திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை
சிற்றினம் சேராமையாவது, சிறியார் இனத்தைப் பொருந்தாமை.
சிறிய இனமாவது, நல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும், பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும், உள்ளே பகையும், உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும், கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார்.
அறிவினை வேறுபடுத்தி, தீநெறியில் செலுத்தி, இம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால், பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால், பெரியாரைத் துணைக் கொள்வதோடு,சிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "மனத் தூய்மை உடையவர்க்கு நன்மக்கள் பேறு வாய்க்கும். இனம் தூய்மை உடையார்க்கு நன்றாக முடியாத செயல்களே இல்லை" என்கின்றார் நாயனார்.
எழுபிறப்பும் தீயவை தீண்டாத நன்மக்களை ஒருவன் பெறுவானாயின்,அவன் பெற்ற அப் பேற்றினை வைத்தே அவன் மாசில்லாத மனத்தை உடையவன் என்று அறியலாம். அவன் நல்லினத்தைச் சார்ந்து இருப்பானானால், அவன் எடுத்த செயல்கள் யாவும் இடையூறு இன்றி முடியும்.
நல்லினத்தைச் சேராது சிற்றினத்தைச் சேர்வானாயின், மேற்கூளிய நன்மைகளை அவனுக்கு இல்லையாகும்.
திருக்குறளைக் கோண்போம்...
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும், இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும்--- மனம் தூயர் ஆயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்,
இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை--- இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)
பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாதல் காண்க...
தக்கார் வழிகெடாது ஆகும், தகாதவரே
உக்க வழியராய் ஒல்குவர், - தக்க
இனத்தினான் ஆகும் பழியும்,புகழும்,
மனத்தினான் ஆகும் மதி. --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
தக்கார் வழி கெடாது ஆகும் --- தகுதியுடையாரது சந்ததி என்றும் தளராது விருத்தி அடைவதாகும்; தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் --- தகுதியற்றவர் அழிந்த வழியை உடையவராய்த் தளர்வார்; பழியும் புகழும் --- ஒருவனுக்கு உளவாகும் பழியும் புகழும், தக்க இனத்தினான் ஆகும் --- அவன் சேர்ந்த இனத்தினால் உளவாகும், மதி --- அறிவானது, மனத்தினான் ஆகும் --- (ஒருவனது) மனத்தினளவே உண்டாகும்.
நல்லவர்கள் கால்வழி கெடாது, நல்லவர்கள் அல்லாதவர் கால்வழியே கெடும், தீய சேர்க்கையால் பழியும், நற்செய்கையால் புகழும், தத்தம் மன இயற்கைக்கு ஏற்ப அறிவும் மக்கட்கு உண்டாகும்.
No comments:
Post a Comment