பணிவால் எல்லாம் வரும், இடும்பால் எல்லாம் போகும்.

                                                நல்ல காலத்தில் பகையும் உறவாகும்,

போதாத காலத்தில் உறவும் பகையாகும்.

-----

 

            நல்ல மனம் உள்ளவரையில் நல்ல காலம். எல்லாம் நன்மையாக நடக்கும். மனம் மாறுபடுகின்ற போதுபோதாத காலம். நன்மைகள் எல்லாம் ஒருங்கே போகும்.

                    

            திருக்குறளில் "இகல்" என்னும் ஓர் அதிகாரம். இகல் என்பதுமாறுபாடு கொள்வது ஆகும். பகைமை உணர்வு தோன்றுவதற்கு அடிப்படையாக அமைவது இந்த மாறுபாடு கொள்ளுகின்ற நிலையே. 

 

             யாரோடும் நினைவால் மாறுபடுவது. சொல்லால் மாறுபடுவது. செயலாலும் மாறுபடுவது. இகலால் வரும் கேட்டினை அறிவுற்றுத்துகின்றார் நாயனார். இந்த "இகல்" என்னும் அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "ஒருவன் தனக்கு ஆக்கம் வருகின்ற காலத்தில்காரணம் இருந்தாலும்பிறரோடு மாறுபாடு கொள்ளுவதை நினைக்கமாட்டான். தனக்கு அழிவு நேரும்போதுகாரணம் இல்லாது இருந்தும்பிறரோடு மாறுபாடு கொள்ளுவான்" என்கின்றார் நாயனார்.

 

            ஆக்கத்திற்கு முன்னர் நடப்பது மாறுபாடு இல்லாமை. கேட்டிற்கு முன்னர் நடப்பது மாறுபாடு கொள்ளுதல். எனவேமாறுபாடு இல்லையானால் செல்வம் உண்டு என்பதும்அது உண்டானால் மேடும் உண்டாகும் என்பதும் பெறப்படும்.

 

            ஒருவனுக்கு நல்வினைப் பயன் உண்டானால்யாரிடத்தும் மாறுபாடு கொள்ளாமல்நட்பாய் இருந்து தனது செல்வத்தை வளர்த்துக் கொள்வான். தீவினையின் பயன் உண்டானால்பகைமை கொள்ளத் தகாதவர் இடத்தும் பகைமையை வளர்த்துக் கொண்டுகேட்டினைத் தேடிக் கொள்வான்.

 

"இகல் காணான் ஆக்கம் வரும்கால்அதனை

மிகல் காணும் கேடு தரற்கு".                

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

            இத் திருக்குறளுக்கு விளக்கமாககமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

"ஆம்கால் இறைவர் அடி தொழுவார்செல்வம் எல்லாம்

போம்கால் அசுரர் பொர வருவார், ---நீங்கா

இகல் காணான் ஆக்கம் வரும்கால்அதனை

மிகல் காணும் கேடு தரற்கு".

 

இதன் பொருள் ---   

 

            ஆம் கால் (அசுரர்) இறைவர் அடி தொழுவார் --- (முப்புரவாசிகளாகிய கமலாட்சன்வித்யுன்மாலிதாரகாட்சன் என்னும் அசுரர் மூவர்) நல்வினைப் பயன் இருந்த காலத்தில் சிவபெருமானை வழிபட்டு எல்லா நலங்களையும் பெற்றனர். செல்வம் எல்லாம் போம் கால் --- அப்படிப் பெற்ற செல்வம் அனைத்தும் நீங்கும் காலம் வந்தபோது,  அசுரர் பொர வருவார் --- அந்த மூன்று அசுரர்களும் சிவபெருமானிடத்து மாறுபாடு கொண்டு போரிட வந்து  (பெற்ற செல்வங்கள் அனைத்தையும் இழந்தனர்)

 

            அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"சொன்ன நிறத்தான் சுதனே அரும்பகையாய்

இன்உயிரைக் கொன்றான் இரங்கேசா!  - மன்னும்

இகல்காணான் ஆக்கம் வருங்கால்அதனை

மிகல் காணுங் கேடு தரற்கு".     

 

இதன் பொருள் ---

 

            இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சொன்ன நிறத்தான் சுதனே --- இரணியனுடைய மகனாகிய பிரகலாதாழ்வானேஅரும் பகையாய் --- (அவனுக்குப்) பெரும் பகையாய்இன் உயிரைக் கொன்றான் --- (அவனுடைய) ஆருயிரைப் போக்கினான், (ஆகையால்இது) ஆக்கம் வருங்கால் --- ஒருவனுக்குச் செல்வம் வரும்போதுமன்னும் --- (பிறரிடத்தில்) பொருந்தியஇகல் காணான் --- பகைமையை (காரணமிருந்தும்) நினையான்கேடு தரற்கு --- தனக்குத் தானே கேடு தருவித்துக் கொள்வதற்குஅதனை --- (காரணம் இல்லாதிருந்தும்) அந்தப் பகைமையில்மிகல் காணும் --- மிகுதலை நினைப்பான் (என்பதை விளக்குகின்றது).

