பொது --- 1000. ஓது முத்தமிழ்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஓது முத்தமிழ் (பொது)

 

முருகா! 

அடியேனை ஆண்டு அருள்

 

தான தத்தன தானா தனாதன

     தான தத்தன தானா தனாதன

     தான தத்தன தானா தனாதன ...... தந்ததான

 

 

ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை

     வேத னைப்படு காமாவி காரனை

     ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி

 

யோக மற்றுழல் ஆசாப சாசனை

     மோக முற்றிய மோடாதி மோடனை

     ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி

 

பாத கக்கொலை யேசூழ்க பாடனை

     நீதி சற்றுமி லாகீத நாடனை

     பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ......மண்ணின்மீதில்

 

பாடு பட்டலை மாகோப லோபனை

     வீடு பட்டழி கோமாள வீணனை

     பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ......தெந்தநாளோ

 

ஆதி சற்குண சீலா நமோநம

     ஆட கத்திரி சூலா நமோநம

     ஆத ரித்தருள் பாலா நமோநம ......உந்தியாமை

 

 

ஆன வர்க்கினி யானே நமோநம

     ஞான முத்தமிழ் தேனே நமோநம

     ஆர ணற்கரி யானே நமோநம ......மன்றுளாடும்

 

தோதி தித்திமி தீதா நமோநம

     வேத சித்திர ரூபா நமோநம

     சோப மற்றவர் சாமீ நமோநம ......தன்மராச

 

தூத னைத்துகை பாதா நமோநம

     நாத சற்குரு நாதா நமோநம

     ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

ஓதும் முத்தமிழ் தேரா வ்ருதாவனை,

     வேதனைப் படு காமா விகாரனை,

     ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை, ...... அந்தர்யாமி

 

யோகம் அற்று உழல் ஆசா பசாசனை,

     மோக முற்றிய மோட அதி மோடனை,

     ஊதியத் தவம் நாடாத கேடனை, ...... அன்றில்ஆதி

 

பாதகக் கொலையே சூழ் கபாடனை,

     நீதி சற்றும் இலா கீத நாடனை,

     பாவியர்க்குள் எலாம் மா துரோகனை, ......மண்ணின்மீதில்

 

பாடு பட்டு அலை மா கோப லோபனை,

     வீடு பட்டு அழி கோமாள வீணனை,

     பாச சிக்கினில் வாழ்வேனை, ஆளுவது ......எந்தநாளோ?

 

ஆதி சற்குண சீலா! நமோ நம,

     ஆடகத் திரி சூலா! நமோ நம,

     ஆதரித்து அருள் பாலா! நமோ நம, ......உந்தி ஆமை

 

ஆனவர்க்கு இனியானே! நமோ நம,

     ஞான முத்தமிழ் தேனே! நமோ நம,

     ஆரணற்கு அரியானே! நமோ நம, ......மன்றுள் ஆடும்

 

தோதி தித்திமி தீதா! நமோ நம,

     வேத சித்திர ரூபா! நமோ நம,

     சோபம் அற்றவர் சாமீ! நமோ நம, ...... தன்மராச

 

தூதனைத் துகை பாதா! நமோ நம,

     நாத! சற்குரு நாதா! நமோ நம,

     ஜோதியில் ஜக ஜோதீ! மஹாதெவர் ......தம்பிரானே.

 

 

பதவுரை

 

 

            ஆதி சற்குண சீலா நமோநம--- முதற்பொருளானவரே!  சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியேபோற்றிபோற்றி

 

            ஆடகத் திரி சூலா நமோநம--- பொன்னாலாகியமுத்தலைச் சூலத்தை உடையவரேபோற்றிபோற்றி

 

            ஆதரித்து அருள் பாலா நமோநம--- என்னை அன்புடன் பாதுகாக்கும் பாலகுமாராபோற்றிபோற்றி

 

            உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோநம--- கடலில் ஆமை வடிவமாகச் சென்ற திருமாலுக்கு விருப்பமானவரே!போற்றிபோற்றி

