திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்
உயிர்க்கு,சிறுமை (காமம்), வெகுளி (குரோதம்), கடும்பற்றுள்ளம் (உலோபம்) மாணா உவகை (மோகம்), செருக்கு (மதம்), மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும், அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.
"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்
கனலோப முழுமூடனும்,
கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்,
ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று
இயம்பு பாதகனும் ஆம்,
இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்"
என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.
இதன் பொருள் ---
கருவிலே தோன்றி, குழவிப் பருவத்தே முளைத்து, இளமை வளர வளர்ந்து, பிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்" என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம், நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும், உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக. "கன லோபம்", நில்லாது செல்லும் செல்வத்தின் மீத்து உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்" என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும், அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம், உடைமை நலங்களால் அறிவு இல்லாமல், நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம், நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால், மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும், ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும், அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்தது.அது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால், அதனை "ஏமம் அறும் மாற்சரியம்" என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிர, எதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் “விழலன்”என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)
எனவே, இந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.
இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "செல்வக் களிப்பால் தன்னைத் தானே வியந்து கொள்ளும் மதமும், பிறர் ஆக்கம் பொறாமையால் வரும் சினமும், தனதானியாதிகள் மேன்மேலும் உண்டாக வேண்டும் என்னும் சித்தவிருத்தி ஆகிய காமமும் எனப்படும் மூன்று வகையான குற்றங்கள் இல்லாரது செல்வமானது மேம்பட்டு விளங்கும் தன்மையினை உடையது" என்கின்றார் நாயனார்.
செருக்கு --- அகங்காரத்தால் வருகின்ற நிமிர்ச்சி.
சினம் --- ஆணவத்தால் மூண்டு எழுவது.
சிறுமை --- இழிவான வழியில் பழகிவரும் புன்மை.
மேலே சொல்லப்பட்ட ஆறுவகையான குற்றங்களுள், ஒருவனைக் கெடுத்தற்கு மிகுதியும் முற்பட்டுள்ள குற்றங்கள் மதமும், வெகுளியும், காமமும். ஆதலால், அம் மிகுதி பற்றி,அவை முதலில் கூறபட்டன.
திருக்குறளைக் காண்போம்...
செருக்கும், சினமும், சிறுமையும் இல்லார்
பெருக்கம், பெருமித நீர்த்து.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம்--- மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம்,
பெருமித நீர்த்து--- மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.
(மதம்: செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின், மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
தோன்றி இறைஅருளும் தொண்டர் எனும் மூர்த்திக்கு
மூன்று மறைச் செல்வம் முதிரும்,அஞ் --- ஞான்று
செருக்கும், சினமும், சிறுமையும் இல்லார்
பெருக்கம், பெருமித நீர்த்து.
இதன் பொருள் ---
இறை அருளும் மூர்த்திக்கு --- சிவபெருமான் அருள் செய்த மூர்த்தி நாயனாருக்கு. மூன்று மறைச் செல்வம் --- சிவாகமங்களில் கூறப்பட்ட மூன்றாகிய திருநீறு, உருத்திராக்கக் கலன், சடைமுடி. அஞ்ஞான்று --- அந்நாளில் மூர்த்தி நாயனாரின் சிவத் தொண்டுக்கு இடையூறு விளைத்து வந்த மதுரையை ஆண்டு வந்த கருநாடக மன்னன், அது காரணமாக இறந்து பட்டான். பிறகு ஊர்மக்கள், பட்டத்து யானையை அனுப்பி, மூர்த்தி நாயனாரைத் தம் மன்னராகக் கொண்டனர். அவர் சிவபெருமானை வேண்டி திருநீறே அபிடேகமாகவும், உருத்திராக்கமே திருவாபரணங்களாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் கொண்டு அரசுரிமையை ஏற்றுக் கொண்டார் என்பது வரலாறு.
மூர்த்தி நாயனார் வரலாறு
பாண்டி நாட்டிலே, மதுரைப் பதியிலே, வணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். அன்பையே திருவுருவாக் கொண்டவர்.
மூர்த்தி நாயனார்,சொக்கலிங்கப் பெருமானுக்குத் சந்தனக் காப்பு அணிவதைத் தமக்கு உரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வரும் நாளில், வடுகக் கருநாடக மன்னன் ஒருவன் தென்னாடு போந்து, பாண்டியனை வென்று, மதுரைக்கு அதிபதியானான். அவன், சமண சமயத்தைத் தழுவித் திருநீறு அணியும் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைத்து வந்தான். அவன், தீங்குக்கு இடையே மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டும் நடந்து வந்தது.
