042. கேள்வி --- 08. கேட்பினும் கேளாத்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "கேள்வியினால் துளைக்கப்படாத காதுகள்தமக்கு விடயமான ஓசை மாத்திரத்தைக் கேட்குமாயினும்அவை செவிட்டுத் தன்மை உடையனவாகவே கொள்ளப்படும்" என்கின்றார் நாயனார்.

 

     மனத்தில் நூற்பொருள் நுழைதற்கு வழியை உண்டாக்குவதால்கேள்வியால் துளைக்கபட்ட செவி என்றும்அக் கேள்வி இல்லாமையால்துளைக்கப்படாத செவி என்றும் கூறினார்.

 

திருக்குறளைக் காண்போம்....

 

 

கேட்பினும் கேளாத் தகையவேகேள்வியால்

தோட்கப் படாத செவி.                  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     கேட்பினும் கேளாத் தகையவே --- தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம்

 

     கேள்வியால் தோட்கப்படாத செவி--- கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.

 

     (ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகையஎன்றும்மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்றுஎன்பதாம்.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

செவிகள்ஆர் விப்பனசிந்தையுள் சேர்வன,

கவிகள்பா டுவ்வனகண்குளிர் விப்பன,

புவிகள்பொங் கப்புனல் பாயும்தே வன்குடி

அவிகள்உய்க் கப்படும் அடிகள்வே டங்களே.   --- திருஞானசம்பந்தர்.

 

இதன் பொருள் ---

 

     இப் பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன. நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன. கவிபாடும் ஆற்றலைத் தருவன . சிவவேடக் காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன.

 

செவிகள் ஆர நின் கீர்த்திக் கனி என்னும்

கவிகளே காலப் பண்தேன் உறைப்பத் துற்று

புவியின்மேல் பொன்னெடும் சக்கரத்து உன்னையே

அவிவுவின்றி ஆதரிக்கும் எனது ஆவியே.    --- நம்மாழ்வார் திருவாய்மொழி.

 

இதன் பொருள் ---

 

     பெருமானே! உனது புகழ் வடிவாகிய கனிகளாகிய கவிகளைகாலம் என்னும் இசைத் தேனில் தோய்த்து அனுபவிக்க எனது செவிகள் விரும்புகின்றன. அந்து விருப்பமானதுஇங்கேயேஇந்தப் பூமியிலேயே அது அனுபவமாக வேண்டும். அழகிய சக்கரப்படையை ஏந்தியவன் நீ. உனது புகழை இடைவிடாது கேட்க எனது உயிரானது ஆசைப்படுகின்றது. உனது அருள் தானாக வரும் காலம்வரை எனது உயிர் நில்லாது. இப்பொழுதேஉடனேயே அனுபவிக்க விரும்புகின்றது.

 

     கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண்,தேன் உறைப்பத் துற்று --- கனிகள் இயற்கையாகவே இன்சுவை உடையவையாக இருந்தாலும்தேனிலே தோய்த்து உண்பர். அதுபோலபெருமானைப் போற்றும் பாடலாகிய கனிகளைகாலங்களுக்கு அமைத்த பண்களாகிய தேனில் தோய்த்துச் செவைக்கவேண்டும் என்கிறார் ஆழ்வார்.

  

புண்ணாகப் போழ்ந்து,புலால் பழிப்பத் தாம்வளர்ந்து,

வண்ணப்பூண் பெய்வ செவியல்ல--நுண்ணூல்

அறவுரை கேட்டு உணர்ந்துஅஞ்ஞானம் நீக்கி,

மறவுரை விட்ட செவி.            --- அறிநெறிச்சாரம்

 

இதன் பொருள் ---

 

     புண்ணாகப் போழ்ந்து --- புண்ணாகுமாறு துளைக்கப்பட்டுபுலால் பழிப்பத் தாம் வளர்ந்து --- புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்துவண்ணப் பூண் பெய்வ செவி அல்ல --- அழகிய அணிகள் அணியப்படுவன செவிகள் அல்லநுண் அறநூல் உரை கேட்டு உணர்ந்து --- நுண்ணிய அறநூல் பொருள்களைக் கேட்டு ஆராய்ந்துஅஞ்ஞானம் நீக்கி --- அறியாமையைப் போக்கிமறவுரை விட்ட செவி --- பாவத்துக்குக் காரணமான சொற்களைக் கேளாது ஒழிவன செவிகளாகும்.

