திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை
சிற்றினம் சேராமையாவது, சிறியார் இனத்தைப் பொருந்தாமை.
சிறிய இனமாவது, நல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும், பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும், உள்ளே பகையும், உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும், கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார்.
அறிவினை வேறுபடுத்தி, தீநெறியில் செலுத்தி, இம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால், பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால், பெரியாரைத் துணைக் கொள்வதோடு,சிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "பெருமை உடையோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சுவர்; சிறுமை உடையோர் அச் சிற்றினத்தைத் தமது சுற்றமாகச் சூழ்ந்து உறவு கொள்ளுவர்" என்கின்றார் நாயனார்.
தமது அறிவும், சிற்றினத்தார் அறிவும் வேறுபடும் விதத்தையும், அதனால் வரக் கூடிய தீங்கையும் எண்ணி, அறிவுடையார் சிற்றினத்தாரோடு கூட அஞ்சுவர். அற்பர்கள் அறிவானது ஒன்றுபட்டு நிற்பதால், சிற்றினத்தார் சுற்றத்தார் போல ஒழுகுவர்.
திருக்குறளைக் காண்போம்...
சிற்றினம் அஞ்சும் பெருமை, சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பெருமை சிற்றினம் அஞ்சும்--- பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும்,
சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும்--- ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். '
(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....
துன்னு சகுனி, கன்னன் சொற்கேட்டு அரவுயர்த்தோன்
என்னபயன் பெற்றான்?இரங்கேசா! --- மன்னிய
சிற்றினம் அஞ்சும் பெருமை, சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
இதன் பொருள்---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! அரவு உயர்த்தோன் --- பாம்புக் கொடியோனாகிய துரியோதனன், துன்னு சகுனி கன்னன் --- தனக்கு நட்பினராகப் பொருந்திய சகுனி மாமன்,கர்ணன் முதலியோருடைய, சொ ல்கேட்டு --- சொல்லைக் கேட்டு, என்ன பயன் பெற்றான் --- என்ன பலனை அடைந்தான்? (ஆகையால், இது) பெருமை --- பெரியோர் தன்மை, சிறு இனம் அஞ்சும் --- அற்பர் உறவை அஞ்சி நீங்கும், சிறுமை --- சிறியோர் இயல்பு, (அற்பர் உறவு உண்டானபோதே அதைச்) சுற்றம் ஆக --- உண்மை உறவாக, சூழ்ந்து விடும் --- எண்ணித் துணியும் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- மூடரை மூடர் கொண்டாடிச் சேர்வார்கள். கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்.
விளக்கவுரை--- பீஷ்மர், துரோணர், கிருபர், அசுவத்தாமன், விதுரன் முதலிய பெரியோரினத்தைச் சேர்ந்து அவர்கள் சொல்லைக் கேளாமல், சகுனி, கர்ணன், துர்ச்சாதனன் முதலிய சிறியோர் சொல்லைக் கேட்டுச் சீரழிந்தான் துரியோதனன் என்பது பாரதத்தில் யார்க்கும் தெரிந்தது. இப்படிக் "கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே" என்றபடி, மதிகெட்டுச் சிற்றினம் அஞ்சாது சேர்ந்து, அநியாயம் செய்து வந்த துரியோதனற்கு, பின்னே வந்த கேடு பெருங்கேடாய் முடிந்தது. உறவினரும் சுற்றத்தாரும் மாண்டதன்றி அவனும் மாண்டு மடிந்து,என்றும் அழியாப் பழிக்கு ஆளானான். ஆகையால், "சிறுமைதான் சுற்றமாய்ச் சூழ்ந்துவிடும்" என்றார். "என்ன பயன் பெற்றான்" என்னும் உடன்பாட்டு வினா, ஒரு பயனும் பெறவில்லை என்கிற எதிர்மறை விடை தருவது காண்க.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...
இழுக்கல் இயல்பிற்று இளமை,பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை,- யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமை,இம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார். --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
இளமை இழுக்கல் இயல்பிற்று --- இளமைப் பருவமானது வழுவுதலைஇயல்பாக உடையது; பேதைமை பழித்தவை சொல்லுதல் வற்று ஆகும் --- அறியாமைஎன்பது, அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைச்சொல்லுதலில்வல்லது ஆகும்; சிறுமை யாண்டும் செறுவொடு நிற்கும் --- ஈனத் தன்மை என்பது எக்காலத்தும் சினத்தோடு நிற்பதாகும்; (ஆதலால்), இ மூன்றும் குறுகார் அறிவுடையார் --- இம் மூவகையினையும், மேல் விளைவை அறியும் அறிவினை உடையவர் நெருங்கார்.
