039. இறைமாட்சி --- 08. முறைசெய்து காப்பாற்றும்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 039 --- இறைமாட்சி

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அற நூலும்நீதிநூலும் கூறும் நெறியில் நின்றுமுறைசெய்து பிறர் வருந்தாமல் காத்தலைப் புரியும் மன்னவன்,பிறப்பால் மனிதனேயானாலும்,தனது செயலால் அவன் மக்களுக்குத் தெய்வம் என்று மதிக்கப்படுவான்" என்கின்றார் நாயனார்.

 

     மனுநீதிச் சோழனைப் போல்மனிதர்கள் மட்டும் அல்லாமல்எந்த உயிருக்கும் நீங்கு நேராவண்ணம்அரசநீதியைச் செலுத்துதல்.

 

திருக்குறளைக் காண்போம்....

 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்மக்கட்கு

இறை என்று வைக்கப் படும்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     முறை செய்து காப்பாற்றும் மன்னவன்--- தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்

 

     மக்கட்கு இறை என்று வைக்கப்படும்--- பிறப்பான் மகனேயாயினும்செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.

 

     (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்என்றது மேற் சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஒன்றி மறித்தான் உரோணி சகடைசௌரி

என்றும் புகாமல், இரங்கேசா! - நன்று

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப்படும். 

 

இதன்பதவுரை ---  

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சௌரி --- சனி பகவான்உரோணி சகடை --- உரோகணி சகடையில்என்றும் புகாமல் --- என்றென்றும் புகவொட்டாமல்ஒன்றி --- (தசரதன் சனி மண்டலத்தில்) சென்றுமறித்தான் --- தடுத்தான், (ஆகையால்இது) நன்று --- நீதியுடன்முறை செய்து --- செங்கோலோச்சிகாப்பாற்றும் மன்னவன் --- (குடிகளைப்) பாதுகாக்கும் அரசன்மக்கட்கு --- இக் குடிமக்களுக்குஇறை என்று --- (பிறப்பினால் மனிதனாயினும் ஒழுக்கத்தினால்) தேவன் என்றுவைக்கப்படும் --- (வேறு பிரித்து) வைக்கப்படுவான் (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- செங்கோலோச்சிக் குடிகளைக் காக்கும் மன்னவன் தெய்வமாவான்.

 

            விளக்கவுரை--- சனி பகவான் உரோகணி சகடையில் புகுந்தால் உலகத்தில் பன்னிரண்டாண்டு மழையில்லை என்று முன்னதாகவே அறிந்தபருவத பாரிட சமுத்திரத்தை நாடி குடிமகன்கள் வலசை வாங்கிச் சென்றார்கள் (வலசை வாங்குதல் --- வேற்றூருக்குக் குடும்பத்தோடு குடிபோதல்). அதுகண்ட செங்கோலரசனாகிய தசரதன் தேர் ஏறிச் சென்றுசனி மண்டலத்தை அடைந்துசனி பகவான் உரோகணி சகடையில் புகவொட்டாமல் மறித்துச் சண்டை செய்துவென்றுமறுபடியும் என்றென்றும் சனிபகவான் உரோகணி சகடையில் புகுவதில்லை என்று வாக்குறுதி பெற்றுத் திரும்பி வந்துகுடிமக்கள் வலசை போவதை நிறுத்திபஞ்சம் பரதவிப்பு இன்றிசேமமாக அறுபதினாயிர வருடம் நீதியுடன் ஆட்சி புரிந்தான். ஆகையால்ஒன்றி மறுத்தான் உரோகணிச் சகடையில் சௌரி என்றும் புகாமல் இரங்கேசா என்றார்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

உற்றபுறவும் புரப்பான் ஓங்குசிபி தன்உடலம்

முற்றும் அரிந்து ஈந்தான், முருகேசா! - பற்றும்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும்.

