திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 039 --- இறைமாட்சி
இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தனக்குப் பொருள் வரும் வழிகளை மேன்மேலும் உண்டாக்குதலும், அவ்வாறு வந்த பொருள்களை ஓரிடத்தில் சேர்த்து வைத்தலும், சேர்த்து வைத்த பொருளைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்துள்ள பொருள்களை அறவழியில் செலவு செய்தலும் வல்லவனே அரசன் ஆவான்" என்கின்றார் நாயனார்.
பொருள்களாவன --- மணி, பொன், நெல் முதலானவை.
பொருள் வரும் வழிகள் ஆவன --- பகைவரை அழித்தலும், திறை கொள்ளலும், தனது நாட்டைக் காத்தலும் முதலானவை.
பிறர் கொள்ளாமல் காத்தல் என்பது,பகைவர், கள்வர், சுற்றத்தார், தொழில் செய்வோர் முதலானவரை.
அறவழியில் செலவு செய்தலாவது,கடவுளர் வழிபாட்டிற்கும், அந்தணர்க்கும், வறியோர்க்கும் கொடுப்பதும்,புகழை வேண்டிக் கொடுப்பதும். இவை அறத்தின் பொருட்டு ஆகும்.
நால்விதப் படைகளுக்கும், நாட்டிற்கும், காவல் செய்யும் அரணுக்கும்,பகைவர்களோடு கூடுகின்றவர்களைப் பிரிப்பதற்கும், தன்னிடம் இருந்து பிரிகின்றவர்களைக் கூட்டுவதற்கும் செலவழிப்பது பொருள் பொருட்டு ஆகும். மண்டபங்கள், குளங்கள், மகிழ்வடைவதற்காகச் செய்யும் செய்குன்று எனப்படும் சிறுமலைகள், சோலைகள் ஆகிய இவைகளுக்கும், ஐம்புலன்களும் ஆர இன்பம் துய்ப்பதற்கும் ஆகிய இவைகளில் செலவிடப்படுவது இன்பத்தின் பொருட்டு ஆகும்.
திருக்குறளைக் காண்போம்...
இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இயற்றலும்--- தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்,
ஈட்டலும்--- அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும்,
காத்தலும்--- தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும்,
காத்த வகுத்தலும்--- காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்,
வல்லது அரசு--- வல்லவனே அரசன்.
(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல் என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன: மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப் பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும்,மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலிய தவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார்.)
பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளது காண்க...
"செருவில் ஒட்டலரைக் கொன்று,
திறைகொண்டு,நாடு காத்து,
பொருளினை ஈட்டி,கள்வர்
புல்லலர் சுற்றம் ஆதி
பருகுதல் இலாமை காத்து,
பயில் அறம் ஆதி மூன்றின்
மருவுற விடுத்துச் செங்கோல்
வளர்ப்பது மாட்சி ஆமே". --- விநாயக புராணம்.
சத்திரம் சோலை சாலைகள் குளங்கள்
தண்நதி, மதகொடு,அலயங்கள்
வித்தியாசாலை,மாட கூடங்கள்,
வேறுவேறு அமைத்து, வேளாண்மை
சத்தியம் அகலா வாணிகம் ஆதி
சகலநல்தொழில் அவரவர்கள்
நித்தியம் முயல இத்திசை புரக்கும்
நிருபனே நிருபனாம் அன்றோ. --- நீதிநூல்.
இதன் பதவுரை ---
ஊட்டுப் புரையும், பூங்காவும், சாலை, குளம், ஆறு, மடை, கோவில், கல்லூரிகளும், மாடகூடங்களும் வெவ்வறு அமைத்து வேளாண்மை, வாணிபம், கைத்தொழில் நாளும் பெருக வேண்டுவன செய்து காப்போன் வேந்தன்.
No comments:
Post a Comment