 

            ஞான முத்தமிழ் தேனே நமோநம--- ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனேபோற்றிபோற்றி

 

            ஆரணற்கு அரியானே நமோநம --- வேதம் வல்ல பிரமதேவனுக்கு அருமையானவரே! போற்றிபோற்றி

 

            மன்றுள் ஆடும் தோதி தித்தமி தீதா நமோநம--- அம்பலத்தில் தோதி தித்திமி தீதா என்று தாள ஒத்துடன் திருநடனம் புரிபவரே! போற்றிபோற்றி

 

            வேத சித்திர ரூபா நமோநம--- வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவரே! போற்றிபோற்றி

 

            சோபம் அற்றவர் சாமீ நமோநம--- துன்பம் இல்லாதவர்களை உடையவரேபோற்றிபோற்றி

 

            தன்ம ராச தூதனை துகை பாதா நமோநம--- இயம தர்மராஜன் அனுப்பி வைத்த காலனை உதைத்த திருப்பாதங்களை உடையவரே! போற்றிபோற்றி

 

            நாத சற்குரு நாதா நமோநம --- தலைவரே!  சற்குரு நாதரே! போற்றிபோற்றி

 

            ஜோதியில் ஜக ஜோதி மகா தெவர் தம்பிரானே --- ஒளியில் ஒளியாக விளங்கும் மகாதேவரான சிவபெருமானுக்கும் தனிப்பெரும் தலைவரே!

 

            ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை--- ஓத வேண்டிய முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனும்,

 

            வேதனைப் படு காமா விகாரனை--- காம விகாரங்களால் துன்பப்படுகின்ற காமுகனும்,

 

            ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை--- குற்றம் நிறைந்து திரியும் கீழ்மையும் இழிவும் மிக்கவனும்,

 

            அந்தர்யாமி யோகம் அற்று உழல் ஆசா பசாசனை--- அகத்தவ யோக நிலையில் நில்லாமல் திரியும் ஆசையாகிய பேய் பிடித்தவனும்,

 

            மோகம் முற்றிய மோடாதி மோடனை--- காம மயக்கம் மிகுந்த மூடர்க்கும் மூடனும்,

 

            ஊதியத் தவம் நாடாத கேடனை --- உயிருக்கு ஊதியமாகப் பயன் தரக் கூடிய தவத்தை நாடாத கேடு உடையவனும்

 

            அன்றில் ஆதி பாதகக் கொலையே சூழ் கபாடனை --- அன்றில் பறவை முதலான உயிர்களை் கொலை செய்யும் பாதகத்தையே கருதுகின்ற வஞ்சகனும்,

 

            நீதி சற்றும் இலா கீத நாடனை--- நீதிநெறி சிறிதும் இல்லாத இசைப் பாடல்களில் நாட்டம் கொண்டவனும்,

 

            பாவியர்க்குள் எலாம் மா துரோகனை--- பாவம் செய்பவர்கள் எல்லோரையும் விட பெரிய துரோகம் உடையவனும்,

 

            மண்ணின் மீதில்--- இந்த உலகில் 

 

           பாடுபட்டு அலை மாகோப லோபனை --- பாடுபட்டு அலைகின்ற பெருங்கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனும்,

 

            வீடு பட்டு அழி--- கெடுதல் பட்டு அழிகின்ற,

 

           கோமாள வீணனை --- பிறர் சிரிக்குமாறு வீண் பொழுது போக்குபவனும்

 

            பாச சிக்கினில் வாழ்வேனை--- உலக மாயையில் சிக்கி வாழ்பவனும் (ஆகிய இந்த அடியவன் ஆகிய என்னை)

 

     ஆளுவது எந்த நாளோ--- தேவரீர் ஆட்கொள்ளுவது எந்த நாளோ? (அறியேன்).  