கருநாடக மன்னன், மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். மூர்த்தியார் தம் திருத்தொண்டில் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன், நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு தடைகளை எல்லாம் செய்தான். நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டால், "இக் கொடுங்கோலன் என்று மாய்வான்? இந் நாடு திருநீற்று நெறியினைத் தாங்கும் வேந்தனை என்றே பெறும்?"என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதும் திரிந்தார். சந்தனக் கட்டை எங்கும் கிடைக்கவில்லை. திருக்கோயிலுக்குச் சென்று, "இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்ன? அதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லை" என்று கருதி, ஒரு சந்தனக்கல் மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் பெருகிப் பாய்ந்தது. எலும்பு வெளிப்பட்டது. எலும்புத் துளைகள் திறந்தன. மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு பொறாத ஆண்டவன் அருளால், "ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே. இராச்சியத்தை நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்து, உன் திருப்பணியைச் செய்து, நமது சிவலோகத்தை அடைவாயாக" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கை ஊறு நீங்கிப் பழையபடி ஆயிற்று.
மூர்த்தியார் "இறைவன் திருவருள் இதுவேயானால், இவ் வையத்தை நான் தாங்குவேன்" என்று நினைந்து, திருக்கோயில் புறத்தில் நின்றார். அன்று இரவே அக் கொடிய மன்னன் இறந்துபட்டான். அடுத்த நாள் காலை அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன. அவனுக்குப் புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தார் எவரும் இல்லாமையால், எவரை அரசராக்குவது என்று அமைச்சர்கள் ஆலோசித்து, முடிவாக, ஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டும் என்றும், அது எவரை எடுத்துக் கொண்டு வருகிறதோ, அவரே அரசர் ஆதல் வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறே, ஒரு யானையை முறைப்படி அருச்சித்து, ஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத், துகிலால் அதன் கண்ணைக் கட்டி விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்து, மூர்த்தி நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து,அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது. அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கி, அவரை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள்.
முடிசூட்டுதற்குரிய கிரியைகள் தொடங்கப்பட்டன. அப்போது, நாயனார், மந்திரிகளை நோக்கி, "சமணம் அழிந்து, சைவம் ஓங்கினால் நான் அரசாட்சியை ஏற்றல் கூடும்" என்றார். அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், "எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும், கண்டிகையே கலனாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் இருத்தல் வேண்டும்" என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலானோர் உடன்பட்டனர். அம் முறையில் முடிசூட்டு விழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார்.
மூர்த்தி நாயனார், பிரமசரியத்தில் உறுதிகொண்டு, திருநீறு, கண்டிகை, சடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்து, சைவம் ஓங்கப் பன்னெடு நாள் ஆட்சி புரிந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.
நாயனார் தமக்கு அரசன் செய்த தீங்கு காரணமாக சினம் கொள்ளவில்லை. சிறுமை என்பது அவர் திருவுள்ளத்தில் சிறிதும் இல்லை. தான் பெற்ற பெருவாழ்வால் அவர் செருக்குக் கொள்ளவில்லை.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோம் என்று
தலையா யாவர் செருக்குச் சார்தல் - இலையால்,
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய்! மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு. --- நன்னெறி.
இதன் பொருள் ---
ஒலிக்கின்ற வண்டுகள் ஊதுகின்ற குளிர்ந்த பூமாலையை அணிந்துள்ள பெண்ணே! எக்காலத்தும் அசையாது இருந்த மேரு மலைக்கும் சிவபெருமானால் வந்தது வளைவு. சிறந்த அறிவுடையோர்கள் தாம் அழியாத பெருஞ்செல்வத்தை உடையவர்களாகப் பிறந்துள்ளோம் என்று எண்ணிச் செருக்கு அடையமாட்டார்கள்.
தொலையா --- அழியாத. தலையாயவர் --- நல்லியல்புடைய சான்றோர்கள். செருக்கு --- ஆணவ முனைப்பு; அதைக் கர்வம் என்பர். இரைக்கும் --- ஒலிக்கும். கோதை --- இங்குப் பூமாலை; ஈர்ங்கோதை என்பது குளிர்ந்த பூமாலை.
தன்னை வியந்து தருக்கலும்,தாழ்வு இன்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும்,- முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும்,இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை. --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
தன்னை விழந்து தருக்கலும் --- ஒருவன் தன்னைத் தானே நன்கு மதித்து அகங்கரித்தலும்; தாழ்வு இன்றி கொன்னே வெகுளி பெருக்கலும் --- மன அடக்கம் இல்லாமல் வீணாக, சினத்தைப் பெருகச் செய்தலும்; முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் --- கருதிய, பலவகைப் பொருள்களையும், தனக்கு ஆகவேண்டும் என்று விரும்புகின்ற சிறுமைத் தன்மையும்; இ மூன்றும் செல்வம் உடைக்கும் படை --- ஆகிய இந்த மூன்றும் ஒருவன் படைத்துள்ள செல்வத்தை அழிக்கும் கருவி.
No comments:
Post a Comment