 

இதன் பதவுரை ---

 

     முருகேசா --- முருகப் பெருமானேஓங்கு சிபி --- புகழால் ஓங்கு விளங்கிய சிபிச் சக்கரவர்த்திஉற்ற --- தன்பால் அடைக்கலம் புகுந்தபுறவம் புரப்பான் --- புறாவையும் காப்பாற்றும் பொருட்டு,தன் உடலம் முற்றும் அரிந்து ஈந்தான் --- தன்னுடைய உடல் முழுவதையும் அரிந்து கொடுத்தான். பற்றும் --- பொருந்தும்முறை செய்து காப்பாற்றும் மன்னவன் --- செங்கோல் முறையைச் செய்து உயிர்த் தொகைகளைக் காப்பாற்றுகின்ற அரசன்மக்கட்கு --- அவன் கீழ் வாழும் மக்களுக்குஇறை என்று வைக்கப்படும் --- தெய்வம் என்று சொல்லப் பெறுவான்.

 

            சிபிச் சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற வேண்டித் தன்னுடைய உடல் சதையை அரிந்து கொடுத்தான். அரசாட்சியைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்து தன் குடிகளைப் பாதுகாக்கும் அரசனே அம் மக்கட்கு இறைவன் என்று சொல்லப்படுவான் என்பதாம்.

 

                                                சிபிச் சக்கரவர்த்தி கதை

 

            முன்னாளில் சிபிச் சக்கரவர்த்தி என்னும் அரசன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் சீகாழியை அடைந்து ஒரு வேள்வி செய்யத் தொடங்கினான். அப்போது சிவபிரான் இந்திரனையும் தீக்கடவுளையும் அழைத்து, "நீங்கள் இருவரும் சிபியினது நெறிமுறையை உலகிற்கு வெளிப்படுத்துவீர்களாக" என்று கட்டளை இட்டு அருளினார். தீக்கடவுள் புறா வடிவம் கொண்டார். இந்திரன் கழுகு வடிவம் கொண்டு அப்புறாவைத் துரத்தினான். புறா சிபிச் சக்கரவர்த்தியிடம் போய் அடைக்கலம் புகுந்தது. கழுகு சென்று, "இப் புறா என்னுடைய உணவாகும். என்னுடைய உணவை விட்டுவிடுக" என்று கூறிற்று. அரசன், "நான் இப் புறாவினை விடேன். இதற்குப் பதிலாக என்னுடைய உடல் தசையையே தருவேன். அதனைப் பெற்றுக் கொள்ளுவாயாக" என்று கூறினான். அக் கழுகின் விருப்பப்படியே அரசன் வேள்விச் சாலையில் ஒரு நிறைகோலை நாட்டிப் புறாவை ஒரு தட்டிலே விட்டுமற்றொரு தட்டிலே தன்னுடைய உடல் தசையை அரிந்து வைத்தான். கழுத்தளவு அரிந்தும் புறாவின் நிறைக்கு நேராக வரவில்லை. தானே அத் தட்டிலே ஏறித் தட்டைச் சமமாக்கினான். அதனைக் கண்ட இந்திரன் அஞ்சித் தன் உருவத்தோடு தோன்றினான். இறைவன் ஆணைப்படிஅவனது பெருமையை ஆராய்ந்து பார்க்க வந்தமையைக் கூறினான். அரசனுடைய அறுபட்ட உடல் வளர்ந்து நிரம்பியது. சிவபிரான் காட்சி கொடுத்து அரசனைத் தம்முடைய திருவடி நீழலிலே சேர்த்தருளினார்.

 

          அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பெற்றவைக்கு என் போல் இரண்டு பேரில் ஒருவன் பிழைத்தால்

சிற்றவைக்கு ஆம் என்றான், சிவசிவா! --- உற்ற

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும்.

 

          நால்வரும் நச்சுப் பொய்கையில் இறந்த காலத்துத் தருமன் தன்னுடைய சிற்றன்னையின் பொருட்டுச் சகாதேவனை எழுப்ப வேண்டல். 

 

          அவ்வை --- தாய். அவ்வை என்னும் சொல்அவை எனக் குறுகி வந்தது.

