042. கேள்வி --- 04. கற்றிலன் ஆயினும்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "உறுதி பயக்கும் நூல்களை ஒருவன் கற்று அறியவில்லையாயினும்அந்நூல்களின் பொருளைக் கற்று அறிந்தவர்களின் சொல்லைக் கேட்கவேண்டும். அது அவனுக்குத் தளர்ச்சி வந்த இடத்து ஊன்றுகோல் போன்றதொரு துணை ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     வறுமையாலாவதுமனத் துன்பம் நேர்ந்த போதாவது ஒருவனுக்கு மனத் தளர்ச்சி உண்டாகும். அப்படி வரும் தளர்ச்சியை நீக்க,அறிவு நூல்களைக் கேட்டதனால் உண்டாகிய அறிவு துணை புரியும். 

 

திருக்குறளைக் காண்போம்....

 

கற்றிலன் ஆயினும் கேட்கஅஃது ஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     கற்றிலன் ஆயினும் கேட்க--- உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும்,அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க

 

     அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை --- அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான் .

            

            ('உம்மைகற்கவேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும்  ஆகலின், 'ஊற்றாம் துணைஎன்றார். 'ஊன்றுஎன்னும் ஆகுபெயரின் 'ன' கரம் திரிந்து நின்றது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சேமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஊனுக்கு ஊன்என்னும் உரைகண்டு உவந்தனரே

தூநற்சீர்க் கண்ணப்பர்,சோமேசா! --- ஆனதனால்

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

  

இதன் பொருள்---

 

       சோமேசா! தூ நல் சீர் கண்ணப்பர் --- தூய நல்ல சிறப்பினையுடை கண்ணப்ப நாயனார்ஊனுக்கு ஊன் என்னும் உரை --- உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் வேடர்கள் கூறும் மொழியைகண்டு --- தம் உணர்விலே தோன்றக் கண்டுஉவந்தனர் --- அவ்வாறே தம் கண்ணை அம்பால் இடந்து அப்பி மகிழ்ந்தார்ஆனதனால் --- ஆகையினால்,

 

       கற்றிலன் ஆயினும் கேட்க --- உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும் அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்கஅஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை --- அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக்கோடாம் துணை ஆகலான் என்றவாறு.

 

       அன்பாவது தன்னால் விரும்பப்பட்டவர் இடத்தே தோன்றும் உள்ள நிகழ்ச்சி. இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவபெருமான் அருளிச் செய்ய வரும். சிவபெருமானின் அருளின்றி இவ் அன்பு ஒருவாற்றானும் நிகழாது. "என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்பொன்போல் எரியில் பொரிய வறுப்பினும்அன்போடுருகி அகம் குழைவார்க்கு அன்றிஎன்போன் மணியினை எய்த ஒண்ணாதே" (திருமந்திரம்)

 

     "ஆங்கவன் அருளால் பத்தி நன்கு உண்டாம்பத்தியால் அவன் அருள் உண்டாம்நீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்கள் உரைத்திடும் படியேதீங்கு அறு கருமம் இயற்றிய பலத்தால் சிவனருள் செய்திய வருமால்ஓங்கிய பத்தியால் சிவதருமம் ஒழிவறப் புரிந்திடப்படுமால்" என்பது வாயுசங்கிதை.  "முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக் காட்ட" என்பதனால்,   'தூ நல் சீர் என அடை கொடுத்தார். "அன்பெலாம் ஒரு பிழம்பு எனத் திரண்ட கண்ணப்பன்" என இவ்வாசிரியர் காஞ்சிப் புராணத்துக் கூறினார்.

 

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்

சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.      --- திருவாசகம்.

