திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்
உயிர்க்கு, சிறுமை (காமம்), வெகுளி (குரோதம்), கடும்பற்றுள்ளம் (உலோபம்), மாணா உவகை (மோகம்), செருக்கு (மதம்), மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும், அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.
"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்
கனலோப முழுமூடனும்,
கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்,
ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று
இயம்பு பாதகனும் ஆம்,
இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்"
என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.
இதன் பொருள் ---
கருவிலே தோன்றி, குழந்தைப் பருவத்தே முளைத்து, இளமை வளர வளர்ந்து, பிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்" என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம், நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும், உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக."கன லோபம்", நில்லாது செல்லும் செல்வத்தின் மீத்து உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்" என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும், அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம், உடைமை நலங்களால் அறிவு இல்லாமல், நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம், நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால், மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும், ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும், அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்தது. அது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால், அதனை "ஏமம் அறும் மாற்சரியம்" என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிர, எதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் “விழலன்”என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)
எனவே, இந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.
இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், " கிடைத்த பொருளைக் கொண்டு செய்யத்தக்க கடமைகளைச் செய்யாது, பொருளினிடத்துப் பற்றுக் கொண்டு உலோபம் செய்தவனது செல்வமானது,அழிவில் இருந்து தப்பாமல் அழியும்" என்கின்றார் நாயனார்.
பொருளால் செய்துகொள்ளப்படுவன அறம் பொருள் இன்பங்கள் ஆகும். பொருளைச் செய்தலாவது, பொருளை விருத்தி ஆக்குதல். அவ்வாறு செய்வது அறச்செயல்களைச் செய்வதற்கும், இன்பத்தைத் துய்ப்பதற்கும் துணையாக இருக்கும் என்பதை, "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு, எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு" என்னும் திருக்குறளால் அறிக.
பின்வரும் பாடல்களும் இதனைத் தெளிவாக்கும்....
வடுஇலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த,இருதலையும் எய்தும்,
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர். --- நாலடியார்.
இதன் பொருள் ---
வடு இலா வையத்து மன்னிய மூன்றில் --- குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவணது எய்த இருதலையும் எய்தும் --- நடுவில் நின்றதான ‘பொருள்' என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான ‘அறம்' ‘இன்பம்' என்னும் இரண்டையும் அவன் அடைவான், நடுவணது எய்தாதான் --- அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப் பொருளை அடையாதவன்,எய்தும் உலைப்பெய்து அடுவது போலும் துயர் --- கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவன்.
கல்லில் பிறக்குங் கதிர்மணி,காதலி
சொல்லில் பிறக்கும் உயர்மதம்,- மெல்லென்று
அருளில் பிறக்கும் அறநெறி,எல்லாம்
பொருளில் பிறந்து விடும். --- நான்மணிக் கடிகை.
இதன் பொருள் ---
கதிர்மணி கல்லில் பிறக்கும் --- ஒளியுள்ள மணிகள்மலையில் உண்டாகும்; உயர் மதம் காதலி சொல்லில் பிறக்கும் --- மிக்க களிப்புகாதலியினது இன்சொல்லினால் தோன்றும்;
அறநெறி மெல் என்ற அருளில் பிறக்கும் --- அறவழிகள்மென்மை பொருந்திய அருளினிடம் உண்டாகும்;
எல்லாம் பொருளில் பிறந்து விடும் --- அவ்வறத்தோடு ஏனைய இன்பம் முதலிய எல்லாமும்செல்வத்தினால் உண்டாய்விடும்.
முனிவரும் மன்னரும் முன்னுவ
பொன்னால் முடியும் என,
பனிவரும் கண், பரமன் திருச்
சிற்றம்பலம் அனையாய்!
துனிவரும் நீர்மை இது என் என்று
தூநீர் தெளித்து அளிப்ப,
நனிவரும் நாள் இதுவோ என்று
வந்திக்கும் நல்நுதலே. --- திருக்கோவையார்.
