையும்,  அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும்வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!

 

இறைவன் திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மணம் பொருந்தி இருக்கும். நாளடைவில் அவை வாடி விடும். மணம் இன்றிப் போய் வாடிவிடுகின்ற மலர்கள் அவை.

 

வாடா நறுமலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். ஞானமலர்கள் பாமாலைகளே ஆகும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது இருக்கும். ஆனந்தத் தேன் சொரியும்.

 

இறைவனை அன்று அலர்ந்த மலர்களைக் கொண்டு வழிபடவேண்டும். அன்று அலர்ந்த மலர்கள், "நாள் மலர்கள்" எனப்படும். அன்று அலர்ந்த எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்பது பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் விளங்கும்.

            

எட்டு நாள்மலர் கொண்டுஅவன் சேவடி

மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்,

கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ

ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.

 

இதன் பொருள் ---

 

கன்னல் கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய்எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

 

நாள் மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன:- புன்னைவெள்ளெருக்குசண்பகம்நந்தியாவர்த்தம்பாதிரிகுவளைஅலரிசெந்தாமரை ஆகிய பூக்கள். இவை புறப்பூசைக்கு அமைந்தவை. 

 

பூசையால் "பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபு உண்டு. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத் தேவாரம். 

 

பூக்களைக் கொண்டு வழிபடுவது "புறப்பூசை". அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு வழிபடுவது, "அகப்பூசை".

 

அகப் பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமைஐம்பொறியடக்கம்பொறைஅருள்அறிவுவாய்மைதவம்அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" என்பார் அப்பர் பெருமான்.

 

அருணகிரிநாதப் பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். "பூமாலை" வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய "மந்திர மலர்மாலை" சூட்டத் துணிந்தார்.

 

மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்க வேண்டும். அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும். அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்க விடுகின்றனர்.

 

மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே எளிய வழியுமாகும்.

 

காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் விளைகின்றன. மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் மட்டுமே விளையும்.

 

மந்திர மலர்களைத் தொடுப்பதற்கு நூல் வேண்டும். "அன்பு" என்ற நூலினால் அழகுற மந்திர மலர்களைத் தொடுக்க வேண்டும். அன்புஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான். 

 

அத்தகு சிறந்த திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே" ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில் அருணகிரிநாதரும் கூறுகின்றார்.

 

இம் மந்திர பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம்.  ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

 

ஞானமணம் கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற வண்டு வந்து மொய்த்துஇனிய நாதத்துடன் ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆனது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான் ஆவான்" என்ற பழமொழியும் கருதத் தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புத பகவான். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கவும்.

 

இறைவனும் அடியவர் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலிலேயே "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்று கூறியருளினார். இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல. நல்லறிவைக் குறித்தது.

 

உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம்,சுவாதிட்டானம்மணிபூரகம்அநாகதம்விசுத்திஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களுக்கு "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலாமந்திரம்" என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

 

இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதை ஆழ்ந்து சிந்தித்தல் நலம்.  "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

 

ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டுநாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி, ...... ஒரு ஞான

 

வாசம் வீசிப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ?

 

என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

 

"வீண்பொழுது போக்காமலே,

நேயமுடனே தெளிந்து,அன்பொடு உன் பாதத்தில்

     நினைவு வைத்து,இரு போதினும்

  நீர்கொண்டு,மலர்கொண்டு,பரிவுகொண்டு அர்ச்சிக்க

     நிமலனே! அருள் புரிகுவாய்".

                                                                                    

என்கின்றது அறப்பளீசுர சதகம்.

 

நம்பியாரூரைத் தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார்சிவபரம்பொருள் என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியலாம்.

 

"மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்

பெற்றனைநமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்ஆதலால் மண் மேல் நம்மைச்

சொல் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.

 

இப் பாடலில்இறைவனுக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்" என்று அருளி உள்ளதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்

 

"முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அருச்சுனனே!" என்றுஎன்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனம் இரங்கிஅரைக் காசும் உதவமாட்டார்கள். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். பித்தன் பெற்ற பிள்ளைநீலி மகன்தகப்பன் சாமிபெருவயிற்றான் தம்பிபேய் முலையுண்ட கள்வன் மருமகன்குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.

 

அத்தன்நீஎமதுஅருமை அன்னைநீதெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீமாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீஎன்று

 

எத்தனை விதம் சொல்லி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கம் செ(ய்)யார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சி எனை ஏத்த வேண்டாம்,

 

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பிஅப்

பேய்ச்சிமுலை உண்ட கள்வன் மருகன்வேடுவப்

    பெண்மணவன்என்றுஏசினும்,

 

சித்தம் மகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!