 

          பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடித்துபாண்டவர்கள் ஓராண்டு மறைந்து வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம்  விண்டுசிந்த முனிவன் வாழும் காட்டை அடைந்துபாண்டவர் இனிது இருந்தார்கள். பாண்டவரைக் கொல்லுதற்குத் துரியோதனன் முதலிய நால்வரும் சூழ்ச்சி செய்தனர். துரியோதனன் ஒரு முனிவனை அனுப்பி,காளமாமுனியை வரவழைத்துஅவனை வணங்கி, 'என்னை ஈடேற்ற வேண்டும், பாண்டவரை அழிக்க வஞ்சக வேள்வி இயற்ற வேண்டும்'  என்று வேண்டுகின்றான். முனிவன் வருந்தி,அதன் விளைவு பற்றிக் கூறிஓமம் புரியஅதினின்றும் எழுந்த பூதத்தைக் கண்டு முனிவன் நடுங்குதலும்பாண்டவரைத் தப்புவிக்க அறக்கடவுள் அந்தணச் சிறுவனாய் வந்துமான் கொண்டு ஓடிய தன் மான் தோலை மீட்டுத் தர வேண்டபாண்டவர்கள் மானைத் தொடருகின்றார்கள். மானைத் தொடர்ந்த பாண்டவர்அதனைப் பற்ற இயலாதுமாயம் என்று ஆசை ஒழிந்தனர். அறக்கடவுள் கானில் நச்சுப் பொய்கையாய் விளங்கினார். தருமன்நீர் கொணருமாறு சகாதேவனைப் பணிக்கஅவன் சென்றுதடாகத்தில் உள்ள நச்சு நீரைப் பருகி இறந்து விழுந்தது தெரியாதுதருமன் ஏனையோரையும் ஒருவர் பின் ஒருவராக அனுப்புகின்றான். இறுதியில் சென்ற பீமன் நச்சு நீரால் நேர்ந்த விளைவு என்று எண்ணி வருந்திதருமன் அறியும் பொருட்டுமணலில் எழுதிதானும் நீரைப் பருகிஉயிர் துறக்கின்றான். தம்பியர் வரவு காணாதுசோகமும் தாகமும் விஞ்சதருமன் மயங்கி விழுகின்றான். இங்கு இவ்வாறு இவர் இருக்கஐவரைக் கொல்லுமாறுஓமத்தில் தோன்றிய பூதத்தை முனிவன் ஏவினான். 'பாண்டவர் இன்று எனக்கு இலக்காகாவிடின்உன்னையே கொல்வேன்என்று சொல்லிபாண்டவரைக் காண வந்த பூதம் ஐவரின் நிலை கண்டு வருந்திமுனிவனிடம் மீண்டு வந்துதான் முன் உரைத்தபடி அவனைச் சூலத்தால் எறிந்து கொன்றது. தருமன் உணர்வு பெற்றுதம்பியர் சென்ற சுவடு நோக்கிச் சென்றுபொய்கைக் கரையில் துணைவரைக் காணுகின்றான். தம்பியர் இறந்தது எதனால் என்று எண்ணிய தருமன்மணலில் பீமன் எழுதிய குறிப்புக் கண்டுதானும் அந் நீரைப் பருகச் செல்லுகின்றான்.அப்பொழுதுஅசரீரி அவனைத் தடுத்து, "இது நச்சு நீர். உனது தம்பியர் நால்வரும் எனது மொழி கேளாது இந்த நீரைப் பருகிஇந்த நிலை அடைந்தனர். நீ இந்த நீரைப் பருகவேண்டாம்" என்றது.

 

"'உன்னை யான் வினவு உரை தனக்கு உத்தரம் உரைத்து,

பின்னை நீ நுகர்பெறாது பெற்றனைய இப் புனலை;

அன்னைபோல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே!

என்னையோபெருந் தாகம் விஞ்சிடினும்இன்று?' எனவே",

 

"பெரு நலம் பெறு மகனை அப் பேர் அறக் கடவுள்

இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம்,

திரு உளம்தனில் கொண்டுதன் செங் கை நீர் வீழ்த்தி,

பொருவு இலா மகன், 'புகலுவ புகறிநீ!என்றான்".

 

அறக்கடவுள் அருவ நிலையில் சொன்ன சொல்லைக் கேட்ட தருமன்தனது கையில் இருந்த நீரைக் கீழே விட்டு, "சொல்ல வேண்டியதைச் சொல்" என்றான். தருமனும் தருமதேவதையும் உரையாடுகின்றனர்.

 

அறக் கடவுள் --- உலகத்தில் சொல்லப்படுகின்ற சாத்திரங்களில்பெரியதுபெருமை பெற்றது எது

 

தருமன் ---  பிறநூல்களில் கிடைப்பதற்கு அருமையான மெய்ம்மைப் பொருளை உடைய வேதமே ஆகும்: 

 

அறக் கடவுள் --- இல்லறத்தானுக்கு உரிமையான பொருள் எது?

