பொது --- 1016. முருகு உலாவிய

                                                                 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

முருகு உலாவிய (பொது)

 

முருகா! 

திருவடி பெற அருள்வாய்.

 

 

தனன தானன தனதன தனதன

     தனன தானன தனதன தனதன

     தனன தானன தனதன தனதன ...... தனதான

 

 

முருகு லாவிய குழலினு நிழலினு

     மருவ மாகிய இடையினு நடையினு

     முளரி போலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர்

 

முனிவி லாநகை வலையினு நிலையினும்

     இறுக வாரிடு மலையெனு முலையினு

     முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி

 

நரகி லேவிழு மவலனை யசடனை

     வழிப டாதவொர் திருடனை மருடனை

     நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை

 

நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ

     லதனில் மூழ்கிய மறவனை யிறவனை

     நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே

 

வரிய ராவினின் முடிமிசை நடமிடு

     பரத மாயவ னெழுபுவி யளவிடு

     வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக

 

வகிரு மாலரி திகிரிய னலையெறி

     தமர வாரிதி முறையிட நிசிசரன்

     மகுட மானவை யொருபதும் விழவொரு ......கணையேவுங்

 

கரிய மேனியன் மருதொடு பொருதவன்

     இனிய பாவல னுரையினி லொழுகிய

     கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன்

 

கருணை நாரண னரபதி சுரபதி

     மருக கானக மதனிடை யுறைதரு

     கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

முருகு உலாவிய குழலினும் நிழலினும்,

     அருவம் ஆகிய இடையினும் நடையினும்,

     முளரி போலும் நல் விழியினும் மொழியினும்,...... மடமாதர்

 

முனிவு இலாநகை வலையினும் நிலையினும்,

     இறுக வார்இடு மலை எனும் முலையினும்,

     முடிவு இலாததுஒர் கொடுவிடம் அடு வித ...... மயலாகி,

 

நரகிலே விழும் அவலனை அசடனை,

     வழிபடாத ஒர் திருடனை மருடனை,

     நலம் இலா அக கபடனை விகடனை,...... வினையேனை,

 

நடுவு இலாதன படிறு கொள் இடறுசொல்

     அதனில் மூழ்கிய மறவனை,இறவனை,

     நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி ...அருள்வாயே.

 

வரி அராவினின் முடிமிசை நடமிடு

     பரத மாயவன்ழு புவி அளவிடு

     வரதன்,மாதவன்ரணியன் உடல்இரு ...... பிளவாக,

 

வகிரும் மால்,அரி திகிரியன்லை எறி

     தமர வாரிதி முறையிட,நிசிசரன்

     மகுடம் ஆனவை ஒருபதும் விழ,ஒரு ......கணை ஏவும்

 

கரிய மேனியன்,மருதொடு பொருதவன்,

     இனிய பாவலன் உரையினில் ஒழுகிய

     கடவுள்,வேய்இசை கொடுநிரை பரவிடும் ......அபிராமன்,

 

கருணை நாரணன்ரபதி சுரபதி

     மருக! கானகம் அதன் இடை உறை தரு

     கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

            வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன்--- உடம்பில் கோடுகளைக் கொண்ட (காளிங்கன் என்னும்) பாம்பின் முடி மீது திருநடனம் செய்யும் பரதத்தில் வல்ல மாயவன்

 

            எழு புவி அளவிடு வரதன் மாதவன்--- ஏழு உலகங்களையும் திருவடியால் அளந்தவனும்,உயிர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பவனும் ஆன மாதவன்

 

            இரணியன் உடல் இரு பிளவாக வகிரும் மால் --- இரணியனுடைய உடல் இரண்டு பிளவாகும்படி நகத்தால் கீறிய திருமால்

 

           அரி --- உயிர்களின் பாவத்தை அரிப்பவன்,

 

           சக்கரம் ஏந்தியவன் --- ஆழிப்படையைத் தனது திருக்கையில் ஏந்தியவன்,

 

            அலை எறி தமர வாரிதி முறை இட--- அலைகள் முழங்குகின்ற கடல் முறையிடவும்,

 

            நிசிசரன் மகுடம் ஆனவை ஒரு பதும் விழ--- அரக்கன் ஆகிய இராவணனுடைய மகுடம் அணிந்த பத்துத் தலைகளும் அறுந்து விழவும்,

 

           ஒரு கணை ஏவும் கரிய மேனியன்--- ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கரியமேனியன் ஆகிய இராமச்சந்திரமூர்த்தி,

 

            மருதொடு பொருதவன்--- மருத மரங்களைச் சாடியவன்,

 

           இனிய பாவலன் உரையினில் ஒழுகிய கடவுள்--- இனிய பாடல்களில் வல்லவர் ஆகிய திருமழிசை ஆழ்வாரின் சொல்லுக்கு இணங்கி அதன் படி நடந்த கடவுள்,

 

            வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன்--- புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக் கூட்டத்தைப் பாதுகாத்த பேரழகன்,

 

            கருணை நாரணன்--- கருணை மிக்க நாராயணன்,

 

           நரபதி--- நரன் ஆகிய அருச்சுனனுக்குத் தலைவன்,

 

           சுரபதி மருக--- தேவர்களின் தலைவன் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

           கானகம் அதன் இடை உறைதரு கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய பெருமாளே--- காட்டில் வாழ்ந்திருந்த கருநிறங் கொண்ட வேடர்களின் சிறுமியாகிய வள்ளிநாயகிக்காக மனம் உருகிய பெருமையில் மிக்கவரே!

 

            முருகு உலாவிய குழலினும்--- நறுமணம் நிறைந்த கூந்தலிலும்,

 

           நிழலினும்--- அந்தக் கூந்தலின் அழகிலும்,

 

            அருவமாகிய இடையினு(ம்)--- கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இடையிலும்,

 

           நடையினு(ம்)--- நடக்கின்ற நடையின் அழகிலும், 

 

            முளரி போலு(ம்) நல் விழியினு(ம்)--- தாமரை போன்ற கண்களிலும்,

 

           மொழியினு(ம்)--- பேச்சிலும்

 

            மடமாதர் முனிவிலா நகை வலையினு(ம்) --- இளம்பெண்கள் கோபத்தைக் காட்டாமல், சிரித்துப் பேசி வீசுகின்ற வலையிலும்,

 

           நிலையினு(ம்)--- அவர்கள் நின்கின்ற நிலையிலும்,

 

            இறுக வார் இடு மலை எனும் முலையினு(ம்)--- இறுக்கமாக கச்சு அணிந்த மலை போன்ற முலைகளிலும்

 

            முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி --- முடிவே இல்லாதஒப்பற்ற கொடிய விடம் போன்ற தன்மையதான மோகத்தைக் கொண்டவனாகி

 

            நரகிலே விழும் அவலனை--- நரகத்தில் விழுகின்ற பயனற்றவனை,

 

           அசடனை --- கீழ்மகனை,

 

            வழிபடாத ஒர் திருடனை--- (நல்வழிப்பட்டு ஒழுகாது) திருட்டுத் தனம் (கொண்டு) உள்ளவனை, 

 

           மருடனை --- அறிவு மயக்கம் உள்ளவனை,

 

            நலம் இலா அக கபடனை--- நலம் சிறிதும் இல்லாது, உள்ளத்தில் கபடம் கொண்டுள்ளவனை,

 

           விகடனை --- செருக்குக் கொண்டவனை,

 

           வினையேனை--- தீவினையே புரிபவனை,

 

            நடுவிலாதன படிறுகொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை--- நடுவுநிலைமை இல்லாது, குற்றமுள்ள தடுமாற்றமான சொற்களைப் பேசுவதிலேயே முழுகி இருக்கின்ற கொடியவனை,

 

           இறவனை --- இறப்பதற்கே பிறந்தவனாகிய என்னை,

 

            நளினம் ஆர் பதம் அது பெற ஒருவழி அருள்வாயே--- தேவரீரது திருவடிக் கமலங்களை அடைந்து உய்கின்ற ஒப்பற்ற நெறியினை அருள் புரியவேண்டும்.

 

பொழிப்புரை

 

     உடம்பில் கோடுகளைக் கொண்ட காளிங்கன் என்னும் பாம்பின் முடி மீது திருநடனம் செய்யும் பரதத்தில் வல்ல மாயவன்ஏழு உலகங்களையும் திருவடியால் அளந்தவனும், உயிர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பவனும் ஆன மாதவன்;  இரணியனுடைய உடல் இரண்டு பிளவாகும்படி நகத்தால் கீறிய திருமால்;  உயிர்களின் பாவத்தை அரிப்பவன்ஆழிப்படையைத் தனது திருக்கையில் ஏந்தியவன்அலைகள் முழங்குகின்ற கடல் முறையிடவும், அரக்கன் ஆகிய இராவணனுடைய மகுடம் அணிந்த பத்துத் தலைகளும் அறுந்து விழவும்,ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கரியமேனியன் ஆகிய இராமச்சந்திரமூர்த்திமருத மரங்களைச் சாடியவன்இனிய பாடல்களில் வல்லவர் ஆகிய திருமழிசை ஆழ்வாரின் சொல்லுக்கு இணங்கி அதன் படி நடந்த கடவுள்புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக் கூட்டத்தைப் பாதுகாத்த பேரழகன்கருணை மிக்க நாராயணன்நரன் ஆகிய அருச்சுனனுக்குத் தலைவன்தேவர்களின் தலைவன் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

     காட்டில் வாழ்ந்திருந்த கருநிறங் கொண்ட வேடர்களின் சிறுமியாகிய வள்ளிநாயகிக்காக மனம் உருகிய பெருமையில் மிக்கவரே!