                                                                        ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ் 

 

பெறுதற்கு அரிய பிறவியாகிய இந்த மனிதப் பிறவியைப் பெற்றதன் பயன் இறைவனைகையினால் பூக்களைக் கொண்டும்நாவினால் பாக்களைக் கொண்டும் வழிபடுவது ஒன்றே பேரின்ப வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இந்தப் பேரின்ப வீடுகூட வேண்டாம். இறைவனைத் தமிழ்ப் பாமாலைகளால் பாடி வழிபடுகின்ற பிறவியே வேண்டும் என்னும் பொருளில்உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்குச் சூட்டி மகிழ்கின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

அண்ணாமலையார் மீது பாடப்பட்ட அருமையான, "சோணசைல மாலை" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போமாக..

 

விரைவிடை இவரும் நினைபிறவாமை

      வேண்டுநர் வேண்டுகமதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்

      பிறவியே வேண்டுவன் தமியேன்;

இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த

     இடையுறல் மணிக்குடக் காவைத்

தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண

     சைலனே! கைலைநா யகனே!.

 

இதன் பொருள் ----          

 

சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலைகீழ்மலை ஆகியவற்றில் விளங்கஇடையில் மலைவடிவமாக நிற்பதாவதுஇருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

 

பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.

பாமாலை சூட்டுதல் ஞானநெறி.

 

கிரியை என்பது தயிரைப் போன்றது. தயிர் வெண்ணெய் ஆகவேண்டும். அது யோக நிலை. வெண்ணெயும் நெய்யாக வேண்டும். அது ஞானநிலை.

 

கிரியை என்பது யோகத்தில் சென்றுஞானத்தில் நிலைபெறவேண்டும். ஞானத்தில் நிலைபெற வேண்டும் என்றால்அடியார் திருக்கூட்டத்தோடு கூடி இருக்கவேண்டும். அந்த நிலையை அருள்வது,அன்பு வழிபாடே ஆகும் என்பதால்,

 

உருகியும்,ஆடிப் பாடியும்,இருகழல் நாடிச் சூடியும்,

     உணர்வினோடு ஊடிக் கூடியும்,...... வழிபாடு உற்று,

உலகின் ஒர் ஆசைப் பாடு அற,நிலைபெறு ஞானத்தால் இனி,

     உனது அடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே?

 

என்று வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இறைவனுடைய திருவடிகள் நான் எனது என்ற அகப்பற்று புறப்பற்று அற்ற இடமே ஆகும். திருவடிகளை நாடுதல் சூடுதல் என்றால்இருவகையான பற்றுக்களையும் விடுவதே ஆகும். பற்று அறுதலே பரமனடி சார்தலாகும்.

 

யான் எனது என்று அற்ற இடமே திருவடியா.....--- கந்தர் கலிவெண்பா.

 

ஞானம் ஒன்றே என்றும் நிலைபெற்று நிற்கும். ஏனைய எல்லாம் நிலைபேறு இல்லாதவை. எனவே, "நிலைபெறு ஞானம்" என்றார் அடிகளார்.

 

நெய்யானது உணவின் வழி உடம்பில் கலந்து ஆற்றலைத் தரும். வேள்வியில் இடப்படும் நெய்யானதுஇறை ஆற்றலைத் தரும்.நிலையான சானத்தைப் பெற்ற பின் அடியாரொடு கூடி இருத்தலே சிறந்த பேறு ஆகும். 

 

இறைவனை நினைந்து உருகிதிருவருள் மயமாக நிற்பவர்கள் அடியார்கள். அவர்கள் தமது உரைஅறிவுஉயிர்உணர்வு என்ற நான்கையும் இறைவனுடைய திருவடியில் புனைவார்கள். இந்த நான்கில்உரையைப் புனைபவர் சரியையாளர். அறிவைப் புனைபவர் கிரியையாளர். உயிரைப் புனைபவர் யோகிகள். உணர்வைப் புனைபவர் ஞானிகள். எனவே,சரியைகிரியையோகம்ஞானம் என்ற நான்கு படிகளில் நின்று தொண்டு புரிவார்கள்.

 

உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்

     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு

     ஒன்றாக என்று ...... பெறுவேனோ....

                                                                                                

என்றார் அருணகிரிநாதர்.

 

சொல்லுகின்ற சொல்லையும்,அறிவையும்,உயிரையும்உணர்வையும் இறைவனது பாத தாமரை மலர் மீது உறுதியுடன் இட்டு அர்ச்சிக்க நினைக்கும் அடியார்களுடன் ஒன்றுபடும் பேற்றினைப் பெறுதல் வேண்டும். ஒன்றுபட்டு நினைத்தல் கூட்டு வழிபாடு. தனியாக வழிபடுவதை விகூட்டாக வழிபடுவது சிறப்பு.