 

     கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாட்டில் உடுப்பூரில் வேடர் தலைவனான நாகன் என்பானுக்கும் தத்தை என்பாளுக்கும் திருமகனாய் அவதரித்துத் "திண்ணனார்" என நாமகரணம் செய்யப் பெற்று வளர்ந்து காளைப் பருவம் அடைந்தார். அப்போது நாகனுக்குக் கிழப்பருவம் ஆனதால்வேட்டைக்கு நெடுங்காலம் செல்லவில்லை. மிருகங்கள் எங்கும் மிகுந்து பயிர்களையும் உயிர்களையும் அழிவு செய்தன. அதனால் வேடர்கள் யாவரும் நாகனிடம் சென்று அந் நிலைகூறஅவன் தனக்கு வேட்டையாட வலியின்மையின்தம் மகற்குத் தலைமை நல்கி,அவனை நன்னாளில் வேட்டைக்கு விடுத்தான்.  வேட்டைமேல் சென்ற திண்ணனார் ஒரு பன்றியைப் பின் தொடர்ந்தார். நாணன்காடன் என்னும் இரண்டு வேடர்களே அவருடன் ஓடினார்கள். அப் பன்றி சீகாளத்தி மலைவரையும் தப்பி ஓடிற்று. முடிவில் திண்ணனார் பொன் முகலியாற்றைக் கடந்து மலை ஏறினார். அருவக்கு மலை ஏற ஏற பாரம் குறைவது போலத் தோன்றிற்று. குடுமித் தேவரைத் தரிசித்த அளவில் அன்புருவமாயினார். சிவலிங்கப் பெருமானைக் கட்டியணைத்தார்.  உச்சி மோந்தார். நெடுநேரம் நெட்டுயிர்த்தார்.  அனந்த பரவசராயினார் திண்ணனார். பெருமான் திருமுடியில் பூக்கள் இருக்கக் கண்டு இது என்னவென்று நாணனைக் கேட்டார். நாணன், "முன்னொருகால் நான் இங்கு வந்தேன். அப்போது ஒரு பார்ப்பான்,தேவர் தலைமேல் நீரை வார்த்துப் பச்சிலைகளையும் மலர்களையும் இட்டுஊண் உதவிஏதோ சில பேச்சுக்கள் எதிரில் நின்று பேசினான்" என்றான். அது கேட்ட திண்ணனார், "யானும் அது செய்வேன்" என்று துணிந்தார். பெருமானைத் தனியே விட்டுப் போகவே மனமில்லை. ஆயினும் நீர்பூஊன் முதலிய கொண்டுவர வேண்டுமென்று பரிந்தார். ஒருவாறு துணிந்து சென்று பொன்முகலி கடந்து தாம் கொன்ற பன்றி இறைச்சியைத் தமது வாயில் இட்டு அதுக்கிப் பார்த்துச் சுவைகண்டுசுவை மிக்க இறைச்சிகளை எல்லாம் ஒரு கல்லையில் வைத்துக் கொண்டுதமது வாய் நிறைய நீர் முகந்துபூக் கொய்து குடுமியில் செருகிப் பெருமான் பசித்திருப்பாரே என்று விரைந்தோடி வந்து,வாய் நீரைத் திருமுடிமேல் உமிழ்ந்துபூக்களையும் பெய்துகொணர்ந்த இறைச்சியைப் படைத்து உண்பித்தார். நாணன் முதலியவர்கள் இவரைத் தெய்வம் பிடித்துக்கொண்டதென்று ஊர்க்குத் திரும்பினார்கள். அன்று இரவெல்லாம் இமை கொட்டாது பெருமானுக்குக் காவல் இருந்தார். மறுநாள் அதிகாலையில் பெருமானுக்கு ஊன் முதலியன கொணர வேண்டிக் காடு புக்கார்.  அவர் சென்றதும் நாள்தோறும் பூசை செய்துவரும் சிவகோசரியார் என்னும் அருச்சகர் வந்து இறைச்சி இறைந்திருத்தல் கண்டு உடல் நடுங்கிஅவற்றை எல்லாம் சுத்தம் செய்து மறுபடி நீராடிப் போந்து வழக்கப்படி பூசித்தார். அவர் பூசை முடித்துச் சென்றதும்திண்ணனார் வந்து தமது பூசையைச் செய்து முடித்துப் பெருமான் எதிரில் நின்ற நிலையில் இமை கொட்டாதிருந்தார்.

