பொது --- 1102. வதைபழக மறலி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

வதைபழக மறலி (பொது)


முருகா! 

விலைமாதர் கண்வலையில் வீழ்ந்து துன்புறாமல், 

தேவரீர் திருக்கண் பார்த்து அருளவேண்டும்.


தனதனன தனதனன தனதனன தனதனன

     தனதனன தனதனன ...... தனதான


வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென

     வயிரமர கதமகர ...... மளவாக


வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி

     வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய


இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி

     எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா


இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன

     திருநயன கருணைசிறி ...... தருள்வாயே


பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை

     பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப்


பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை

     பரியதனி யெயிறுகொடு ...... குருநாடர்


கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய

     கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக்


கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக

     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.


                          பதம் பிரித்தல்


வதைபழகு அ மறலி, விறல் மதனன், வழி படுதும் என

     வயிர மரகத மகரம் ...... அளவாக,


வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலகவிழி

     வளை இளைஞர் உயிர் கவர ...... வருமாய,


இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி,

     எழுபிறவி நெறி ஒழிய ...... வழிகாணா,


இடர்கள் படு குருடன் எனை அடிமைகொள, மகிழ்வொடு உனது

     இரு நயன கருணை சிறிது ...... அருள்வாயே.


பத யுகள மலர்தொழுது, பழுது இல் பொரி, அவல், துவரை,

     பயறு, பெரு வயிறு நிறைய ...... விடா, முப்


பழமும் இனிது உதவி முனி பகர, வட சிகரிமிசை

     பரியதனி எயிறுகொடு, ...... குருநாடர்


கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட, நெடிய

     கடல் உலகு நொடியில் வரும், ...... அதிவேகக்


கலப கக மயில் கடவி, நிருதர் கஜ ரத துரக

     கடகம் உடன் அமர் பொருத ...... பெருமாளே.


பதவுரை


பதயுகள மலர் தொழுது --- தாமரை மலர் போன்ற திருவடி இணையை வணங்கி,


பழுது இல் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா --- மாசில்லாத (தூய) பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய நிவேதித்து,


முப்பழமும் இனிது உதவி --- மா, பலா, வாழை என்னும் முக்கனிகளையும் இனிய மனத்துடன் நிவேதித்து,


முனி பகர --- (வியாச) முனிவர் சொல்ல,


வட சிகரிமிசை --- வடதிசையில் உள்ள மேருமலையில் இருந்து,


பரிய தனி எயிறு கொடு --- பருத்த, சிறந்த தந்தத்தைக் கொண்டு,


குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட --- குரு நாட்டவர்களான பாண்டவர்களின் வரலாறு முழுதும் எழுதிய ஒப்பற்ற விநாயகன் ஆகிய யானை பிளிறிடும்படியாக


நெடிய கடல் உலகு நொடியில் வரும் --- நீண்ட கடலால் சூழப்பட்டு உள்ள உலகத்தை ஒரு நொடியில் வலமாக வருகின்ற,


அதிவேகக் கலப கக மயில் கடவி --- அதிக வேகத்தைக் கொண்டதும், தோகையினை உடைய பறவை ஆகிய மயிலினைச் செலுத்தி,


நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே --- அசுரர்களின் யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!


வதை பழகு அ மறலி --- உயிரை வதைக்கின்ற தொழிலையே செய்து வருகின்ற அந்த எமனும்,


விறல் மதனன் --- வெற்றியினை உடைய மன்மதனும்,


வழிபடுதும் என --- (நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில்


வயிர மரகத மகரம் அளவாக --- வயிரத்தாலும், பச்சை மரகதத்தாலும் ஆன மகரமீன் போன்ற வடிவில்,


வரி சிதறி --- வரிகள் படர்ந்து, 


விடம் அளவி வளரும் --- விடத்திலே தோய்ந்து வளர்ந்துள்ள.


இரு கலகவிழி வளை --- (காமுகர் உள்ளத்திலே) கலகத்தை உண்டு பண்ணுகின்ற இரண்டு கண்களைக் கொண்டு வளைத்து,


இளைஞர் உயிர் கவர வரும் மாய --- இளைஞர்களின் உயிரைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரிகளும்,


இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி --- தங்கள் இதயத்தின் உள்ள கருத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து,


எழுபிறவி நெறி ஒழிய வழிகாணா --- எடுத்த பிறவி நெறியானது ஒழிதற்கான வழியைக் காணாது,


இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள --- துன்பத்தை அனுபவிக்கின்ற (அறிவற்ற) குருடனாகிய அடியேனை அடிமை கொள்வதற்கு,


மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே --- திருவுள்ளம் மகிழ்ந்து தேவரீரது இரு கண்களைக் கொண்டு கருணையுடன் சிறிதே பார்த்து அருள் புரிவீராக.

பொழிப்புரை

தாமரை மலர் போன்ற திருவடி இணையை வணங்கி, மாசில்லாத (தூய) பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய நிவேதித்து, மா, பலா, வாழை என்னும் முக்கனிகளையும் இனிய மனத்துடன் நிவேதித்து, வியாச முனிவர் சொல்ல, வடதிசையில் உள்ள மேருமலையில் இருந்து, பருத்த, சிறந்த தந்தத்தைக் கொண்டு, குரு நாட்டவர்களான பாண்டவர்களின் வரலாறு முழுதும் எழுதிய ஒப்பற்ற விநாயகன் ஆகிய யானை பிளிறிடும்படியாக, நீண்ட கடலால் சூழப்பட்டு உள்ள உலகத்தை ஒரு நொடியில் வலமாக வருகின்ற, அதிக வேகத்தைக் கொண்டதும், தோகையினை உடைய பறவை ஆகிய மயிலினைச் செலுத்தி அசுரர்களின் யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!

உயிரை வதைக்கின்ற தொழிலையே செய்து வருகின்ற அந்த எமனும், வெற்றியினை உடைய மன்மதனும், எங்களது தொழிலை மேலும் சிறப்பாகச் செய்ய, நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிந்து உன்னை வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில், வயிரத்தாலும், பச்சை மரகதத்தாலும் ஆன மகரமீன் போன்ற வடிவில், வரிகள் படர்ந்து, விடத்திலே தோய்ந்து வளர்ந்துள்ள. காமுகர் உள்ளத்திலே கலகத்தை உண்டு பண்ணுகின்ற இரண்டு கண்களைக் கொண்டு, இளைஞர்களை வளைத்து, அவரது உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற மாயக்காரிகளும், தங்கள் இதயத்தின் உள்ள கருத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து, எடுத்த பிறவி நெறியானது ஒழிதற்கான வழியைக் காணாது, துன்பத்தை அனுபவிக்கின்ற அறிவற்ற குருடனாகிய அடியேனை அடிமை கொள்வதற்கு, திருவுள்ளம் மகிழ்ந்து தேவரீரது இரு கண்களைக் கொண்டு கருணையுடன் சிறிதே பார்த்து அருள் புரிவீராக.


விரிவுரை

இப் பாடலின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்களின் கண்களைக் குறித்து விளக்கி, அவர்களால் காமுகர்கள் படுகின்ற துன்பத்தை விளக்கினார். இதனால், பிறவிநெறியில் இருந்து ஈடேற வழி காணாது துன்புறுகின்ற உயிர்களைக் காப்பாற்ற இறைவன் திருக்கண் நோக்கம் ஒன்றே வழி எனவும் காட்டினார்.


இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள --- 

அறிவுக் கண் இல்லாத குருடன். 


பதயுகள மலர் தொழுது --- 

உகளம் - இரண்டு.

மலர் - "பூ எனப்படுவது பொறிவாழ் பூவே" என்று நால்வரு நான்மணி மாலையில் வரும். மலர் என்றாலே தாமரை மலரைத் தான் குறிக்கும்.


பழுது இல் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா, முப்பழமும் இனிது உதவி --- 

        குணங்கள் மூன்று --- சத்துவம், இராஜசம், தாமதம் என்பன. இந்த முக்குணங்களும் உண்ணும் உணவினாலேயே விளைகின்றன. குண வேற்றுமையாலேயே மனிதனுக்கு உயர்வு தாழ்வுகள் ஏற்படுகின்றன. 

மது மாமிச உணவினால் தாமத குணமும், வெள்ளுள்ளி, வெங்காயம், முள்ளங்கி, சுரைக்காய் முதலிய உணவுகளினால் இராஜச குணமும்,  கடலை, அவல், துவரை, அவரை, தேன் முதலிய உணவுகளினால் சத்துவ குணமும் உண்டாகும்.  

மூலாதாரத்தில் எழுந்தருளி உள்ள விநாயகப் பெருமானுக்கு சத்துவகுண பதார்த்தங்களை நிவேதிக்க வேண்டும். அவைகளால் அவர் நமக்கு சத்துவகுணத்தைத் தருகின்றார். என்பதைக் குறிக்கும்.


முனி பகர --- 

முனிவர்களில் சிறந்தவர் வியாச முனிவர் சொல்ல


வட சிகரிமிசை --- 

சிகரி - மலை. வடசிகரி - வடதிசையில் உள்ள மேருமலை.


குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு --- 

வேதவியாசர் இமாசலத்தில் மூன்று ஆண்டுகள் யோகத்தில் அசைவற்று இருந்தார். அந்த யோகக் காட்சியில் கண்ட பாரத வரலாற்றைப் பாடல் வடிவாகப் பாடவேண்டுமென்று துணிந்தார். பாடுகின்ற கவிவாணன் பக்கத்தில் எழுதுகின்றவன் இருத்தல் அவசியம். பாடுகின்றவனே எழுதினால் பாடுகின்ற கவனம் தடைப்படும். எழுதுகின்றவர் சிறந்த மதி நலம் வாய்ந்தவராக இருத்தல் அதனினும் அவசியம். பதங்களிலுள்ள எழுத்துக்களைச் சிறிது இடம் பெயர்த்து நிலை மொழியின் ஈற்றெழுத்தை வருமொழியோடு சேர்த்துவிட்டால் பேராபத்தாக முடிந்துவிடும். உதாரணமாக;

"மாதேவா சம்போ கந்தா" என்ற பதங்களை எழுதுகின்றவன் "மாதே வா சம்போகந் தா" என்று எழுதினால் எவ்வளவு பெரிய விபரீதமாக ஆகின்றது என்று பாருங்கள். 

ஆதலினால் ஆனைமுகவர் ஆகிய ஐந்துகர பண்டிதரே எழுதவல்லகவர் என்று வியாசர் எண்ணினார். விநாயகமூர்த்தியை வேண்டிய தவம் இருந்தார். ஆனைமுகத்து அண்ணல் ஆகு (பொருச்சாளி) வாகனம் மீது தோன்றி அருளினார். விநாயகப் பெருமானின் திருவடி மலர் மேல் வியாசர் வீழ்ந்து பன்முறை பணிந்து, “எந்தையே! அடியேன் பாரதம் பாட மேற்கொண்டிருக்கிறேன். அதனைத் தேவரீர் மேருகிரியில் இருந்து எழுதி உதவிசெய்தல் வேண்டும்” என்று வேண்டி நின்றார். விநாயகர் புன்னகை புரிந்து, "அன்பனே! நன்று நன்று. உமது எண்ணம் நன்று. நான் உன்னிடம் பாரதம் எழுத ஒப்புக் கொண்டேனாயின் எத்தனையோ அன்பர்களின் காரியங்களில் இடர் கெடுத்து உதவுதல் வேண்டியதற்குத் தடைபடுமல்லவா? அதுவும் நீ நூதனமாகப் பாடிக்கொண்டிருந்தால் பாரதம் பாடி முடிய எத்துணை ஆண்டுகள் செல்லுமோ? ஆதலின் இதற்கு நாம் உடன்பட மாட்டோம்" என்றனர்.