 

தருமன் --- நற்குணங்களால் மதிப்பு வாய்ந்த மனைவியே.

 

அறக் கடவுள் ---  வளப்பமுள்ள பூமாலைகளில் நறுமணத்தை உடையதுஎது?

 

 தருமன் --- வளப்பமுள்ளசாதிப் பூமாலையே ஆகும்: 

 

அறக் கடவுள் --- சிறந்த பெரிய தவம் எது?

 

தருமன் --- தமது குலத்துக்கு ஏற்பக் கடைப்பிடித்துவருகின்ற நல்லொழுக்கமேஒருவர் தமது குல ஆசாரம் தவறாது நடப்பின்அவருக்கு வேறு மாதவம்வேண்டா.

 

அறக் கடவுள் --- உலகப்பற்றை ஒழித்த இருடிகளின்கூட்டம் வணங்குகின்றகடவுள் யார்?

 

தருமன் ---  நெருங்கியதிருத்துழாய் மாலையை அணிந்த முகுந்தனே முனிவரும் வணங்கும் கடவுள்.

 

அறக் கடவுள் --- பூ அரும்பின் மணம் வீசுகின்றகூந்தலை உடைய மகளிர்க்கு இயல்பாய் அமைந்திருக்க வேண்டிய குணம்எது?

 

தருமன் --- நாணம் ஆகும்: 

 

அறக் கடவுள் --- செல்வம் மிக்கவர்க்குப் பாதுகாவலாவது ஏது

 

தருமன் --- தக்கார்க்குச் செய்யும் தானம் ஆகும்.

 

அறக் கடவுள் --- இரண்டு காதுகளை உடைய மனிதனுக்கு இனிமையைத் தருவது எது?

 

தருமன் --- இளம் குழந்தைகள் பேசுகின்ற  மழலைச்சொற்கள்  இனிமையானது ஆகும்.

 

அறக் கடவுள் --- நிலைத்து நிற்பது எதுவோ?

 

தருமன் --- நீண்ட கீர்த்தி ஒன்று தான் நிலைத்து நிற்கும்.

 

அறக் கடவுள் --- ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டுவதுஎதுவோ?

 

தருமன் --- குற்றமில்லாமல்  படிக்க வேண்டுவதாகிய கல்வியே. 

 

அறக் கடவுள் --- எல்லாத் தொழில்களிலும் ஒருவனுக்குச் சிறுமையை உண்டாக்குவது எது?

 

தருமன் --- பிறருடைய கையில் இருந்துஒரு பொருளை யாசித்துப் பெறுவது சிறுமையைத் தரும்.

 

     தருமன் தந்த விடைகளால் மகிழ்வுற்ற தருமதேவதை அவன் முன் தோன்றி,  அவன் இனிமேற்கொள்ள வேண்டிய உபாயங்களைத் தெரிவித்துஉனக்கு அன்புள்ள ஒருவனை எழுப்பிக் கொள்வாயாக என்று ஒரு மந்திரத்தை அருளுகின்றது. தனது தந்தையான தருமதேவனை வணங்கிய தருமன்தனது தம்பியருள் இளையவனாகிய சகாதேவன் உயிர் பெற்று எழச் செய்தான்.

 

"அறப் பெருங் கடவுள் என்று அறிந்துதாதையைச்

சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய

மறப் பெரும் புதல்வனைமகிழ்ந்து, 'நும்பியர்

இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டுஎனா"

 

"நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில்

உச்சம் ஆம் அன்புடை ஒருவன்தன்னைநீ

இச்சையால்இம் மறை இயம்பிஎண்ணி ஓர்

அச்சம் அற்று அழை!என அருள் செய்தான்அரோ."

          

"தாதை கூறிய மறைதனைக் கொண்டேசுதன்

ஏதம் உற்றிடாவகைஇளைய தம்பியை

ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான்-

வேதமும் நிகர் இலா விரத வாய்மையான்".

 

சகாதேவனை மட்டும் எழுப்பியதற்குக் காரணத்தைத்  தருமதேவன் கேட்டான். 

