அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடலை பயறொடு (பொது)
முருகா!
விலைமாதர் மயலில் மூழ்கி,
வினைத் துயரால் அழியாமல் அருள்.
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவை ...... இனிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ....ஒழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற
நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான
நடன மிடுபரி துரகத மயிலது
முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடலை, பயறொடு, துவரை, எள், அவல், பொரி,
சுகியன், வடை, கனல், கதலி, இன் அமுதொடு
கனியும், முதுபல கனிவகை நலம் இவை ......இனிதாக,
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளம் உற,
அமுது துதிகையில் மனம் அது களிபெற,
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற, ....நெடிதான
குடகு வயிறினில் அடைவிடு மதகரி,
பிறகு வரும் ஒரு முருக சண்முக என,
குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமல்,
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு,
வறுமை சிறுமையின் அலைவுடன், அரிவையர்
குழியில் முழுகியும் அழுகியும் உழல்வகை ....ஒழியாதோ?
நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு
மறலி வெருவுற, ரவி மதி பயம் உற,
நிலமும் நெறுநெறு நெறு என வரும்ஒரு ...கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சட என,
பகர கிரிமுடி கிடுகிடு கிடு என,
நிகரில் அயில் வெயில் எழு பசுமைய நிறம் ......உளதான
நடனம் இடு பரி துரகத மயில் அது
முடுகி கடுமையில் உலகு அதை வலம்வரு
நளின பத! வர நதி குமு குமு என, ......முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹர என,
அமரர் சிறைகெட, நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவணம் அதில் வளர் அழகிய ......பெருமாளே.
பதவுரை
நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு மறலி வெரு உற--- பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக் கவருகின்ற) வரத்தினைப் பெற்ற இயமன் அஞ்சுமாறும்,
ரவி மதி பயம் உற--- சூரியனும் சந்திரனும் அஞ்சுமாறும்,
நிலமும் நெறு நெறு நெறு என வரும்--- இந்தப் பூமியும் நெறுநெறு என்று அதிரும்படியாக வருகின்ற,
ஒரு கொடிதான நிசிரர் கொடுமுடி சட சட சட என--- கொடியவர்களான அரக்கர்களின் தலைகளை சடசடசட என்று அதிர்ந்து விழவும்,
பகர கிரி முடி கிடுகிடு கிடு என--- அழகிய மலைகள் யாவும் கிடுகிடுகிடு என்று அதிரவும்,
நிகர் இல் அயில்--- ஒப்பற்ற கூரிய வேலாயுதத்தைத் திருக்கையில் தாங்கி,
வெயில் எழு பசுமைய நிறம் உளதான--- ஒளி விளங்குகின்ற பசுமையான நிறம் கொண்டதும்,
நடனம் இடு பரி துரகதம் மயில் அது--- அழகாக ஆடுகின்றதும், குதிரை போன்று விசையோடு செல்லுவதும் ஆன மயிலின் மீது ஆரோகணித்து,
முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் நளின பத--- கடிய வேகத்துடன் இந்த உலகத்தை வலம் வருகின்ற, தாமரை போன்ற திருவடிகளை உடையவரே!
வர நதி குமுகுமு என--- புனிதமான கங்கையானது குமுகுமு எனப் பொங்கவும்,
முநிவோரும் நறிய மலர் கொடு ஹர ஹர ஹர என--- முனிவர்கள் நறுமணம் மிக்க மலர்களைச் சொரிந்து "அர அர அர" என்று வழிபடவும்,
அமரர் சிறைகெட--- தேவர்கள் சிறை நீங்கவும்,
நறைகமழ் மலர்மிசை ந(ண்)ணியே--- மணம் கமழும் தாமரை மலர் மீது,
சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே--- சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமையில் மிக்கவரே!
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற--- கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறுவதற்காக,
கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை க(ன்)னல் கதலி இன் அமுதொடு--- கடலை, பயறு இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன் (ஒருவிதமான இனிப்புப் பண்டம்), வடை, கரும்பு, வாழை,இனிய அமுது வகைகளுடன்,
கனியும் முது பல கனி வகை--- நன்கு பழுத்துள்ள பழவகைகளுடன்,
நலம் இவை இனிதாக--- இவைகளை நல்லபடியாக,
அமுது துதி கையில்--- அமுதம் போன்ற துதிக்கையால்,
மனம் அது களிபெற--- மன மகிழ்வோடு,
கருணையுடன் அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற--- கருணையுடன் அள்ளித் திருவருள் பாலிக்க.