வியாசர், "பெருமானே! அருட்கடலே! தேவரீரைத் தவிர இதனை எழுத வல்லார் வேறு இல்லை. வேண்டிய வரங்கொடுக்கும் கருணை வள்ளலாகிய நீர் இதனை மன்பதைகட்கெல்லாம் நலன் விளையும் பொருட்டு எழுதுதல் வேண்டும்" என்று வேண்டி வணங்கினார். 

விநாயகர், "அன்பனே! அங்ஙனமே உனது கருத்தின்படி நாம் எழுதுவோம். ஆனால் உனக்கும் எமக்கும் ஓர் உடன்படிக்கை இருத்தல் வேண்டும். அதாவது நாம் மிக்க வேகமாக எழுதுவோம். எமது எழுத்தாணி ஒழியாமல் நீ சொல்ல வேண்டும். சிறிது தடைபட்டாலும் நாம் எழுதுவதை நிறுத்திவிடுவோம்" என்றார். 

வியாசர், "எம்பெருமானே! அங்ஙனமே மிக்க விரைவுடன் கூறுவேன். ஆனால் அடியேன் கூறும் சுலோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொண்டு எழுதுதல் வேண்டும்” என்றார். விநாயகரும் அதற்கு உடன்பட்டார்.

வியாசர் விநாயகரைத் தியானித்துப் பாடத் தொடங்கினார். திருவருள் துணைசெய்ய வேகமாகப் பாடுவாராயினார். இடையில் மிக்கக் கடினமான பதங்களுடைய ஒரு சுலோகத்தைச் சொன்னார். விநாயகர் சற்று அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் சிந்தனை செய்து கொண்டார். அவைகளை மிக்க விரைவுடன் கூறிய பின் மீண்டும் ஒரு கடின பதங்கள் அமைந்த சுலோகத்தைக் கூறினார். ஐங்கரனார் அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல சுலோகங்களை உள்ளத்தில் ஆவாகனம் பண்ணிக் கொண்டார். இப்படியாக விநாயகர் சிந்தித்து எழுதும் பொருட்டு வியாசர் கூறிய சுலோகங்கள் எண்ணாயிரத்து எண்ணூறு.  வியாசர் மொத்தம் பாடிய சுலோகங்கள் 60 இலட்சம்.


"பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்,

     கோடு ஒடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்,

     பால் நிறக் கணேசர் குவா குவாகனர் ...... இளையோனே!"


"இலகு கடலை கல்கண்டு, தேனொடும்,

     இரதம் உறு தினைப் பிண்டி, பாகுடன்,

     இனிமையின் நுகருற்ற, எம் பிரான், ஒரு .......கொம்பினாலே


எழுது என மொழிய, பண்டு பாரதம்

     வடகன சிகரச் செம்பொன் மேருவில்

     எழுதிய பவளக் குன்று, தாதையை ...... அன்றுசூழ


வலம்வரும் அளவில், சண்ட மாருத

     விசையினும் விசை உற்று, எண் திசாமுக

     மகிதலம் அடையக் கண்டு, மாசுணம் ......உண்டு உலாவு


மரகத கலபச் செம்புள் வாகனம்

     மிசைவரு முருக! சிம்புளே! என

     மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு...... தம்பிரானே."


“பகைகொள் துரியோதனன் பிறந்து

     படைபொருத பாரதந்தெரிந்து

        பரியது ஒரு கோடு கொண்டு சண்ட  வரைமீதே

   பழுதுஅற வியாசன்அன்று இயம்ப

     எழுதிய விநாயகன் சிவந்த

        பவளமத யானை பின்பு வந்த        முருகோனே”

                                                                              

எனவரும் திருப்புகழ்ப் பாடல்களையும் கருத்தில் கொள்ளுதல் நலம்.


உலகை ஒரு நொடியில் வலமாக வருகின்ற மயிலின் வேகத்தைக் கண்டு யானை அஞ்சிப் பிளறினதாம்.


அதிவேகக் கலப கக மயில் கடவி --- 


கலபம் - தோகை. ககம் - பறவை.


நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே --- 


கடகம் - படை.


கருத்துரை


முருகா! விலைமாதர் கண்வலையில் வீழ்ந்து துன்புறாமல், தேவரீர் திருக்கண் பார்த்து அருளவேண்டும்.


13. பயன் தராது ஒழிபவை

 


"மேட்டுக்கே விதைத்த விதை, வீணருக்கே

     செய்த நன்றி, மேயும் பட்டி

மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே

     தேடியிட்ட வண்மை யெல்லாம்

பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்

     வீதிதொறும் பரப்பி டாமல்

காட்டுக்கே யெறித்தநிலா, கானலுக்கே

     பெய்தமழை கடுக்குந் தானே!"


இதன் பொருள் ---

மேட்டுக்கே விதைத்த விதை - மேட்டிலே தூவிய விதையும், வீணருக்கே செய்த நன்றி - சோம்பேறிகட்குச் செய்த நன்மையும், மேயும் பட்டி மாட்டுக்கே கொடுத்த விலை - (பயிரையெல்லாம்) மேய்கின்ற,  கட்டுக்கு அடங்காத மாட்டுக்குக் கொடுத்த விலையும், பரத்தையர்க்கே தேடியிட்ட வண்மை - விலைமாதருக்கு உழைத்துக் கொடுத்த கொடையும்  (செல்வமும்), எல்லாம் - ஆகிய இவை, யாவும், காட்டுக்கே எறித்த நிலா - காட்டிலே (ஒருவருக்கும் பயனின்றிப்) பரப்பிய நிலாவையும், கானலுக்கே பெய்த மழை - கடற்கரையிலே பெய்த மழையையும், கடுக்கும் - ஒக்கும்.

      மேட்டில் விதைத்த விதை மழை பெய்தாலும் நீர் பாய்ச்சினாலும் பள்ளத்திலே சென்று விழுந்துவிடும். கட்டுக்கடங்காத மாட்டைப் பட்டிமாடு என்பது வழக்கம். ‘காட்டுக்கு எறித்த நிலவும் கானலுக்குப் பெய்த மழையும்' என்பது பழமொழி.


62. நடுவுநிலைமை தவறியவன் என்ன ஆவான்

 


ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்

     துரைப்போர் மலைக்குரங்காம்;

உயர்வெள் ளெருக்குடன் முளைத்துவிடு மவர்இல்லம்;

     உறையும் ஊர் பாழ்நத்தம்ஆம்;


தாரணியில் இவர்கள்கிளை நெல்லியிலை போல்உகும்;

     சமானமா எழுபிறப்பும்

சந்ததியிலா துழல்வர்; அவர்முகத் தினின்மூத்த

     தையலே குடியிருப்பாள்;


பாரமிவர் என்றுபுவி மங்கையும் நடுங்குவாள்;

     பழித்ததுர் மரணமாவார்;

பகர்முடிவி லேரவுர வாதிநர கத்தனு

     பவிப்பர்எப் போதுமென்பார்;


வாரமுடன் அருணகிரி நாதருக் கனுபூதி

     வைத்தெழுதி அருள் குருபரா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா - அன்புடன் அருணகிரியாருக்கு (கந்தர்) அநுபூதி எழுதும்  உன்னத நிலையை அருளிய குருபரனே!

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஓர விவகாரம் ஆ(க) வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலைக்குரங்கு ஆம் - ஒருதலை வழக்காக வந்தவர்களுடைய முகத்தைப் பார்த்துத் தீர்ப்புக் கூறுவோர் மலைக்குரங்கு ஆவர். 

அவர் இல்லம் உடன் உயர் வெள் எருக்கு முளைத்து விடும் - அவர் வீட்டிலே உடனே உயரமான வெள் எருக்கஞ் செடிகள் தோன்றிவிடும்.

உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் - அவர்கள் குடியிருக்கும் ஊரும் பாழான நத்தம் ஆகிவிடும். 

தாரணியில் இவர்கள் கிளை நெல்லி இலை போல் உகும் - உலகிலே இவர்களுடைய உறவினர் நெல்லியின் இலைபோலப் பிரிந்து விடுவார்கள்.

சமானமாம் எழுபிறப்பும் சந்ததியிலாது உழல்வர் - அவர்கள் எடுக்கும் ஏழுபிறப்பிலும் ஒன்றுபோல் கால்வழியில்லாமல் வருந்துவர்.

அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் - அவர்களுடைய முகத்திலே மூதேவியே வாழ்வாள். 

புவிமங்கையும் இவர் பாரம் என்று நடுங்குவாள் - நிலமகளும் இவர்களைத் தாங்கமுடியாமல் அஞ்சுவாள்;

  பழித்த துர்மரணம் ஆவார் - பிறர் பழிக்கும்படி கெடுதியான சாவு நேரும்.

  பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து எப்போதும் அனுபவிப்பர் என்பர் - இவ்வாறு இழித்துக் கூறும் முடிவுக்குப் பின் எக்காலத்தும் இரவுரவம் முதலான நரகங்களிலே கிடப்பர் என்று பெரியோர் கூறுவர்.

     ஓரமாக வழக்கு உரைத்தலைவிடக் கொடிய தீமை வேறொன்றும் இல்லை.  அத் தீமைக்குப் பலன் இப் பாடலில் சொல்லப்பட்டது. ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு சொன்னவனுக்கு மேலே சொல்லப்பட்டது.  எனவே, நன்றாக ஒருவன் வாழ்வேண்டுமானால், உள்ளத்தில் பொய் கூடாது. "உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தால் உள்ளத்துள் எல்லாம் உளன்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.


"வேதாளம் சேருமே, வெள்ளெருக்குப் பூக்குமே,

பாதாள மூலி படருமே, -மூதேவி

சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே,

மன்றோரம் சொன்னார் மனை."

என்று ஔவைப் பிராட்டியார் அருளி உள்ளதும் இங்கு கருத்தில் கொள்ளத் தக்கது.

இதன் பொருள் ---

நியாய சபையிலே (நியாயமானதைச் சொல்லாமல்) ஓரம் சொன்னவருடைய வீட்டிலே பேய்கள் (வந்து) சேரும். வெள்ளெருக்கு (முளைத்து) மலரும். பாதாளமூலி என்னும் கொடி படரும். மூதேவியானவள் அவனது வீட்டில் போய் நிலைபெற்று வாழ்வாள். பாம்புகள் குடியிருக்கும்.


78. பாவிக்கு நரகம் நிச்சயம் உண்டு

 


"பொன்னாசை உள்ளவர்க்கு உறவுஏது? குருஏது?

     பொங்குபசி உள்ள பேர்க்குப்

  போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டு

     பொதுமாதர் வலைவி ழியிலே


எந்நாளும் அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம்ஏது,

     என்றென்றும் உறுகல் விமேல்

  இச்சையுள பேர்க்குஅதிக சுகம்ஏது? துயில்ஏது?

     வெளிதாய் இருந்து கொண்டே


பன்னாளும் அலைபவர்க்கு இகழ்ஏது? புகழ்ஏது?

     பாரில்ஒரு வர்க்கு அதிகமே

  பண்ணியிடு மூடருக்கு அறம்ஏது மறம்அலால்?

     பகர்நிரயம் ஒன்று உளதுகாண்!


அன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அல்நாண வருகரி உரித்து அணியும் மெய்யனே - இருள் நாணுமாறு (கருநிறத்துடன்) வந்த யானையின் தோலை உரித்து அணியும் திருமேனியினை உடைய சிவபரம்பொருளே!! அமலனே - குற்றம் அற்றவனே!  அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

பொன் ஆசை உள்ளவர்க்கு உறவு ஏது குரு ஏது - பொருளாசை பிடித்தவர்க்குச் சுற்றமும் ஆசிரியரும் இல்லை.

பொங்கு பசி உள்ள பேர்க்குப் போதவே சுசி ஏது ருசி ஏது - மிகுதியான பசி உடையோர்க்கு நிறைந்த தூய்மையும் உணவு இனிமையும் பார்த்தல் இயலாது. 

பொதுமாதர் விழிவலையிலே எந்நாளும் அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது - விலைமகளிரின் கண்வீச்சில் எப்போதும் அகப்பட்டு உழல்பவர்க்கு அச்சமும் நாணமும் இல்லை. 

