திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 42 -- கேள்வி
முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமை, கல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார், இந்த அகிதாரத்தில், கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இந்தக் கேள்வியானது, கேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின், அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின், அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.
கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில், "காதுகளால் அனுபவிக்கப்படும் கேள்விச் சுவையை உணராமல், வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை அறியும் அறிவினை உடைய மனிதர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த உலகிற்கு வருவது என்ன?" என்கின்றார் நாயனார்.
மேன்மக்கள் போல்,காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாது,வாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மை? இறந்தால் என்ன தீமை? இரண்டும் ஒன்றே ஆகும்.
"மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பயச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம்.
காதுகளால் அனுபவிக்கப்படும் சுவைகள், சொல்சுவை, பொருள்சுவை என இருவகைப்படும்.
சொற்சுவை என்பது குணம், அலங்காரம் என இருவகைப்படும்.
குணம் என்பது பலவடிவுகளிலாவது, பல சீர்களிலாவது எழுத்துக்கள் ஒன்றி வருவது. அது செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை,காந்தம், வலி, சமாதி எனப் பத்து வகைப்படும். கைகால் முதலிய உறுப்புக்கள் இருந்தும் உயிர் இன்மையால் மனிதன் எனக் கொள்ளப்படாதது போல, இந்தக் குணங்கள் இல்லாதவை செய்யுள் எனப்படமாட்டா.
அலங்காரம் எனப்படுவது, சொல்லையும் பொருளையும் பற்றி நின்று அழகு செய்வது. இது சொல் அலங்காரம், பொருள் அலங்காரம் என இருவகைப்படும்.
மக்களுக்கு அலங்காரம் செய்வனவாகிய அணிகலன்களைப் போல், காப்பியத்திற்கு அலங்காரம் செய்வன இவை இரண்டும்.
பொருட்சுவை என்பது,காமம் என்னும் ஒரு பொருளின்மீது உண்டாகும் விருப்பு. ஒரு பொருளின் மீது விருப்புத் தோன்றுவதால் உண்டாகும் களிப்பு. உயிர்களின் மீது உண்டாகும் கருணை. எல்லா உயிர்களின் மீதும் செல்கின்ற ஆசையும், வீரமும். தம்மோடு பொருந்தாத பகைவரை அழிக்கின்ற உருத்திரம். தெய்வம், விலங்கு, கள்வர் முதலானவர்களால் உண்டாகும் அச்சம். மூப்பு, பிணி, வருத்தம் முதலியவற்றால் உண்டாகும் இளிவரல், அருவருப்பு. புதியவற்றையும், பெரியவனவற்றையும் அறிதலால் உண்டாகும் வியப்பு. பற்று அற்று இருக்கும் சமநிலை என்னும் சாந்தம் என்று சொல்லப்படும்.
வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையானது, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு என்னும் ஆறுவகையான சுவைகளைக் குறிக்கும். நன்று, தீது என்பவற்றை அறிந்து ஒழுகும் மன உணர்ச்சி இல்லாது, இந்த சுவைகளையே பெரிதும் விரும்பி வாழ்கின்ற மனிதர்களை மாக்கள் என்றார். இவர்கள் இருப்பதால் உலகத்துக்கு யாதொரு பயனும் இல்லை. இறப்பதால் யாதொரு இழப்பும் இல்லை என்றார்.
வயிற்றுக்கு ஈயப்படும் உணவால் விளைந்த வாயுணர்வும்,உயிர் நிலைக்க,உடல் வளம்பெற்றுத் திகழ்ந்து, நூற்பொருள்களைக் கேட்டுத் தெளிந்த அறிவினைப் பெறுவதற்கே. எனவே, அப்பயனை இழந்த மாக்கள் மடிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்றார் நாயனார்.
திருக்குறளைக் காண்போம்....
செவியின் சுவை உணரா வாய்உணர்வின் மாக்கள்,
அவியினும் வாழினும் என்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்--- செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்,
அவியினும் வாழினும் என் --- சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும்என்பதாம். வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
No comments:
Post a Comment