 

            நறுமணம் நிறைந்த கூந்தலிலும்அந்தக் கூந்தலின் அழகிலும், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இடையிலும்,நடக்கின்ற நடையின் அழகிலும், தாமரை போன்ற கண்களிலும், பேச்சிலும்,  இளம்பெண்கள் கோபத்தைக் காட்டாமல், சிரித்துப் பேசி வீசுகின்ற வலையிலும், அவர்கள் நின்கின்ற நிலையிலும்,இறுக்கமாகக் கச்சு அணிந்த மலை போன்ற முலைகளிலும்,  முடிவே இல்லாதஒப்பற்ற கொடிய விடம் போன்ற தன்மையதான மோகத்தைக் கொண்டவனாகி,  நரகத்தில் விழுகின்ற பயனற்றவனைகீழ்மகனை,நல்வழிப்பட்டு ஒழுகாது திருட்டுத் தனம் கொண்டு உள்ளவனை, அறிவு மயக்கம் உள்ளவனை, நலம் சிறிதும் இல்லாது, உள்ளத்தில் கபடம் கொண்டுள்ளவனை, செருக்குக் கொண்டவனை, தீவினையே புரிபவனை, நடுவுநிலைமை இல்லாது, குற்றமுள்ள தடுமாற்றமான சொற்களைப் பேசுவதிலேயே முழுகி இருக்கின்ற கொடியவனை, இறப்பதற்கே பிறந்தவனாகிய என்னை, தேவரீரது திருவடிக் கமலங்களை அடைந்து உய்கின்ற ஒப்பற்ற நெறியினை அருள் புரியவேண்டும்.

 

விரிவுரை

 

இத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதியில் அடியவன் ஆகிய தனக்கு உள்ள சிறுமைகளைப் பட்டியிலிட்ட அடிகளார்பிற்பகுதியில் திருமாலின் சிறப்புக்களைப் பட்டியலிட்டு உள்ளார்.

 

முருகு உலாவிய குழலினும்--- 

 

முருகு --- நறுமணம்.  குழல் --- கூந்தல். நறுமணம் நிறைந்த கூந்தலிலும்,

 

நிழலினும்--- 

 

நிழல் --- ஒளிஅழகு. 

            

அருவமாகிய இடை--- 

 

கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இடையை உடையவர்கள் பெண்கள். அது அழகு.

 

"மதன தனு நிகர் இடை" என்றார் பிறிதொரு திருப்புகழில். மதனன் என்னும் மன்மதனுக்கு உருவம் இல்லை. அவனுடைய வில்லைப் போன்று வளைந்துள்ள இடை என்றார்.

 

முளரி போலு(ம்) நல் விழியினு(ம்)--- 

 

முளரி --- தாமரை. தாமரை போன்ற போன்ற கண்கள்.

 

மடமாதர் முனிவிலா நகை வலையினு(ம்) --- 

 

முனிவு -- கோபம்சினம்வெறுப்புவருத்தம்.

 

சிரிக்கச் சிரிக்கப் பேசி ஆடவரைத் தமது காம வலையில் வீழ்த்துபவர்கள் இளம்பெண்கள்.

 

முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி நரகிலே விழும் அவலனை --- 

 

உள்ளத்தில் தோன்றினால் எளிதில் அவிக்க முடியாதது காமம். விடம் உண்டாரைக் கொல்லும். காமம் கொண்டாரை நரகத்திலே தள்ளும். 


உயிருக்குப் பிறவித் துன்பத்தைத் தருவனகாமம்முதலாகிய மூன்று குற்றங்கள். காமத்தால் தோன்றுவன  வெகுளி,மயக்கம் என்னும் இரண்டு குற்றங்கள். இவற்றை அகற்றவேண்டும்.. 

 உயிருக்கு அநாதியாக உள்ள அஞ்ஞானமும்அது பற்றி உடம்பை நான் என மதிக்கும் அகங்காரமும்அது பற்றிஎனக்கு இது வேண்டும் என்னும் அவாவும்அது பற்றிபொருளினிடத்துச் செல்லும் ஆசையும்அவ்வாசை ஈடேறாதவிடத்து உண்டாகும் கோபமும் எனக் குற்றங்கள் ஐந்து. 

 

அறிவினால் உண்டாகும் குற்றம்உடம்பால் உண்டாகும் குற்றம் என்று இரண்டாக வைத்துபுந்திக் கிலேசம்காயக் கிலேசம் என்று வைத்தார் அருணகிரிநாதப் பெருமான். திருவள்ளுவ நயானார் மூன்றாக வகுத்தார். அகங்காரம் அஞ்ஞானத்தில் அடங்கும். ஆவா ஆசையில் அடங்கும். அடங்கவேகாமம்வெகுளிமயக்கம் எனக் குற்றங்கள் மூன்று என்று கொள்ளப்பட்டது.

 

இடையறாத ஞானயோகங்களின் முன்னர்இக் குற்றங்கள் யாவும் தீயின் முன்னர் பஞ்சு அழிவது போல் அழிந்தொழியும் என்றார். ஞானயோகத்தைச் சொல்லவேபத்தியோகமும் கொள்ளப்படும். தமிழர் சமயநெறி இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று அறிவு நெறிமற்றது அன்பு நெறி. இதனை வடநூலார் ஞானமார்க்கம்பத்திமார்க்கம் என்பர். இவ்விரண்டும் ஒன்று கூடியது சன்மார்க்கம். இறைவனைச் சிவன் எனத் தேறிஅவன் அன்பு வடிவினன்அறிவு வடிவினன் என்று கொண்டதும் அவ்வாறே. திருவள்ளுவ நாயானர் "வாலறிவன்" என்றது காண்க. 

 இவ்வுண்மை கண்ட நமது சான்றோர்இரண்டையும் பிரிக்கமுடியாதகுணகுணியாக்கிஅம்மையப்பனாக வழிபடக் காட்டினர். அம்மை அருள் வடிவம். அப்பன் அறிவு வடிவம்.

 எனவேபத்தியோகத்தாலும் உயிருக்கு உள்ள முக்குற்றங்களும் அற்றுஇறையருளைப் பெறமுடியும் என்பது தெளிவாகும். திருநாவுக்கரசு நாயனாரின் நிலைமையை உலகுக்குக் காட்டத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான்நாயனார் திருப்புகலூரில் இருக்கும் காலத்தில்புல் செதுக்கும்போதுஉழவாரப் படை நுழைந்த இடம் எல்லாம் பொன்னும் நவமணிகளும் பொலிந்து இலங்கும்படிச் செய்தார். அப்பர் பெருமான் அவற்றைப் பருக்கைக் கற்ளாக எண்ணிஉழவாரப் படையில் ஏந்திஅருகில் இருந்த குளத்தில் எறிந்தார். அப்பர் பெருமான்புல்லோடும்கல்லோடும்பொன்னோடும்மணியோடும்சொல்லோடும் வேறுபாடு இல்லாத நிலையில் நின்றார். அதற்குமேல்ஆண்டவன் அருளால் தேவதாசிகள் மின்னுக்கொடி போலவானில் இருந்து வந்து ஆடல்பாடல் முதலியவற்றால்,சுவாமிகளின் நிலையைக் குலைக்க முயன்றார்கள். சுவாமிகளின் சித்த நிலை சிறிதும் திரியவில்லை. திருத்தொண்டில் உறுதிகொண்டு, "பொய்ம்மாயப் பெருங்கடலுள் புலம்பா நின்ற புண்ணியங்காள்தீவினைகாள்" என்று தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடி அருளினார். தேவதாசிகளும் சுவாமிக்குச் சிவமாகவே கணப்பட்டார்கள். அவர்கள் சுவாமிகளை வணங்கி அகன்றார்கள். "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகவும்ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அருளாளராகவும்" அப்பர் பெருமான் விளங்கினார். பத்திநெறியில் நின்ற நாயனாரிடத்துகாமவெகுளிமயக்கம் ஆகிய முக்குற்றங்களும் அடியோடு ஒழிந்தன.

 

காமம்வெகுளிமயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடகெடும் நோய்.        

 

என்பது திருவள்ளுவ நாயனாரின் பொய்யாமொழி.

 

காரிகையாரைப் பொன்னைக் காட்டவும்காமாதி மும்மைச்

சோர்வு இழந்து உய்ந்தார் அரசர்,சோமேசா! - ஓருங்கால்

காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்

நாமங் கெடக்கெடு நோய்.         

 

என்பதுதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா".

 

இதன் பொருள்---

 

சோமேசா! ஓருங்கால் --- ஆராய்ந்து அறியும் இடத்து,, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட --- ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையார்க்கு விருப்புவெறுப்புஅவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கூடக் கெடுதலான்நோய் கெடும் --- அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.அரசர் --- திருநாவுக்கரசு நாயனார்,  காரிகையாரை --- அரம்பை மாதரையும்பொன்னை --- பொன்னையும்காட்டவும் --- காட்டுதலும்காமாதி மும்மைச் சோர்வு --- காமம் முதலிய முக்குற்றங்களின்இழந்து உய்ந்தார் --- நீங்குதலான் பிழைத்தார் ஆகலான் என்றவாறு.


