045. பெரியாரைத் துணைக்கோடல் --- 02. உற்றநோய் நீக்கி

 

திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தெய்வத்தாலாவதுமனிதராலாவது தனக்கு வந்த துன்பங்களை நீக்கும் விதத்தை அறிந்து நீக்கிபின்னர் அது போன்ற துன்பங்கள் வாராதபடிமுன்னமே அறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரைஅவர் மகிழத் தக்கனவற்றைச் செய்துஅவரைத் துணையாக்கிக் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     தெய்வத்தால் வரும் துன்பங்கள். தெய்வம் என்பது ஊழைக் குறிக்கும். எனவே,ஊழால் வரும் துன்பங்களான மழையில்லாமையாலும்அதிக மழையாலும்காற்றுதீபிணி முதலியவற்றாலும் வருவன. இத் துன்பங்கள் தம்மோரையும்கடவுளரையும் நோக்கிச் செய்யும் சாந்தி முதலியவைகளால் நீக்கப்படும்.

 

     மக்களால் வரும் துன்பங்கள் ஆவனபகைவர்கள்வர்சுற்றத்தார்தொழில் புரிவோர் ஆகிய இவர்களால் வருவன. அத் துன்பங்கள் சாமபேததானதண்டம் என்னும் நால்வகை உபாயங்களுள்தக்க உபாயத்தால் நீக்கப்படும்.

 

     துன்பங்கள் வராமல் முற்காத்தலாவதுதெய்வத்தால் வரும் துன்பங்களை தீ நிமித்தம் அல்லது அறிகுறிகள் ஆகியவைகளால் அறிந்துசாந்திகளால் காத்தல். மனிதரால் வரும் துன்பங்களை அவரது குணம்இங்கிதம்ஒழுக்கம்செயல் ஆகியவற்றால் அறிந்துசாமம் முதலாகிய நால்வகைஉபாயங்களுள் ஒன்றால் காத்தல் ஆகும்.

 

     பேணுதலாவதுஅவர் மகிழும்படி நடந்து கொள்ளுதல்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

உற்றநோய் நீக்கிஉறாஅமை முன்காக்கும்

பெற்றியார்பேணிக் கொளல்.               

 

இதற்குப் பரிமேரழகர் உரை ---

 

     உற்ற நோய் நீக்கி--- தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி

 

     உறாமை முற்காக்கும் பெற்றியார்--- பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரை

 

     பேணிக் கொளல்--- அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க.

 

      (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும்காற்று தீபிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும்.

 

      மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர்கள்வர்கற்றறிந்தார்வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும்மக்களான் வருவனவற்றை அவர் குணம்இங்கிதம்ஆகாரம்செயல் என்பனவற்றுள் அறிந்துஅவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம்ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன.இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும்,அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம்,கொள்ளுமாறும் கூறப்பட்டன.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

பகைசிறிதும் இன்றிப் பறவைகளும் அஞ்ச

இறைவர் துணைவலியான் எய்தும் --- முறைமையால்

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.   

 

இதன் பொருள் ---

 

     வலியான் --- கரிக்குருவி. 

 

     இராசராச பாண்டியனுக்குப் பின்,  அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான். அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன்சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக்குருவியாக பிறந்தான்.

 

     அக் கரிக்குருவியை காகம் உள்ளிட்ட பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக்குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக்குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை. எனவேகரிக்குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக்குருவி அமர்ந்திருந்தது. அப்போது சிவனடியார் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்தார்.

 

     சிவனடியார்தன்னோடு இருந்தவரை நோக்கி தலம்தீர்த்தம்மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார்.” என்று மதுரையின் சிறப்பையும்சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.

சிவனடியார் கூறியதைக் கேட்ட கரிகுருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

 

     அக் கரிக்குருவி  மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது. பின்னர் அங்கயற்கண் அம்மையையும்சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறைவழிபாடு செய்தது. கரிக்குருவியின் செயலினைக் கண்டதும்அங்கையற்கண் அம்மைஇறைவனாரிடம்  ஐயனேஇக் கரிக்குருவி வழிபடும் காரணம் என்ன?” என்று கேட்டார். இறைவனார் கரிக்குருவியின் முற்பிறவியும்இப்பிறவியில் இறைவனைக் கேட்டறிந்த விதத்தையும் எடுத்துரைத்தார்.

 

     பின்னர் கரிக்குருவிக்கு ஆயுள் பலத்தையும்பிறவித் துன்பத்தையும் போக்கும் மிருத்தியுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது.பின்னர் இறைவனாரிடம் ஐயனேஎனக்கு ஒரு குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன.” என்றது.