நெடிதான குடகு வயிறினில் அடைவிடு--- பெரிய குடம் போன்ற தனது வயிற்றினில் அடையும்படி அயில்கின்ற,
மதகரி பிறகு வரும்--- மதயானை வடிவுள்ள மூத்தபிள்ளையாரின் பிறகு அவதரித்த,
ஒரு முருக சண்முக என--- ஒப்பற்ற முருகப் பெருமானே! அறுமுகப் பரம்பொருளே! என்று,
இருகரம் குவிய--- எனது இரு கைகளையும் குவித்து,
மலர்விழி புனலொடு பணியாமல்--- கண்களில் நீர் பெருகப் பணியாமல்,
கொடிய நெடியன--- கொடியதும் தொடர்ந்து வருவதுமான,
அதி வினை துயர் கொடு--- மிக்க வினைகளால் துயரமுற்று,
வறுமை சிறுமையின் அலைவுடன்--- வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைந்து,
அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ --- விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும்,பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ?
பொழிப்புரை
பெரிய கடல் போல விரைந்து எழுந்து உயிர்களைக் கவருகின்ற வரத்தினைப் பெற்ற இயமன் அஞ்சுமாறும், சூரியனும் சந்திரனும் அஞ்சுமாறும், இந்தப் பூமியும் நெறுநெறு என்று அதிரும்படியாக வருகின்ற,கொடியவர்களான அரக்கர்களின் தலைகளை சடசடசட என்று அதிர்ந்து விழவும், அழகிய மலைகள் யாவும் கிடுகிடுகிடு என்று அதிரவும், ஒப்பற்ற கூரிய வேலாயுதத்தைத் திருக்கையில் தாங்கி,ஒளி விளங்குகின்ற பசுமையான நிறம் கொண்டதும், அழகாக ஆடுகின்றதும், குதிரை போன்று விசையோடு செல்லுவதும் ஆன மயிலின் மீது ஆரோகணித்து,கடிய வேகத்துடன் இந்த உலகத்தை வலம் வருகின்ற, தாமரை போன்ற திருவடிகளை உடையவரே! புனிதமான கங்கையானது குமுகுமு எனப் பொங்கவும்,முனிவர்கள் நறுமணம் மிக்க மலர்களைச் சொரிந்து "அர அர அர" என்று வழிபடவும்,தேவர்கள் சிறை நீங்கவும்,மணம் கமழும் தாமரை மலர் மீது, சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமையில் மிக்கவரே!
கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறும்பொருட்டு, கடலை, பயறு இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன் (ஒருவிதமான இனிப்புப் பண்டம்), வடை, கரும்பு, வாழை,இனிய அமுது வகைகளுடன், நன்கு பழுத்துள்ள பழவகைகளுடன், இவைகளை நல்லபடியாக,அமுதம் போன்ற துதிக்கையால், திருவுள்ளம் மகிழ்ந்து,கருணையுடன் அள்ளித் திருவருள் பாலிக்க.பெரிய குடம் போன்ற தனது வயிற்றினில் அடையும்படி அயில்கின்ற மதயானை வடிவுள்ள மூத்தபிள்ளையாரின் பிறகு அவதரித்த,ஒப்பற்ற முருகப் பெருமானே! அறுமுகப் பரம்பொருளே! என்று, எனது இரு கைகளையும் குவித்து,
கண்களில் நீர் பெருகப்பணியாமல், கொடியதும் தொடர்ந்து வருவதுமான,மிக்க வினைகளால் துயரமுற்று, வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைந்து, விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும், பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ?
விரிவுரை
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற..... மதகரி---
"உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடம்பை வளர்த்தேன்,உயிர் வளர்த்தேனே" என்பது திருமூலர் வாக்கு. உடம்பை வளர்ப்பது உணவு ஆகும்.
இங்கே மூத்தபிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமான், இந்த உலகத்து உயிர்கள் தழைத்து வளமோடு வாழ, கடலை, பயறு முதலான உணவுகளைத் தனது துதிக்கையால் வாரித் திருவுள்ளம் மகிழ்ந்து உண்டார் என்கின்றார் அருணை அடிகளார். கருவுற்ற தாய் உண்ணும் உணவு, கருவிலே உள்ள உயிர்க்குச் சேரும். அதுபோல, விநாயகப் பெருமான் உண்டார் என்றார்.
குடகு வயிறு --- பெரிய வயிறு. உலகங்கள் எல்லாவற்றையும் தனது பெருவயிற்றில் அடக்கி உள்ளார் மூத்தபிள்ளையார்.
