திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை
சிற்றினம் சேராமையாவது, சிறியார் இனத்தைப் பொருந்தாமை.
சிறிய இனமாவது, நல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும், பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும், உள்ளே பகையும், உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும், கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார்.
அறிவினை வேறுபடுத்தி, தீநெறியில் செலுத்தி, இம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால், பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால், பெரியாரைத் துணைக் கொள்வதோடு, சிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "ஒருவனுக்கு மனத்தின் நன்மையாலே மறுமை இன்பம் உண்டாகும். அதுவும், இனத்தின் நன்மையால் வலிமையைப் பெறும்" என்கின்றார் நாயனார்.
மனத்தின் நன்மையால் ஒருவனுக்கு மறுமை இன்பம் உண்டாகும். எப்போதாவது உண்டாகும் தாமத குணத்தினால், மனநலம் வேறுபட்டாலும், அதனை அவன் சார்ந்துள்ள நல்லினமானது காவலாக அமைந்து, அவனது மனத்தைச் சீர்பெறத் திருத்தி, மறுமை இன்பத்தை அடைவிக்கும் என்பதால், "இனநலம் எமாப்பு உடைத்து" என்றார்.
திருக்குறளைக் காண்போம்...
மனநலத்தின் ஆகும் மறுமை, மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
மனநலத்தின் மறுமை ஆகும் --- ஒருவற்கு மன நன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து --- அதற்கு அச் சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,
(மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மை தானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று - வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும்என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு, நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
தூயசொல் ஆட்டும்,துணிவு அறிவும்,துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும்-பூயல்
படுக்குந் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கு மடிச்சேரா வாறு. --- இன்னிலை.
இதன் பொருள் ---
தூய சொல்லாட்டும் --- தூய்மையான சொற்களைப் பேசுவதும்; துணிவு அறிவும் --- (அறிஞர் உண்டென்று ஆய்ந்து) துணிந்த பொருளை அறிவதும், துன்பங்கள் தோய கலங்காத் துணை வலியும் --- கவலைகள் வந்து பொருந்தியபோது மனங் கலங்காத வளவு வலிமை பெற்றிருப்பதும், பூயல் படுக்கும் திருவத்தனாரே --- (ஆகிய இவற்றை) பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினை உடையவரே, அடுக்கும் மடி சேராவாறு பறிப்பர் --- அடுக்கி வருகின்ற பிறவியிற் சேராதவாறு அதனைக் களைவர்.
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம்
எரிப்பச் சுட்டு எவ்வநோய் ஆக்கும் --- பரப்பக்
கொடுவினையர் ஆகுவர் கோடாருங் கோடிக்
கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து.--- நாலடியார்.
இதன் பொருள் ---
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதும் எரிப்பச் சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் --- உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின் அழற்சியைப் பொருந்தினால், எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தம் தரும் நோயை உண்டாக்கும்; கோடாரும் கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து கோடிப் பரப்பக் கொடுவினையர் ஆகுவர் --- நெறி கோணாத நல்லோரும் தீவினையாயினாரைச் சார்ந்து, அதனால் நெறி கோணி மிக்க கொடுந்தொழில் உடையராவர்.
கயவரைச் சேர்ந்தவன் கலந்த போதவர்
செயலினை எண்ணுவன்,தினம் செலச்செல
மயல்மிகுந்து, அவர்செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன்,
இயவரைச் சேர்தல்போல் இல்லைத் தீமையே. --- நீதிநூல்.
இதன் பொருள் ---
கீழ்மக்களைச் சேர்ந்தவன் சேர்ந்தபொழுது அவர் செயலை இழிபாக நினைப்பான். நாளேற நாளேற மயங்கி அவர் செயலை மகிழ்ந்து கைக்கொள்வன். ஆதலால், கீழ்மக்களைச் சேர்தல்போல் பெருந்தீமை வேறொன்றும் இல்லை.
கயவர்-கீழ்மக்கள். தினம்-நாள். இயவர்-கீழோர்.
No comments:
Post a Comment