 

"கண்டு நின்றுஅறப் பெருங் கடவுள், 'வாயுவின்

திண் திறல் மா மகன்தேவர் கோ மகன்,

மண்டு அழல் விடத்தினால் மடியமா மருத்து

அண்டர் நல்கு இளவலை அழைத்தது என்?' என்றான்".

 

உள்ளத்தில் வஞ்சனை இல்லாத குந்திதேவிக்கு மகனாக நான் ஒருவன் இருக்கின்றேன். எனது சிற்றன்னையாகிய மைத்திரிக்கும் ஒரு புதல்வன் வேண்டும். எனவே,  நான் சகாதேவனை எழுப்பினேன்" என்றான் தருமன்.

 

"'குத்திரம் இலா மொழிக் குந்திக்கு யான் ஒரு

புத்திரன் உளன் எனப் புரிந்து நல்கினாய்;

மத்திரிக்கு ஒரு மகவு இல்லை;-வல்லவர்

சித்திரம் வகுத்தெனத் திகழும் மேனியாய்!"'

 

இவ்வாறு தனது மகனாகிய தருமன் கூறக் கேட்ட தருமதேவன்தம்பியர் நால்வரையும் எழுப்பியதோடுமாண்டவர் வெற்றி பெறுவதற்கு உரிய மந்திரங்களையும்வில்வேல் முதலான பல படைகளையும் அருளினான்.

     

"என்று தன் தந்தையோடு இயம்பதந்தையும்,

மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்குஅமர்

வென்றிடு மறைகளும்வில்லொடுஏவுவேல்,

என்ற பல் படைகளும்யாவும்நல்கினான்".

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளது காண்க...  

 

குலமகட்குத் தெய்வம் கொழுநனேமன்ற    

புதல்வர்க்குத் தந்தையுந் தாயும், - அறவோர்க்கு   

அடிகளே தெய்வம்அனைவோர்க்குந் தெய்வம்    

இலைமுகப் பைம்பூண் இறை.  --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பதவுரை ---

 

     குலமகட்குக் கொழுநனே தெய்வம் --- நல்லொழுக்கம் உடைய பெண்ணுக்கு அவள் கணவனே தெய்வம் ஆவான்புதல்வர்க்குத் தந்தையும் தாயும் --- புதல்வர்களுக்கு அவர்கள் தாய் தந்தையர்களே தெய்வம் ஆவார்கள். அறவோர்க்கு அடிகளே தெய்வம் --- நல்லொழுக்கம் உடைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியன்மாரே தெய்வம் ஆவார்அனைவோர்க்கும் இலை முகப் பைம்பூண் இறை தெய்வம் --- இவர் ஒழிய மற்ற எல்லோருக்கும் இலை நுனிபோன்ற பசும்பொன் நகைகள் அணிந்த அரசனே தெய்வமாவான்.

 

     குடிமக்களால் தெய்வமாகப் போற்றப்பெறும் அரசனது தன்மை குறித்துக் கல்லாடம் என்னும் நூல் அறிவிப்பது காண்க.

 

அடியவர் உளத்து இருள் அகற்றலின் விளக்கும்,

எழுமலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும்,

கருங்கடல்குடித்தலிற் பெருந்தழல் கொழுந்தும்,

மாவுயிர் வௌவலில் தீவிழிக் கூற்றும்

என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும்,

நச்சின கொடுத்தலின் நளிர்தரு ஐந்தும்,

கருவழி நீக்கலின் உயர்நிலைக் குருவும்,

இருநிலங் காத்தலின் மதியுடை வேந்தும்,

ஆகிய மணிவேல் சேவல்அம் கொடியோன்..--- கல்லாடம்.

 

 இதன் பதவுரை ---

 