 

     அதனைக் கேட்ட சோமசுந்தரப் பெருமான்திருவுள்ளம் இரங்கி,அப் பறவைகளுக்கு எல்லாம் நீ வலியன் ஆவாய்.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.உடனே கரிக்குருவி வலியன் என்பது அடியேன் மரபில் உள்ள பறவைகளுக்கு எல்லாம் விளங்க வேண்டும். தேவரீர் அடியேனுக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி உய்தல் வேண்டும்.” என்று வேண்டியது.

 

     சோமசுந்தரப் பெருமான்,அவ்வாறே ஆகுகஎன்று கூறியருளினார். உடனே அக்குருவியும்அதன் இனமும் சோமசுந்தரர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலியனவாகின. அதனால் "வலியன்" என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.

 

     தனக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கிஅத் துன்பம் பின்னும் சாராமல்படிக்குசிவனடியார் சொன்னதைக் கடைப்பிடித்துகரிக்குருவியானதுதனக்கு வந்த துன்பத்தை நீக்கி,பின்னும் பிறவித்துன்பம் சாராமல் இறைவன் திருவடியை அடைந்தது.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

நாரதனால் சம்வரத நல்தவன் சேர்ந்தே மருத்து

மூரியின் மேம்பட்டான்,முருகேசா! --- பாரதனில்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.              

 

இதன் பொருள் ---

 

      முருகேசா --- முருகப் பெருமானே!  மருத்து --- மருத்து என்னும் அரசன்நாரதனால் --- நாரத முனிவர் சொற்படிசம்வரத நல்தவன் சேர்ந்து --- சம்வரதன் என்னும் பெயரை உடைய நல்ல தவமுனிவரை அடைந்துமூரியின் மேம்பட்டான் --- பெருமையில் சிறந்து விளங்கினான். பார் அதனில் --- இவ் உலகத்தில்உற்ற நோய் நீக்கி --- வந்தடைந்த துன்பத்தைப் போக்கிஉறாமை முன் காக்கும் --- துன்பம் வாராதபடி முன்னதாகவே காக்கவல்லபெற்றியார்ப் பேணிக் கொளல் --- தன்மையுடையவர்களைப் போற்றி நட்புக் கொள்ளுதல் வேண்டும்.

 

      மருத்து என்னும் அரசன் நாரதமுனிவருடைய உரையினால் சம்வரதன் என்னும் முனிவரை அடைந்து பெருமையில் சிறந்து விளங்கினான்.  உண்டான துன்பத்தைப் போக்கிமேலும் துன்பம் வராமல் காக்கவல்ல தன்மையுடையவர்களையே நட்புக் கொள்ளுதல் வேண்டும்.

 

                                    

மருத்து என்னும் அரசன் கதை

 

      முன்னாளில் மருத்து என்னும் பெயருடைய மன்னவன் ஒருவன் இருந்தான். அவனுடைய தந்தை ஆங்கிரசர் என்னும் முனிவரைக் கொண்டு வேள்வியொன்று செய்துகொண்டு இருந்தார். மருத்து தான் ஒரு வேள்வி செய்ய எண்ணினான்.  அவ் வேள்வியை நடத்துமாறு வியாழபகவானை வேண்டிக் கொண்டான். தேவேந்திரனுடைய உடன்பாடு இல்லாமையால் அவர், "நான் தேவகுருவாக இருக்கிறபடியால் என்னால் நடத்துதல் இயலாது" என்று கூறினார். அரசன் யாது செய்வதென்று கவலையுற்று இருந்தான். இச்சமயத்தில் நாரதர் அரசனிடம் வந்தார். அரசனுடைய கருத்தை அறிந்தார். அவர் வியாழபகவானோடு பகை கொண்டிருந்தாராதலின்அரசனை நோக்கி, "சம்வரத முனிவர் என்பவர் உன்மத்தர் போல் நடித்துக்கொண்டு ஆடையற்றவராய்க் காசியிலே இருக்கின்றார்.  அவரைக் கொண்டு வேள்வி நடத்துக" என்று கூறியதோடு அவரைப் பார்க்கத் தக்க வழியையும் கூறிவிட்டுச் சென்றார்.  அரசன் சம்வரத முனிவரை அடுத்து தன்னுடைய எண்ணத்தைக் கூறினான். அவர் உள்ளம் இரங்கினார். அரசனைப் பார்த்து, "வியாழ பகவானுக்கு என்பால் உள்ள பகைமையால் இந்திரன் முதலியோர் உன்னைக் கலைப்பர். அதனால் மாறுபடாது இருப்பையாகில் மிகுந்த சிறப்படைவாய்" என்று வற்புறுத்திக் கூறினார். அரசன் அம் முனிவரை அழைத்துக் கொண்டுபோய் முஞ்சவந்த மலையை அடைந்துசிவபிரானைப் பணிந்துஅக் கடவுளுடைய அருளால் அளவற்ற பொருட் குவியல்களை ஒட்டகம் யானை முதலியவைகளில் ஏற்றி வந்து,மேருமலையைப் போலக் குவித்துக் கொண்டுவேள்வி செய்யத் தொடங்கினான். வேள்வி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இதனை அறிந்த வியாழபகவான் கவலை கொண்டார். இந்திரன் வியாழபகவானுடைய கவலையை அறிந்தான். வியாழ பகவானையே வேள்வியாசிரியராகக் கொண்டு வேள்வியைச் செய்யுமாறு தீக் கடவுளைக் கொண்டு அரசனுக்குத் தெரியப்படுத்தினான். அரசன் இதற்கு உடன்படவில்லை.  இந்திரன் பகைகொண்டு வச்சிரப் படையை எறிந்தான். அரசன் சம்வரத முனிவர்பால் அடைக்கலம் புகுந்தான். அவர் ஒரு மறையினால் (மந்திரத்தால்) வச்சிரப் படையைத் தடுத்ததும் அல்லாமல்அரசன் விரும்பியவாறே வேறொரு மந்திரத்தினால் தேவர் பகையையும் போக்கினார். தேவர்கள் அவி அருந்துமாறு வேள்வியை முடித்தார். அரசன் வேண்டிய மட்டும் அந்தணர் முதலியோர்க்குப் பலவகையான தானங்களைச் செய்தான்.  எவ்வளவோ தானங்களைச் செய்தும் செல்வம் குறைவுபடாமல் மிஞ்சிக் கிடந்தது. அம்முனிவரால் எல்லாப் பெருமைகளையும் அடைந்து இன்புற்றான்.

