திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 43 -- அறிவுடைமை
அறிவு உடைமையாவது, கல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடு, உண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும்.
கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும், கற்றதையும்கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "எந்தெந்தப் பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும், கேட்ட அப்பொருளினது உண்மைப் பொருளைக் காண்பதே அறிவுடைமை" என்கின்றார் நாயனார்.
சத்துவம், இராஜசம், தாமதம் என்னும் முக்குணங்களும்,எவ்வித தகுதியினை உடையார்க்கும் மாறி மாறி வரும் இயற்கை உள்ளது. எனவே, உறுதிப் பொருள்களைக் கேட்கின்ற காலத்து உயர்ந்த பொருளை இழிந்தார் வாயிலும், இழிந்த பொருளை உயர்ந்தார் வாயிலும், உறுதிப் பொருளைப் பகைவர் வாயிலும், கெடுபொருளை நண்பர் வாயிலும் சில நேரங்களில் கேட்க நேரும். அப்போது இழிந்தவர் சொன்னார் என்று உறுதிப் பொருளைத் தள்ளுவதும், உயர்ந்தவர் சொன்னார் என்பதற்காக இழிந்த பொருளைக் கொள்ளுவதும், பகைவர் சொன்னார் என்று உறுதிப் பொருளை இகழ்வதும், நண்பர் சொன்னார் என்பதற்காக கெடுபொருளைக் கொள்ளுதலும், மெய்ப்பொருளை அறிய உதவாது. எனவே, சொன்னவரையும், சொல்லப்பட்ட பொருளையும் எண்ணி அதன் உட்பொருளைக் கொள்ளுதல் வேண்டும். அதாவது, சொல்வாருடைய இயல்பை நோக்காது, சொல்லிய சொற்களின் பொருளையும், அவற்றின் பயனையுமே நோக்கி, கொள்ள வேண்டுவனவற்றைக் கொள்வதும்,தள்ள வேண்டுவனவற்றைத் தள்ளுவதும் அறிவுடைமை ஆகும்.
திருக்குறளைக் காண்போம்...
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்--- யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்,
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு--- அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.
(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்தி நின்றது. மெய்யாதல், நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து இரண்டு பாடல்கள்...
ஈசன்நெறி தொண்டர் இயம்புதலும், மெய்ந்நெறிஎன்று
ஆசின்று தேவர் அடைந்ததூஉம் நீதி அன்றோ,
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ஈசன் நெறி --- சிவஞானபோதம். தொண்டர் --- பரஞ்சோதி முனிவர். தேவர் --- மெய்கண்ட தேவர்.
சிவஞானபோதம் என்னும் வடமொழிநூல் சிவபெருமானிடமிருந்து திருநந்தி தேவருக்கும், அவரிடம் இருந்து சனற்குமாரருக்கும், அவரிடம் இருந்து சத்தியஞான தரிசினிகளுக்கும், அவரிடம் இருந்து பரஞ்சோதி முனிவர் என்பவருக்கும் பன்னிரண்டுசூத்திரங்களாக உபதேசிக்கப்பட்டது. இவர்களுள் பரஞ்சோதி முனிவர் பூலோகம் வந்து, திருவெண்ணெய்நல்லூரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்து குழந்தைப் பருவத்தில் இருந்த மெய்கண்டதேவரைக் கண்டு அவருக்கு சிவதீட்சை செய்து இதனை உபதேசித்தார். அதனைக் கொண்டு மெய்கண்டார் தமிழில் பன்னிரு சூத்திரங்களாக அருளினார் என்பது வரலாறு.
பண்டுகளிற்றுப் படிமருங்கு வைத்த செழும்
தண்தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து --- கொண்டமையால்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
தண்டமிழ் --- திருக்களிற்றுப்படியார் என்னும் நூல். திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார் ஒரு நூலை எழுதினார். இவர் தாழ்ந்த இனத்தவர் என்பதால் அந்த நூல் பிறரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவில்லை. அது சிவசம்மதமானதோ என்று அறியும் பொருட்டு, சிதம்பரத்தில் கோயிலின், திருக்களிற்றுப்படியில் வைக்க, அப் படியின் இருபக்கத்திலும் உள்ள கல்யானைகள் அதனைத் தமது துதிக்கையால் எடுத்துக் நடராசப் பெருமான் திருமுன் வைத்து, அதன் மகிமையைப் புலப்படுத்தின. இதனால் அந்நூலுக்குத் திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் வந்தது. அம்பலவாணப் பெருமான் மகிழ்ந்து கொண்டதால் அந்த நூல் மெய்ப்பொருள் நூல் ஆயிற்று.
பின் வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு. --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலை நாட --- தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே! பார்ப்பாரும் --- பார்ப்பனரும். நாய் கொண்டால் --- நாய் கதுவியதாயினும்,உடும்பு தின்பர் --- உடும்பின் தசையை அதன் உயர்வு கருதி உண்பர், (அதுபோல) கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும் போல் --- கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம் நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல, எள்ளற்க யார் வாயின் நல்லுரையை --- கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல் செய்க.)
சிறந்த பொருள்களை இழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.
கள்ளியையும், கருங்காக்கையையும், நாயையும் இழிந்த பொருளாகக் கூறி, அவற்றின்கண் உள்ளன சிறந்தன என்று கூறினார். உடும்பின் புலால் மிகச் சிறந்த சுவையுடையது என்பது கருதியே பார்ப்பாரும் உண்பர் என்றார். காக்கை கரைவதை விருந்தினம் வருவதற்கு அறிகுறி என்று கொள்ளுவர்.
‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பது திருக்குறள்.
ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோதுஒரீஇக் கொள்கை முதுக்குறைவு நேர்நின்று
காக்கை வெளிது என்பார் என்சொலார் தாய்க்கொலை
சால்புடைத்து என்பாரும் உண்டு. --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
காக்கை நேர் நின்று --- காக்கையின் எதிரிலேயே நின்று கொண்டு, வெளிது என்பார் --- அக் காக்கை வெண்மையானது என்று உண்மைக்கு மாறாகப் பேசுபவர், என் சொலார் --- வேறு எதைத்தான் சொல்லமாட்டார்கள், தாய்க் கொலை சால்புடைத்து என்பாரும் உண்டு --- தாயைக் கொலை செய்தல் கூடப் பொருத்தமானதே என்று சொல்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்; ஆதலால், ஏதிலார் யாதும் புகல --- பிறர் தமக்குத் தோன்றியவாறு எல்லாம் சொன்னாலும்,இறை மகன் கோது ஒரீஇக் கொள்கை முதுக்குறைவு --- அரசனாவான் அவர்கள் கூறுவதில் குற்றமானவற்றை எல்லாம் நீக்கிவிட்டு நல்லனவற்றை மட்டும் கொள்ளுதல் பேரறிவாகும்.
குடிமக்கள் வழக்கிட்டுக் கொண்டு ஒருவர் மேலொருவர் அழுக்காறு முதலியவற்றால் பொருந்தாதனவுங் கூறுவர். ஆதலால்; அரசனாவான் அவர் கூற்றுக்களை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அவற்றிற் பொருந்துவனவே எடுத்துக் கொள்ளுமாறு கூறிற்று:
No comments:
Post a Comment