திருநாவுக்கரசு நாயனார் பூம்புகலூர்ப் பெருமானை நாள்தோறும் தொழுது உழவாரத் திருப்பணி செய்து வரும்நாளில்பெருமான் நாயனாருடைய நன்னிலைமையை உலகத்தார்க்குக் காட்டவேண்டிஉழவாரப்படை நுழைந்த இடமெல்லாம் பொன்னும் நவமணியும் பிராகசிக்கும்படி செய்தருளினார். நாயனார் அவற்றைப் பருக்கை எனவே மதித்துஉழவாரப் படையின் ஏந்தித் திருக்குளத்தில் எறிந்தார்.  அதன்பின் அரம்பையர்கள் வந்து ஆடல் பாடல்களாலும் பிற செய்கைகளாலும் மயக்கியும்நாயனார் மயங்காமை கண்டு அவரை வணங்கிச் சென்றார்கள்.

 

காமத்துள் அழுந்தி நின்று 

     கண்டரால் ஒறுப்புஉண் ணாதே

சாமத்து வேதம் ஆகி 

     நின்றதுஓர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடை இராவும் 

     ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளியது ஆகும் 

     ஒற்றியூர் உடைய கோவே.    --- அப்பர்.

 

இதன் பொருள் ---

 

உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப் பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் .

 

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து

ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறிமணி

ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவதோர்

தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.  --- திருமந்திரம். 


இதன் பொருள் ---

 

`காமம்வெகுளிமயக்கம்என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக் கடிந்துஎனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுஅடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு. 


தீமை உள்ளன யாவையும் தந்திடும்சிறப்பும்

தோம்இல் செல்வமும் கெடுக்கும்நல் உணர்வினைத் தொலைக்கும்,

 ஏம நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும்இதனால்

காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில்.   ---  கந்தபுராணம்.                                                          


இதன் பொருள் ---


ஆராய்ந்து அறிந்தால்தீமைகள் என்று எவை எவை உள்ளனவோஅவை அனைத்தையும் தருவதும்உயிருக்கு உள்ள சிறப்பையும் கெடுப்பதும்குற்றமற்ற செல்வத்தையும் கெடுப்பதும்நல்ல உணர்வுகைள அழிப்பதும்உயிர்களை,பாதுகாவலாக உள்ள நல்ல நெறியில் செல்லவிடாமல் தடுத்துநரகத் துன்பத்தில் செலுத்தவதும் ஆகிய காமத்தை விட வேறு ஒரு பகை இந்த உலகத்தில் உள்ளதாஇல்லை. 


ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையும்

காட்டியது இனையது ஓர் காமம் ஆதலின்,

வாட்டம்இல் புந்தியால் மற்று அந் நோயினை

வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்து உளார்.--- கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

உயிரானது எடுத்து வந்த பலப்பல பிறவிகளையும்அப் பிறவிகள் தோறும் ஈட்டிய வினைகளையும் தருவதற்குக் காரணமாக அமைந்தது காமமே ஆகும். ஆகையால்அதனை மாற்றிவீட்டின்பத்தை விரும்புவோர்மெலிவில்லாத தெளிந்த தமது அறிவினால்அத் துன்பத்தை அறுத்தவர்களே.

 

முன் துற்றும் துற்றினை நாளும் அறம்செய்து

பின் துற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று

முக்குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம்

துக்கத்துள் நீக்கி விடும்.         --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து பின் துற்றுத் துற்றுவர் சான்றவர் --- முதலில் உண்ண எடுக்குங் கவளத்தை நாடோறும் பிறர்க்கு உதவி செய்து அடுத்த களவத்தைப் பெரியோர் உண்ணுவர்அத் துற்று --- பிறர்க்கு உதவி செய்த அந்தக் கவளம்முக்குற்றம் நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும் --- அப் பெரியோருடைய காம வெகுளி மயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப் பிறவி தீருங் கால முழுமையும் அவரைத் துன்பத்தினின்று நீக்கிவிடும்.

 

 கட்டும் வீடு அதன் காரணத்தது

ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை,

யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்

காமம் வெகுளி மயக்கம் காரணம்....---  மணிமேகலை.        

              

இதன் பதவுரை ---

 

கட்டும் வீடும் --- கட்டும் வீடுமாகிய இரண்டினையும் அதன் காரணத்ததும் --- ஒவ்வொன்றன் காரணத்தினையும் ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை --- கூடியிருந்து பெறுவித்தற்கு உரியவர் பிறர் யாருமில்லை யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் --- யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்கள் எல்லாவற்றிற்கும்காமம் வெகுளி மயக்கம் காரணம் --- காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றும் காரணமாம். 

 

 கொடு நாலொடு இரண்டு குலப்பகை குற்றம் மூன்றும்

சுடுஞானம்வெளிப்பட உய்ந்த துய்க்கு இலார்போல்

விடநாகம் முழைத்தலை விம்மல் உழந்து,வீங்கி,

நெடுநாள்,பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப.  --- கம்பராமாயணம்கடல்தாவு படலம்.

                  

இதன் பதவுரை ---

 

நாலொடு இரண்டு கொடும் குலப் பகை --- ஆறு வகையான கொடிய பரம்பரையாக வரும் பகையையும்குற்றம் மூன்றும் --- மூன்று குற்றத்தையும்;சுடுஞானம் --- அழிக்கின்ற ஞானமானதுவெளிப்பட --- ஆன்மாவிலே தோன்றஉய்ந்த துய்க்கு இலார் போல் --- தப்பிப் பிழைத்த பற்றற்ற ஞானிகளைப் போலமுழைத்தலை நெடுநாள் விம்மல் உழந்து --- மலைக் குகைகளில் நீண்ட நாட்கள் பொருமி வருந்தி;  வீங்கி பொறையுற்ற --- உடல் பருத்து அடங்கிக் கிடந்தவிடநாகம் --- விடப் பாம்புகள்உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப --- பெருமூச்சு வெளிப்பட்டு நிலைக்க;

 

மலையின் குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையான பகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப் போல விடுதலை பெற்று உயிர்த்தன. பகை ஆறு --- காமம்வெகுளிகடும்பற்றுள்ளம்மானம்உவகை,மதம் என்பவை. முக்குற்றம் --- ஐயம்திரிபுஅறியாமை. 

 

 காமமும். வெகுளியும். களிப்பும். கைத்த அக்

காமுனி இவண் அடைந்தனன்கொல்,- கொவ்வை வாய்த்

தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்

தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?  --- கம்பராமாயணம்திருவவதாரப் படலம்.

                   

இதன் பதவுரை ---

 

காமமும். வெகுளியும் களிப்பும் கைத்த --- காமம். வெகுளி. மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய;   அக்கோ முனி --- முனிவர்களுக்கெல்லாம் தலைவனாகிய அந்தக்  கலைக்கோட்டு முனிவன்;  கொவ்வை வாய். தாமரை மலர்முக தரள வாள் நகை. தூம மென் குழலினர் --- கொவ்வைக் கனி போன்ற வாயையும். தாமரை மலர் போன்ற முகத்தையும்  முத்துப்  போன்ற ஒளி பொருந்திய பற்களையும் அகிற் புகை ஊட்டிய மென்மையான குழலையும் உடைய அப்பெண்கள் புணர்த்த சூழ்ச்சியால் --- செய்த சூழ்ச்சியினால்;  இவண் அடைந்தனன் கொல் --- இங்கு வந்து சேர்ந்தனன் போலும்.

 

 திக்கு உறும் செறி பரம் தெரிய நின்றதிரள் பொன் 

கைக் குறுங் கண் மலைபோல்குமரர் காமம் முதல் ஆம்

முக் குறும்பு அற எறிந்த வினை வால்முனிவனைப்

புக்கு இறைஞ்சினர் அருந்தவன் உவந்து புகலும்.. ---  கம்பராமாயணம்விராதன் வதைப் படலம்.

              

இதன் பதவுரை ---

 

திக்கு உறும் --- எட்டுத் திசைகளிலும் பொருந்தியசெறிபரம் --- மிகுந்த சுமையைதெரிய நின்ற --- இவ்வளவு என அறியுமாறு தாங்கி நின்றதிரள் பொன்கை --- திரண்ட அழகிய துதிக்கையையும்குறுங்கண் --- சிறிய கண்களையும் உடையமலைபோல் குமரர் --- யானைகள் போன்ற இராமலக்குவர்புக்கு --- அம்முனிவர் உறையுள் புகுந்துகாமம் முதல் ஆம் முக் குறும்பு அற எறிந்த --- காமம்வெகுளிமயக்கம் எனும் மூன்றுகுற்றங்களையும் அடியோடு கடிந்தவால் வினை முனிவனை --- தவ வினை உடைய தூய்மையான செயல்களை உடைய அத்திரி முனிவனை;இறைஞ்சினர் --- வணங்கினார்கள்;அருந்தவன் --- அம்முனிவன்உவந்து புகலும் --- மனமகிழ்ந்து சொல்வான்.(முக்குறும்பு - காமம் வெகுளி மயக்கம்.)

 

கொலை அஞ்சார்பொய்ந் நாணார்மானமும் ஓம்பார்,

களவு ஒன்றோஏனையவும் செய்வார் - பழியோடு

பாவம் இஃது என்னார்பிறிது மற்று என்செய்யார்,

காமம் கதுவப்பட்டார்.                                           ---நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

காமத்தால் பற்றப்பட்டவர்கள்கொலைபுரியப் பயப்படார்பொய் சொல்லக் கூசார்தம் பெருமையையும் பாதுகாவார்களவு செய்தல் ஒன்றோ! அதற்கு மேலும்மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்,  இந்தக் காமம்பழியொடு பாவமாம் என்றும் நினையார்அங்ஙனமாயின் அவர் வேறு யாதுதான்செய்யமாட்டார்எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.

