திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 43 -- அறிவுடைமை
அறிவு உடைமையாவது, கல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடு, உண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும்.
கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும், கற்றதையும்கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "வரக் கூடியதாகத் தோன்றும் துன்பத்தை முன்னே அறிந்து தன்னைக் காத்துக் கொள்ளும் அறிவினை உடையார்க்கு, நடுங்கும்படி வருவதாகிய ஒரு துன்பமும் இல்லை" என்கின்றார் நாயனார்.
முன்னரே எண்ணிச் செயல் புரிகின்ற ஒருவனுக்கு வருகின்ற துன்பங்களை விலக்குகின்ற காலம் உண்டாவதால், எதையும் விலக்கிக் கொள்ளும் தகுதியினை உடையவனாக இருப்பதால்,அவனுக்கு யாதொரு தீமையும் வருவதற்கு இடம் இல்லை.
திருக்குறளைக் காண்போம்...
எதிர்அதாக் காக்கும் அறிவினோர்க்கு,இல்லை
அதிர வருவது ஓர் நோய்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு --- வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு,
அதிர வருவது ஓர் நோய் இல்லை--- அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம் இன்மை இதனான் கூறப்பட்டது.)
இறைவனை முன்னிலையாகக் கொண்டு வழிபட்டு, எச் செயலையும் செய்தால், அவர்க்கு வினையால் வரும் துன்பங்கள் இல்லை என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடல் காண்க.
முதிரும் சடையின் முடிமேல் விளங்கும்
கதிர்வெண் பிறையாய்! கழிப்பாலை உளாய்!
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்தும் அவர்க்கு
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே.
இதன் பொருள் ---
முதிர்ந்த சடை முடியின்மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப் பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத்தைத் தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.
No comments:
Post a Comment