 

பொழிப்புரை

 

 

           முதற்பொருளானவரே!  சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியேபோற்றிபோற்றி

 

            பொன்னாலாகியமுத்தலைச் சூலத்தை உடையவரேபோற்றிபோற்றி

 

            என்னை அன்புடன் பாதுகாக்கும் பாலகுமாராபோற்றிபோற்றி

 

            கடலில் ஆமை வடிவமாகச் சென்ற திருமாலுக்கு விருப்பமானவரே!போற்றிபோற்றி

 

     ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனேபோற்றிபோற்றி

 

            வேதம் வல்ல பிரமதேவனுக்கு அருமையானவரே! போற்றிபோற்றி

 

            அம்பலத்தில் தோதி தித்திமி தீதா என்று தாள ஒத்துடன் திருநடனம் புரிபவரே! போற்றிபோற்றி

 

            வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவரே! போற்றி,போற்றி

 

            துன்பம் இல்லாதவர்களை உடையவரே!  போற்றிபோற்றி

 

            இயம தருமராஜன் தூதனாகிய காலனை உதைத்த திருப்பாதங்களை உடையவரே! போற்றிபோற்றி

 

            தலைவரே!  சற்குரு நாதரே! போற்றிபோற்றி

 

            ஒளியில் ஒளியாக விளங்கும் மகாதேவரான சிவபெருமானுக்கும் தனிப்பெரும் தலைவரே!

 

            ஓத வேண்டிய முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனும்காம விகாரங்களால் துன்பப்படுகின்ற காமுகனும்குற்றம் நிறைந்து திரியும் கீழ்மையும் இழிவும் மிக்கவனும்அகத்தவ யோக நிலையில் நில்லாமல் திரியும் ஆசையாகிய பேய் பிடித்தவனும்காம மயக்கம் மிகுந்த மூடர்க்கும் மூடனும்உயிருக்கு ஊதியமாகப் பயன் தரக் கூடிய தவத்தை நாடாத கேடு உடையவனும்,  அன்றில் பறவை முதலான உயிர்களை் கொலை செய்யும் பாதகத்தையே கருதுகின்ற வஞ்சகனும்நீதிநெறி சிறிதும் இல்லாத இசைப் பாடல்களில் நாட்டம் கொண்டவனும்பாவம் செய்பவர்கள் எல்லோரையும் விட பெரிய துரோகம் உடையவனும்இந்த உலகில் பாடுபட்டு அலைகின்ற பெருங்கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனும்கெடுதல் பட்டு அழிகின்றபிறர் சிரிக்குமாறு வீண் பொழுது போக்குபவனும்,  உலக மாயையில் சிக்கி வாழ்பவனும் ஆகிய இந்த அடியவன் ஆகிய என்னைதேவரீர் ஆட்கொள்ளுவது எந்த நாளோஅறியேன்.  

 

 

விரிவுரை

 

ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை--- 

 

தேர்தல் --- ஆராய்ந்து அறிதல்.

 

விருதாவன் என்பது வ்ருதாவனை என்று வந்தது. 

 

விருதா --- பயனின்மை,வீண்.

 

கற்க வேண்டிய மொழி என்றோபயில வேண்டிய மொழி என்றோபடிக்க வேண்டிய மொழி என்றோ கூறமால்,ஓத வேண்டியது முத்தமிழ் என்று அடிகளார் கூறியுள்ளதன் அருமை சிந்திக்கத்தக்கது. 

 

ஓதுவது நன்னெறிபட வாழ்வதற்கு. "காதலாகிகசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தர். "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" என்று உலகநீதியும், "ஓதுவது ஒழியேல்" என்று ஆத்திசூடியும் அறிவுறுத்தியது அறிக.

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும்சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்.எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ்.கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ்பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்இயற்கையான மொழி தமிழ்பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 

சிவபெருமானும் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர்.  சுந்தர்மூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

"மற்று,நீ வன்மை பேசிவன்தொண்டன் என்னும் நாமம்  

பெற்றனைநமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்;  ஆதலால் மண்மேல் நம்மைச்

சொல்தமிழ் பாடுகஎன்றார் தூமறை பாடும் வாயார்".