 

            சொன்ன நிறத்தான் --- சொர்ண நிறத்தான். இரணியன். இரணியனுக்கு கனகன் என்றும் பெயர் உண்டு. (சொர்ணம் --- தங்கம்கனகம்)

 

            இரணியன் அரசாளும் காலத்தில் மேல்நடுகீழ் என்னும் மூன்றுலகமும் தனக்கு ஏவல் செய்யஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலையும் தானே நடத்தித்தன்னையன்றித் தெய்வம் இல்லை என்று எல்லாரும் சொல்ல இகலின்றி (தன்னோடு மாறுபடுவார் இல்லாமல்) வாழ்ந்து வந்தான். அவனுக்கு அழிவு வந்த காலத்தில் தன் பிள்ளையே தனக்குச் சத்துருவான காரணத்தால்அவன் இறந்தான். இதனால்ஒருவன் "ஆக்கம் வருங்கால்மன்னும் இகல் காணான்", "கேடு தரற்கு,அதனை மிகல் காணும்" என்பது விளங்குகின்றது.

 

            இரணியாட்சன் என்பவன் நிலத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு பாதலத்திற்குச் சென்றான். திருமால் பன்றியுருவம் எடுத்துக் கொண்டு அவனைக் கொன்றார். இரணியகசிபு என்னும் மூத்தமகன் திருமாலிடத்திலே பகை கொண்டு நான்முகனைக் குறித்துத் தவம் செய்தான். உலகங்களை ஆக்கல்காத்தல்அழித்தல் முதலிய காரயங்களைத் தானே செய்தல் முதலிய பல வரங்களையும்மும்மூர்த்திகள் தமக்குரிய உருவத்தோடு படைக்கலம் உடையவர் எதிர்த்தாலும்பகல் இரவு என்னும் காலங்களிலும்மண்விண்உள்புறம் என்னும் இடங்களினும் அழியாமையும் பிறவும் பெற்று எல்லோரும் தன்னையே வழிபடுமாறு செய்தான். இந்திரன் முதலானவர்கட்குத் துன்பம் விளைவித்தான். இவ்வாறு கொடுங்கோலனாக அரசியற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அவனுடைய புதல்வர் நால்வருக்கும் சுக்கிராசாரியார் புதல்வர்கள் இருவர் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தனர். அந் நால்வருள் மூத்தவனாகிய பிரகலாதன் திருமாலையே பரம்பொருளாகக் கொண்டமையை அறிந்து சினந்தான். அவனைக் கொல்லும் பொருட்டுப் பல துன்பங்களைச் செய்தான். எதற்கும் பிரகலாதன் இறவாமையைக் கண்டு மனம் புழுங்கினான். ஒருநாள் மாலையில் மகனை அழைத்துநீ கூறியபடி திருமால் எங்கும் உள்ளவனாயிருப்பின் இத் தூணில் காட்டுவாயாக எனக் கூறி ஒரு தூணைப் புடைத்தான். அதிலிருந்து தோன்றிய நரசிங்கமூர்த்தியோடு எதிர்த்து அவரால் மாண்டான்.

 

            இரணியனுக்கு ஆகும் காலம் இருந்த காலத்தில்அவனுக்குஅன்பு மகனாகத் தோன்றானர் பிரகலாத ஆழ்வார். அவனுக்குஆணவம் முற்றி அழிந்து போகும் காலம் வந்தபோதுமாறுபாடு உண்டாகிஅந்த அன்பு மகனாலேயே மடிய நேர்ந்தது.

 

     தனக்கு மாறாக யாரும் இருக்கக் கூடாதுதான் நினைப்பதற்கு மாறாக எதுவும் நடந்துவிடக் கூடாது என்னும் எண்ணத்தை உள்ளத்தில் கொண்டுஎல்லோருடனும்மாறுபாடு கொள்ளுகின்ற ஒருவனுக்கு வறுமைபழிபாவம் எல்லாம் உண்டாகும். மாறுபாடு இல்லாமல் எல்லோருடனும் நட்புக் கொண்டு இருப்பவனுக்குசெல்வம்புகழ்புண்ணியம் யாவும் உண்டாகும். இதனாலேயேமாறுபாடு என்பது ஒருவனுக்குத் துன்பத்தைத் தருகின்ற நோய் என்னும் பொருளில், "இகல் என்னும் எவ்வ நோய்" என்றார் திருவள்ளுவதேவர். எவ்வம் --- துன்பம்.

 

     மாறுபடுகின்ற மனப்பான்மைஆணவம்அகந்தைஇடும்பு என்று சொல்லப்படுகின்றது. எல்லா வல்லமையும் தமக்குச் சேரும் வரைபணிவோடு இருந்து விட்டுவல்லமை வந்து சேர்ந்தவுடன் தன்னை மறந்து இறுமாந்து இருந்தவர்கள் எல்லோரும் அழிந்தே போயினர் என்று ஒரு பாடலின் மூலம், "குமரேச சதகம்" அறவுறுத்துகின்றது.