இதன் பொருள் ---
துறவிகள் கருதும் மறுமை இன்பமும், மனிதர்கள் கருதும் இம்மை இன்பமும் பொருளால்தான் முடியும் என்று நான் பொதுவாகப் பொருளின் தேவையைத் தலைவியிடம் கூற, உடன் அவளுடைய கண்களில் கண்ணீர் தேங்கியது. சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் தில்லைச் சிற்றம்பலத்தினை ஒத்த தோழியே! தலைவியின் வருத்தம் எக்காரணத்தினால் வந்தது? நான் பிரியேன் என்று கண்ணீரைத் துடைத்தவுடன் அவள் தெளிவு பெற்றாள். வருந்திக் கண்ணீர் வடித்த நேரத்தை, நான் பிரிந்த காலமாகவே எண்ணி என்னை வணங்கினாள்.(ஆதலால், நீ அவள் வருந்தாவண்ணம் என் பிரிவைக் கூறித் தேற்றுவாயாக என்று தலைவன் கூறினான்.)
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே – அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொருள் இன்பம்என்று,
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார்
சீர்ஆர் இருகலையும் எய்துவர்.
இதன் பொருள் ---
உலகில் உள்ளவர்கள் சொல்லும் புருஷார்த்தங்கள் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றே. இம் மூன்றனுள், இடையில் சொல்லப்பட்ட பொருளை அடைபவர்கள், இருதலையும் சொல்லப்பட்டுள்ள அறம், இன்பம் என்னும் இரண்டையும் அடைவர்.
எனவே, பொருளைச் செய்வது, அறச் செயல்களைச் செய்து மறுமைக்கு இன்பத்தைத் தேடிக் கொள்வதற்கும், இம்மையில் இன்பம் துய்ப்பதற்குமே. அல்லாமல், தானும் துய்க்காமல், பிறர்க்கும் கொடுத்து உதவாமல்,உலோபத்தனம் செய்வதால்,பயனில்லை என்று கூறினார்.
உலோபத் தனத்தால், ஒருவன் தானும் நன்றாக வாழமாட்டான், பிறரையயும் வாழ்விக்க மாட்டான், அவன் படைத்துள்ள செல்வமானது,எட்டி மரம் பழுத்ததைப் போன்றதாகும் என்பதை அறிவிக்கும் பின்வரும் பாடல்களைக் காண்க.
பதர் ஆகிலும்கன விபூதிவிளை விக்கும்,
பழைமைபெறு சுவர் ஆகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும், மலம்
பன்றிகட்கு உபயோகம்ஆம்,
கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும், வன்
கழுதையும் பொதிசுமக்கும்,
கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம்,பெருங்
கான்புற்று அரவமனை ஆம்,
இதம் இலாச் சவம் ஆகிலும் சிலர்க்குதஉவிசெய்யும்,
இழிவுறு குரங்காயினும்
இரக்கப் பிடித்தவர்க்கு உதவிசெயும், வாருகோல்
ஏற்ற மாளிகை விளக்கும்,
மதமது மிகும்பரம லோபரால் உபகாரம்
மற்றொருவருக்கும் உண்டோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
பதர் ஆகிலும் கன விபூதி விளைவிக்கும் ---பதராக இருந்தாலும் உயர்ந்த திருவெண்ணீற்றை விளைவிக்கப் பயன்படும்; பழைமை பெறு சுவராகிலும் பலருக்கு மறைவாகும்,மாடு உரிஞ்சிடும் --- பழைமையான குட்டிச் சுவராக இருந்தாலும் அமர்வோருக்கு மறைவைத் தருவதோடு, மாடு தன் உடல் தினவைத் தீர்க்க, உடம்பைத் தேய்த்துக் கொள்ளவும் பயன்படும்; மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் --- மலமானது பன்றிகளுக்கு உணவாகப் பயன்படும்; கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் ---சீற்றம் மிகுந்த எருமைக் கடாவானது உழுது உலகை உண்பிக்கும்; வன் கழுதையும் பொதி சுமக்கும் --- வலிய கழுதையும் பொதியைச் சுமக்கும்; கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் ---கல்லானது தெய்வச் சிலைகளை வடிக்கப் பயன்படும், திருக்கோயில்களை அமைக்க உதவும்; பெருங்கான் புற்று அரவ மனையாம் ---பெரிய காட்டிலுள்ள புற்றுக்கள் பாம்பிற்கு இருப்பிடம் ஆகும்; இதம் இலாச் சவமாகிலும் சிலர்க்கு உதவி செய்யும் --- நலம் இல்லாத பிணமானாலும் அதை அடக்கஞ் செய்யும் சில தொழிலாளிகட்கு வருவாயைக் கொடுக்கும்; இழிவுறு குரங்கு ஆயினும் பிடித்தவர்க்கு இரக்க உதவி செயும் ---இழிவான குரங்காக இருந்தாலும்,தன்னைப் பிடித்தவர்களுக்குப் பிச்சை எடுக்கத் துணை புரியும்; வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும் --- துடைப்பம் உயர்ந்த மாளிகையைத் தூய்மை செய்ய உதவும்; மதமது மிகும் பரம லோபரால் மற்றொருவருக்கு உபகாரம் உண்டோ--- செல்வத்தால் செருக்குப் பிடித்து,மிகுந்த கஞ்சத்தனத்தை உடையவர்களால் பிறருக்கு நன்மை உண்டோ? இல்லை.
கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
கனிகள்உப காரம் ஆகும்;
சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளைஎல்லாம்
இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,
மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
வாழ்ந்தாலும் என்உண் டாமே? --- தண்டலையார் சதகம்.
இதன் பொருள் ---
மட்டு உலவும் சடையாரே --- மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள இறைவரே! வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் --- காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும்,என் உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்? ஈயாதார் வாழ்ந்தாலும் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும், என் உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்? கட்டு மாங்கனி வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் ---பழுப்பதற்காகக் கட்டி வைக்கப்படுகின்ற மா, வாழை, பலா ஆகிய இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்; அவ்வணம்--- அது போலவே, சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் --- அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்,பணம்
தேடிப் புதைத்துவைப்பார்;
சீலைநல மாகவும் கட்டார்கள்;நல்அமுது
செய்து உணார்;அறமும்செயார்;
புரவலர்செய் தண்டம் தனக்கும் வலுவாகப்
புகும் திருடருக்கும் ஈவார்;
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்;
புராணிகர்க்கு ஒன்றும் உதவார்;
விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்
வெகுபணம் செலவாகலால்,
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என
மிகுசெட்டி சொன்னகதை போல்,
வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள்
மற்றொருவருக்கு ஈவரோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
திரவியம் காக்கும் ஒருபூதங்கள் போல் பணம் தேடிப் புதைத்து வைப்பார் --- பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைப்பார்.
சீலை நலமாகவும் கட்டார்கள் --- நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார். நல் அமுது செய்து உணார் --- நல்ல உணவு சமைத்துச் சாப்பிடமாட்டார். அறமும் செயார் --- அறவழியிலும் செலவிடார். புரவலர் செய் தண்டம் தனக்கும் வலுவாகப் புகும் திருடருக்கும் ஈவார் --- அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும் கொடுப்பார். புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார் --- புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார். புராணிகர்க்கு ஒன்றும் உதவார் --- புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார். பிள்ளை விரகு அறிந்து சோறு கறி தினும் அளவில் --- குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில், வெகுபணம் செலவு ஆதலால் --- மிக்க பொருள் செலவழிவதனாலே,
கிழவனாம் பிள்ளையே விளையாடு பிள்ளை என --- கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று, மிகு செட்டி சொன்ன கதைபோல் --- மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய கதையைப் போல, வரவு பார்க்கின்றதே அல்லாது உலோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ--- உலோபியர்கள் பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?
திருக்குறளைக் காண்போம்...
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்,
உயற்பாலது அன்றிக் கெடும்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்---பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்,
உயற்பாலது அன்றிக் கெடும்--- பின் உளதாம் பான்மைத்து அன்றி வறிதே கெடும்.
(செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப் பயன் கொள்ளாமையின் 'கெடும்', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
தெய்வநிதி ஆதிகவர் தீமையினால் மனோசவன்கான்
மொய்வளம் தோற்று ஏய்ந்தான் முருகேசா - உய்யச்
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.
இதன் பொருள் ---
முருகேசா --- முருகப் பெருமானே, மனோசவன் --- மனோசவன் என்பவன், தெய்வ நிதி ஆதி கவர் தீமையினால் --- தெய்வத்திற்குரிய பொருள் முதலியவைகளைக் கவர்ந்த தீமையினால், மொய் வளம் தோற்று --- மிகுந்த தன்னுடைய செல்வ நலத்தை இழந்து, கான் ஏய்ந்தான் --- காட்டிற்குச் சென்றான். உய்ய --- பிழைக்குமாறு, செயல்பால செய்யாது --- செய்ய வேண்டிய அறங்களைச் செய்யாது, இவறியான் செல்வம் --- இவறன்மையை மேற்கொண்டு இருப்பவனுடைய செல்வமானது,உயற்பாலது அன்றிக் கெடும் --- உய்யும் தன்மை இல்லாது அழிந்து போகும்.