என்றென்றும் உறு கல்வி மேல் இச்சை உ(ள்)ள பேர்க்கு அதிக சுகம் ஏது துயில் ஏது - எப்போதும் சிறந்த கல்வியின் மேல் விருப்பம் உடையோர்க்கு மிக வசதியிலும் தூக்கத்திலும் மனம் செல்லாது.

எளிதாய் இருந்துகொண்டே பலநாளும் அலைபவர்க்கு இகழ் ஏது புகழ் ஏது - எளிய வாழ்வில் இருந்து பலநாளும் திரிபவர்க்கு இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இல்லை.

பாரில் ஒருவர்க்கு அதிகமே பண்ணியிடும் மூடருக்கும் மறம் அ(ல்)லால் அறம் ஏது - உலகில் ஒருவருக்குத் துன்பத்தையே செய்யும் பேதையருக்குப் பாவத்தைத் தவிர புண்ணியம் இல்லை, பகர் நிரயம் ஒன்று உளது - கூறப்படும் நரகம் ஒன்று நிச்சயம் இருக்கிறது.


12. தினையவளவு பனை அளவாகும்.

 



"துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்

     பெரிதாகும் தோற்றம் போலச்

செப்பிட்ட தினையளவு செய்த நன்றி

     பனையளவாய்ச் சிறந்து தோன்றும்!

கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்

     வளநாட்டிற் கொஞ்ச மேனும்

உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்

     நினைக்கும் இந்த உலகந் தானே!"


இதன் பொருள் ---


கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டில் - கொப்பு எனும் காதணியை அணிந்த  உமையம்மையை இடப்பாகத்திற்  கொண்ட திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளின், வளம் பொருந்திய நாட்டில், துப்பிட்ட ஆலம் வித்து சிறிது எனினும் பெரிது ஆகும் தோற்றம் போல - துப்பிவிட்ட ஆலம் வித்து சிறியதாயினும் பெரிய மரம்  ஆகும் காட்சியைப்  போல, செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி பனை அளவாய்ச் சிறந்து தோன்றும் - கூறப்பட்ட தினையின் அளவாகச் செய்த நன்மை (ஏற்கும் இடத்தால்) பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும், இந்த உலகம் கொஞ்சமேனும் உப்பிட்ட  பேர்கள் தமை உள வரையும் நினைக்கும் - இந்த உலகம் சிறிதளவாக  உப்பு இட்டவரையும் உயிருள்ள வரையும்  நினைத்துப் பார்க்கும்.

கொப்பு - ஒரு காதணி. ‘துப்பிவிட்ட' என்பது ‘துப்பிட்ட' என வந்தது. செப்பு - சொல்.

 ‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

 கொள்வர் பயன்தெரி வார்.'

என்பது திருக்குறள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது  பழமொழி.


61. நடுவு நலைமை

 


"வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்

     வருமென்றும் நேசரென்றும்

வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன

     வானென்றும் ஏழையென்றும்


இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்

     எள்ளள வுரைத்திடாமல்

எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்

     ஏற்கச்ச பாசமதமாம்


முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்

     மொழிந்திடின் தர்மமதுகாண்

முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று

     முன்தருமர் சொன்னதலவோ?


மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட

     வளர்ந்தருள் குழந்தைவடிவே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

அன்று உமை, மைந்தன் என்று முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே! - முற்காலத்தில் உமையம்மை, மகன் என்று முலைப்பால் அளிக்க வளர்ந்தருளிய குழந்தை உருவம் உடையவனே!

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வந்த விவகாரத்தில் - தன்னிடத்தில் வந்த வழக்கிலே, இனிய பரிதானங்கள் வரும் என்றும் - நல்ல இலஞ்சப் பொருள்கள் கிடைக்கும் எனவும், நேசர் என்றும் - நண்பர்கள் எனவும், வன் பகைஞர் என்றும் - கொடிய பகைவர்கள் எனவும், அயலோர் என்றும் - முன்னர் பழக்கம் இல்லாதவர்கள் எனவும், மிக்க தனவான் என்றும் - பெரிய செல்வன் எனவும், ஏழை என்றும் - வறியவன் எனவும், இந்த வகையைக் குறித்து ஒரு பட்சபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் - இத்தகைய நிலையைக் குறித்து விருப்பு  வெறுப்புக்கள் எள்ளளவேனுங் கூறாமல், எண்ணமுடனே இலிகித புத்தியொடு - (நடுநிலை) நினைவுடன் எழுத்து மூலமான சான்றுகளோடு, சாட்சிக்கும் ஏற்க - சாட்சி கூறியதற்குந் தக, சபா சமதம் ஆம் - அவையோர் ஒப்பும் முறையில், முந்த இருதலையும் சமன்செய்த கோல்போல் - முதன்மை பெற இருசார்பிலும் சமப்படுத்திய துலாக்கோல் போல, மொழிந்திடில் தர்மம் அது - முறை கூறுவது அறமாகும், முன் முனை வீமன் உடல்பாதி மிருகந்தனக்கு என்று தருமர் சொன்னது அலவோ? - முற்காலத்தில் வலிய வீமனுடைய பாதிமெய் புருடா மிருகத்துக்குத்தான் எனத் தருமபுத்திரர் கூறியது அறம் அன்றோ?

தருமர் நீதி வழங்கிய கதை

     தருமபுத்திரன் செய்த வேள்வி ஒன்றுக்குப் புருடாமிருகத்தை அழைத்துவர வீமன் சென்றான். அது ஓர் ஒப்பந்தம் பேசியது. வீமன் விரைந்து முன்னே செல்ல வேண்டும். புருடா மிருகம் பின்னே வரும். அது வீமனைப் பற்றுவதற்கு முன்னாலே அவன் தன் நாட்டின் எல்லையைத் தொட்டுவிட வேண்டும். இதற்கிடையிலே அது வீமனைப் பிடித்துவிட்டால் அவன் அதற்கு உணவாகவேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு வீமன் இசைந்தான், ஆனால், அவன் தன் நாட்டின் எல்லையிலே ஒரு காலை வைத்தவுடன் அது அவனைப் பற்றிக்கொண்டது. வீமன், தன்காலைத் தன் எல்லையில் வைத்து விட்டதால் தன்னை அது உணவாக்கிக் கொள்ளலாகாது என்றான். ஆனால், அவ் விலங்கு மற்றொரு காலை அவன் எல்லையிலே வைக்கவில்லை என்று வற்புறுத்தியது. இருவரும் தருமபுத்திரரிடம் சென்று வழக்கு உரைத்தனர். அவர் நடுநிலை தவறாமல் வீமனுடைய பாதிமெய் விலங்கிற்கு உரியதுதான் என்று தீர்ப்புக் கூறினார். இவ்வாறு பாரதக்கதை கூறும்.

முறை அல்லது நீதி வழங்குவதில் விருப்பு வெறுப்புக் காட்டாமல் நடுநிலையாக இருத்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது. "முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல் மொழிந்திடின் தர்மம் அதுகாண்" என்பதை, திருவள்ளுவ நாயனார் "நடுவு நிலைமை" என்னும் அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில்,  "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்று, பொதுவாக இந்த இறம் எல்லோருக்கும் பொருந்தும் என்று காட்டியது காண்க "முன்னர் தான் சமனாக நின்று, பின்னர் தன்னிடத்தில் வைத்த பாரத்தை அளவு செய்யும் துலாக் கோல் போல், இலக்கணங்களால் நிறைந்து, ஒரு பக்கம் சாயாமல் இருத்தல் அறிவால் நிறைந்த சான்றோருக்கு அழகு ஆகும்" என்பது இத் திருக்குறளின் பொருள். எனவே, திருவள்ளுவ நாயனார் அருளியது போல, நீதி வழங்குதல் என்பது நீதிமன்றத்துக்கு மட்டும் பொருந்துவதாக எண்ணுதல் கூடாது. இந்த நீதி, எல்லா அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு கோப்பிலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கைப் பிரச்சினை உள்ளது. அதை துலாக்கோல் போல் அமைந்து, முறையாக உரிய காலத்தில் தீர்த்து வைப்பது அல்வலகங்களில் பணி புரியும் ஒவ்வொருவரது கடமை ஆகும். யாரும் தேவை இல்லாமல் எந்த அலுவலகத்துள்ளும் நுழையப் போவது இல்லை. தேவை இருக்கவேதான் தேடிப் வருகிறார்கள். அவர்களுக்கு நீதி வழங்குவது நமது கடமை என்பதை அலுவலர்கள் உணர வேண்டும். மேற்குறித்த பாடலில் சொல்லப்பட்ட அவலங்கள் யாவும் அரசு அலுவலகங்களில் இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன என்பது வெள்ளிடை மலை என விளங்கும். 

"இலக்கணம்" என்னும் சொல் வடமொழியில், "இலக்ஷணம்" எனப்படும். துலாக் கோலுக்கு உரிய இலக்கணம் குறித்து தமிழ் இலக்கண நூல்கள் கூறுமாறு காண்க.

'துலாக்கோல் இயல்பே தூக்கும் காலை

மிகினும் குறையினும் நில்லாது ஆகலும்,

ஐயம் தீர்த்தலும், நடுவு நிலைமையோடு

எய்தக் கூறுப இயல்பு உணர்ந்தோரே. --- தொல்காப்பியம்.


ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்

மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே.--- நன்னூல்.

துலாக்கோல் எனப்படும் தராசு நமக்கு அறிமுகமான ஒரு கருவி. பொருளை எடை போடுவதற்குப் பயன்படுத்தும் கருவி. அது ஓர் இயந்திரம். அதற்கு விருப்பு வெறுப்பு கிடையாது. தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு  இல்லை. எடை சரியாக இருந்தால், அது தன் கடமையைச் செய்து உண்மையான எடையைக் காட்டும். இது  நாம் அன்றாடம் காண்கின்ற ஒரு காட்சி. ஒரு பக்கம் உள்ள தட்டில் 100 கிராம் தங்கத்தையும், இன்னொரு பக்கம் உள்ள தட்டில் ஒரு கிலோ இரும்பையும் இட்டால் இரும்பு உள்ள தட்டுத் தான் தாழ்ந்து காட்டும். ஒரு கிலோ இரும்பை விட 100 கிராம் தங்கம் விலை அதிகம் உடையது. தன்மையிலும், தரத்திலும் உயர்ந்தது. இரும்பைவிட மக்கள் தங்கத்தையே விரும்புவர், இருப்பினும், தராசு, தங்கத்திற்காகத் தாழ்ந்து கொடுக்காது.  சலுகை காட்டாது. காரணம்,  தராசிற்குத் தட்டிலிருக்கும் பொருளைப் பற்றிக் கவலை இல்லை. அதன் வேலை பொருளை எடை போடுவதுதான்.  பொருள் பொன்னா, இரும்பா அதைப் பற்றிக் கவலை இல்லை,அதன் எடைதான் முக்கியம். நபர் முக்கியம் அல்ல, அவரது செயல் அல்லது பண்புதான் முக்கியம். அதன் அடிப்படையில்தான் நீதி வழங்கப்படும்.  இத்தகைய நடுவுநிலைமை என்ற கொள்கை பின்பற்றப்படுமானால், குடும்பமும், குடும்பத்தோடு தொடர்பு உடைய பிறரும் நன்மை பெறுவர் என்பது மேற்குறித்த பாடலும், திருவள்ளுவ நாயனார் கட்டடும் வாழ்வியலும் ஆகும்.


