திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்
உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டி, தன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கி, நன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். என்பதால், குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார், அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "கண்டித்து அறிவுரை கூறித் திருத்துவாரின் பாதுகாப்பு இல்லாத அரசன், தன்னைக் கெடுப்பவர் இல்லை என்றாலும், தானே கெட்டுப் போவான்" என்கின்றார் நாயனார்.
ஏமம் --- காவல். ஏமம் மருவாத என்னும் சொல் ஏமரா என்று வந்தது. ஏமம் மருவாத --- காவல் பொருந்தாத.
பாகன் இல்லாத யானை, வழி என்றும், குழி என்றும் அறியாமல், வழி அல்லாத வழியில் நடந்து குழியில் விழுந்து, தன்னைப் பிறரிடத்தில் ஒப்புவிப்பதைப் போல, பெரியாரைத் துணைக் கொள்ளாத ஒருவன், தான் எண்ணுவதே சரி என்று எண்ணி, தகுதியில்லாத செயல்களைச் செய்து, பாவத்தையும், பழியையும் சுமப்பதோடு, உலகவர் பகையையும் சம்பாதித்துக் கொண்டு, கெட்டுப் போதல் திண்ணம். ஆதாலால், கெடுப்பார் இல்லாமலே கெட்டுப் போவான் என்றார்.
திருக்குறளைக் காண்போம்...
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்,
கெடுப்பார் இலானும் கெடும்.
இதன் பொருள் ---
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்--- சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன்,
கெடுப்பார் இலானும் கெடும் --- பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.
('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா --- இடித்துஇடித்துக்
கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா
நெட்டு உயிர்ப்போடு உற்ற பிணம். --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
முடிப்ப முடித்து --- முடிக்கத் தக்க மலர் முதலியவற்றை முடித்துக்கொண்டு, பின் பூசுவ பூசி --- அதன் பின்பு பூசத்தக்க கலவை முதலியவைகளைப் பூசிக்கொண்டு, உடுப்ப உடுத்து --- உடுக்கத் தக்க பட்டாடை முதலியவற்றை உடுத்துக் கொண்டு, உண்ப உண்ணா --- உண்ணத்தக்க நறுநெய் உணவுகளை உண்டு (உயிர்த் தன்மை காட்டி). இடித்து இடித்துக் கட்டுரை கூறின் --- பலமுறை நெருக்கி நெருக்கி அறிவுரை கூறினாலும், செவி கொள்ளா கண் விழியா --- காது கொள்ளாதனவாய்க் கண் திறந்து பாராதனவாய்ப் பிணத் தன்மை காட்டி நிற்கும் அரசர்கள், நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம் --- பெருமூச்சோடு கூடிய பிணங்களே ஆவார்கள்.
முடிப்பதும் பூசுவதும் உடுப்பதும் உண்பதுமான செயல்களெல்லாம் உயிரிருப்பது போல் காட்டுகின்றன. ஆனால் நல்லுரைகளைக் காது கொடுத்துக் கேளாமையும், நல்லோரை ஏறெடுத்தும் பாராமையும்,உயிரில்லாதது போல் காட்டுகின்றன. உயிருக்கு முதன்மையான தன்மை அறிவே ஆதலின், அதன் செய்கைகளான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத அரசர்களைப் `பிணம்’ என்றே கூறல் வேண்டினார். ஆனால் இறந்த பிணத்தினின்றும் சிறிது வேற்றுமை காட்டுதற் பொருட்டு "நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்" என்றார்.
நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்று இகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறிது ஆதல்
கெடுவது காட்டும் குறி. --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
நட்புப் பிரித்தல் --- நண்பர்களைப் பகையாக்கிக் கொள்ளலும், பகை நட்டல் --- பகைவர்களை நட்பாக்கிக் கொள்ளலும்,ஒற்று இகழ்தல் --- வேவுகாரர்களை இழித்து உரைத்தலும், பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் --- பக்கத்திலுள்ள எல்லாரிடத்தினும் ஐயுறவு கொள்ளலும், தக்கார் நெடுமொழி கோறல் --- பெரியோர்களுடைய அறிவுரைகளை மீறலும்,குணம் பிறிது ஆதல் --- இயல்பான தன்மைக்கு மாறாதலும் (ஆக இந்த ஆறு பொருந்தாத செயல்களும்), கெடுவது காட்டும் குறி --- பின்னால் வரும் கெடுதிகளைக் காட்டும் அடையாளங்களாம்.
No comments:
Post a Comment