 

"சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை இன்னும்    

பல்லாறு உலகினில் நம்புகழ் பாடுஎன்று உறு பரிவின்

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்

எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்".

 

"என்ற பொழுதில் இறைவர்தாம்

     எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்

மன்றின் இடை நம் கூத்து ஆடல்

     வந்து வணங்கி வன்தொண்டன்

ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி

     உரைசேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்

     என்றார் அவரை நினைப்பிப்பார்".

 

என வரும் பெரியபுராணப் பாடல்களையும்,அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக.

 

இறைவன், "தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்" என்று போற்றினார் மணிவாசகப் பெருமான். பெருமானுக்குஅவர் ஆய்ந்த தமிழில் விருப்பம் மிகுதி. ஆதலால்,

 

"சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்

    பலத்தும்,என் சிந்தையுள்ளும்

உறைவான்,உயர்மதிற் கூடலின்

    ஆய்ந்த ஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ?அன்றி

    ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா! தடவரைத் தோட்கு என்கொல்

    ஆம் புகுந்து எய்தியதே"

 

என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் வைத்துப் பாடி அருளினார்."தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

"கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்உறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்,ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்புஇலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?"

 

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும்முதலை

உண்ட பாலனை அழைத்ததும்எலும்பு பெண் உருவாக்

கண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும்கன்னித்

தண்தமிழ்ச் சொலோமறுபுலச் சொற்களோ சாற்றீரே."

 

எனத் திருவிளையாடல் புராணம் கூறுமாறு காண்க.

 

வேதனைப் படு காமா விகாரனை--- 

 

காமம் என்பது எப்போதும் ஒரு நிலையாக இராமல் விகாரப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் வேதனையே மிஞ்சும்.

 

ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை--- 

 

ஊனம் --- குற்றம் குறை. 

 

ஆபாசம் --- கூழ்மை.

 

ஈனன் --- இழிந்தவன்.

 

அந்தர்யாமி யோகம் அற்று உழல் ஆசா பசாசனை--- 

 

ஆசா பசாசன் --- ஆசை என்னும் பேயால் பீடிக்கப்பட்டவன்.

 

உடம்பை நிலைநிறுத்துதற்கு உரிய அடயோகத்தைப் பயில்வதை விடுத்துஅகத்தவ யோகத்தைப் பயிலவேண்டும். உலக நிலைகளில் ஆசை இருப்பதால் அகயோகம் வாய்க்கவில்லை.

 

மோகம் முற்றிய மோடாதி மோடனை--- 

 

மோடன் --- மூடன்.  

 

மூடர்களுக்குள் சிறந்த மூடன் என்றார்.

 

ஊதியத் தவம் நாடாத கேடனை --- 

 

ஊதியம் --- பயன்.  உயிருக்கு நற்பயனைத் தருகின்ற தவத்தை நாடவேண்டும்.

 

"உற்றநோய் நோன்றல்உயிர்க்கு உறுகண் செய்யாமை,

அற்றே தவத்திற்கு உரு"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

அன்றில் ஆதி பாதகக் கொலையே சூழ் கபாடனை --- 

 

கபடன் --- வஞ்சகன். கபாடன் என்று வந்தது. 

 

நீதி சற்றும் இலா கீத நாடனை--- 

 

 

நீதிநெறியைச் சொல்லாத வீணான இசைப் பாடல்களில் நாட்டம் கொண்டு இருத்தல் கூடாது.