 

 அணங்குநோய் எவர்க்குஞ் செய்யும்

            அனங்கனால் அலைப்புண்டுவி

உணங்கினார் உள்ளம் செல்லும்

            இடன் அறிந்து ஓடிச் செல்லா

குணம் குலன் ஒழுக்கம் குன்றல்,

            கொலைபழி பாவம் பாரா,

இணங்கும் இன்னுயிர்க்கும் ஆங்கே

            இறுதி வந்து உறுவது எண்ணா.      --- தி.வி.புராணம்மாபாதகம் தீர்த்த படலம்.            

                  


இதன் பதவுரை ---

 

எவர்க்கும் அணங்கு நோய் செய்யும் அனங்கனால் அலைப்புண்டு --- யாவர்க்குங் காமநோயைச் செய்கின்ற மாரனாலே அலைக்கப்பட்டுஆவி உணங்கினார் உள்ளம் --- உயிர் சோர்ந்தவர்களின் உள்ளங்கள்செல்லும் இடன் அறிந்து ஓடிச் செல்லா --- செல்லுதற்குரிய இடத்தினை அறிந்து சென்று சேராகுணம் குலன் ஒழுக்கம் குன்றல் --- குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும்கொலை பழி பாவம் --- கொலையும் பழி பாவங்களும் உண்டாதலையும்பாரா --- பார்க்கமாட்டாஇணங்கும் இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து உறுவது எண்ணா --- பொருந்திய தம் இனிய உயிர்க்கும் அவ்விடத்தே அழிவு வருதலையும் எண்ணமாட்டா.

 

 கள் உண்டல் காமம் என்ப

            கருத்து அறை போக்குச் செய்வ,

எள் உண்ட காமம் போல

            எண்ணினில் காணில் கேட்கில்

தள்ளுண்ட விடத்தின் நஞ்சந்

            தலைக்கொண்டால் என்ன ஆங்கே

உள் உண்ட வுணர்வு போக்காது

            உண்டபோது அழிக்கும் கள்ளூண்.      --- தி.வி.புராணம்மாபாதகம் தீர்த்த படலம்.        

                 

இதன் பதவுரை ---

 

கள் உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச் செய்வ --- கள்ளுண்ணலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வனகள் ஊண் --- (அவற்றுட்) கள்ளுணவானதுஎள்ளுண்ட காமம் போல --- இகழப்பட்ட காமத்தைப் போலஎண்ணினில் காணில் கேட்கில் தள்ளுண்ட இடத்தில் --- எண்ணினும் காணினும் கேட்கினும் தவறுதலுற்ற இடத்தினும்நஞ்சம் தலைக் கொண்டால் என்ன --- நஞ்சு தலைக்கேறியது போலஆங்கே --- அப்பொழுதேஉள் உண்ட உணர்வு போக்காது --- உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காதுஉண்ட போது அழிக்கும் --- உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.

 

கள்ளுண்டலும் காமமும் உணர்வினை இழப்பித்தலால் ஒக்கும்எனினும்கள் ஊண் காமம் போல உணர்வு போக்காது உண்டபோது அழிக்கும்.

 

          

காமமே கொலை கட்கு எல்லாம் காரணம்;கண் ஓடாத

காமமே களவுக்கு எல்லாம் காரணம்கூற்றம் அஞ்சும்

காமமே கள் உண்டற்கும் காரணம்ஆதலாலே

காமமே நரக பூமிகாணியாக் கொடுப்பது என்றான்.               

                                      --- தி.வி.புராணம்மாபாதகம் தீர்த்த படலம்.

 

இதன் பதவுரை ---

 

காமமே கொலைகட்கு எல்லாம் காரணம் --- காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாயுள்ளதுகண்ணோடாத காமமே களவுக்கு எல்லாம் காரணம் --- கண்ணோட்டமில்லாத காமமே களவு அனைத்திற்குங் காரணமாகும்கூற்றம் அஞ்சும் காமமே கள் உண்டற்கும் காரணம் --- கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும்ஆதலாலேகாமமே நரகபூமி காணியாக் கொடுப்பது என்றான் --- ஆதலினாலேகாமமொன்றே (அவையனைத்தாலும் நேரும்) நரக பூமியைக் காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.

 

காமவுட் பகைவனும் கோபவெங் கொடியனும்

        கனலோப முழு மூடனும்

        கடுமோக வீணனும் கொடு மதமெனும் துட்ட

        கண் கெட்ட ஆங்காரியும்

    ஏமமறு மாச்சரிய விழலனும் கொலையென்

        றியம்பு பாதகனுமாம் இவ்

        வெழுவரும் இவர்க்குற்ற வுறவான பேர்களும்

        எனைப்பற் றிடாம லருள்வாய்

    சேமமிகு மாமறையி னோமெனும் மருட்பதத்

        திறனருளி மலய முனிவன்

        சிந்தனையின் வந்தனை யுவந்த மெய்ஞ்ஞானசிவ

        தேசிக சிகாரத்னமே

    தாமமொளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

        தலமோங்கு கந்த வேளே

        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி

        சண்முகத் தெய்வ மணியே.        ---  திருவருட்பா.

 

இதன் பொருள் ---

 

பெருநகரமாக விளங்கும் சென்னைக் கந்தகோட்டத்துள் இலங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளேதண்ணிய ஒளி திகழும் தூய மணிகளில் செம்மைச் சைவ மணியாகிய ஆறுமுகம் கொண்ட தெய்வமாகிய மணியேநலம் மிக்க பெரிய வேதங்களின் ஓம் என வழங்கும் அருள் மொழியின் பொருட்கூறுகளை மலய மலைமேல் தங்கும் அகத்திய முனிவர்க்கு அருளிச் செய்து அவன் சிந்தனைக்கண் வைத்துச் செய்த வழிபாட்டுக்கு உவந்தருளிய மெய்ஞ்ஞான சிவாசாரியர்கட்கு முடிமணியாகும் பெருமானேகாமம் என்னும் உட்பகைவனும்கோபம் என்னும் கொடியவனும்கனத்த லோபம் என்னும் முழுத்த மூடனும்மிக்க மோகம் எனப்படும் வீணனும்கொடிய மதம் எனப்படும் துட்டத்தனமும் குருட்டுத் தன்மையும் உடைய ஆங்கார உருவினனும்காப்பற்ற மாற்சரியம் என்னும் விழலனும்கொலை எனப்படும் பாதகனுமாகிய எழுவரும் இவர்கட்கு உறவினரான பிறரும் என்னைச் சூழ்ந்து தம் கைப்பற்றிக் கொள்ளாதபடி அருள் செய்தல் வேண்டும்.

 

பெண்களின் அழகில் மயங்கி காமவலைப்பட்டவர்கள் நிலையை அடிகளார் பின்வருமாறு பாடுகின்றார்.

 

மதன தனு நிகர் இடைக்கே,மனம்

     உருக வரு பிடி நடைக்கே,இரு

          வனச பரிபுர மலர்க்கே,மது ...... கரம்வாழும்

 

வகுள ம்ருகமத மழைக்கே,மணி

     மகரம் அணிவன குழைக்கே,மட

          மகளிர் முகுளித முலைக்கே,கடல் ...... அமுதுஊறும்

 

அதர மதுரித மொழிக்கே,குழை

     அளவும் அளவிய விழிக்கே,தளவு

          அனையது ஒரு சிறு நகைக்கே,பனி ...... மதிபோலும்

 

அழகு திகழ் தரு நுதற்கே,அந-

     வரதம் அவயவம் அனைத்து ஊடினும்,

          அவசம் உறு மயல் தவிர்த்து ஆள்வதும் .....ஒருநாளே?  --- திருப்புகழ்.

                                         

 

முடித்த குழலினர்,வடித்த மொழியினர்,

     முகத்தில் இலகிய ...... விழியாலும்,

 

முலைக் கிரிகள் மிசை அசைத்த துகிலினும்,

     இளைத்த இடையினும் ...... மயல்ஆகி,

 

படுத்த அணை தனில் அணைத்த அவரொடு,

     படிக்குள் அநுதினம் ...... உழலாதே,

 

பருத்த மயில் மிசை நினைத்த பொழுது,

     பதத்து மலர்இணை ...... அருள்வாயே.                     --- திருப்புகழ்.

 

கொங்கு உலாவிய குழலினும்,நிழலினும்,

     நஞ்சு அளாவிய விழியினும்,இரணிய

     குன்று போல்வளர் முலையினும்நிலையினும்,.....மடமாதர்

 

கொம்பு சேர்வன இடையினும்,நடையினும்,

     அன்பு கூர்வன மொழியினும்,எழில் குடி

     கொண்ட சேய் இதழ் அமுதினும்,நகையினும்..... மனது ஆய

 

சங்கை ஆளியை,அணுஇடை பிளவுஅளவு

     இன்சொல் வாசக மொழிவன இவை இல

     சம்ப்ரதாயனை,அவலனை,ஒளிதிகழ் ...... இசைகூரும்

 

தண்டை நூபுரம்அணுகிய இருகழல்

     கண்டு,நாள் அவ மிகைஅற விழிஅருள்

     தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ...... மறவேனே.    --- திருப்புகழ்.

                                                                                                            

 

தெட்டிலே வலிய மடமாதர் வாய் வெட்டிலே,

        சிற்றிடையிலேநடையிலே,

      சேல்ஒத்த விழியிலே,பால்ஒத்த மொழியிலே,

        சிறுபிறை நுதல் கீற்றிலே,

  பொட்டிலே,அவர்கட்டு பட்டிலே,புனை கந்த

        பொடியிலே,அடியிலேமேல்

      பூரித்த முலையிலே,நிற்கின்ற நிலையிலே,

        புந்திதனை நுழைய விட்டு,

 நெட்டிலே அலையாமல்,அறிவிலே,பொறையிலே,

        நின் அடியர் கூட்டத்திலே,

      நிலைபெற்ற அன்பிலே,மலைவற்ற மெய்ஞ்ஞான

        ஞேயத்திலேஉன் இருதாள்

 மட்டிலே,மனதுசெல,நினது அருளும் அருள்வையோ?