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். --- மூதுரை.
இதன் பொருள் ---
கயத்தின் --- குளத்தில் உள்ள, நல் தாமரை --- நல்ல தாமரைப் பூவை, நல் அன்னம் சேர்ந்தாற்போல் --- நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர் --- கல்வி உடையோரைக் கல்வி உடையோரே விரும்பிச் (சேர்வர்);
முதுகாட்டில் --- புறங்காட்டில் உள்ள, பிணம் --- பிணத்தை, காக்கை உகக்கும் --- காக்கை விரும்பும்; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை --- கல்வியில்லாத மூடரை, மூர்க்கர் --- மூடரே, முகப்பர் --- விரும்புவர்.
"ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்சநெஞ்சப்
பேயரொடு கூடின் பிழைகாண் பராபரமே". --- தாயுமானவர்.
சுக்கிரீவன் சொன்னவற்றைக் கேட்ட இராமபிரான், அளவில்லாத கேள்வியில் மிகுந்த சாம்பவானைப் பார்த்து, "வீடணனை ஏற்றுக் கொள்வதில் உனது கருத்து யாது" என்று கேட்டான். அதற்கு சாம்பவான் சொன்ன மறுமொழியைக் கம்பர் வாயிலாக அறியலாம்...
'வெற்றியும் தருகுவர், வினையம் வேண்டுவர்,
முற்றுவர், உறு குறை முடிப்பர், முன்பினால்-
உற்றுறு நெடும் பகை உடையர். அல்லதூஉம்,
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ?
--- கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப் படலம்.
இதன் பொருள் ---
வெற்றியும் தருகுவர் --- வீடணனைப் போன்றவர்களை நம்முடன்சேர்த்துக் கொண்டால் வெற்றி தேடித் தரலாம்; வினையம் வேண்டுவர் --- நமக்குத் தேவையான யோசனைகளையும் கூறுவர்; முற்றுவர் --- நமது காரியங்களை முடித்தும் தருவர்; உறுகுறைமுடிப்பர் --- வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதை மாற்றிநலம் புரிவர்; முன்பினால் --- (ஆனால்) முன்பிருந்தே; உற்றுறு நெடும் பகை உடையர் --- நம்முடன் அரக்கர்கள் பெரிய பகைஉடையவராவர்; அல்லதூஉம் --- அதுவும் அல்லாமல்; சிற்றினத்தவரொடும் --- இவர்களை ஒத்த சிற்றினத்தவருடன்; செறிதல் சீரிதோ? --- சேர்தல் சிறப்பு உடையதாகுமோ?
இராவணன் மகனாகிய இந்திரசித்தனுக்கு, அவனுடைய சிற்றப்பன் ஆன வீடணன், "ஐயனே! பாவம் கொடுமையை உடையது. அறமே சிறந்தது. நான் கூறுவதைக் கேட்பாயாக" என்று பின்வரும் அறவுரைகளைக் கூறுகின்றான்...
‘அறம் துணை ஆவது அல்லால்,
அரு நரகு அமைய நல்கும்
மறம் துணை ஆக, மாயாப்
பழியொடும் வாழ மாட்டேன்;
துறந்திலேன் மெய்ம்மை, எய்தும்
பொய்ம்மையே துறப்பதுஅல்லால்;
பிறந்திலேன் இலங்கை வேந்தன்
பின்னவன், பிழைத்த போதே. --- கம்பராமாயணம், நிகும்பலை யாகப் படலம்.
இதன் பொருள் ---
அறம் துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும் --- அறமே துணையாவது (அவ் அறத்தை) அன்றி(க் கடப்பதற்கு) அரிய நரகத்தினைப் பொருந்தும்படி தருகின்ற, மறம் துணையாக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன் --- பாவத்தினைத் துணையாகக் கொண்டு நீங்காத பழியோடும் நான் உயிர் வாழ மாட்டேன்; எய்தும் பொய்மையே துறப்பது அல்லால், மெய்மை துறந்திலேன் --- (இடையில்) வந்து அடையும் பொய்ம்மையினை விட்டு ஒழிப்பதல்லது, மெய்மையினை விட்டு நீங்கினேன் அல்லேன்; இலங்கை வேந்தன் பிழைத்த போதே அவன் பின் பிறந்திலேன் --- இலங்கை வேந்தனாகிய இராவணன்(பிறனில் விழைதலாகிய) பிழையினைச் செய்த பொழுதே அவன் பின் பிறவாதவன் ஆயினேன்.