 

எனவே இறைவனது பெருமையையும்,தமது சிறுமையையும் உணர்ந்துஅன்போடு இறைவனது திருவடிகளைசிறந்த சொல்மலர்களால் அடியார்களுடன் கூடி இருந்து வழிபடுவதே சிறந்த அர்ச்சனை ஆகும்.

 

மால் விடை மிசை உறைபவரொடு பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே--- 

 

மால் --- பெருமை.

 

திரிபுர தகன காலத்தில், திருமால் இடபமாக இருந்து, சிவபரம்பொருளைத் தாங்கினார் என்பதால், "மால்" என்பது திருமாலையும் குறிக்கும்.

 

பரமஞானம் --- மேலான ஞானம்.

இது --- ஞானத்தின் பொருள் இது.

 

வேதங்களுக்கு முதல் எழுத்தாக உள்ளது பிரணவம் என்னும் மந்திரம் ஆதலால், "மறை ஆதி எழுத்து என்று உகந்த பிரணவம்" என்றார் குமரகுருபர அடிகள். "ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன் உடல் எரியக் கனல் சேரந்த கண்ணானே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். "எல்லையில்லா மறைமுதல்" என்பார் தெய்வச் சேக்கிழார். பிரணவம் சிவபெருமானுக்கு இருப்பிடமாகவும்,வேதங்களுக்கு முதலாகவும்பிரமன் முதலிய தேவர்களுக்குப் பிறப்பிடம் ஆகவும்,காசிப் பதியில் இறப்பவர்களுக்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரக மந்திரமாகவும்முருகக் கடவுளின் திருமுகங்களில் ஒன்றாகவும் விளங்குவது. 

 

திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே,இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.

 

இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு,"தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.

 

முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்வாழ்வில் மிகுந்தவன் என்றால்,எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால்இப்போதுஎன் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில்,உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும்நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகுபடைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

 

சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கிநான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறிவிடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.

 

முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குரு நாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.

 

தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவ அருத்த நகர் "என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.

 

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து,அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து,அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

 

காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே,"அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில்,அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.

 

"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள்,உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ,மறையினால் இசைப்பது அல்லால்".

 

என்றலும்,நகைத்து,"மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க,சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்,உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.

 

"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.     --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

 

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்   --- கந்தர்அநுபூதி 

 

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது.ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு,வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.

                                                                       --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள்,மாணவ பாவத்தை உணர்த்தி,உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத்தானே மகனாகி,தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர,முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.   --- தணிகைப் புராணம்.

                                                                                                

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

     அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு,எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.

                                         

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

                                   

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

                                      

 

அரிய பாவலர் உரை செய அருள் புரி முருக--- 

 

அரிய பாவலர் என்றது நக்கீரதேவரை.

 

சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண் பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்துவைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

 

நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக் கரையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும்நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தனஇந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்து விட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

 

அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தாயே.  நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே. பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமேஎன் செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீங்கள் அஞ்சுதல் வேண்டாம். முன் இலக்கத்தொன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால் அவன் வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறிமுருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .

 

'உலகம் உவப்பஎன்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள்தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும்கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்துநக்கீரரையும்அவருடன் சேர்ந்த மற்றையோரையுங் காத்தருளியது.

 

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி

 அபயமிட அஞ்சல் என்று அங்கீரனுக் குதவி”  --- பூதவேதாள வகுப்பு

 

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

    கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை

           இடித்துவழி காணும்              ---  வேல்வகுப்பு.

 

ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்

     உண்கின்ற கற்கி முகிதான்

ஒன்று குறை யாகிவிடும் அன்று நக்கீரர்வர

    ஓடிப் பிடித்து அவரையும்    

காராய குன்றத்து அடைத்துஉரிய நியதிக்

    கடன் துறை முடிக்க அகலக்

கருதி "முருகாறு" அவர் உரைத்தருள நீலக்

    கலாப மயில் ஏறி அணுகிப்

பேரான குன்றந் திறந்து,இவுளி முகியைப்

    பிளந்து, நக்கீரர் தமையும்

பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,

    பிரான் முகலி நதியின் மேவச்

சீராய திருவருள் புரிந்த கரன் ஊராளி

    சிறுதேர் உருட்டி அருளே

செய செய என அமரர் தொழஅசுரர் மிடி சிதறு முனி

    சிறுதேர் உருட்டி அருளே.

                                                ---திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.

 

கருத்துரை

 

முருகா! எனது பாதக மலங்கள் அற, தேவரீரது பாதகமலங்களைக் கனவிலும் துதிக்கும்படி அருள்வாய்.

 

 

     

 

     

 

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...