 

மண்ணின் மீதில்பாடுபட்டு அலை மாகோப லோபனை --- 

 

பொன்னும்பொருளும்போகமும் வேண்டி அதற்காகவே பாடுபட்டு அலைந்து கொண்டு இருப்பது. பாடுபடுதலுக்குத் தடங்கல் உண்டாகுமானால்,கோபப் படுவது. பாடுபட்டுத் தேடிய பொருளைத் தானும் துய்க்காமல்பிறர்க்கும் வழங்காமல்பொருளைக் குவிப்பதிலேயே கருத்தாக கஞ்சத்தனம் கொண்டு இருப்பது.

 

வீடு பட்டு அழி--- 

 

வீடு --- அழிவு.  வினைநீக்கம் வீடு எனப்படும். வினைநீக்கத்தைக் கனவிலும் கருதாமல்,வீணாக உழன்று அழிதல்.

 

கோமாள வீணனை ---

 

கோமாளி --- பிறர் சிருக்குமாறு நடந்துகொள்பவன். 

            

ஆதி சற்குண சீலா நமோநம--- 

 

ஆதி --- முதற்பொருள். 

            

ஆடகத் திரி சூலா நமோநம--- 

 

ஆடகம் --- பொன்னில் ஒரு வகை.

 

திரிசூலம் முருகப் பெருமானுக்கு அமைந்த ஆயுதங்களில் ஒன்று என்பதை "சூலம் வாள் தண்டு செஞ்சேவல் கோதண்டமும்" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளார்.

 

"மருள் பொழி மும்மலம் சிதைக்கும் வடிச் சூலம்" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டியபடிமுத்தலைச் சூலம் என்பது,உயிர்களின் மும்மலங்களையும் சிதைக்க வல்லது. அதனை ஆயுதமாகப் பெருமான் கொண்டு அருளினார்.

 

உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோநம--- 

 

உந்தி --- கடல்.

 

கடலில் ஆமை வடிவெடுத்துச் சென்றவர் திருமால். திருமாலுக்கு இனிமையான மருகர் முருகப் பெருமான். "பச்சைப் பயல் மெச்சத் தகு பொருள்" என்றார் அடிகாளர்.

 

ஆரணற்கு அரியானே நமோநம --- 

 

ஆரணம் --- வேதம். வேதம் வல்லவர் பிரமதேவர். வேதா என்றும் அவருக்குப் பெயர் உண்டு. பிரமனாலும் காண முடியாத பரம்பொருள் முருகப் பெருமான்.

 

மன்றுள் ஆடும் தோதி தித்தமி தீதா நமோநம--- 

 

ஐம்முகச் சிவமும்அறுமுகச் சிவமும் வேறு அல்ல. எனவே,அம்பலத்தில் அருட்கூத்து இயற்றுபவர் முருகப் பெருமான் என்றார்.

 

"கனகசபை மேவும் எனது குருநாத"என்று போற்றினார் சிதம்பரத் திருப்புகழில்.றைவன் திருநடனம் புரிகின்ற சபைகள் ஐந்து.  

 

இரத்தின சபை - திருவாலங்காடு

கனக சபை - சிதம்பரம்

ரசத சபை - மதுரை

தாமிர சபை - திருநெல்வேலி

சித்திர சபை - குற்றாலம்.

 

கனகசபையில் திருநடனம் புரிகின்ற எனது குருநாதன் கருணை முருகேசன் என்று அடிகளார் துதிக்கின்றார். நடராஜ மூர்த்தியும் முருகவேளும் ஒன்றுதான் என்று கூறுகின்றார்.

 

"தோதீ திகுதிகு தீதீ செகசெகசோதீ! நடம் இடு பெருமாளே" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க.

 

சோபம் அற்றவர் சாமீ நமோநம--- 

 

சோபம் --- துன்பம். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றோர்க்கு இன்பமே எந்நாளும்துன்பம் இல்லை. 

 

ஜோதியில் ஜக ஜோதி மகா தெவர் தம்பிரானே --- 

 

"தோதீ திகுதிகு தீதீ செகசெகசோதீ! நடம் இடு பெருமாளே" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க.

 

கருத்துரை

 

முருகா! அடியேனை ஆண்டு அருள்

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...