‘உண்டிலென் நறவம்; பொய்ம்மை
உரைத்திலென்; வலியால்ஒன்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம்
குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே?
நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத்
துறந்தது பிழையிற்று ஆமே? --- கம்பராமாயணம், நிகும்பலை யாகப் படலம்.
இதன் பொருள் ---
நறவம் உண்டிலென்; பொய்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும் கொண்டிலென் --- (நான்) மதுவினை உண்டிலேன்; பொய்ம்மொழி உரைத்திலேன்; (பிறர்க்குரிய பொருள்களுள்) ஒன்றையும் வலிதில் கவர்ந்து கொண்டிலேன்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம் கண்டிலர் என்பால் --- (எவர்க்கும்)
மாயத்தினாற் செய்யும் வஞ்சனைச் செயலை (மனத்தாற்) குறித்திலேன். என்பால் யாரும் குற்றத்தினைக் காணவில்லை. நீயிரும் காண்டிர்அன்றே? உண்டே? --- நீங்களும் என்னை நன்கு அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? என்பால் ஏதேனும் குற்றம் உளதோ?; (இல்லை) பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே? --- கற்புடைய பெண்டிரிடத்து முறை தவறி நடந்தவரை (நான்) விட்டு நீங்கியது தவறுடைய செயலாகுமோ?
‘வெம்மையின், தருமம் நோக்கா,
வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண்க;
துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி மேலோர்
ஒழுக்கினோடுஅறத்தைத் தேறும்
எம்மையே பழியும் பூண்க;
நரகமும் எமக்கே ஆக. --- கம்பராமாயணம், நிகும்பலை யாகப் படலம்.
இதன் பொருள் ---
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் ---கொடுமை காரணமாக அறத்தை நோக்காது (மனம்) விரும்பியதனையே விரும்பிக் கெட்டு ஒழியும்; உம்மையே புகழும் பூண்க துறக்கமும் உமக்கே ஆக --- உங்களையே புகழும் (அணியாகப் பொருந்துக. துறக்கவுலக இன்பமும் உங்களுக்கே உரியதாகுக; செம்மையில்பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும் ---செவ்விதாகிய பண்பினைப் பொருந்தி மேன்மையுடையோர் கொண்டொழுகிய ஒழுக்கத்தோடு அறத்தினைத் தெளிந்து ஒழுகும்; எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக ---எங்களையே பழி வந்து பொருந்துக. நரகத் துன்பமும் எங்களுக்கே அமைவதாக;
”அறத்தினைப் பாவம் வெல்லாது”
என்னும் அது அறிந்து, “ஞானத்
திறத்தினும் உறும்”என்று எண்ணி,
தேவர்க்கும் தேவைச்சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக;
பழியொடும் புணர்க; போகச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க’
என்றனன், சீற்றம் தீர்ந்தான். --- கம்பராமாயணம், நிகும்பலை யாகப் படலம்.
இதன் பொருள் ---
அறத்தினைப் பாவம் வெல்லாதுஎன்னும் அது அறிந்து --- அறத்தினைப் பாவம் வெல்லாதுஎன்று ஆன்றோர் கூறும்அவ்வுண்மையினை அறிந்து; ஞானத் திறத்தினும் உறும் என்றுஎண்ணி தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன் --- (அவ் அறத்தின் மூர்த்தியாகிய இராமபிரானை அடைதலால்) ஞானத் திறத்தாலும் மிக்க பயன் பொருந்தும் என்று கருதித் தேவர்க்கும் தேவனாகிய இராமபிரானைச் சரண் அடைந்தேன்; புறத்தினில் புகழே ஆக பழியொடும் புணர்க ---(எனக்குப்) புறத்தே புகழே உண்டாகுக. அன்றிப் பழியொடு பொருந்துக; போகச் சிறப்பினிப் பெறுக! தீர்க என்றனன் சீற்றம் தீர்ந்தான்--- (பேதைமை தீர்ந்த) ஞானச் சிறப்பினை (யான்) பெற்றாலும், பெறாவிட்டாலும்,(அது பற்றிக் கவலை இல்லை) என்று கூறினான் சினமாகிய குற்றத்தினை விட்டு ஒழித்தவன் ஆகிய வீடணன்.
No comments:
Post a Comment