 

கண்டவர் காமுறூஉம் காமருசீர்க் காதில்

குண்டலம் பெய்வ செவியல்ல-- கொண்டு உலகில்

மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டின்றிச்

சூன்று சுவைப்ப செவி.            ---  அறிநெறிச்சாரம்

 

இதன் பொருள் ---

 

     கண்டவர் காமுறூஉம் காமரு சீர் காதில் குண்டலம் பெய்வ செவியல்ல --- பார்த்தவர் விரும்பும் சீரிய அழகினையுடைய காதில் குண்டலங்கள் அணியப்படுவன செவிகள் ஆகாஉலகில் மூன்றும் உணர்ந்து கொண்டு --- உலகின்கண் அறம் பொருள் இன்பங்களை உணர்த்தும் நூல்களைக் கேட்டு அறிந்துகொண்டுஅவற்றின் --- அவற்றுள்முன்னது --- தலைமையான அறநூலைமுட்டு இன்றி --- ஒழிவின்றிசூன்று சுவைப்ப செவி --- கேட்டு ஆராய்ந்து இன்புறுதற்குக் காரணமாவன செவிகளாகும்.

  

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்மநூல் புக்காலும் தங்காதே, ---சன்மம் எலும்பு

உண்டுசமிக்கும் நாய்ஊண்ஆவின் நெய்யதனை

உண்டு சமிக்குமோ ஓது.               ---  நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

     தோலையும்எலும்பையும் உண்டு பசியாறும் நாயானதுஆவின் நெய் கலந்த உணவினை உண்டு அமையுமோநீ சொல்.  அதுபோலதீவினையே மிகுந்துஅதனால் உருவான உடம்பை உடைய தீவினையாளரின் செவியில் அறநூல் கருத்துகளை எடுத்துப் புகட்டினாலும்அவரிடத்தில் அக் கருத்துத் தங்குமோதங்காது.

  

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்து அற்றால்;

நன்று அறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;

குன்றின்மேல் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து

சென்று இசையா ஆகும் செவிக்கு.     ---  நாலடியார்.

            

இதன் பொருள் ---

 

     பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றுநன்றி அறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் --- நன்மை அறியாத கீழ்மக்கட்கு அறமுறைமை அறிவுறுக்கும் இடத்து அதுபன்றிக்குக் கூழ் வார்க்கும் தொட்டியில் தேமாம் பழத்தைச் சாறு பிழிந்தாற் போல் தகுதியற்றதாகும்குன்றின் மேல் கொட்டுந் தறிபோல் தலை தகர்ந்து சென்று இசையாவாகும் செவிக்கு --- அன்றியும்ஒருமலைப் பாறையின்மேல் அறையப்படும் மரத்தால் செய்யப்பட்ட முளைக் குச்சி நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமை போல அவ்வறவுரையும் அவர் செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும்.

 

     அறிவில்லாதார் அறிவுரைகள் ஏற்று ஒழுகும் வாய்ப்பு இல்லாதவர் ஆவர்.

 

அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்

செவ்வியர் அல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;

கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்

செவ்விய கொளல்தேற்றா தாங்கு.       --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கவ்வித் தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின் செவ்வி கொளல் தேற்றாதாங்கு --- தோலைக் கவ்வித் தின்னும் புலையருடைய நாய்கள் பால் உணவின் நன்மையைத் தெரிந்து கொள்ளாமை போலஅவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் --- அழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாதவர் அறநெறி அறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங் கேட்கமாட்டார்.

  

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவிய சேவடிசே ப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்த

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே

திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;   --- சிலப்பதிகாரம்ஆய்ச்சியர் குரவை.

 

இதன் பொருள் ---

 

     மூன்று உலகங்களையும் தமது இரண்டு திருவடிகளால் முறை நிரம்பா வகை முடியத் தாவி அளந்தஅச் சிவந்த அடிகள் நடத்தலால் சிவக்கும் வண்ணம் தம்பியாகிய இலக்குவனோடுங் காட்டிற்குச் சென்று,  சோ வென்னும் அரணமும் அவ்வரணத்து உள்ளாரும் போரின்கண் தொலையப் பழமையான இலங்கை நகரின் காவலினையும் அழித்தவீரனுடைய புகழினைக் கேளாத செவி என்ன செவியாகும்அத் திருமாலினுடைய சிறப்பினைக் கேளாத செவி என்ன செவியாம்?

 

     செவி என்ன செவி என்றது,தான் கேட்டற்கு உரியன கேட்டுப் பயன் பெறாத செவி என்றவாறு.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...