77. பிறந்த நட்சத்திரத்துடன் வரும் நாளின் பலன்

 



"சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்

     தீரா அலைச்ச லுண்டாம்;

  திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடு

     திருமாதின் அருளும் உண்டாம்,


வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்

     வாராது சுகம தென்பார்;

  மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்

     வாரத் துடன்கூ டினால்;


நன்மைதரு குருவார மதுசேர்ந்து வரில்ஆடை

     நன்மையுட னேவந் திடும்;

  நாரிய ருடன்போகம் மிகவும்உண் டொருவெள்ளி

     நல்லவா ரத்தில் வந்தால்;


அன்மருவு பீடையுண் டாமென்பர் சனியனுக்(கு);

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அமலனே - தூயவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

     சென்ம நட்சத்திரத்து - பிறந்த நட்சத்திரத்துடன்....... 

ஆதிவாரம் வரின் தீரா அலைச்சல் உண்டாம் - ஞாயிற்றுக்கிழமை வந்தால் நீங்காத அலைச்சல் உண்டாகும், 

     திங்களுக்கு ஆகில் வெகு சுகபோசனத்தினோடு திருமாதின் அருளும் உண்டாம் - திங்கள் வந்தால் மிகவும் நல்லுண்டியோடு திருமகளின் அருளும் கிடைக்கும், 

வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும் சுகமது வாராது என்பர் - வலிய செவ்வாய்க்கிழமை வந்தாற் சற்றும் நலம் கிடையாது என்று கூறுவர், 

மேன்மை ஆம் புந்தி எனும் வாரத்துடன் கூடினால் மாசுஇல் பலகலை பயில்வர் - உயர்வான புதன் கிழமையுடன் (பிறந்த நாள்) சேர்ந்தாற் குற்றமற்ற பல நூல்களையும் ஆராய்வார்,

நன்மைதரு குருவாரமது சேர்ந்துவரில் ஆடை நன்மையுடனே வந்திடும் - நலந் தரும் வியாழக்கிழமை சேர்ந்து வந்தால் ஆடைகள் நலம்பெறக் கிடைக்கும், 

ஒரு நல்ல வெள்ளி வாரத்தில் வந்தால் நாரியருடன் மிகவும் போகம் உண்டு - ஒப்பற்ற நல்ல வெள்ளிக்கிழமையில் வந்தாற் பெண்களின் இன்பம் மிகவும் கிடைக்கும். 

சனியனுக்கு அல்மருவு பீடை உண்டாம் என்பர் - சனிக்கிழமை வந்தால் மயக்கந் தரும் நோய் உண்டாகும் என்பர்.


11. ஏறும்பு எண்ணாயிரம்

 


"குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன்

     னாலும்அதைக் குறிக்கொ ளாமல்

வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்

     பொருந்தியுனை வேண்டேன்! அந்தோ!

உறும்பெண்ணார் அமுதிடம்சேர் தண்டலைநீள்

     நெறியே! என் உண்மை தேரில்

‘எறும்பெண்ணா யிரம்அப்பா! கழுதையும்கை

     கடந்ததெனும்' எண்ணம் தானே!"


இதன் பொருள் ---


உறும் பெண்ணாள் அமுது இடம் சேர் தண்டலை நீள் நெறியே - சிறந்த பெண்களின் அமுது ஆகிய உமையம்மையார்  இடப்பக்கத்தில் பொருந்தி உள்ள, திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் 'நீள்நெறி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 


உயர்ந்த நல்லோர் குறும்பு எண்ணாது ஆயிரம் சொன்னாலும் - சிறந்த நற்பண்பு உடையோர்  குறும்பாக நினையாமல் ஆயிரம் (நன்மொழிகளைக்) கூறினாலும், அதைக் குறிக் கொளாமல் - அவர்கள் கூறுவதை மனத்தில் கொள்ளாமல்,   வெறும் பெண் ஆசையில் சுழல்வேன் - வீணே பெண்ணின் காமத்தால் அலைவேன்.  உனை மெய்ஞ்ஞானம் பொருந்தி வேண்டேன் - தேவரீரை உண்மை அறிவுடன்  வழிபடேன். அந்தோ - ஐயோ!,  என் உண்மை தேரில் - என்  உண்மையான நிலைமையை ஆராய்ந்தால், அப்பா! எறும்பு  எண்ணாயிரம் கழுதையும் கை கடந்தது எனும் எண்ணந்தான் - அப்பா! எறும்பு எண்ணாயிரம் போனது, அப்பால்  கழுதையும் போய்விட்டது என்போனுடைய எண்ணம் போன்றதே.

      (விளக்கம்) பெண்ணார் அமுது - பெண்களிற் சிறந்தவர். ‘பெண்ணின் நல்லாள்'  என்று குறிப்பதுங் காண்க. கழுதையைப்  பார்த்துக் கொண்டிருப்போன் எறும்பை எண்ணிக் கொண்டிருந்து கழுதையை விட்டு  விட்டாற்போல, பெண்ணாசையிலே உள்ளத்தைச் செலுத்தி இறைவரை  வழிபடுவதைக் கைநெகிழ விட்டதாக வருந்துகிறார். ‘எறும்பு எண்ணாயிரம்,  அப்பால் கழுதையும் கைகடந்தது என்றோன் எண்ணந்தானே' என்றும் பாடம்.


60. தகாதவை செய்தால் கேடு

 



தானா சரித்துவரு தெய்வமிது என்றுபொய்ச்

     சத்தியம் செயின்விடாது;

தன்வீட்டில் ஏற்றிய விளக்கென்று முத்தந்

     தனைக்கொடுத் தால்அதுசுடும்;


ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனதென்

     றடாதுசெய் யிற்கெடுதியாம்;

ஆனைதான் மெத்தப் பழக்கம்ஆ னாலுஞ்செய்

     யாதுசெய் தாற்கொன்றிடும்;


தீனான தினிதென்று மீதூண் விரும்பினால்

     தேகபீ டைகளே தரும்;

செகராசர் சூனுவென ஏலாத காரியம்

     செய்தால் மனம்பொறார்காண்;


வானாடு புகழும்ஒரு சோணாடு தழையஇவண்

     வந்தவ தரித்தமுதலே!

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---

வான்நாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே! - வானவர் புகழும் ஒப்பற்ற சோழநாடு சிறப்புற இங்கு வந்து தோன்றிய முதல்வனே!

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச் சத்தியம் செயின் விடாது - தான் வழிபட்டு வரும் தெய்வம் இது என்று எண்ணி (அதன் முன்னிலையிலே) பொய்ம்மொழி கூறினால் தண்டிக்காமல் விடாது.

தன் வீட்டில் ஏற்றிய விளக்கு  என்று முத்தம் தனைக் கொடுத்தால் அது சுடும் - தன்னுடைய வீட்டிலே ஏற்றிய விளக்குதானே என்று முத்தம் கொடுத்தால் அவ் விளக்குச் சுடும்.

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யின் கெடுதி ஆம் - எப்படி இருப்பினும் உயர்நிலையில் உள்ளவர்கள் தனக்கு ஆதரவாக உள்ளவர்கள்தானே என்று கருதித் தவறு செய்தால் கேடு உண்டாகும்.

ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும், செய்யாது செய்தாற் கொன்றிடும் - யானை  நன்றாகப் பழகியிருந்தாலும் அதற்கு விருப்பம் அல்லாததைச் செய்தால் கொன்றுவிடும்.

தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் - உணவு இனியது என்று மிகைப்பட விரும்பி உண்டால் உடலுக்கு நோயையே உண்டாக்கும்.

செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் - உலக மன்னவரின் அரும்புதல்வன் நான்தானே என்று நினைத்துத் தகாத வேலைகளைச் செய்தால் அரசர் உள்ளம் பொறுக்கமாட்டார்.

ஆசரித்தல் - வழிபடுதல். தீன் - உணவு. சூனு (வட) - மகன்.

      யாவராயினும் வம்பு மீறினால் கெடுதியே உண்டாகும் என்பது கருத்து.


76. புண்ணியம்

 

"காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே

     கண்ணிணைகள் செய்புண் ணியம்;

  கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு

     காதுசெய் திடுபுண் ணியம்;


பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்

     பேசில்வாய் செய்புண் ணியம்;

  பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை

     பெரிதுசெய் திடுபுண் ணியம்;


வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்

     மேனிசெய் திடுபுண் ணியம்;

  விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே

     மிக்கபூ ருவபுண்ணியம்;


ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆணவம் எனும் களை களைந்து அறிவினைத் தந்த அண்ணலே - நான் என்னும் களையை எடுத்து, அறிவை அருளிய பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

காண் அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது கண் இணைகள் செய் புண்ணியம் - காண்பதற்கு அரிய பெரியோர்களின் சேவை கிடைப்பது இருவிழிகளின் நல்வினைப் பயன் ஆகும். 

கருணையாய் அவர் சொல்மொழி கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் - அவர்கள் அருளுடன் கூறும் மொழியைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினைப் பயன் ஆகும். 

அவர் புகழையே பேணித் துதிசெய லபித்திடுதல் பேசில், வாய் செய்புண்ணியம் - அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால் வாய் செய்த நல்வினைப் பயன் ஆகும். 

அவர்தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது கை பெரிது செய்திடு புண்ணியம் - அவர்களைத் தவறாமல் வணங்கக் கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினைப் பன் ஆகும். 

வீண்நெறி செலாமல் அவர் பணிவிடை லபிப்பது தன் மேனி செய்திடு புண்ணியம் - பயனற்ற வழிகளில் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன் உடம்பு செய்திட்ட நல்வினைப் பயன் ஆகும். 

விழைவொடு அவர் சொற்படி நடந்திட லபிப்பது மிக்க பூருவ புண்ணியம் - விருப்பத்துடன் அவர் கூறியவாறு நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பில் செய்த பெரிய நல்வினைப் பயன் ஆகும். 

      'நான்' என்னும் செருக்கு ஆணவம். செருக்கு என்பது 'அறிவு மயக்கம்' என்றும் பொருள்படும். யாவும் இறைவன் திருவருளாலே நடைபெறுகின்றன என்ற எண்ணத்தைவிட்டு நானே செய்கிறேன் என்று நினைத்துக்கொள்வது அறிவு மயக்கம். ‘நல்லாரைக் காண்பதும் நன்றே' எனத் தொடங்கும் ஒளவையார் பொன்மொழி இங்குக் கருதத்தக்கது.

    பெரியோர்களைக் கண்டு பழகி அவர் சொற்படி நடந்து வருவது நல்லது என்று சொல்லப்பட்டது. "பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான் கண்டு போற்றிக் கொண்டாடி அறியேன்" என்பது காமாட்சியம்மன் திருவிருத்தத்தில் வருவது.

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன், கல்வி

கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்,

கனிவுகொண்டு உனது திருவடியை ஒருகனவிலும்

கருதிலேன், நல்லன் அல்லேன்,

குற்றமே செய்வது என்குணம் ஆகும், அப்பெரும்

குற்றம் எல்லாம் குணம் எனக்

கொள்ளுவது நின் அருட்குணம் ஆகும், என்னில், என்

குறை தவிர்த்து அருள் புரிகுவாய்!"

என்று "தெய்வமணி மாலை"யில் வள்ளல் பெருமான் பாடி உள்ளார். "கல்வியைக் கற்கும் நெறி அறிந்து நான் கற்கவில்லை. கற்றுணர்ந்த மேன் மக்களோடு கூடி நிற்கவில்லை. அப்படிச் செய்யாமையால், உள்ளத்தில் உருக்கம் கொண்டு தேவரீரது திருவடியைக் கனவிலும் நினைத்தது இல்லை. எனவே, நான்  நல்ல பண்புடையவன் அல்லன் ஆயினேன். அதனால்,  குற்றம் செய்வதே எனது குணம் ஆகும்; அப்பெரிய குற்றங்கள் எல்லாவற்றையும் குணமாகக் கொண்டு அருளுவது தேவரீருடைய அருட்குணம் ஆகும் என்பதால் என்னுடைய குறைகளைப் போக்கி அருள வேண்டுகிறேன்" என்று சென்னையில் கந்தகோட்டத்துள் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானிடத்து வேண்டுகிறார் வள்ளல்பெருமான். கற்ற மேலவரோடு கூடி, அவர் காட்டும் நல்வழியில் நிற்கவும், கல்வியை அவர்கள் காட்டும் நெறியில் தேர்ந்து கற்கவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

"ஒருதாய் வயிற்றில் உடன்பிறந்தா ரேனும்

பெரியார் நட்பு உற்றார் பெரியர், --- பெரியார் நட்பு

இல்லரேல் புல்லவரே, இன்பனை நீர் சுண்ணம் உறின்

நல்லது, இன்றேல் பொல்லதாம் நாடு".     --- தருமதீபிகை.