        வளமருவு தேவை அரசே!

      வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை

        வளர்காத லிப்பெண்உமையே.       --- தாயுமானார்.

 

 

வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன்--- 

 

காளிங்கன் என்னும் கொடிய பாம்பின் தலை உச்சியில் கண்ணன் நர்த்தனம் புரிந்தார்.

 

யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. பகவான் கண்ணன் அங்கு சென்று,மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்துபாம்பினுடன் போர்புரிந்து வென்று அப் பாம்பின் படத்தின் மீது திருவடி வைத்து நடனம் புரிந்தருளினார்.

 

காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்களமாகிய ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி அறிவு என்ற கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.

 

"லகரமே போல் காளிங்கன் அல் உடல் நெளிய நின்று 

தகர மர்த்தனமே செய்த சங்கு அரி"

 

என்றார் பாம்பன் சுவாமிகள் பாடி அருளிய சண்முக கவசத்தில்.

 

காளிங்க நர்த்தனத்தின் உட்பொருள் இதுதான்.

 

எழு புவி அளவிடு வரதன் மாதவன்--- 

 

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின்மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிவாள்வலியும்தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்றுஇந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்துஅவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.  தேவர் கோமானும் பாற்கடலினை அணுகிஅங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர்.  காசிபரும்அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும்காசிபருக்கு அருளவும் வேண்டிதிருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகிசிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

 

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்

வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,

நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்

ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

 

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்துபொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர்.  மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

 

அத் தருணத்தில்வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும்வேதம் நவின்ற நாவும் ஆகசிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டுசெவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

 

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால்இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

 

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்துஎன் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

 

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,

வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்

ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

 

எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோதகைவுஇல் வெள்ளி,

கொடுப்பது விலக்கு கொடியோய்உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

 

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின்யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

 

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல்அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும்விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.

 

இரணியன் உடல் இரு பிளவாக வகிரும் மால் --- 

 

இரணியனுடைய உடல் இரண்டு பிளவாகும்படி நகத்தால் கீறிய திருமால்.

 

இதன் வரலாறு

 

பிரமதேவருடையபுதல்வர்மரீசிமரீசியின்மைந்தர்காசிபர்காசிபமுனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர்அந்தக் காசிபமுனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும்பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர்இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர்இளையவனாகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்றபோதுதிருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.

 

இரணியன் தன்  தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான்தவவலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன்தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டனன்மனம் வெருண்டனன்பெரும்தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டனன்அப்போது அவன் மனைவி லீலாவதிபால் ஹிலாதன்சம்ஹிலாதன்அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர்நான்காவதாகலீலாவதி உலகம்உய்யபிரகலாதரை சிப்பி முத்தைக் கருவுற்றது போல்கருக்கொண்டு இருந்தனள்.

 

தானவேந்திரனாகிய இரணியன் கானகம் புக்குகனல் நடுவே நின்றுஊசியின்மேல் ஒருகாலை ஊன்றிபுலன்களை அடக்கிமூலக்கனலை மூட்டிநீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன்.  இரணியன் தவத்தால்தங்களுக்குக் கேடுவரும் என்று அஞ்சிய  இந்திரன் சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன்இடையில் நாரதர் தடுத்துலீலாவதியை சிறைமீட்டுதனது தவச்சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர்கணவன் வரும்வரை கரு வளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்துகொண்டாள்கருவில் உருப்பெற்று உணர்வுபெற்று இருந்த பிரகலாதர்நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு, உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர். கருவிலே திரு உருவாகியது.

 

இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்ன வாகனத்தில் நான்முகக்கடவுள் தோன்றினர்அவர்பால் இரணியன் மண்ணிலும்விண்ணிலும்அல்லிலும்பகலிலும்வீட்டிலும்வெளியிலும்இருளிலும்ஒளியிலும்அத்திரத்தாலும்சத்திரத்தாலும்நரராலும்சுரராலும்நாகங்களினாலும்விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும்மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும்முவுலக ஆட்சியையும்எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்றுஇரணியபுரம் சேர்ந்தனன்.  நாரதர் லீலாவதியைக் கொணர்ந்துஉற்றதை உரைத்துஆறுதல் கூறிஅவன்பால் சேர்த்தனர்.  பின்னர் லீலாவதிஅன்புமயமான பிரகலாதரைப் பெற்றனள்.  மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றனன்.

 

பின்னர் ஒருநாள்தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும் என்று எண்ணிதன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறுபணித்து அனுப்பினான்காலனிலும் கொடிய அக்கொடியவர் வைகுந்தத்திலும்திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திராஅரியைக் காண்கிலேம்என்றனர்இரணியன் சினந்துமூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான்.  எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு, தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்என்றனர்இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும்பயங்கொள்ளிஅத்திருமால் சாதுக்கள் உள்ளத்திலும்ஞானிகள் சிந்தையிலும்அடியார்கள் இதயத்திலும் இருப்பன்கட்டையைக் கடைந்தால் அக்கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும்பாலைக் கடைந்தால்பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும்அடியார்களையும்ஞானிகளையும்முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால்அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம்மாயவன் வெளிப்படுவன்ஆதலினால்ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும்முனிவர்களையும்அடியார்களையும் துன்புறுத்துங்கள்என்று கட்டளை இட்டனன்காலதூதரினும் கொடிய அப்பாதகர்கள்பூமரங்களை ஒடித்தும்முனிவர்களை அடித்தும்கோயில்களை இடித்தும்வேதாகமங்களைப் பொடித்தும்ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாயநமஎன்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும்அதனை எங்கும் எழுதியும்வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும்எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.

 

தேவர்களும்முனிவர்களும்ஞானிகளும்அடியார்களும் பெரிதும் வருந்தி, திருமாலைத் தியானித்துத் துதித்தனர்.  திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சியிருக்கும்ஆதலினால், நீவிர் சிறிது காலம் தாழ்த்திருமின்யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியனை மாய்க்குதும்என்று அருளிச் செய்தனர்.

 

பிரகலாதர்இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்துதியானபரராக இருந்தனர்ஆடும்போதும்ஓடும்போதும்பாடும்போதும்வாடும்போதும்உண்ணும்போதும்உறங்கும்போதும்எழும்போதும்அழும்போதும்விழும்போதும்தொழும்போதும்இவ்வாறு எப்போதும் தைலதாரைபோல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது,கருமால் அறத் திருமாலை நினைந்து நினைந்துஉணர்ந்து உணர்ந்துநெகிழ்ந்துநெகிழ்ந்துஅன்பு நிறைந்துநிறைந்துஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.

 

பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோதுஇவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர்தீர்த்த   யாத்திரை சென்றனர்அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன்.  சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நமஎன்று கூறுமாறு கற்பிக்கலானார்.  பிரகலாதர் தமது செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரேபிழைபடக் கூறலுற்றனைஇன்றிருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறைவன் எனக் கூறுதல் நலமன்றுஎன மொழிந்து, "ஓம் நமோநாராயணாயஎன்று கூறினர்.

 

ஓதப்புக்கவன் "உந்தை பேர்உரை" எனலோடும்,

போதத்தன் செவித்தொளை இருகைகளால் பொத்தி,

"மூதக்கோய்!  இது நல்தவம் அன்று" எனமொழியா

வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.

 

பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர்மேல் கூப்பிஆனந்தக் கண்ணீர் சொரிந்துஉரோமங்கள் சிலிர்த்துதிருமந்திரத்தைக் கூறியவண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடாபாலகனேஇந்த மந்திரத்தைக் கூறாதேஉன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன்இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர்சிறுபிள்ளைத்தனமாக இதனை நீ கூறினைஇனி இதனைக் கூறாதேகூறி எம்மைக் கெடுக்காதேஉன்னையும் கெடுத்துக் கொள்ளாதேஎன்றனர்.

 

கெடுத்து ஒழிந்தனை என்னையும்உன்னையும் கெடுவாய்

படுத்து ஒழிந்தனைபாவி,அத்தேவரும் பகர்தற்கு

அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர நின்அறிவின்

எடுத்தது என்இதுஎ ன்செய்தவண்ணம் நீ என்றான்.

 

பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐயஇத் திருமந்திரத்தைக் கூறுவதனால்என்னையும் உய்வித்தேன்எனது பிதாவையு ம்உய்வித்தேன்உம்மையும் உய்வித்தேன்இந்த உலகையும் உய்வித்தேன்வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன்அப்படிக்கு இருக்கநான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.

 

என்னைஉய்வித்தேன்எந்தையைஉய்வித்தேன்இனைய

உன்னைஉய்வித்தேன்உலகையும்உய்விப்பான்அமைந்து,

முன்னை வேதத்தின் முதல்பெயர் மொழிவது மொழிந்தேன்

என்னை குற்றம்நான் இயம்பியது இயம்புதி என்றான்.

 

ஆசிரியர், "அப்பாகுழந்தாய்நாங்கள் கூறுவதைக் கேள்.  இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம்.  இதை ஒருவரும் கூறலாகாது என உன் தந்தையின் கட்டளைநீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்என்றனர்.  