தெய்வத்திற்கு உரிய பொருள்களைக் கவர்ந்த குற்றத்தால்,மனோசவன் என்பவன் தன்னுடைய செல்வத்தை எல்லாம் இழந்து காட்டிற்குச் செல்ல நேரிட்டது. செய்யவேண்டிய அறச் செயல்களைச் செய்யாது, பொருள் பற்றுக் கொண்டு இருப்பவனுடைய செல்வமானது உய்யும் தன்மை இல்லாமல் அழிந்து போகும் என்பதாம்.
மனோசவன் கதை
முன்னாளில் மனோசவன் என்னும் பெயரை உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவன் சிவபிரான் முதலிய கடவுளரைப் போற்றி வழிபட்டுப் பகைவரை வென்று செங்கோல் முறைப்படி ஆட்சி செய்துகொண்டு இருந்தான். செல்வக் களிப்பினால் அவ் அரசனுக்கு ஆணவம் உண்டாயிற்று. திருக்கோயில்களுக்கு உரிய பொருள் முதலியவைகளைக் கவர்ந்தான். அந்தணர் முதலியோருடைய நிலங்களுக்கும் இறைப்பொருள் வாங்கினான். இத் தீவினையால் ஊண நாட்டு அரசனாகிய கோலபன் என்பவன் மனோசவனை எதிர்த்துப் போரிட்டு நாடு நகரங்களைக் கவர்ந்து கொண்டான். மனோசவன் மனைவி மக்களோடு காட்டை அடைந்து திரிந்தான். ஒருநாள் சந்திரகாந்தன் என்னும் மகன் பசியினால் தளர்ந்து உணவு வேண்டும் என்றான். அரசன் தன்னுடைய மனைவியிடம் தான் முன்னே செய்த கொடுமைகளை எல்லாம் கூறி மூர்ச்சை அடைந்தான். பிறகு பழைய நல்வினையினால் பராசர முனிவருடைய அருளைப் பெற்றுப் பழைய நிலைமையை அடைந்தான்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....
உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்,
துன்னுஅருங் கேளிர் துயர்களையான், - கொன்னே
வழங்கான் பொருள்காத்து இருப்பானேல்,அ ஆ
இழந்தான்என்று எண்ணப் படும். --- நாலடியார்.
இதன் பொருள் ---
உண்ணான் --- இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் --- மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் --- பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்து கொள்ளாமலும், துன் அரும் கேளிர் துயர் களையான் --- நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் --- இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் --- ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக் கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று --- ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, எண்ணப்படும் --- கருதப்படுவான்.
ஒரு செல்வன், தனது செல்வத்தை அறவழிகளிற் செலவு செய்யாதிருந்தால்,அவன் அதனை இழந்தவனாகவே கருதப்படுவான்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.--- கொன்றை வேந்தன்.
இதன் பொருள் ---
வறியவர்க்குக் கொடாத உலோபிகள் தேடிய பொருளைத் தீயோர் அபகரித்துச் செல்வர்.
முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்
இழவு என்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்
அழகொடு கண்ணின் இழவு. --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் --- முழவு போன்று ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகம் முழுதையும் ஆண்ட அரசர்கள், விழவு ஊரில் --- திருவிழா நடந்த ஊரில், கூத்தே போல் --- ஆடிய கூத்தைப் போலப் பொலிவு இன்றி, வீழ்ந்து அவிதல் கண்டும் --- செல்வம் கெட்டொழிவதைப் பார்த்திருந்தும், இழவு என்று --- நாமும் ஒருநாளில் இப் பொருளை இழந்து நிற்போம் என்று நினைத்து, ஒருபொருள் ஈயாதான் செல்வம் --- இரந்தவர்க்கு ஒருபொருளையும் கொடாதவனது செல்வம், அழகொடு கண்ணின் இழவு --- வடிவும் அழகும் உடையான் ஒருவன் கண்ணிழந்து நிற்றலை ஒக்கும்.
No comments:
Post a Comment