     அடியவர் உளத்து இருள் அகற்றலின் விளக்கும் --- மெய்யடியாரது நெஞ்சத்துள்ள மல இருளைப் போக்குதலால் விளக்கினையும்எழுமலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும் --- ஏழுமலைகளையும் நீறு செய்தலாலேதீயால் அழிக்கின்ற இடி ஏற்றினையும்கருங்கடல் குடித்தலில் பெருந்தழல் கொழுந்தும் --- கரிய கடல்நீரைப் பருகுதலாலே பெரிய வடவைத் தீயின் பிழம்பையும்மா உயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும் --- மாமர உருவாகிய சூரபதுமன் உயிரைக் கவர்தலாலேதீக்காலுகின்ற கண்ணை உடைய கூற்றுவனையும்என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும் --- அடியேனுடைய உள்ளத்தின் ஊடு உறைதலாலேகருவிகளோடு பொருந்தி உணர்கின்ற என் உயிரையும்நச்சின கொடுத்தலின் நளிர் ஐந்து தருவும் --- அடியார் விரும்பியவற்றை வழங்குதலாலேகுளிர்ந்த ஐந்து தேவ தருக்களையும்கருவழி நீக்கலின் நிலை உயர் குருவும் --- அடியார்க்குப் பிறவி வருதற்கு ஏதுவாகிய வழியை அடைத்தலாலேநிலையினின்று உயர்ந்த நல்லாசிரியனையும்இருநிலம் காத்தலின் மதி உடை வேந்தும் --- பேருலகத்தைப் பாதுகாத்தலாலேதிங்கள் மரபில் உதித்த பாண்டிய மன்னனையும்ஆகிய --- நிகராகியமணிவேல் சேவல் அம் கொடியோன் --- மணியையுடைய வேற்படையினையும் சேவற் கொடியினையும் உடைய முருகப் பெருமான்.

 

 

எந்த வேளையினும் நொந்தவர் துயர்கேட்டு,

            இடர் இழைப்பவன் தனது ஏக

மைந்தனே ஏனினும் வதைத்திட ஒல்கான்,

     மாக்களின் சுகநலம் அன்றிச்

சிந்தனை மற்றோர் பொருளினில் செலுத்தான்,

            தீமொழி கனவிலும் புகலான்,

தந்தைபோல் தாய்போல் எவரையும் ஓம்பும்

     தன்மையனே இறை அன்றோ.    --- நிதிநூல்.

 

 இதன் பதவுரை ---

 

     குடிகளுக்குத் துன்பம் செய்வோன் தன் ஒரு மகனாக இருப்பினும் தண்டிப்பவனும்குடிகள் நலமே எண்ணுபவனும் கடுமொழி இல்லாதவனும்தந்தைதாய் போல் பேணுபவனும் மன்னன் ஆவான்.

 

மன்னுயிர் அனைத்துந் தன்னுயிர் என்ன

            மகிழ்வொடு தாங்கியாரேனும்

இன்னல் உற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில்தன்

            இருவிழி நீரினை உகுப்பான்,

அன்ன வெந் துயரை நீக்குமுன் தான்ஒன்று

            அயின்றிடான்,துயின்றிடான்,எவரும்

நன்னகர் எங்கும் உளன் எனப் பகர

            நாடொறும் இயங்குவோன் கோனே.  --- நீதிநூல்.

 

இதன் பதவுரை ---

 

     எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப்பிறர் துன்பம் கண்டால் கண்ணீர் விட்டுஅத் துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கம் இன்றி,நகர் எங்கும் காணும்படி வருவோன் மன்னன்.

 

 

முறையும்வாய்மையும்முயலும் நீதியும்,

அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம்

துறையுள் யாவையும்கருதி நூல் விடா

இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்.  --- கம்பராமாயணம்திருவடி சூட்டு படலம்.

               

இதன் பதவுரை ---

 

     முறையும் --- நல்லொழுக்கமும்வாய்மையும் ---சத்தியமும்;  முயலும்நீதியும் --- எல்லோரும் அடைய முயலும் நியாயமும்;  அறையும் ---சிறப்பித்துச் சொல்லப்பெறும்மேன்மையோடு --- மேன்மையும்அறனும் ---தருமமும்ஆதி ஆம் --- இவை முதலாகிய;  துறையுள் யாவையும் ---அறத்துறையுள் சேர்ந்த எல்லாம்கருதி நூல் விடா இறைவர் --- வேதவழியிற் சிறிதும் பிறழாத அரசர்களதுஏவலால் ---கட்டளையாலேஇயைவ ---உண்டாவன என்பதைகாண்டி --- அறிவாயாக.

 

     இறைவர் சுருதி வழி பிறழாதவர் ஆயின்,அவர் ஏவுவனவே அறத்துறையாம். ஆதலின் தயரதன் ஏவல்வழி பரதன் அரசாளுவது அறமே என்று பரதனுக்கு இராமன் உணர்த்தினான்.


     

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...