 

பிரகலாதர், "ஐயாஇம்மந்திரமே வேதத்தின் விழுமியது.  எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லைஎன்றார்.

 

ஆசிரியர் மனம் மறுகிஇரணியன்பால் ஓடி, "எந்தையேஉமது சிறுவன்நாங்கள் கூறிய வேதமந்திரத்தை மறுத்துசொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்என்றார்

 

இரணியன், "என்ன கூறினான் கூறும்என்று வினவினான்ஆசிரியர், "வேந்தேஅவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால்எமக்கு நரகம் எய்தும்நாவும் வெந்து அழியும்என்று நடுங்கி நவின்றனர்.

 

இரணியன் தன் மகனை அழைப்பித்தான்பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர்மகனை எடுத்து உச்சிமோந்து முத்தமிட்டுமடித்தலத்தில் வைத்து, "மகனேநீ என்ன கூறினாய்என்று வினவினான்

 

அறிவின் மிக்க அப்புதல்வர், "தந்தையேஎதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக்கொண்டு இருக்கின்றார்களோஎதனை வேதம் வியந்து ஓதுகின்றதோஎது நம்மை வாழ்விக்கின்றதோஅதனையே அடியேன் கூறினேன்என்றார்.  இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்புலிக்குப் பூனையா பிறக்கும்என் கண்ணேஅது என்னஎனக்கு எடுத்துச்சொல்என்று கேட்டான்.

 

"காமம் யாவையும் தருவதும்அப்பதம் கடந்தால்

சேமவீடு உறச்செய்வதும்செந்தழல் முகந்த

ஓமவேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய".

 

"அப்பாஓம் நமோநாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டு எழுத்தாம்என்றார்

 

தானவன் விழியில் தழல் எழுந்ததுகோபத்தால் கொதிப்புற்றான். "மகனேமுனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய "இரணியாய நம"என்றே கூறுகின்றனர்யாரடா உனக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்?  அந்த நாராயணன் நமது குலவைரிஎலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த அரவத்தின் நாமத்தைக் கூறுதல் நன்மையோஅந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன்.  அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன்எனக்கு ப்பயந்து எங்கோ ஒளிந்துக்கொண்டு இருக்கின்றான்கண்ணேநீ சிறுகுழந்தையாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர்இனி அதைக் கூறாதேமூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறுஎன்று பலவும் கூறினான்.

 

தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனேசிறிது அமைதியாக இருந்து கேளும்உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத்திருமால்எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர்மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர்அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லைகடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல்விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர்நமது குலமும் நீயும் பிறரும் ஈடேறவேண்டும் என்றால்அவரை வணங்குவாயார வாழ்த்து.  நெஞ்சார நினைஎன்றார்.

 

அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன்ய, ஆலகால விடம் போல் சீறினான்அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன்இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுமின்என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன்கூற்றினும் கொடிய அரக்கர்கள்துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய்வாள்வேல்மழுதண்டுகோடாலிஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர்.  பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒருசிறிதும் ஊனம் ஏற்படவில்லைஅவர் கண்களை மூடி, "நமோ நாராயணாயஎன்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார்.  ஆயுதங்கள் பொடிபட்டனஅது கண்ட தீயவர்கள் ஓடிஇரணியன்பால் உற்றது உரைத்தனர்.

 

நிருதன் வியந்து நெருப்பில் இடுமாறு பணித்தனன்.  விண்ணளவாகஎண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்துவிண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர்தியானபரர் ஆகிய அவருக்குஅத் தீதண்ணிலா எனக் குளிர்ந்ததுதாமரைத் தடாகத்தில் விளையாடும் அன்னம்போல்கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார்காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.

 

அவுணன் வெகுண்டுஅவனைச் சிறையிட்டு, "அட்டநாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்என்றான்.  அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டுபிரகலாதரைக் கொடிய நச்சுப்பற்களால் பலகாலும் கடித்தனதிருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர்.  பாம்புகளின் பற்கள் ஒடிந்துபணாமகுடம் உடைந்துஉள்ளம் மடிந்து மீண்டு சென்றன.

 

இதனைப் பணியாளர் கூறக்கேட்ட இரணியன் சீறி திக்குயானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான்வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர்முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, 'கஜேந்திர வரதாஎன்று கூறினார்யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றனதூதர் ஓடிஇதனை மன்னன்பால் புகன்றனர்அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன்.  அதைக் கண்ட யானைகள்அஞ்சிதங்கள் வெண்கோட்டால் பிரகலாதரைக் குத்தின.  வாழைத்தண்டு பட்டது போல்அவருக்கு மென்மையாக இருந்ததுதந்தங்கள் ஒடிந்தனயானைகள் அயர்வுற்று அகன்றன.

 

ஏவலர் ஓடிஇதனைக் காவலன்பால் இயம்பினர்கனகன் சிரித்து"அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள்என்றான்.  பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டிஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர்அவர் 'ஓம் நமோ நாராயணாயஎன்று உருண்டார்பூமிதேவி பெண்வடிவம் தாங்கிஅக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கிஉச்சி மோந்துமுத்தமிட்டு ஆதரித்தனள்பிரகலாதர் பூமிதேவியைப் போற்றி நின்றார்.  பூதேவி"கண்ணேகுழந்தாய்உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்என்று அருள் புரிந்தனள்.  ஞானக்குருந்தர்"அம்மா இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால்உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்என்று வரம் கேட்டனர்அவ்வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.

 

இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.  மழையையும் இடியையும் ஏவினான்நிலவறைக்குள் அடைப்பித்தான்விஷத்தை உண்பித்தான்பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான்சாந்தசீலராகிய அவர், "சாகரசயனாஎன்று துதித்தனர்கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர்இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான்ஒன்றாலும் பிரகலாதருக்குஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லைஇவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லைமேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.

 

ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர்இரணியன் அவரை அழைத்துசிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி, தானே கொல்ல ஓடினான்அவர் சிறிதும் அச்சமின்றி "ஓம் நமோ நாராயணாய"என்று சிந்தித்தவண்ணமாக நின்றார்

 

இரணியன் அவருடைய உறுதியைக் கண்டுஇறும்பூதுற்றான். "மதி நலம் படைத்த அமைச்சர்களேஎன் மகனுடைய மனக்கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன்.  இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன்என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடிநாடி அயர்த்துப் போனேன்.  நமது சிறியபிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்கவேண்டும் என்று மகன் கருதினான் போலும்பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்கவேண்டும்.  அந்த உபாயத்தை என்மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்திபண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான்என்னிடம் காட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான்" என்று சொல்லி"கண்ணேபிரகலாதாஉனது அறிவின் திட்பத்தை மெச்சினேன்இப்படி வாமகனேஅந்த மாயவன் எங்குளன் கூறுஎன்று வினவினான்.

 

அன்பு வடிவாய அருந்தவச் செல்வர்"ஐயனே மலரில் மணம்போல்எள்ளுக்குள் எண்ணெய்போல் என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான்உன்னிலும் உள்ளான்என்னிலும் உள்ளான்அவன் இல்லாத இடமில்லைஎன்றார்இரணியன், "மைந்தாஎன்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படிஉன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லைஇதோஇந்தத் தூணில்உள்ளானோ ?உரைஎன்று கேட்டான்.

 

"சாணிலும்உளன்ஓர்தன்மை அணுவினைச் சதகூறுஇட்ட

கோணிலும் உளன்மாமேருக் குன்றிலும்உளன்இந்நின்ற

தூணிலும் உளன்முன்சொன்ன சொல்லிலும்உளன்இத்தன்மை

காணுதி விரைவின்"என்றார், "நன்று" எனக் கனகன் சொன்னான்.

 

பிரகலாதர்"தாதாய்அப்பரமன் சாணிலும் உளன்அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலு ம்உளன்மேருவிலு ம்உளன்இத்தூணிலும் உளன்உளன் என்னும் சொல்லிலும் உளன்.  காணுதிஎன்று அருளிச்செய்தார்.

 

இரணியன் சீற்றம் மிக்கு"பேதாய்நீ கூறியபடி இத்தூணில் அந்த அரி இல்லையானால்சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்என்றான்.  பிரகலாதர்"அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாதுஎன் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின்என் உயிரையானே விடுவன்நான் அவன் அடியனும் அல்லன்என்றார்.

 

"என்உயிர் நின்னால் கோறற்கு எளியதுஒன்று அன்றுயான்முன்

சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றானாயின்.

என்உயிர் யானே மாய்ப்பன்பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,

அன்னவற்கு அடியேன்அல்லேன்" என்றனன் அறிவின் மிக்கான்.

 

கனகன் உடனே தனது கரத்தினால் அத்தூணை அறைந்தான்அத்தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன்பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார் இரணியன்

"ஆரடா சிரித்தாய்சொன்ன அரிகொலோஅஞ்சிப்புக்க  நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ? போரடா பொருதியாயில் புறப்படு புறப்படுஎன்றான்பிளந்ததது தூண்நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்ட மட்டும்ஆயிரம் ஆயிரம் சிரங்களும்அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டுஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும்பிடித்தும்கொன்றும்தின்றும்மென்றும்எற்றியும்உதைத்தும்வதைத்து அழித்தனர்.

 

அது கண்ட கனகன் அஞ்சாது வாளினை எடுத்து எதிர்த்து நின்றான்பிரகலாதர்பிதாவை வணங்கி"தந்தையேஇப்போதாவது மாதவனை வணங்குஉன் பிழையைப் பொறுப்பன்என்றார்இரணியன்"பேதாய்உன் கண் காண இந்த நரசிங்கத்தையும் உன்னையும் கொன்று என் வீரவாளை வணங்குவன்என்றான்.