முருக சண்முக என இருகரம் குவிய மலர்விழி புனலொடு பணியாமல், கொடிய நெடியனஅதி வினை துயர் கொடு வறுமை சிறுமையின் அலைவுடன் அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ ---
இறைவனை வழிபடாதவர்க்கு வறுமை என்னும் சிறுமை வந்து சேரும் என்பதை "எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய், கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்" என்னும் வள்ளல்பெருமான் அருள்வாக்கால் அறிக. இறைவனை வாழ்த்துகின்ற வாயானத, நல்ல தெளிந்த அமுதினை உண்டு மகிழ்கின்ற திருவாய் ஆகும் என்பதை, "ஐய! நின் சீர் பேசு செல்வர் வாய், நல்ல தெள்ளமுது உண்டு உவந்த திருவாய்" என்றார். இறைவனை வாழ்த்தாத வாய், "வெறுவாய்", வாழ்த்துகின்ற வாய், "திருவாய்" ஆகும் என்பதை அறிக.
தீவினை காரணமாக வறுமை வந்து சேரும். இறைவன் வழிபடுவோர்க்கு வினைத் துயர் இல்லையாகும்.
பசி என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது. நோய்களோடு ஆண்டுக் கணக்கில் போராடி உயிர் வாழலாம். பசி என்னும் தீய நோயோடு சில மணி நேரமும் போராட முடியாது. பசி நோயை அறியாதவர் யாரும் இல்லை. பிறர் பசியால் துன்புறுவதைக் கண்ணால் பார்த்தும், உள்ளம் பதைத்து, உதவ வேண்டும் என்ற எண்ணம் வராவிட்டால், ஒருவன் படைத்த செல்வத்தால் என்ன பயன்? அவன் கற்ற நூல்களின் அறிவால் என்ன பயன்? "நீடிய பசியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உள்ளம் பதைத்தேன்"என்றார் வள்ளல்பெருமான்.
பசியினால் துன்பப் படுவோருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வாழ்வதே, இந்த உடம்பைக் கொண்டு, உயிரானது பெறுகின்ற பயன் ஆகும். பசித்தோர்க்குச் செய்யும் உதவி, அவரது பசியைத் தணிப்பதே ஆகும். காரணம் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.
என்றார் திருவள்ளுவ நாயனார்.
செல்வத்தை நிரம்பப் படைத்தவன், அதனைச் சேமித்து வைக்கும் இடமே பசித்தவர் வயிறுதான்.
யாராய் இருந்தாலும், தாம் உண்ணுகின்ற வெந்த சோற்றில் ஒரு கைப் பிடியாவது பசித்தவர்க்குக் கொடுத்து உதவ வேண்டும். "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரு, வினையோம் இறந்தால், ஒரு பிடி சாம்பரும் காணாது, மாய உடம்பு இதுவே" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
எனவே, இன்று பிச்சை எடுப்பவர் யார் என்றால், முற்பிறவியில் பசித்தவர்க்கு, தாம் உண்ணுகின்ற அன்னத்தில் ஒரு பிடியாவது கொடுத்து உதவாதவர் தான். எனில், இன்று பசித்தோர்க்கு அன்னமிடாதவர் மறுபிறவியில், பிச்சை எடுக்கவேண்டி வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.
மாடமாளிகை, பொன் பொருள் எல்லாவற்றிலும் மிதந்து கொண்டு இருப்பர். ஒன்றும் இல்லாத வறுமையில் உள்ளவர்,அதுவும் தவத்தைப் புரிபவர் ஒருவர், பசிக்கு உணவு என்று தமது வாயிலில் வந்து நின்று, "ஐயா, பசிக்கிறது. சிறிது அன்னம் படையும்" என்று கேட்டவுடன்,மிகவும் தாராளமாக "மேல் வீட்டில் போய்க் கேள்,கீழ் வீட்டில் போய்க் கேள்" என்று கூறி அவனை விரட்டி அடிப்பர். அவ் இரவலன் தனக்கு உண்டான பசியைப் பொறுக்கமாட்டாமல், "ஐயா! எல்லா இடங்களிலும் கேட்டேன், ஒன்றும் கிடைக்கவில்லை. பசி மிகவும் வாட்டுகிறது. ஏதாவது கொடுங்கள்" என்று கூறி சிறிது படி ஏறி, வீட்டிற்குள் நுழைய முயலுமுன், அவனது எதிரில் முடுகிப் போய், நாய்போல் சீறி விழுந்து விரட்டி அடிப்பர். ஆனால், வீணாக வாழ்நாளைக் கழித்து விணாகப் போகின்றவருடைய சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொள்வர். இவர்கள் படைத்துள்ள செல்வம் எல்லாம் ஒருநாளில் வற்றிப் போய்விடும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"வெறுமிடியன் ஒருதவசி அமுதுபடை எனும் அளவில்,
மேலை வீடுகேள், கீழை வீடுகேள்,
திடுதிடு என வெறுமிடியன் ஒருதவசி
அமுதுபடை எனும் அளவில்,
மேலை வீடுகேள்,கீழை வீடுகேள்,
திடுதிடு என நுழைவதன்முன்,
எதிர்முடுகி,அவர்களொடு
சீறி,ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்,
விரகினொடு வருபொருள்கள் சுவறிஇட,மொழியும்ஒரு
வீணி யார்சொலே மேலது ஆயிடா,....