இதன் பொருள் ---

ஒரே பனைமரத்தில் ஊறிய நீரில் ஒரு பகுதியை எடுத்து சுண்ணாம்போடு கூட்டினால், அது, உடலுக்கு நன்மை தருகின்ற, இனிய சுவை உடைய "பதநீர்" ஆகின்றது. சுண்ணாம்போடு சேராத மற்றொரு பகுதியானது,  உடம்பைக் கெடுப்பதோடு, உள்ள உணர்வையும் மயக்குகின்ற, புளிப்புச் சுவையுள்ள கள்ளாக மாறுகின்றது. அதுபோல, ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே ஆனாலும், பெரியவர்களோடு கூடி இருந்தால் பெரியவர் என்று போற்றப்படுகின்றார். பெரியாரோடு கூடாமல், சிற்றினத்தாரோடு கூடி இருந்தால், இழிநிலைக்கு ஆளாகின்றதோடு, எல்லோராலும் பழிக்கப்படுகின்றார்.

கற்ற பெரியவர்களை, அவரது வாழ்க்கை முறையைக் கொண்டும், அவர்களது தோற்றத்தைக் கொண்டும் கணிப்பது கூடாது. அவரது அருட்குணத்தை மட்டுமே நோக்கவேண்டும். கடலில் தோன்றிய உப்பு வெள்ளை நிறத்தில் இருக்கிறது. சருக்கரையும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. உப்பு இனிக்காது. சருக்கரை இனிக்கும். கல்வி கற்றவர் என்பதாலேயே ஒருவர் பெரியவர் ஆக முடியாது. கற்ற கல்வியின் வழியே நின்று, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்தவரே பெரியவர் ஆவார். 


10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

 


"பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்

     கொடுப்பதென்ன பொருளோ? என்று

நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்

     மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே;

கற்கரையும் மொழிபாகர் தண்டலையார்

     வளநாட்டிற் கரும்பின் வேய்ந்த

சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி

     பொழிந்துவிடும் தன்மை தானே!"

இதன் பொருள் ---

கல் கரையும் மொழி பாகர் தண்டலையார் வளநாட்டில் - கல்லும் கரையும் இனிய மொழியை உடைய  உமையம்மையாரைத் தனது திருமேனியின்  இடப்பக்கத்தில் கொண்டு உள்ள, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் வளம்பொருந்திய  நாட்டிலே, 

பொன் குடையும் பொன் துகிலும் பொன் பணியும் கொடுப்பது  என்ன  பொருளோ என்று - பொன்னாலான  குடையும் ஆடையும்  அணிகலன்களும் கொடுப்பது என்ன சிறப்புடையதோ? என அறிந்து, 

நல் கமலம் முகம் மலர்ந்தே உபசாரம் மிக்க இன்சொல் நடத்தல் நன்றே - அழகிய தாமரை மலர் போலும் முகத்திலே மலர்ச்சியுடன் ஆதரித்து மிகுந்த இனிய மொழி கூறுதலே நல்லது, 

(அவ்வாறு செய்வது) கரும்பின் வேய்ந்த  சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை - கரும்பினால் ஆக்கப்பட்ட சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பொழிந்து  விடுவது போல ஆகும்.

இனிய மொழியில்லாத கொடை பயனளிக்காது  என்பது  கருத்து. "முகம் பாதி, பண்டம் பாதி" என்பது ஒரு பழமொழி. ஒருவருக்குக் கொடுத்து உதவும் உதவியானது, கொடுப்பவரது முகத்தால் பாதியும், கொடுக்கப்படும் பொருளால் பாதியுமாக முழுமை பெறுகிறது என்பது இப் பழமொழியின் பொருள்.

முகம் - தன்னிடத்து வருபவரைத் தொலைவில் கண்டபோதே இன்முகம் காட்டி வரவேற்றல்.

பண்டம் - வரவேற்று அழைத்து வரப்பட்டவர் விரும்பும் பொருளை நல்லதாகக் கொடுப்பது.

"சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதன மூன்று" என்று, "மோப்பக் குழையும் அனிச்சம், முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருக்குறளுக்கு விளக்கமாக, பரிமேலழகர் கூறியுள்ளது காண்க.


59. பண்பினாலே பெருமை உண்டு.

 


"சேற்றிற் பிறந்திடும் கமலமலர் கடவுளது

     திருமுடியின் மேலிருக்கும்

திகழ்சிப்பி உடலில் சனித்தமுத் தரசரது

     தேகத்தின் மேலிருக்கும்


போற்றியிடு பூச்சியின் வாயின்நூல் பட்டென்று

     பூசைக்கு நேசமாகும்

புகலரிய வண்டெச்சி லானதேன் தேவர்கோன்

     புனிதவபி டேகமாகும்


சாற்றிய புலாலொடு பிறந்தகோ ரோசனை

     சவாதுபுழு கனைவர்க்கும்ஆம்

சாதியீ னத்திற் பிறக்கினும் கற்றோர்கள்

     சபையின்மேல் வட்டம் அன்றோ?


மாற்றிச் சுரத்தினை விபூதியால் உடல்குளிர

     வைத்தமெய்ஞ் ஞானமுதலே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

விபூதியால் சுரத்தினை மாற்றி உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே! - திருநீற்றாலே (பாண்டியன்) வெப்பத்தைத் தணித்து மெய் குளிரவைத்த மெய்யறிவின் முதல்வனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

சேற்றில் பிறந்திடும் கமலமலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் - சேற்றிலே தோன்றிய தாமரைமலர் தெய்வத்தின் திருமுடிமேல் இருக்கும்; 

திகழ்சிப்பி உடலில் சனித்த முத்து அரசனது தேகத்தின்மேல் இருக்கும் - விளங்குகின்ற சிப்பியினிடம் உண்டான முத்து மன்னவர் உடம்பிலே அழகு செய்யும்; 

போற்றியிடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் - ஆதரிக்கப் பெறும் பட்டுப் பூச்சியின் வாயில் உண்டான நூல் பட்டு என்று  சிறப்புப்பெற்றுக் கடவுளை வழிபட (உடுத்த) அன்புடன் கொள்ளப்படும்; 

புகல் அரிய வண்டு எச்சில் ஆன தேன் தேவர்கொள் புனித அபிடேகம் ஆகும் - கூறுதற்கரிய இனிமையுடைய வண்டின் எச்சிலான தேன் கடவுளர் ஏற்றுக் கொள்ளும் தூய முழுக்குப்பொருள் ஆகும்; 

சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் - கூறப்பட்ட இழிந்த ஊனுடன் தோன்றிய கோரோசனையும் சவ்வாதும் புழுகும் யாவர்க்கும் பயன்படும்;

சாதி ஈனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ? - இழிந்த குலத்தில் பிறந்தாலும் கற்றறிந்தவர்கள் அவையிலே சிறந்த இடத்தில் இருப்பார்கள் அல்லவா?

    (கருத்து) பிறப்பினால் உயர்வு தாழ்வு கருதலாகாது; செயலாலே கொள்ளவேண்டும்.                        

முருகனே திருஞானசம்பந்தராகத் தோன்றினார் என்னும் கொள்கையை உட்கொண்டு பாண்டியன் வெப்பு நோயைத் தணித்ததாகக் கூறினார். 

உண்மை என்ன? எனில், முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபரசுப்ரமணிய மூர்த்திகளுக்குள்  ஒன்று, முருகப் பெருமானது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு திருஞானசம்பந்தராக வந்த அவதாரம் புரிந்தது. முருகப் பெருமான்  பிறப்பு இல்லாதவர்  என்பதை  அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய்  நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருள், பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராகப் பிறந்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள்  அனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான்  பிறவா யாக்கைப் பெரியோன் என்பதை அறிக.

திருநீற்றால் பாண்டியனது வெப்பு நோயைத் தீர்த்த வரலாறு

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின.  உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழமன்னனது திருமகளாய், பாண்டிமாதேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராய் இருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள். 

அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்; அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து, சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். 

திருஞானசம்பந்தர் மறைக்காட்டு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை யுன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

“வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்

மிகநல்ல வீணைதடவி

 மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்

உளமே புகுந்த அதனால்,

 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பு இரண்டும் உடனே,

 ஆசு அறும் நல்லநல்ல, அவைநல்ல, நல்ல

அடியாரவர்க்கு மிகவே”

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். 

எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் அவரை வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர். சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை யெடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி,

 “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் 

இனி எதிர் காலத்தின் சிறப்பும், 

இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால் 

எற்றைக்கும் திருவருள் உடையேம்; 

நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் 

நற்றமிழ் வேந்தனும் உய்ந்து,

வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்

மேன்மையும் பெற்றனம் என்பார்"

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருசானசம்பந்தர் பதிகம் பாடி, கோயிலுட் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார். 

சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசன் ஆணையால் வந்ததென்று உணர்ந்து,

 "செய்ய னேதிரு வாலவாய் மேவிய

  ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்

  பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்

  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே."

என்று பாடியருளினார்.  “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுரநோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். 

மங்கையர்க்கரசியார் தமது மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்கம் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

“ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை

வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்

தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்

கானத்தி னெழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாயுல காண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே ” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார். 

ஆலமே அமுதமாக உண்டு, வானவர்க்கு அளித்துக்

காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை, அடியேற்கு இன்று

ஞாலம்நின் புகழே ஆக வேண்டும், நான் மறைகள் ஏத்தும்

சீலமே! ஆல வாயில் சிவபெருமானே! என்றார். --- பெரியபுராணம்.

         பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால் ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க, சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

“மானின் நேர் விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்

பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,

ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்

ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

என்று பாடித் தேற்றினார்.

அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புறநோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், ழுமந்திரமாவது நீறுழு என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெருநெருப்பு மூட்டினர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிட, அவை சாம்பலாயின. புல் புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை யாற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது, “வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையுங் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தான்.


75. கவிஞர் இலக்கணம்

 


"தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்

     தேன்மடை திறந்த தெனவே

  செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்

     தெரிந்துரைசெய் திறமை யுடனே


விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்

     விரிவிலக் கணவி கற்பம்

  வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்

     மிக்கப்ர பந்த வண்மை


உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை

     யொத்ததிக சபைகண் டபோ

  தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம

     துரைப்பவன் கவிஞ னாகும்!


அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

விடம் அள்ளி உண்ட கனி வாயனே - நஞ்சை அள்ளிப் பருகிய கனிபோலும் சிவந்த வாயனே!, நேயனே - (உயிர்களிடம்) அன்புடையவனே!, அமலனே - தூயவனே!, அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

தெள் அமிர்த தாரை என மதுரம் கதித்த பைந்தேன் மடை திறந்தது என - தெளிந்த அமுத ஒழுக்குப் போலவும்; 

இனிமை மிகுந்த புதிய தேன் மடை திறந்தது போலவும்; செப்பும் முத்தமிழினொடு - சொல்லப்படும் முத்தமிழுடன், 

நாற்கவிதை நாற்பொருள் தெரிந்து - (ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் (அறம், பொருள், இனபம், வீடு என்னும்) நால்வகைப் பொருளையும் அறிந்து,

உரைசெய் திறமையுடனே - கூறும் ஆற்றலோடும், 

விள்ள அரிய காவியத்து உட்பொருள், அலங்காரம், விரிவு இலக்கண விகற்பம் - கூறுதற்கரிய காவியத்தின் உட்பொருளையும் அணியையும் விரிவான ஐவகை இலக்கணத்தையும், 

வேறும் உள தொன்னூல் வழக்கும் உலகத்து இயல்பும் மிக்கப் பிரபந்த வன்மை உள்ள எல்லாம் அறிந்து - மற்றும் இருக்கின்ற பழைமையான நூல்வழக்கையும் உலகவழக்கையும் மிகுந்த பிரபந்தங்களின் சிறப்பையும் மேலும் உள்ள யாவற்றையும் அறிந்து, 

அலை ஒடுங்கும் கடலை ஒத்து - அலை அடங்கிய கடலைப்போல இருந்து, அதிக சபை கண்டபோது - பேரவையைப் பார்த்த காலத்தில், ஓங்கு அலை ஒலிக்கின்ற கடல்போல் பிரசங்கம் அது உரைப்பவன் கவிஞன் ஆகும் - பேரலை முழங்கும் கடலைப்போலச் சொற்பொழிவு செய்பவன் கவிஞன் ஆவான்.