 

"கேள்இதுநீயும்காணக் கிளர்ந்தகோள்அ ரியின்கேழல்

தோளொடு தாளும்நீக்கிநின்னையும் துணித்து,பின்என்

வாளினைத் தொழுவதுஅல்லால் வணங்குதல் மகளீரூடல்

நாளினும் உளதோ என்னாஅண்டங்கள் நடுங்கஆர்த்தான்.

 

அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்கமூர்த்தி பற்றிச் சுற்றிபகலிலும் இல்லாமல்இரவிலும் இல்லாமல்அந்தி வேளையிலேவீட்டிலும் இல்லாமல் வெளியிலும் அல்லாமல்அவன் அரண்மனை வாசற்படியிலேவிண்ணிலும் அல்லாமல்மண்ணிலும் அல்லாமல்மடித்தலத்தில் வைத்துஎந்த ஆயுதத்திலும் அல்லாமல்தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறிஅவனுடைய குடலை மாலையாகத் தரித்துஅண்டங்கள் நடுங்க ஆர்த்தனர்

 

திருமகளை வேண்டஅத்தாயார் நரசிங்கத்தை அணுகினர்நரசிங்கப்பெருமான் கருணை பூத்தனர்.  பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர்நரசிங்கர் பிரகலாதரை எடுத்துஉச்சிமோந்துசிரமேல் கரமலரை வைத்து"குழந்தாய்!உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன்.  என்ன வரம் வேண்டும்என்று கேட்டருளினர்பிரகலாதர்"பெருமானேஎன் தந்தை உயிருக்கு நன்மையும்உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்என்றார்நரசிங்கமூர்த்தி மகிழ்ந்துவானவர்க்கும் தானவர்க்கும் அரசாகிசிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.

 

உரியதவநெறியில் நமநாராயணாய என,

     ஒருமதலை மொழிஅளவில் ஓராதகோபமுடன்,

     உனதுஇறைவன் எதனில்உளன் ஓதாஅடா எனும் முன்  ...... உறுதூணில்

உரம்உடைய அரிவடிவதாய்மோதிவீழவிரல்

     உகிர்புதையஇரணியனை மார்பீறிவாகைபுனை

     உவணபதிநெடியவனும்,வேதாவும்,நான்மறையும்  ...... உயர்வாக                                  

 

வரிஅளிகள் இசைமுரல,வாகான தோகைஇள

     மயில்இடையில் நடனம்இடஆகாசம் ஊடுஉருவ

     வளர்கமுகின் விரிகுலைகள் பூண்ஆரம்ஆகியிட    ......மதில்சூழும்                                         

மருதுஅரசர் படைவிடுதி வீடாகநாடி,மிக

     மழவிடையின் மிசைஇவரும் சோமீசர் கோயில்தனில்

     மகிழ்வுபெற உறைமுருகனேபேணு வானவர்கள்.....பெருமாளே. --- திருப்புகழ்.

                      

                                                    

கனகன்அங்கையினால்அறைதூண்இடை

     மனிதசிங்கம்அதுஆய்வரைபார்திசை

          கடல்கலங்கிடவேபொருதேஉகிர்...... முனையாலே

கதறவென்று,உடல்கீணவன்ஆருயிர்

     உதிரமும்சிதறாதஅமுதாய்உணு,

          கமலஉந்தியன்ஆகியமால்திரு...... மருகோனே--- (மனமெனும்திருப்புகழ்.

                            

அருமறைநூல்ஓதும்வேதியன்,

     இரணியரூபாநமோஎன,

          அரிஅரிநாராயணாஎன...... ஒருபாலன்,

அவன்எவன்ஆதாரம்ஏதுஎன,

     இதன்உளனோஓதுநீஎன,

          அகிலமும்வாழ்வானநாயகன்...... என,ஏகி

 

ஒருகணைதூணோடுமோதிட,

     விசைகொடுதோள்போறு,வாள்அரி,

          உகிர்கொடுவாராநிசாசரன்...... உடல்பீறும்

உலகுஒருதாள்ஆனமாமனும்,

     உமைஒருகூறுஆனதாதையும்,

          உரைதருதேவாசுரஅதிபர்...... பெருமாளே --- (இருகுழைமீதோடிதிருப்புகழ்.

                          

 

மருதொடு பொருதவன்--- 

 

குபேரனுடைய புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்று இருவர்களும்அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை நீத்துநீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரதமுனிவர், "இது அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

 

"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்றறி வளர்ந்துதேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம் தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார். அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.

 

கண்ணபிரானுக்கு யசோதைபாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாதுஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும்அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும்,உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்றுதாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டுஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினால்.  வேறு பல கயிறுகளை எடுத்துஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டுஇடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுதுமெல்லத் தவழ்ந்துவாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

 

உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால்தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன்மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்றுதாமோதரனைப் போற்றி செய்துதங்கள் பதவியை அடைந்தார்கள்.

 

இனிய பாவலன் உரையினில் ஒழுகிய கடவுள்--- 

 

இனிய பாவலர் என்றது திருமழிசை ஆழ்வாரை. 

 

தமிழ்ப் பாடல்களில் விருப்பம் மிக்கவர் திருமால். திருமால் மட்டும் அல்ல. சிவபெருமானும்திருமுருகப் பெருமானும் தமிழில் விருப்பம் உள்ளவர்கள். "வண்தமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்" என்று அருணகிரியார் திருமாலைச் சிறப்பித்துப் பாடி உள்ளார்.

 

நாராயணமூர்த்தி தமிழ் மொழியின் இனிமையில் மிகவும் அன்புடையவரான படியால் தெளிவுடைய செந்தமிழைப் பயில்வாரது பின்னே,அவர் பாடும் தமிழ்ப் பாடலைக் கேட்கும் பொருட்டுத் திரிகின்றனர். 

 

இப்பொழுதும் திருமால் ஆலயங்களில் வடமொழி வேதபாராயணம் அவருக்குப் பின்னே தொடர்ந்து வர,அவருக்கு முன் தமிழ் மொழியிலுள்ள நாலாயிரப் பிரபந்த பாராயணம் போக,அதனைத் தொடர்ந்து நாராயணர் செல்லுகிறார். 

 

இது தமிழின் பெருமையைக் காட்டும்.  உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலைசிறந்தது தமிழ் மொழியே ஆம். இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆம். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும்சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும்,இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.  கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்.  இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்குதிரைச் சேவகனாகஇறைவனை வரச்செய்தது தமிழ்.  கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ்.  பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ்.

 

இதன் வரலாறு

 

திருமழிசையாழ்வார் காஞ்சீபுரத்தில் வரதராஜப் பெருமாளைச் சேவித்துக் கொண்டு தங்கியிருந்த நாளில்,ஓர் அன்பர் அவருக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கஅதனை ஆழ்வார் பருகினார். அப்பாத்திரத்தில் எஞ்சி நின்ற பாலை அந்த அன்பர் பிரசாதமாக நினைத்து,தம் மனைவிக்குத் தரஅதனை அவ்வம்மையர் உண்டனர். அதன் காரணமாக அவர்களுக்கு ஓர் அழகிய புத்திரன் தோன்றினான். அப்புத்திரனுக்கு கணிக்கண்ணன் என்று பெயர் சூட்டினர். அக்குமாரன் இளம் பருவம் முதல் திருமழிசை ஆழ்வாருக்குத் தொண்டாற்றி வந்தனன். ஒருநாள் கணிக்கண்ணர் கச்சி வரதருடைய திருவாலயம் சென்று வரதராஜரைச் சேவித்துகண்ணுங் கருத்தும் மகிழ்ந்து ஆலயத்தை வலம் வந்து திரும்புங்கால்அத் திருவாலயத்தில் கைங்கரியம் புரிந்து கொண்டிருந்த ஒரு கிழவியைக் கண்டனர். அக்கிழவி மிகவும் வயது சென்று,உடல் தள்ளாடி நடுக்குற்றிருந்தும் சுவாமி கைங்கரியத்திலுள்ள பக்தியால் தன் சிரமம் நோக்காது திருப்பணி செய்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன் கணிக்கண்ணருக்கு கருணை மேலிட்டது. இக்கிழவி உடல் தளர்ந்து துன்புறுகின்றனளேஇளமைப் பருவத்தை அடைந்தாளேயானால் இன்னும் பெருமாள் கைங்கரியத்தில் நன்கு ஈடுபடுவாள். “காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள கமலக்கண்ணா! இவ்விருத்தைக்கு நின் திருவருள் உண்டாக வேண்டும்” என்று கூறித் தன் அருமைத் திருக்கரத்தால் கிழவியின் முதுகைத் தடவினார். உடனே அவள் கிழத் தன்மை மாறி இளமைப் பருவமடைந்துகட்டிளங் குமரியானாள். கரத்திலிருந்த ஊன்றுகோலை எறிந்தனள். கணிக்கண்ணரை வாயார வாழ்த்தினள். அங்கிருந்தோர் அனைவரும் இவ் வதிசயத்தைக் கண்டு இரும்பூதுற்று கணிக் கண்ணரைப் புகழ்ந்தனர். கணிக்கண்ணர் குருமகாசந்நிதியை அடைந்தனர். கணிக்கண்ணர் கிழவியைக் குமரியாக்கின செய்தி காட்டுத் தீப்போல் ஊரெங்கும் விரைவிற் பரவியது.