                        

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

செயல்வேண்டா நல்லன செய்விக்கும்தீய

செயல்வேண்டி நிற்பின் விலக்கும்இகல்வேந்தன்

தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்

முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்.--- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மூத்தார் வாய்ச்சொல் --- அறிவால் மூத்த அமைச்சர்கள் கூறும் சொற்கள்செயல் வேண்டா நல்லன செய்விக்கும் --- செய்யமுடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்தீய செயல் வேண்டி நிற்பின் --- அரசன் தீயசெயல்களைச் செய்ய முனைந்து நிற்பின்விலக்கும் --- இடைநின்று தடுத்தலைச் செய்யும்,இகல் வேந்தன் தன்னை --- மாறுபாடுடைய அரசனைநலிந்து --- வலியுறுத்திதனக்கு உறுதி கூறலால் --- அவனுக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால்.முன் இன்னா --- முன்னே துன்பம் தருவதாக இருக்கும் (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்.)

 

      அறிவில் சிறந்த அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும்,தீயன விலக்கும் என்பதாம்.

 

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்,

பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்

காய்கலா ஆகும் நிலா.        ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பாய் இருள் நீக்கும் மதியம்போல் --- பரவிய இருளைப் போக்கும் சந்திரனைப் போல,பல் மீனும் நிலா காய்கலா ஆகும் --- பல விண்மீன்கள் ஒன்று கூடினும் நிலவை எறிக்கமாட்டா. (அதுபோல)அறிவிலார் ஆயிரவரானும் தொக்கக்கால் --- அறிவு இல்லாதவர்கள் ஆயிரம்பேர் திரண்டனராயினும்மா இரு ஞாலத்து --- பெருமையை உடைய பெரிய இவ்வுலகின் கண்மாண்பு ஒருவன் போல்கலார் --- அறிவினால் மாட்சிமைப்பட்ட ஒருவனைப் போல் விளங்கார்.

 

      அறிவில்லார் பலர் திரண்டாலும் அறிவுடையான் ஒருவனை ஒவ்வார்.

 


கங்கைநதி பாவம்சசிதாபம்கற்பகம்தான்

மங்கல் உறும்வறுமை மாற்றுமே, - துங்கமிகும்

இக்குணம்ஓர் மூன்றும் பெரியோ ரிடம்சேரில்

அக்கணமே போமென்று அறி.          ---  நீதி வெண்பா.

 

இதன் பொருள் ---

 

     கங்கையாறு பாவத்தை நீக்கும்திங்கள் வெப்பத்தைத் தணிக்கும்கற்பகமரம் எல்லா நன்மைகளையும் மங்குமாறு செய்கின்ற வறுமையையும் நீக்கும். பாவம் தாபம் வறுமை ஆகிய இந்த மூன்று தீய குணங்களும் உயர்வு மிக்க பெரியோரிடம் சேர்ந்தால்அந்தக் கணத்திலேயே அழிந்து போகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...