9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

 



"திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்

     இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்

ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்

     பகலாமோ? உறவாய் வந்த

பெருவிருந்துக் குபசாரம் செய்தனுப்பி

     இன்னுமெங்கே பெரியோர் என்று

வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா

     துணுஞ்சோறு மருந்து தானே."


இதன் பொருள் ---


திரு இருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் - செல்வம் தங்கிய திருத்தண்டலைத் திருநகர் உள்ள செழித்த  நாட்டினில் இல்லறம் நடத்தும் பெரியோர்கள்,  ஒரு விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ - ஒரு விருந்தினரேனும் இல்லாமல் உணவு கொண்ட  நாள் (ஒரு) நாளாகுமோ,  உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி - நட்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவளித்துக் களைப்பாற்றிப் பேசி விடுத்த பின்னர், இன்னும் பெரியோர் எங்கே  என்று - மேலும் வரக்கூடிய சான்றோர்கள் எங்கே என்று, வருவிருந்தோடு உண்பது அல்லாமல் - வரும் விருந்தினருடன்  உண்பது அன்றி,  விருந்து இல்லாது  உணும் சோறு மருந்து  தானே - விருந்தினர் இல்லாமல் உண்பது மருந்து போலத்தான் (கசப்பாக) இருக்கும்.


      "செல்விருந்(து) ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு" - என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய மறைமொழி. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்பது ஔவையின் அருள்மொழி.   ‘விருந் தில்லாத சோறு மருந்து' என்பது கருத்து.


58. அவரவர்க்கு உற்ற கடமை.

 




"கல்வியொடு கனமுறச் சபையின்மேல் வட்டமாக்

     காணவைப் போன்பிதாவாம்,

கற்றுணர்ந் தேதனது புகழால் பிதாவைப்ர

     காசம்செய் வோன்புத்திரன்,


செல்வமிகு கணவனே தெய்வமென் றனுதினம்

     சிந்தைசெய் பவள்மனைவியாம்,

சிநேகிதன் போலவே அன்புவைத் துண்மைமொழி

     செப்புமவ னேசோதரன்,


தொல்வளம் மிகுந்தநூல் கரைதெரிந் துறுதிமொழி

     சொல்லும்அவ னேகுரவன்ஆம்,

சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு

     துய்யனே இனியசீடன்,


வல்விரகம் மிஞ்சுசுர குஞ்சரி யுடன்குறவர்

     வஞ்சியை மணந்தகணவா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."  


இதன் பொருள் ---


வல்விரகம் மிஞ்சு சுர குஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா - மிகுந்த காதலை உண்டாக்கும் தெய்வயானை அம்மையுடன் குறவர் மகளாகிய வள்ளிநாயகியையும் மணம்புரிந்தவரே!


  மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


சபையின் மேல்வட்டம் ஆ கல்வியொடு கனம் உறக் காண வைப்போன் பிதாவாம் - பேரவையிலே உயர்ந்த நிலையிலே கல்வியும் சிறப்பும் பொருந்துமாறு தனது மகனை இருக்க வைப்பது தந்தையின் கடமை;  (கனம் - பெருமை) ("தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு இங்கு வைத்து எண்ணத் தக்கது)


கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவைப் பிரகாசம் செய்வோன் புத்திரன் - கலைகளைக் கற்றறிந்து தன் புகழினாலே தந்தைக்குப் பெயர் தேடித் தருவது மகன் கடமை; 


செல்வம்மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தை செய்பவள் மனைவி ஆம் - செல்வத்தில் சிறந்த கணவனே தெய்வம் என்று எப்போதும் மனத்தில் கொண்டிருப்பது மனைவியின் கடமை;  (செல்வம் - பொருட்செல்வத்தோடு அருட்செல்வத்தையும் குறிக்கும்)


சிநேகிதன் போலவே அன்பு வைத்து உண்மைமொழி செப்பும் அவனே சோதரன் - நண்பனைப்போல அன்புகொண்டு உண்மையாகப் பேசுவது உடன்பிறந்தோன் கடமை; 


தொல்வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன்ஆம் - பழைமையான பொருள்வளம் செறிந்த நூல்களின் கரை கண்டு முடிவான பொருளைக் கூறுவது ஆசிரியன் கடமை; 


சொன்ன நெறி தவறாமல் வழிபாடு செய்துவரு துய்யனே இனிய சீடன் - ஆசிரியன் கூறிய ஒழுக்கத்தில் தவறாமல் தொண்டு செய்து வருவது தூய மாணவன் கடமை.


புலவர் வறுமை

 



"எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை

     இணையிலாச் சேடன் என்றும்,

  ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்

     இணையிலாக் கர்ணன் என்றும்,


அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை

     அதிவடி மாரன் என்றும்,

  ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை

     ஆண்மைமிகு விசயன் என்றும்,


முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை

     மொழிஅரிச் சந்த்ர னென்றும்,

  மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்

     முறையின்றி ஏற்ப தென்னோ?


அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!

     அமலனே! அருமை மதவேள்!

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அழல் என உதித்துவரு விடம்உண்ட கண்டனே - நெருப்பைப் போலத் தோன்றி வந்த நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனே!, அமலனே - குற்றம் அற்றவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 


எழுதப்படிக்க வகைதெரியாத மூடனை இணை இலாச் சேடன் என்றும் - எழுதவும் படிக்கவும் வழியறியாத பேதையை ஒப்பற்ற ஆதிசேடன் என்றும், 


ஈவது இல்லாத கனலோபியைச் சபையதனில் இணைஇலாக் கர்ணன் என்றும் - கொடுத்தறியாத பெரிய அழுக்கனை அவையிலே ஒப்பற்ற கொடையிற் சிறந்த கர்ணன் என்றும், 


அழகு அற்ற வெகு கோரரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் - அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவமுடையவனைப் பேரழகுடைய மன்மதன் என்றும், 


ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை ஆண்மை மிகு விசயன் என்றும் - படைக் கலத்தை ஏந்தவும் பழகாத ஆண்மை அற்றவனை வீரத்தில் சிறந்த விசயன் என்றும், 


முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் - முற்றிலும் பொய் புகன்று திரியும் வஞ்சகனைச் சொல்லில் அரிச்சந்திரன் என்றும், 


இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது என்னோ - இவ்வாறு பழைமையான இந்த உலகத்தில் பாவலர்கள் செல்வந்தரைப் புகழ்ந்து பாடி, தகுதியின்றி இரப்பது என்ன காரணமோ?


      ஆதிசேடன் கல்வியிற் சிறந்தவன். முதுமை + உலகு - மூதுலகு. இப்பாடலில் புலவர்களின் அறியாமையை வியந்து பாடினார் ஆசிரியர். "கொடிது கொடிது, வறுமை கொடிது" என்றார் ஔவைப் பிராட்டியார். வறுமை மிகவும் கொடியதாகையால், புலவர்கள் ஒருவனுக்கு ‘இல்லாத சொல்லிப்'  புகழ்தல் இயற்கையாக அந்நாளில் இருந்தது. இக் காலத்திலும் இருக்கிறது.  எவ்வளவுதான் செல்வந்தரைப் புகழ்ந்து பாடினாலும், புலவர்களின் வறுமை தீர்ந்தபாடு இல்லை. காரணம், அவர்கள் வாயில் இருந்து பிறப்பது பொய். "பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது" என்பது பழமொழி.


மிகவும் சிறந்த மொழி தமிழ்.  தெய்வீகம் உடைய செம்மொழி.  அதனால்தான் "தண்தமிழ்", "செந்தமிழ்", "தீந்தமிழ்" என்றெல்லாம் பேசப்படுகின்றது.   இத்தகைய தெய்வத் தமிழைப் பயின்று, புலமை பெற்று, எவன் பிறப்பு இறப்பை நீக்கி பேரானந்தத்தைத் தருவானோ - எவன் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானோ - எவன் மறையாகமங்களால் துதிக்கப் பெறும் மாதேவனோ, அந்த எம்பெருமானைப் பாடி உய்வு பெறாமல், கேவலம் உண்டு உடுத்து உழலும் சிறுதொழிலும்,  சிறுமையும் உடைய மனிதர்களைப் பாடுவது மதியீனம். காமதேனுவின் பாலை கமரில் உகுப்பதை ஒக்கும்.  தமது அறிவையும் தமிழையும் அறிவுக்கு அறிவாகிய இறைவன் மாட்டுப் பயன்படுத்தாமல்,  கேவலம் பொருள் விருப்பால் மனிதர்மாட்டுப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.


"யாம்ஓதிய கல்வியும், எம்அறிவும்

தாமேபெற வேலவர் தந்ததனால்

பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே."


என்ற கந்தரநுபூதித் திருவாக்கை உய்த்து உணர்தல் வேண்டும்.  


அறிவிலாப் பித்தர்கள் பலர் உண்டு. ஆனால், முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாக, இப் பிறப்பில் இவர்களிடம் செல்வம் மிகுந்து இருக்கும். ஆனால், நல்லறிவு என்பது ஒரு சிறிதும் இல்லாது உலகில் பயனற்று அலைவர்.  பித்தன் எப்படித் திரிந்து உழல்வானோ, அதுபோல பணப்பித்தும், பெண்பித்தும் பிடித்துத் திரிவர்.


இத்தகைய பயனில்லாத பதடிகள் இருக்கும் இடம் தேடிப் போய், தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழ்வர்.  சிறிது காலமே நின்று மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீணாக வாழ்நாளைக் கழிக்கின்றனர். என்றும் அழியாத திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் இறைவனைப் பாடி உய்யும் திறன் அறியாது இவர்கள் கெடுவர்.  


அறிவு அற்றவர்கள், ஈனத் தன்மை உடையவர்கள்,  இருவிதமாகப் பேசும் நாவினை உடையவர்கள், கஞ்சத்தனம் உடையவர்கள், தீய குணங்களுடன், மிகுந்த பாவங்களைப் புரிபவர்கள், மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள்,  பொதுமகளிருக்கு அணிகலன்களைப் புனைந்து அழகு பார்க்கும் அறிவிலிகள், கீழ்மக்கள், பூமியில் பிறந்து பயனற்றவர்களாகத் திரிகின்ற மனிதர்கள், பெண்கள் மீது இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்,  நீதி நூல்களின் பயன்களைத் தெரியாதவர்,  நன்னெறியில் நில்லாதவர்கள்,  சூதாட்டத்தால் பிறர் பொருளைக் கவர்ந்து பெருக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலகியல் இன்பத்திலேயே உழலுகின்ற மூடர்கள், ஆகிய இவர்களிடம் சிறப்பு மிக்க தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி, நினைவானது பாழ்பட்டுப் போய், உடம்பும் உள்ளமும் வாடி, பார்வையும் இழந்து, வறுமை என்னும் தீயின் மேல் கிடந்து நெளிகின்ற, நீண்ட புழுவைப் போல ஆன அடியவனுக்கு மனம் இரங்கி அருள் புரிவாயாக என்று ஒரு திருப்புகழ்ப் பாடலில் அருணகிரிநாதர் முருகப் பெருமானிடத்து வேண்டுகின்றார். வறுமை தீர இதுவே சிறந்த வழி.