 

அக்காலத்து காஞ்சி மாநகரத்தை அரசாண்டு கொண்டிருந்த பல்லவராயனுக்கு இச்செய்தி தெரிந்தது. வியப்புற்றவனாகிக் கணிக்கண்ணரை அழைத்து “எனக்குக் கிழத் தன்மை அடைந்திருக்கிறது. அதனை நீக்கி குமரனாகச் செய்யும்” என்றனர். கணிக்கண்ணர் நகைத்து, “மன்னா! கிழத் தன்மையை அகற்றி இளமைப் பருவத்தை அளிக்க என்னால் ஆகாது” என்றனர். மன்னன் “ஐயா! ஆலயத்தில் ஒரு கிழவியை நீ முதுகைத் தடவிக் குமரியாகச் செய்தாய் என நகரெங்கும் கூறுகின்றனர். இப்போதுமுடியாது என்கிறாய். என் முதுகையும் தடவி எனக்கு உள்ள மூப்புத் தன்மையை நீக்கி இளமைப் பருவத்தை அளிப்பாய்” என்றனன். கணிக்கண்ணர் “அரசே! என்னே நின் மதி?இக்கிழவியை நானா குமரியாக்கினேன்என்னால் அணுக் கூட அசையாது. எல்லாம் ஈசன் செயல். வரதனுடைய கருணையினால் அச்செயல் நிகழ்ந்தது. ஆதலால் நீயும் வரதனை வேண்டுதல் புரிந்து நின் விருப்பத்தைப் பெறுவாயாக” என்றனர். அதனைக் கேட்ட பல்லவராயன் முனிவுற்று, “என்னே நின் செருக்குபிச்சை எடுத்துத் திரியும் நினக்கு இத்தனை அகங்காரமாஇக்கணமே இந்த நகரத்தை விட்டுச் செல்லுதி” என்றனன். கணிக்கண்ணன் முறுவல் புரிந்து, “அறிவிலியே! உன்னை நம்பியோ என்னை இவ்வுலகில் கடவுள் படைத்தார்இந்த நகரம் ஒன்று இல்லையேல் யான் உயிர் வாழ முடியாதோஏனைய நகரங்களை எல்லாம் கடல் தன்னகத்தே கொண்டு மறைத்ததா?இக்கணமே இந் நகரத்தை விட்டு நீங்குகிறேன்” என்று கூறிஅரசவையை விட்டகன்று தனது குருநாதராகிய திருமழிசை ஆழ்வார்பால் வந்தனர். குருமூர்த்தியின் திருவடிமேல் வீழ்ந்தனர். நிகழ்ந்தது கூறி “அடியேன்அரசன் ஆக்கினைப்படி,இந்நகரத்தை விட்டு நீங்குகிறேன்அனுமதிக்க வேண்டும்” என்று அவர்பால் விடைபெற்றுப் புறப்பட்டார்.

 

தம் சீடராகிய கணிக்கண்ணர் சென்றவுடனே அவர் பிரிவை ஆற்றாத திருமழிசை ஆழ்வார் எழுந்து சீடர் பிறகே செல்வாராயினார். அக்கால் கச்சி வரதரைக் கண்டு,

 

கணிகண்ணன் போகின்றான்,காமருபூங் கச்சி

மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச்

செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன்,நீயும் உன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”

 

என்ற திருப்பாசுரத்தை அருளிச்செய்தனர். இதனைக் கேட்டவுடனே வரதராஜப் பெருமாள்,ஆழ்வார் கூறிய வண்ணமே ஆதிசேடனாகிய பாயலைச் சுருட்டிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றார். பெருமாள் செல்ல அவர் பின் மகாலட்சுமியும் சென்றனள். காஞ்சிபுரத்தில் சீதேவி அகல,மூதேவி வந்து சேர்ந்தனள். நகரம் பொலிவிழந்தது. நகர மாந்தர்கள் ஓ என்றலறி அரசன்பால் வந்து, “கொற்றவா! என்ன செய்தாய்அடியாரிடத்தில் அபசாரப்பட்டனையே. நமது நகரத்திற்கு அழிவு நேர்ந்தது. கணிக்கண்ணரை நகரத்தை விட்டு நீங்குதி என்றனை. அவர் நீங்க அவருடைய குருமூர்த்தியாகிய திருமழிசையாழ்வாரும் அவர் பிறகே சென்றனர். ஆழ்வார் போக,அவர் பிறகே கச்சி வரதரும் சென்றனர். வரதர் பிறகே வரலட்சுமியும் சென்றனள். காஞ்சிமா நகரத்திற்கே அழிவு தேடினாய்” என்று ஓலமிட்டனர். அது கேட்ட மன்னன் நடுநடுங்கி “என் செய்தோம்பெரியோரிடத்தில் பிழை இழைத்தோமே” என்று மனம் வருந்தி மந்திரிமார்களுடன் சென்று வரதரையும் சீதேவியையும் தொழுது திரும்பி வருமாறு வேண்டினன். அவர்கள் ஆழ்வார் திரும்பினாலொழிய நாம் திரும்போம் என்றனர். அரசர் ஆழ்வாரிடம் சென்று அவர் பாதமலரில் வீழ்ந்து “எந்தையே! நீர் திரும்புவீரேயாமாகில் வரதரும் சீதேவியும் திரும்பி வருவார்கள். ஆதலால் கருணை கூர்ந்து வரவேண்டும்” என்றனன். ஆழ்வார் நகைத்து “மன்னா! நமது சீடன் வந்தால் அன்றி நாம் திரும்போம்” என்றனர். மன்னன் கணிக்கண்ணர் கால்மேல் வீழ்ந்து “ஐயனே! நின் பெருமையை உணர்ந்தேன். அடியேன் புரிந்த பிழையை மன்னித்தருளல் வேண்டும். நீர் திரும்பினால்தான் அவர்கள் திரும்புவார்கள். கருணை செய்து நகரத்திற்கு எழுந்தருள வேண்டும்” என்று குறையிரந்தனன். கணிக்கண்ணர் கருணை கூர்ந்து குருநாதர்பால் வந்து மன்னனை மன்னிக்க வேண்டுமென்று கூறி நகரத்திற்கு திரும்பினர். சீடன் திரும்பவே ஆழ்வாரும் திரும்பினார். உடனே ஆழ்வார் வரதரை நோக்கித் தான் கூறிய வெண்பாவைத் திருப்பிப் பாடினார்.

 

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி

 மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும்-துணிவொன்றிச்

 செந்நாப் புலவோன்யான் செலவொழிந்தேன்,நீயும் உன்றன்

 பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”

 

என்று பாடியவுடனே பெருமாள் சீதேவியுடனே சென்று ஆலயத்தில் பன்னகப் பாயலை விரித்தமர்ந்தனர்.

 

இதனால் பெருமாளுக்குச் “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்று ஒரு திருநாமம் வழங்குகிறது. வடமொழியில் “யதோத்தகாரி” என்பர்.

 

இவ்வாலயத்தை காஞ்சீபுரத்தில் இன்றும் காணலாம். பெருமாளும் ஆழ்வாரும் கணிகண்ணரும் போய் ஓரிரவு தங்கியிருந்த ஊருக்கு "ஓரிரவிருக்கை" என்று பெயர். இவ்வூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிறது. இதனைக் குமரகுருபர சுவாமிகளும்தாம் பாடி அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில்,எடுத்து வியந்துள்ளார்.

 

பணிகொண்ட துத்திப் படப்பாய்ச் சுருட்டுப்

   பணைத்தோள் எருத்து அலைப்பப்

 பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற

   பச்சைப் பசுங்கொண்டலே”

 

இனிய பாவலன் உரையினில் ஒழுகிய கடவுள்”  ---(முருகுலாவிய) திருப்புகழ்.

                                                                                  

 

வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன்--- 

 

வேய் இசை --- புல்லாங்குழலின் இன்னிசை.

 

நிரை -- பசுக்கூடம்.அபிராமன் --- பேரழகன்.

 

பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவன் கண்ணபிரான்அவன் நல்ல மேய்ப்பன்.

 

கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்தவன். ஆயர்கள் என்பவர் இறைவனை ஆய்பவர். இடையர்கள் என்றால்இறைவனாகிய கண்ணனுக்கும்அவனை அடைய விரும்பும் மனிதர்களுக்கும் இடையில் இருந்துஅவனை எப்படி அடைவது என்று காட்டும் ஞானிகள். ஆயர்கள் எப்போதும் கண்ணனையே தங்கள் மனத்தில் தரித்து, "உண்ணும் சோறும்தின்னும் வெற்றிலையும்,பருகும் நீரும் கண்ணனே" என்று இருந்த ஞானிகள். அந்த ஞானிகள் இடத்தில் வளர்ந்த பசுக்கள்,பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆகும்.

 

எனவேபசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம்அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்துபருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டிதக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்துஅவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.

 

பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டா.  நன்மையே செய்வன. அதுபோல்,கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள்ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன.

 

"தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.

 

தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரேஅவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். 

 

வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்துஅவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.இந்த விசாரசருமர் தான்பின்னாளில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டுசண்டீச நாயனார் ஆனார்.

 

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்றுமேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன்அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர்மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது"  என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோஇதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான்.  விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்றுஅன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார். 

 

வேதம் ஓதுவதன் பலன்எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் ஒழுகவேண்டும். உலக நன்மைக்காக வாழவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் இந்தப் புண்ணிய பூமியில் நிகழ்ந்தது. 

 

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 

பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும்,வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்புஅன்புஅன்பு.

 

கருத்துரை

 

முருகா! திருவடி பெற அருள்வாய்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...