 

சூரபதுமன் பலமும்இராவணன் தீரமும்,

     துடுக்கான கஞ்சன்வலியும்,

துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,

     தொலையாத வாலி திடமும்,

 

பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது

     பராக்ரமும்,மதுகைடவர்

பாரிப்பும்மாவலிதன் ஆண்மையும்சோமுகன்

     பங்கில்உறு வல்லமைகளும்,

 

ஏரணவு கீசகன் கனதையும்திரிபுரர்

     எண்ணமும்,தக்கன் எழிலும்,

இவர்களது சம்பத்தும் நின்றவோஅவரவர்

     இடும்பால் அழிந்த அன்றோ?

 

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த

     வரபுத்ர! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வரபுத்திர--- மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணால் எரித்து அருள் புரிந்த சிவபெருமான் அருளால் வந்தவரே!வடிவேலவா--- கூர்மையான வேலை உடையவரே!மயில் ஏறி விளையாடு குகனே---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

      சூரபத்மன் பலமும்--- சூரபதுமனுடைய வலிமையும்,  இராவணன் தீரமும்--- இராவணனுடைய நெஞ்சுறுதியும்,  துடுக்கான கஞ்சன் வலியும்--- துடுக்குத்தனம் மிகுந்த

கஞ்சனுடைய ஆற்றலும் துடியான இரணியன் வரப் பிரசாதங்களும்--- துடிப்புடைய இரணியன் தனது வரத்தினால் பெற்ற ஆற்றலும் தொலையாத வாலி திடமும்--- வாலியின் அழிவற்ற வல்லமையும் பாரம் மிகு துரியோதனாதிநூற்றுவரது பராக்கிரமமும்---கூட்டமாக இருந்த துரியோதனன் முதலான கவுரவர் நூற்றுவரின் ஆற்றலும் மதுகைடவர் பாரிப்பும்--- மதுகைடவருடைய பெருமையும் மாவலி தன் ஆண்மையும் --- மாபலியின் வீரமும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும்--- சோமுகனிடத்தில் இருந்த வலிமையும் ஏர் அணவு கீசகன் கனதையும்--- அழகு பொருந்திய கீசகனின் பெருமையும் திரிபுரர் எண்ணமும்--- முப்புராதிகளின் நினைவும் தக்கன் எழிலும்--- தக்கனுடைய அழகும் இவர்களது சம்பத்தும் நின்றவோ--- இவர்களுடைய செல்வமும்நிலைபெற்று இருந்தனவோ?அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ?--- அவரவர்கள் கொண்டு இருந்த அகந்தையால் அழிந்தன அல்லவா?

 

            எனவேநினைத்த எல்லாம் நடக்கின்றது என்றால்அது எப்போதோ நாம் செய்த புண்ணியத்தின் பயனாக இறைவனால் அருளப்படுகின்றது என்று எண்ணி அமைந்து ஒழுகவேண்டும். என்னால்தான் எல்லாம் என்றால்அது அகந்தைஆணவம்இடும்புமாறுபாடு,இகல். அது முற்றினால்முன்னர் வந்து சேர்ந்த நலம் எல்லாம் ஒருங்கே இல்லாமல் போய்விடும். இகல் என்பது துன்பத்தைத் தருகின்ற நோய் என்னும் கருத்தில் "இகல் என்னும் எவ்வ நோய்" என்று திருவள்ளுவதேவர் அருளிச் செய்தது அறிக.

 

 

1 comment:

  1. ஐயா, வணக்கம் ! தங்கள் பதிவுகள் மிக அருமை மற்றும் வாழ்வியலில் முன்னேற வழி தருபவை. நிறைய பேர் அறிவுரை கட்டுரைகளும் எழுதுவார்கள், அருள் கட்டுரைகளும் எழுதுவார்கள். ஆனால் வெகு சிலரே தாம் சொல்லும் கட்டுரைக்கான தரவுகளை நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி பதிவிடுவர். அவ்வெகு சிலரில் தாமும் ஒருவர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் ஒவ்வொரு திருப்புகழுக்கும் எழுதிய விரிவுரையைப் படிப்பது நான் செய்த தவம். திருப்புகழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும், அதற்கான மேற்கோள்களையும் தாங்கள் பதிவிட்ட முறை மிக அருமை. இவை போன்ற பதிவுகளைத் தாங்கள் இடைவிடாது பதிவிட வேண்டும் என்பது இச்சிறியேனுடைய வேண்டுகோள். உமது திருப்புகழ்த் தொண்டும், தமிழ்த்தொண்டும் சிறக்க வேண்டும் ! திருச்சிற்றம்பலம் !

    ReplyDelete

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...