வேண்டுவார் வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாக, யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் உடையவனாகப் பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப் பயனும்,  முயற்சியும் இல்லாத அறிவிலிகள், தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம்தேடிச் சென்று,  இல்லாததை எல்லாம் சொல்லி, வாழ்த்திப் பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து உள்ளதாககவும், கற்பனையாகப் பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும் கற்பனையே.


ஈயாத உலோபிகளை, பலகாலம் முயன்று அவர்கள் இடம் தேடிச் சென்று பலபடப் புகழ்ந்து பாடியும், பொருள் ஒன்றும் கிடைக்காமையால் மனம் வருத்தம் அடையும். உள்ளமும் உடம்பும் வாட்டம் உறும். பொய்யாகப் புகழ்ந்து பாடியதால் எதுவும் கிடைக்கவில்லை. பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லை என்பதுதான் உண்மை. இறைவனைப் பாடினால் எல்லாம் கிடைக்கும்.


தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்

     சார்வினும் தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

இம்மையே தரும், சோறும் கூறையும்;

     ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.                       ---  சுந்தரர் தேவாரம்.

                                        


தமிழால் வைதாலும் முருகப் பெருமான் வாழவைப்பான் என்கின்றார் அருணகிரிநாதர்.


"மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்

வைதாரையும் அங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்

கைதான் இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க

எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே."          --- கந்தர் அலங்காரம்.


"இவர் அலாது இல்லையோ பிரானார்" என்று வைத சுந்தரருக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். "வாழ்ந்து போதீரே" என்று வசை பாடியவருக்குக் கண்ணளித்தவர் சிவபெருமான். "பித்தா" என்று தொடக்கத்திலேயே தம்மை வசை பாடிய வன்தொண்டருக்கு,  முடிவில்,  சிவபெருமான் வெள்ளை யானையை அனுப்பினார் என்பது சிந்தனைக்கு உரியது.


"பெண்அருங் கலமே, அமுதமே எனப் பெண்

      பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,

பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ

      பயன்தரல் அறிந்து, நின் புகழேன்"


என்னும் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சோணசைல மாலையையும் சிந்திக்கவும்.


பொது --- 1101. குதறுமுனை அறிவுகொடு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குதறும்முனை அறிவுகொடு (பொது)


முருகா! 

திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக.


தனதனன தனதனன தனதனன தனதனன

     தனதனன தனதனன ...... தனதான


குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு

     குமுதமிடு பரசமய ...... மொருகோடி


குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது

     கொடியஇரு வினையெனும ...... ளறுபோக


உதறிவித றியகரண மரணமற விரணமற

     வுருகியுரை பருகியநு ...... தினஞான


உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத

     யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே


சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை

     சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ்


செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக

     திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற்


கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை

     யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங்


கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக

     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.



                       பதம் பிரித்தல்



குதறு முனை அறிவுகொடு, பதறி எதிர் கதறி, மிகு

     குமுதம் இடு பரசமயம், ...... ஒருகோடி


குருடர் தெரிவு அரியது ஒரு பொருள் தெரிய, நிகழ் மனது,

     கொடிய இரு வினை எனும் ...... அளறுபோக


உதறி, விதறிய கரண மரணம் அற, விரணம் அற,

     உருகி உரை பருகி, அநு ...... தினம் ஞான


உணர்வு விழி பெற, உனது மிருகமத நளினபத

     யுகளம் இனி உணர அருள் ...... புரிவாயே.


சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம்அவை

     சிறுபொறிகள் என, உரக ...... பிலம் ஏழும்


செகதலமும் நிகர் சிகரி பலவும் நல கெச புயக

     திசையும் உடன் உருக வரு ...... கடைநாளில்


கதறும் எழு கடல்பருகி, வடவைவிடு கரியபுகை

     என, முடிவில் ககனமுகடு ...... அதில் ஒடும்


கலப கக மயில்கடவி, நிருதர் கஜ ரத துரக

     கடகம் உடன் அமர்பொருத ...... பெருமாளே.


பதவுரை


சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடுபடலம் அவை சிறு பொறிகள் என -- ஒளிக் கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, 


உரக பிலம் ஏழும், செக தலமு(ம்) நிகர் சிகரி பலவு(ம்) ந(ல்)ல கெச புயக திசையும் உடன் உருக வரும் --- நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற


கடை நாளில் கதறும் எழுகடல் பருகி வடவை விடு கரியபுகை என ---  யுகமுடிவான அந்த இறுதி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு, வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, 


முடிவில் ககன முகடு அதில் ஓடும் கலப கக(ம்) மயில் கடவி --- இறுதியில்யலாது பரந்து கிடக்கும் ஆகாய முகட்டில் ஓடுகின்ற, தோகையை உடைய பறவையாகிய மயிலைச் செலுத்தி, 


நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே --- அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால்வகைச் சேனைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 


குதறும் முனை அறிவுகொடு பதறி --- நெறிதவறி மூண்டு நிற்கின்ற சிற்றறிவைக் கொண்டு, பதற்றத்தோடு,


எதிர் கதறி --- ஆரவாரத்தோடு எதிர்வாதம் புரிந்து, 


மிகு குமுதம் இடு பரசமயம் --- மிகுதியாகக் கூச்சல் இட்டுப் பேரொலியை எழுப்புகின்ற பரசமயவாதிகள் ஆகிய 

ஒரு கோடி குருடர் தெரி அரியது --- ஒரு கோடி குருடர்களால் அறிந்து கொள்ள முடியாத,


ஒரு பொருள் தெரிய நிகழ் மனது --- ஒப்பற்ற பொருளை அறிந்து கொள்ள ஓடிக்கொண்டே இருக்கும் அடியேனுடைய மனம், 


கொடிய இருவினை எனும் அளறு போக --- பொல்லாத நல்வினை, தீவினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேற்றில் இருந்து நீங்கும்படியாகவும்,


உதறி விதறிய கரண(ம்), மரண(ம்) அற, விரணம் அற --- உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், 


உருகி --- மனம் உருகி,


அனுதினம் உரை பருகி --- தேவரீரது திருப்புகழைப் பொருள் உணர்ந்து நாள்தோறும், அனுபவித்து, 


ஞான உணர்வு விழி பெற --- ஞான உணர்வு என்னும் அகக் கண்களைப் பெற, 


உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள் புரிவாயே --- இனி தேவரீருடைய கத்தூரி மணம் கமழுகின்ற, தாமரைமலர் போன்ற திருவடி இணையை அடியேன் உணர்ந்து உய்யத் திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


ஒளிக் கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற யுகமுடிவான அந்த இறுதி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு, வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி,  இறுதியில்லாது பரந்து கிடக்கும் ஆகாய முகட்டில் ஓடுகின்ற, தோகையை உடைய பறவையாகிய மயிலைச் செலுத்தி,  அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால்வகைச் சேனைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 


நெறிதவறி மூண்டு நிற்கின்ற சிற்றறிவைக் கொண்டு, பதற்றத்தோடு, ஆரவாரத்தோடு எதிர்வாதம் புரிந்து,  மிகுதியாகக் கூச்சல் இட்டுப் பேரொலியை எழுப்புகின்ற பரசமயவாதிகள் ஆகிய  ஒரு கோடி குருடர்களால் அறிந்து கொள்ள முடியாத, ஒப்பற்ற பொருளை அறிந்து கொள்ள ஓடிக்கொண்டே இருக்கும் அடியேனுடைய மனம், பொல்லாத நல்வினை, தீவினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேற்றில் இருந்து நீங்கும்படியாகவும், உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும்,  மனம் உருகி, தேவரீரது திருப்புகழைப் பொருள் உணர்ந்து நாள்தோறும், அனுபவித்து, 

ஞான உணர்வு என்னும் அகக் கண்களைப் பெற,  இனி தேவரீருடைய கத்தூரி மணம் கமழுகின்ற, தாமரைமலர் போன்ற திருவடி இணையை அடியேன் உணர்ந்து உய்யத் திருவருள் புரிவீராக.


விரிவுரை


குதறும் முனை அறிவுகொடு பதறி எதிர் கதறி ---


குதறுதல் - நெறி தவறுதல், சிதறுதல்,


முனை - மூண்டு நிற்றல், ஊக்கம் கொற்றுதல்.


முனை அறிவு - நான் எனது எனது என்னும் தன்முனைப்பு உள்ள அறிவு.


பதறி - பதற்றம் கொண்டு. 


நான் என்னும் எண்ணம் உள்ளவரையில் அடுத்தவர் சொல்லுக்குச் செவி கொடுக்கும் எண்ணம் இருக்காது. ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால், பதற்றம் கொண்டு அதை எதிர்மறுத்துப் பேசுவது உள்ளவரையில் உண்மை அறிவு விளங்காது. எதிர்வாதம் அத்தகையது.


மிகு குமுதம் இடு பரசமயம் ஒரு கோடி குருடர் தெரி அரியது --- 


குமுதம் - பேரொலி. இங்கே சமயக் கூச்சலைக் குறித்து நின்றது. "ஒரு கோடி" என்பது அளவு இறந்தமையை உணர்த்திற்று.


"சமயத்துக் கத்துத் திரையாளர்" என்று சமயவாதிகள் குறித்து, காஞ்சிபுரம் திருப்பகழில் அடிகளார் கூறி உள்ளது காண்க. திரை - அலை.  கடல் அலைபோல் ஆரவாரம் செய்து சமயவாதிகள் தர்க்கம் செய்து கதறுவார்கள். அருணகிரிநாதருக்கு இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு.  பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.


"கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்


கலைகளு மொழியப் பஞ்ச பூதமு

மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன

கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்"  


என்கிறார் மதுரைத் திருப்புகழில்.


தெளிந்த அறிவு உள்ளவர்கள் ஒருபோதும் வாதம் புரியமாட்டார்கள். நூலறிவு மட்டுமே உள்ளவர்கள், தாம் உணர்ந்தவற்றையே உணர்ந்து, அவர்கள் உணர்ந்ததை நிறுவுவதற்காக, பிறரோடு வாதம் புரிவார்கள்.


அருணகிரிநாதருக்கு இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு. பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.


நிகரில் பஞ்ச பூதமும், நினையும் நெஞ்சும், ஆவியும்

   நெகிழ, வந்து நேர்படும்                    அவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர! நிரவ யம்ப ராபர!

   நிருப அம் குமாரவெள்                     என,வேதம்

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்

   சமய பஞ்ச பாதகர்                         அறியாத

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன

   சரண புண்டரீகம் அது                       அருள்வாயே..          ---  திருப்புகழ்.

பள்ளிக்குச் சென்று படிநிலையிலே நின்று அறிவைப் பெற்றுப் பெருக்கிக் கொள்வது போல, பரம்பொருளின் நிறைவான தன்மையை உணர்ந்து, அந்த உணர்விலேயே திளைத்து, நுண்ணுர்வு பெற்று இருப்பதற்கான வழியாக, ஆங்காங்கே சமய நெறிகள் உண்டாயின. நாமம் (NAME) ரூபம் (FORM) இல்லாத கடவுளை, ஒரு குறியில் வைத்து வழிபடுவதற்காக, சமய நெறிகள் வகுக்கப்பட்டன. 

அவ்வாறு வகுக்கப்பட்ட, அறுவகைச் சமயங்களும் இறைவனை அடைதற்கு வகுக்கப்பட்ட நெறிகளே. அவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து தெளியாது, சமய நெறிகளுக்கு உரை சொல்லுகின்ற அறிவற்றவர்கள், அவரவர் உணர்ந்தபடியே, சமய நெறிகளில் நல்லது இது, தீயது இது என்று, சொல்லித் திரிகின்றனர். இவர்களைப் பார்த்து, 

"ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள,

என்றது போல இருமுச் சமயங்கள்,

நன்று இது, தீது இது என்ற உரை ஆதர்கள்,

குன்று குரைத்து எழு நாஐ ஒத்தார்களே"


என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும், கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு, மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"  என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள' என்றார்.

அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்"

 என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.

சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை. இதைத்தான், "தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக் கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது. 

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

⁠பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

⁠கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.


சரயு நதியின் அழகைப் பாடவந்த கம்பர், மேற்குறித்த திருமந்திரப் பாடலின் கருத்தை வைத்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.

கல் இடைப் பிறந்து போந்து

    கடல் இடைக் கலந்த நீத்தம்

எல்லை இல் மறைகளாலும் இயம்பு

    அரும் பொருள் இது என்னத்

தொல்லையின் ஒன்றே ஆகித்

    துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

    போல் பரந்தது அன்றே.    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

இமய மலையில் தோன்றி, அங்கிருந்து வந்து, கடலிலே கலந்துவிட்ட சரயு நதியின் வெள்ளமானது, அளவிட முடியாத வேதங்களாலும் சொல்லுதற்கரிய பரம்பொருள் போன்றது  இந்த வெள்ளம்’  என்று சொல்லும்படியாக, ஆதிமுதலில் ஒன்றாகவே  இருந்து, ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களில் எல்லாம்; விரிந்த ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரந்து ஓடியது.  

பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம,  ரூப பேதங்களாக விளங்குகிறது.  அதுபோலவே சரயுவின் வெள்ளநீரும் ஏரி,  குளம்,  கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது.

 

தாயுமான அடிகளாரும், இக் கருத்தையே வலியுறுத்திப் பாடுகின்றார்...

 

"வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,

விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,

மாறுபடும் கருத்து இல்லை, முடிவில் மோன

     வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா."

 

இதன் பொருள் ---

 

ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பலவகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, அனைத்திற்கும் மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே!  உன்னுடைய திருவிளையாடலே அல்லாமல் மாறுபாடு எய்தும் கருத்துகள் இல்லையாகும். பல ஆறுகளின் வெள்ளமானது, கடலில் கலந்த போது, கடல் நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறியமுடியாதவாறு போல முடிவில்லாத மவுனப் பெருங்கடலில், எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இன்றி, சமரசம் உற்று விளங்குகின்றன. 

 

எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல் வேண்டும் என அறுவுறுத்தி உள்ளார்கள். "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் வேறு ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,

"பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

புகுந்து கலந்திட, நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்

தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே! எல்லாம்

செய்யவல்ல கடவுளே! தேவ தேவே!"

 

என்று அருளிச் செய்தார்.

 

சமயநூல்கள், உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை பிரிவதற்காக எழுந்தவை ஆகும். சண்டையிட்டுப் பிணங்கி, அறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

பொய்யான சமயங்களும், ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி,  தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

ஆக, அருளாளர்கள் அனைவரும், அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்து, திருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல், சமயக் கருத்துக்களைத் தெளியாமல், உயர்வு தாழ்வு கற்பித்து, ஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

ஒரு சமயத்தைச் சார்ந்தவர், பிற சமயத்தாரை இகழ்ந்து, பரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும், பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால், இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை, கம்பர் காட்டுமாறு காண்போம்.

 

மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான், தனது தம்பியோடும், விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில், இராமனின் தோளைக் கண்டவர்கள், அதை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தோள்களின் அழகில் மயங்கிய பெண்களுக்கு, மற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. இது எப்படி இருந்தது? ஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டாதவர்களைப் போல் உள்ளது. 

 

சமயவாதிகள் யாரும், நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போல, மிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை என்கிறார் கம்பர்.

 

"தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்."    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

(மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோள்  அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டு, களித்து முடியாமையால், பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க  இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள். வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள்  போன்ற (இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அவனது) பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே (பிறவற்றை நோக்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, வாள் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினை முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காது, தமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் (அப் பெருமானின்) உறுப்புக்கள்  பலவும் நோக்காது, அவர்கள் தாம் தாம் கண்ட ஓர் உறுப்பின் 

அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர். 

 

எனவே, சார்ந்துள்ள சமயம் பற்றிய உண்மையையே முழுதும் அறியாமல், பிற சமயக் கருத்துக்களோடு பிணங்குவது அறியாமை என்பதை அறிதல் வேண்டும்.


ஞானம் என்பது, பசு ஞானம், பாச ஞானம், பதி ஞானம் என மூவகைப்படும்.


பசு ஞானம் என்பது உயிர் அறிவு, ஆன்ம அறிவு. ஆன்மபோதம் எனப்படும்.


பாச ஞானம் என்பது ஆன்மாவானது பண்டங்களால் பெறுகின்ற அறிவு.


பதி ஞானம் என்பது, மேற்குறித்த இரண்டிலும் சாராது இறையைச் சார்வதால் பதிகின்ற உண்மை அறிவு. பதிவதால் பதி அறிவு என்றும் பதிஞானம் என்றும் காட்டப்பட்டது.  


பாச ஞானம்


ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறிவதால் பெறுகின்ற அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறி கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையின் காரியங்களே ஆகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாம் அறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் "பாசஞானம்" எனப்படுவது. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானாகவும் தனது என்றும் மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பையோ, அறிகின்ற பொருள்களின் உண்மை இயல்பையோ அறியாது போகிறது.


பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.


பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்,

பொன்னில் மறைந்தது பொன் அணி பூடணம்,

தன்னை மறைத்தது தன் கரணங்களாம்,

தன்னில் மறைந்தது தன்கரணங்களே.


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூவே.


என்னும் திருமூலர் திருமந்திரப் பாடல்களின் கருத்தை ஓர்க.


பசு ஞானம்


ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்றால், ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கும்.  அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாய் இருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்கு உரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில், அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேக படலம் மூடி இருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேக படலம் நீங்கிய போது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்ம உணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். 


கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அஃது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மையியல்பு.


இவ்வாறு கருவி அறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரிய வொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதேயாகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.


நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி

நாம் அல்ல; நாமும் அரன் உடைமை. - ஆம் என்னில்

எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;

முற்செய்வினை யும்தருவான் முன்.  --- சிவஞானபோத வெண்பா.


"பார்ஆதி பூதம் நீ அல்லை --- உன்னிப்

பார், இந்திரியம் கரணம் நீ அல்லை,

ஆராய் உணர்வு நீ என்றான் --- ஐயன் 

அன்பாய்உரைத்த சொல் ஆனந்தம் தோழி". --- தாயுமானார்.


"பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்கும் கால், அப்பரத்தின்

சீர் ஆக நிற்கும் கண்டாய் --- நேர் ஆக

சிற்கும் திருவருளில் நெஞ்சே, யாம் நிற்பது அல்லால்

கற்கும் நெறி யாது இனிமேல் காண்." --- தாயுமானார்.


"பார்ஆதி அண்டம்எலாம் படர்கானல் சலம்போல்

பார்த்தனையே, முடிவில் நின்று பார், எதுதான் நின்றது?

ஆராலும் அறியாத சத்து அன்றோ? அதுவாய்

    அங்கு இரு நீ, எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய்,

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்துப்

புலம்பாதே, சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே,

ஓராதே ஒன்றையும் நீ, முன்னிலை வையாதே,

    உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே."--- தாயுமானார்.


பதிஞானம்


இறைவனது அருளின் உண்மையை ஆன்மா உள்ளத்தில் கொள்ளுமாறு ஆசாரியர் அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆவாயோ? பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளே ஆகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோது, தன் அறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது. அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின், அவ்வருளுக்கு முதலாகிய சிவமானது பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.


மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறிய வாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறிய ஒண்ணாது. 


பதிஞானம் என்னும் உண்மை ஞானம் உணர்ந்தோர் எப்படி இருப்பர் என்பதைப் பட்டினத்து அடிகள் கூறுமாறு காண்க.


பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம்

நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்

தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!


அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்

பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?

செறிவு ஒன்று அற வந்து இருளே சிதைய,

வெறி வென்றவரோடு உறும் வேலவனே. --- கந்தர் அனுபூதி.


பதிஞானத்தைப் பெறாதவர்கள், சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டு, தம்மைத் தாமை உவந்துகொண்டும், பிறரைக் காய்ந்து கொண்டும், ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டு, கலகமிட்டுத் திரிவர். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். மேலும்,


"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"


என்றும் பாடினார் மணிவாசகப் பெருமான்.


ஒரு பொருள் தெரிய நிகழ் மனது --- 


பெற்ற நூலறிவால் மன நிறைவு பெற முடியாது என்பது உணர்ந்துகொண்ட போது, மனமானது மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளத் தலைப்படும். 


கொடிய இருவினை எனும் அளறு போக உதறி --- 


பொல்லாத நல்வினை, தீவினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேற்றில் இருந்து நீங்க, இறைவன் பொருள்சேர் புகழை எப்போதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். "இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்னும் பொய்யாமொழியை எண்ணிப் பார்க்க வேண்டும்.


விதறிய கரண(ம்), மரண(ம்) அற, விரணம் அற, உருகி, அனுதினம் உரை பருகி, ஞான உணர்வு விழி பெற, உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள் புரிவாயே  --- 


விதறி, விதறுதல் - நடுங்குதல், பதற்றம் கொள்ளுதல்.


விதறிய கரணம் --- பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கு.


விரணம் - பகைமை. உயிரின் ஈடேற்றத்திற்குப் பகையாக உள்ளவை காமம், குரோதம், உலாபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களும். இவை ஒழிய வேண்டும் என்கிறார் அடிகளார். இந்நிலையில், யான் எனது என்னும் செருக்கும் அறும்.


மிருகமதம் - கத்தூரி.


உரகம் - பாம்பு.


நளினம் - தாமரை.


உகளம் - இரண்டு. பத உகளம் - திருவடி இணை.


"இருவினை அற, மலம் அற, இரவு பகல் அற, எனது அற, நினது அற, அநுபூதி இனிமை தரும் ஒரு தனிமையை, மறைகளின் இறுதி அறுதி இட அரிய பெறுதியை, இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே" என்று பிரிதொரு திருப்புகழில் அடிகளார் அருளி உள்ளதை எண்ணுக.


முகத்தில் கண்கொண்டு காண்கின்றவர்கள் மூடர்கள் என்று கூறி, அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம் என்று காட்டினார் திருமூலதேவ நாயனார். இங்கே, "ஞான உணர்வு விழிபெற" என்றார் அடிகளார்.


"கழித்திலேன் காம வெந்நோய் 

  காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி 

  உணர்வெனும் இமை திறந்து

விழித்திலேன் வெளிறு தோன்ற 

  வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்

அழித்திலேன் அயர்த்துப் போனேன் 

  அதிகைவீ ரட்ட னீரே."


என்னும் அப்பர் தேவாரத்தை ஓதி உணர்தல் வேண்டும்.


இதன் பொருள் ---


திருவதிகைப் பெருமானே! என்னிடத்துள்ள ஆசாபாசம், காமம் என்ற கொடியநோய் நீங்கப் பெற்றிலேனாய்வ, ஆசை என்னும் பற்றினை விடுத்திலேனாய், உடலுயிர் வாழ்க்கையையே நோக்குபவனாய் இருத்தலால், அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக, விழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையைப் பெற்றிலேன். அதற்குத் தடையாகிய வினை என்னும் பண்டத்தையும் நிரம்பக் கொண்டுள்ளேன். அதே வேளை, இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவு உடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன். 


"உள்ளக் கண் நோக்கும் அறிவு ஊறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே" என்று வள்ளிமலைத் திருப்புகழில் அடிகளார் கூறி உள்ளதும் காண்க.


கருத்துரை


முருகா! திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக.


































25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...