விதிதனை நினையாதே" --- திருப்புகழ்.
பொருள் உள்ளபோதே பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள், தாம் நேர்மையற்ற வழியில் தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்து வைத்திருந்த போது, அப்பொருளைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு, திகைத்து, உடல் மெலிந்து, மனம் வாட்டமுற்று துக்கப்பட்டு தம் வாழ்நாளை வீணாக அழிப்பவர்களே இவர் ஆவர் என்றும் பாடுகின்றார், அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில்.
"வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால்
பாடிக் கசிந்து, உள்ளபோதே கொடாதவர், பாதகத்தால்
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே".
பிச்சை எடுக்கப் போகின்றவர்க்கு உள்ள அடையாளம் காட்டப்பட்டது.பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானவர் யார் என்று பட்டினத்தடிகள் காட்டுவதை அறிவோம்.
"ஆற்றோடு தும்பை அணிந்து ஆடும் அம்பலவாணர் தமைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,
சோற்றாவி அற்று, சுகம் அற்று, சுற்றத் துணியும் அற்றே,
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே"
இதன் பொருள் ---
கங்கை நதியுடன் தும்பை மலரையும் தரித்து, ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானைத் துதிக்காதவர்க்கு இந்த உலகத்தில் அடையாளம் உண்டு. (அது என்னவென்றால்), இந்தப் பூமியில் சோற்று வாசனை ஒழிந்து, சுகம் ஒழிந்து, அரையில் உடுத்துக் கொள்ள ஆடையும் இல்லாமல், யாசித்தாலும் பிச்சை கிடைக்காமல் ஏக்கத்தோடு இருப்பார்கள்.
"அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்
சென்மம் எடுத்தும், சிவன் அருளைப் போற்றாமல்,
பொன்னும், மனையும், எழில்பூவையரும், வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே".
இதன் பொருள் ---
நெஞ்சமே! நீ உண்ணுகின்ற அன்னத்தை, ஆதரவு அற்று, வயிற்றுப் பசி தீர்க்க சோற்றுக்காக அலைபவர்க்கு, பகிர்ந்து அளித்து உதவி, பின் உண்ணுகின்றதற்காக இந்தப் பிறவியை எடுத்து இருக்கின்றாய். அவ்வாறு ஓர் அற்புதமான பிறவியைத் தந்த சிவபரம்பொருளின் திருவருளைப் போற்றாமல், பொன்னையும், மண்ணையும்,அழகு வாய்ந்த பெண்ணையும், இவற்றால் உண்டாகும் போகத்தையுமே இன்னும் கூடச் சதம் என்று நினைத்து இருக்கின்றாயே.
"முன்தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்,
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது,பாழ்மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல், அரன் பூசை செய்யாமல்,
கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறைந்து விட்டனையே".
இதன் பொருள் ---
பாழான நெஞ்சமே! முந்தைய பிறவிகளில் நீ செய்து வைத்த புண்ணியத்தின் பலனாக, உனக்கு இப் பிறவியில் அனுபவிக்கவே, இந்தஐசுவரியாமானது வாய்த்தது என்று நினையாது, தரித்திரர்க்கும் கொடுக்காமல், சிவபூசையும் செய்யாமல், கற்ற பெரியோர்க்கும் கொடுத்து உதவாமல், செல்வச் செருக்கால் அறிவற்று வாழ்கின்றாயே.
"இறைக்கின்ற கிணறு ஊறும். இறைக்காத கிணறு நாறும்."என்பது போல் பயன்படுத்தாத உள்ள கிணறு பாழும்கிணாறு ஆகி விடும். இறைக்க இறைக்க நீர் உறும்போது, அது பயனுள்ளதாகி விடும். திருவருளால் வந்த செல்வத்தில் ஒரு பகுதியை நல்ல செயலுக்குப் பயன்படுத்தினால், அந்தச் செலவானது, நம்மிடம் எஞ்சி உள்ள செல்வத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும்.
"அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ" என்றார் அடிகளார். இங்கு அரிவையர் என்றது விலைமாதர்களை. அவர்களை நாடி இருந்தால், கையில் உள்ள பொருள் போகும். வறுமை வந்து சேரும்.
"நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறுங் காலத்தில்
கொண்ட கருஅளிக்குங் கொள்கைபோல்-ஒண்தொடீ!
போதம்,தனம், கல்வி பொன்றவருங் காலம்,அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்". --- ஔவையார்.
கருத்துரை
முருகா! விலைமாதர் மயலில் மூழ்கி, வினைத் துயரால் அழியாமல் அருள்.
No comments:
Post a Comment