 

        ஐந்து நாள் இவ்வாறு நடக்கவும்சிவகோசரியார் மிக்க வருத்தம் அடைந்தார். ஐந்தாம் நாள் இரவில் பெருமான் அவர் கனவில் தோன்றி, "அன்பனே! நீ வருந்த வேண்டா. அவனை வேடன் என்று நினைத்தல் கூடாது. அவனுடைய பெருமையை நாளை அறிவாய். நீ நமக்குப் பின்புறம் ஒதுங்கி மறைந்திருப்பாய்" எனப் பணித்தார். மறுநாள் அவ்வாறே சிவகோசரியார் செய்யஅன்று வழக்கப்படி வேட்டையாடி இறைச்சி கல்லையில் கொண்டுவாயினீர் முகந்து குடுமியில் பூத்தாங்கி வந்த திண்ணனார்பெருமானுடைய வலக்கண்ணில் இரத்தம் வடிதலைக் கண்டார். விழுந்தார்எழுந்தார்பதைத்தார்துடித்தார். அருகில் சென்று துடைத்தார். அது நிற்கவில்லை. ஓடிப்போய்ப் பச்சிலைகள் கொணர்ந்து அக்கண்ணில் பிழிந்தார். இரத்தம் பெருகுதல் பின்னும் அதிகமாயிற்று. மயங்கினார். திகைத்தார். இன்னது செய்வது என்று தோன்றவில்லை. அப்போது வேடர்கள் கூறும் "ஊனுக்கு ஊன்" என்னும் பழமொழி எதிரில் வந்து நிற்கக் கண்டார். உடனேதன் வலக்கண்ணைத் தோண்டி அப்பினார்.  இரத்தம் நின்றது. கண் பழையபடி ஆயிற்று. திண்ணனார் களிப்படைந்தார். பெருமான் தமது இடக்கண்ணில் இரத்தம் காட்டஒரு கண்ணை இழந்த திண்ணனார், "இன்னும் ஒரு கண் எனக்கு உண்டுஇதற்கு அஞ்சேன்" என்று இடன்றி அதற்குச் செருப்புக் காலைப் பெருமான் இடக்கண்ணில் வைத்துத் தமது இடக் கண்ணையும் தோண்ட அம்பை ஊன்றினார். பெருமான் அது பொறாது, "நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என்அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!" என்று அருளித் தோண்டும் கையைத் தமது திருக்கரத்தால் பற்றிக் கொண்டு, "கண்ணப்ப! எமக்கு வலப்பால் நீ என்றும் இருக்க" எனத் திருவருள் புரிந்தார்.

 

     ஊனுக்கு ஊன் என்பதைக் கண்ணப்ப நாயனார் கற்று அறிந்தாரில்லை. வேடர்கள் அவ்வபோது சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த நினைவு அவருக்கு இறையருளைப் பெறத் துணை நின்றது.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்....

 

உணற்கு இனிய இன்னீர் பிறிதுழி இல் என்னும்

கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார் --- கணக்கினை

முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்

கற்றலின் கேட்டலே நன்று.           --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

     உணற்கு இனிய இன்னீர் --- குடித்தற்கு இனிய உவர்ப்புச் சுவை இல்லாத நன்னீர்பிறிது உழி இல் என்னும் --- வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும்,கிணற்று அகத்துத் தேரை போல் --- கிணற்றினுள்ளே வாழும் தவளையைப் போல்ஆகார் --- தாமும் கருதாமல்கணக்கினை --- நூல்களைமுற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின் --- நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும்கேட்டலே நன்று --- (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று. (கற்றலிற் கேட்டலே இனிது.)

     தேரை போல் ஆதலாவது,தாம் விரும்பிச் செய்யும் கற்றதனால் அன்றிக் கேட்டறிதலினால் பயனில்லை என்று கருதுதல். தாம் பல நாளுங் கற்றறிந்ததில் தளர்வு வந்துழிஅறிஞர்வாய்க் கேட்ட கேள்வி ஊன்றுகோல் போல உதவுமாதலின்,கேட்டலே நன்று என்றார். வருந்திக் கற்றலினும் கேட்டல் மிக இனிது என்பார், 'முற்றப் பகலும் முனியாது இனிதோதிக் கற்றலின்என்று கற்றலின் அருமையை விளக்கினார். கணக்கு - வரையறை. மக்கள் நடத்த வேண்டிய வாழ்க்கையை வரையறை செய்தலின் நூல்கள் கணக்கு என்ற பெயரைப் பெற்றன. கணக்கினை அறிந்தோர் கணக்காயர் எனப்படுவார்.

 

கேள்வி முயல்.               --- ஆத்திசூடி.

 

இதன் பொருள் ---

 

     கேள்வி --- கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்குமுயல் --- முயற்சி செய்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...