045. பெரியாரைத் துணைக்கோடல் --- 05. சூழ்வார் கண்ணாக

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தன்னைச் சூழ்ந்து இருப்போரைத் தனக்குக் கண்ணாகக் கொண்டு ஒருவன் வாழவேண்டி உள்ளதால்தனக்குக் கண் போன்று நின்று நல்வழி காட்டுபவர்களையே ஒருவன் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையை உடையது. எனவேஒருவன் யாரைச் சார்ந்து இருக்கின்றானோ,அவரது தன்மையே அவனிடத்தும் விளங்குமாதலால்சார்ந்து இருக்கவேண்டிய நல்லவர்களை ஒருவன் ஆராய்ந்து கொள்ளவேண்டும்.

 

     அரச பாரத்தைத் தாங்குகின்ற ஒருவன் அமைச்சர் குழுவையே சார்ந்து இருத்தல் வேண்டும். எனவேகண் போன்று நின்று நல்வழிப்படுத்தும் அமைச்சர்களையே தேர்ந்து கொள்ளவேண்டும்.

 

     "நீதிநூல் கற்ற அமைச்சரைக் கண்ணாகக் கோடல்" என்று நச்சினார்க்கினியர் சொல்லி உள்ளது காண்க.

 

திருக்குறளைக் காண்போம்... 

 

சூழ்வார் கண்ஆக ஒழுகலான்மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.          

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

            சூழ்வார் கண் ஆக ஒழுகலான்--- தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான்

 

     மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்--- அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.

 

      (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லன் ஆயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றிஅவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைக் கோடலின் சிறப்புக் கூறப்பட்டது.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

கற்றார் பலரைத் தன் கண்ணாக இல்லாதான்

உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்,

மரையா துணைபயிரும் மாமலை நாட!

சுரையாழ் நரம்பறுத் தற்று.        ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மரையா துணை பயிரும் மாமலை நாட --- பெண் மான்கள் தம் துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே!கற்றார் பலரை தன் கண்ணாக இல்லாதான் --- நீதிநூல்களைக் கற்ற அமைச்சர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன்உற்று --- யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்றுஇடர்பட்ட பொழுதின் கண் --- அத் துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுதுதேற்றம் --- தானே ஒருவகையாகத் துணிதல்சுரை யாழ் நரம்பு அறுத்தற்று --- ஒரு நரம்பினையுடைய சுரை பொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தால் போலும்.

 

      அமைச்சர்களின்றித் தானே ஒரு காரியத்தை அரசன் துணிந்தால்அத்துணிவால் பயனுண்டாதல் இல்லை.

 

 

செற்றமிகும் கருவிகளின் திறநூலும்,மனுவேந்தன்

சொற்றபெருந் தொல்நூலும் துளக்கம்அற விளக்கம்உறக்

கற்று அறிந்தோர் ஆதலினால் காவலற்குக் கண்போன்ற

முற்று உணர்ந்த அமைச்சரினும் முதலமைச்சராய் நிகழ்வார்.   ---  தி.வி. புராணம்.

 

இதன் பொருள் ---

 

     செற்றம் மிகும் கருவிகளின் திற நூலும் --- சினமிக்க கருவி வகைகட்குரிய நூல்களையும்மனுவேந்தன் சொற்ற பெருந்தொல் நூலும் --- மனுவென்னும் மன்னனால் கூறப்பட்ட பெருமையுந் தொன்மையும் உடைய நூலையும்துளக்கம் அற விளக்கம் உற --- ஐயந்திரிபு நீங்க விளக்கம் பொருந்தகற்று அறிந்தோர் ஆதலினால் --- கற்று உணர்ந்தவர் ஆகலின்,

காவலற்குக் கண்போன்ற முற்று உணர்ந்த அமைச்சரினும் --- மன்னனுக்குக் கண்போன்ற முற்று முணர்ந்த அமைச்சர்களினும்முதல் அமைச்சராய் நிகழ்வார் --- முதல் மந்திரியாக ஒழுகுவாராயினர்.

 

      கருவி - படைக்கலமும் தானையும். படைக்கலப் பயிற்சிக்குரிய நூல்களும். யானை குதிரை ஊர்தற்குரிய நூல்களும்பிறவு மென்க. தொன்னூல் - நீதிநூல். அமைச்சர் கண்ணாக அரசபாரம் நடத்தலின் 'காவலற்குக் கண்போன்ற அமைச்சர்" என்றார்;

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...