திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை
சிற்றினம் சேராமையாவது, சிறியார் இனத்தைப் பொருந்தாமை.
சிறிய இனமாவது, நல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும், பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும், உள்ளே பகையும், உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும், கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார்.
அறிவினை வேறுபடுத்தி, தீநெறியில் செலுத்தி, இம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால், பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால், பெரியாரைத் துணைக் கொள்வதோடு, சிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "ஒருவன் மன நலத்தைத் தனது முன்வினைப் பயனால் தாமே நன்றாக உடையவனாக இருந்தாலும், குணங்கள் பலவற்றாலும் நிறைந்த அவர்க்கு, இனத்தின் நன்மையானது, அவர் கொண்டுள்ள மனநலத்திற்குக் காப்பாக அமையும்" என்கின்றார் நாயனார்.
முன்னை நல்வினைப் பயனால், இயற்கையாகவே அமைந்த நல்லறிவும், நல்லினத்தாரோடு இடைவிடாது பழகி வருவதால் மேலும் மேலும் வளர்ந்து, மன நலம் வலிமை உடையதாக அமையும்.
திருக்குறளைக் காண்போம்...
மனநலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
மனநலம் நன்கு உடையராயினும்--– மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்,
சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து– அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலியாதலை யுடைத்து
('நான்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும் மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்;
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய். --- நாலடியார்.
இதன் பொருள் ---
புணரின் --- நட்புச் செய்தால், உணர உணரும் உணர்வு உடையாரைப் புணரின் இன்பம் புணரும் --- நாம் ஒன்றை உள்ளத்தால் உணர அதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங் கூர் உணர்வு உடையாரை நட்புச் செய்யின் இன்பம் பொருந்தும்; தெரியத் தெரியும் தெரிவு இல்லாதாரைப் பிரியப் பிரியும் நோய் --- நம் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றை அறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமல் பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமல் பிரிந்திருக்கும்.
பாரினில் பிறந்தபோது எவரும் பண்பினார்
பூரியர் எனப்பெயர் பூண்டது இல்லையால்;
சீரியர் என்னலுந் தீயர் என்னலுஞ்
சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே.--- நீதிநூல்
இதன் பொருள் ---
உலகில் பிறந்த யார்க்கும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பெயர் ஏற்பட்டதில்லை. நல்லவர் தீயவர் என்னும் பெயர் அவரவர் சேர்ந்த இனத்தினால் உண்டாயது.
கயவரைச் சேர்ந்தவன் கலந்த போதவர்
செயலினை எண்ணுவன்,தினம் செலச்செல
மயல்மிகுந்து, அவர்செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன்,
இயவரைச் சேர்தல்போல் இல்லைத் தீமையே. --- நீதிநூல்.
இதன் பொருள் --
கீழ்மக்களைச் சேர்ந்தவன் சேர்ந்தபொழுது அவர் செயலை இழிபாக நினைப்பான். நாளேற நாளேற மயங்கி,அவர் செயலை மகிழ்ந்து கைக்கொள்வன். ஆதலால், கீழ்மக்களைச் சேர்தல்போல் பெருந்தீமை வேறொன்றும் இல்லை.
No comments:
Post a Comment