பொது --- 1002. ஆவி காப்பது

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஆவி காப்பது (பொது)

 

முருகா! 

மாதர் மயலில் உழன்று

எனது ஆவி சாவி ஆகாமல்

ஈடேற அருள்வாய்.

 

 

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன

     தான தாத்தன தாத்தன ...... தனதானா

 

 

ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி

     தாமெ னாப்பர மார்த்தம ...... துணராதே

 

ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட

     நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப்

 

பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு

     பூவி னாற்றம றாத்தன ...... கிரிதோயும்

 

பொக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்

     போது போக்கியெ னாக்கையை ...... விடலாமோ

 

தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ

     தீத தீக்ஷைப ரீக்ஷைக ...... ளறவோதுந்

 

தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி

     யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே

 

மேவி னார்க்கருள் தேக்குது வாத சாட்ச ஷடாட்சர

     மேரு வீழ்த்தப ராக்ரம ...... வடிவேலா

 

வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாட்சக னாக்கெட

     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

ஆவி காப்பது மேற்பதம்தலால் புருடார்த்தம்

     இது ஆம் எனா,பரமார்த்தம் ...... அது உணராதே,

 

ஆனை மேல்பரி மேல்பல சேனை போற்றிட,வீட்டொடு,

     அநேக நாட்டொடு,காட்டொடு,...... தடுமாறி,

 

பூவை மார்க்கு உருகாபுதிதான கூத்தொடு,பாட்டொடு,

     பூவின் நாற்றம் அறாத் தன ...... கிரிதோயும்,

 

பொக போக்ய கலாத்தொடு வாழ்பராக்கொடு,இராப்பகல்

     போது போக்கி,என் ஆக்கையை ...... விடல்ஆமோ?

 

தேவி,பார்ப்பதி,சேர்ப் பர பாவனார்க்குரு சாக்ர

     அதீத,தீட்சை பரீட்சைகள் ...... அற ஓதும்

 

தேவ! பாற்கர! நாற்கவி பாடு லாக்ஷண! மோக்ஷ

     தியாக! ராத் திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே!

 

மேவினார்க்கு அருள் தேக்கு துவாதச அட்ச! ஷடாட்சர!

     மேரு வீழ்த்த பராக்ரம ...... வடிவேலா!

 

வீர! ராக்கதர் ஆர்ப்பு எழ,வேத தாட்சகன் நாக்கெட

     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.

 

பதவுரை

 

            தேவி பார்ப்பதி சேர்ப் பரபாவனார்க்கு--- பார்வதிதேவியோடு கூடிய மேலான பரிசுத்த மூர்த்தியாகிய சிவபிரானுக்கு 

 

            ஒரு சாக்ர அதீத--- நனவில் உயிர்ப்பு அடங்குகின்ற நிலையில்அறிவுறுத்துவதான,

 

            தீட்சை --- உபதேச முறைகளையும்,

 

            பரீட்சைகள் --- விளக்கங்களையும்,

 

           அற ஒதும் தேவ--- முழுதுமாக ஓதி அருளியவரே!

 

            பாற்கர--- ஞானசூரியரே!

 

            நாற்கவி பாடு லாக்ஷண--- திருஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்துநாற்கவிகளையும் பாடி அருளிய அழகரே!

 

            மோக்ஷ தியாக--- மோட்ச நிலையை உயிர்களுக்கு அருளும் தியாகமூர்த்தியே!

 

            ராத் திகழ் கார்த்திகை பெறு வாழ்வே--- இரவிலே சுடர்விடும் விண்மீன்களாகிய கார்த்திகைப் பெண்கள் பெற்ற பெருஞ்செல்வமே!

 

            மேவினார்க்கு அருள் தேக்கு--- விரும்பி வழிபடுபவர்க்கு அருளை வழங்கும்,

 

            துவாதச அட்ச --- பன்னிரு திருக்கண்களை உடையவரே!

 

           சடாட்சர   --- ஆறெழுத்து வடிவானவரே!

 

            மேரு வீழ்த்த பராக்ரம வடிவேலா --- கிரவுஞ்ச மலையை வீழ்த்திய வல்லமை பொருந்திய கூரிய வேலாயுதரே!

 

            வீர--- வீரரே!

 

            ராக்கதர் ஆர்ப்பு எழ--- அரக்கர்கள் ஆரவாரித்து எழவும்,

 

           வேத தாட்சகன் நாக் கெட--- வேதத்தில் வல்லவன் ஆகிய பிரமதேவன் (பிரவணத்தின் பொருளைக் காறுமுடியாதபடி) நாக்கு அடங்கிப் போகவும்,

 

          வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே--- கடல் அலறும்படி வேலாயுதத்தை விரைந்து விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            ஆவி காப்பது மேற்பதம் ஆதலால்--- உயிரை ஈடேறும்படியாகக் காத்துக் கொள்வது மேலான தகுதிமிக்க செயலாதலால்

 

            புருடார்த்தம் இது ஆம் எனா--- உயிர்க்கு உறுதியைத் தருகின்ற உறுதிப் பொருள்கள் அறம்,பொருள்இன்பம் வீடு என்னும் நான்கே என்று உணர்ந்து,

 

     பரமார்த்தம் அது உணராதே--- மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளத் தலைப்படாமல்,

 

            ஆனை மேல்--- யானையின் மீதும்,

 

           பரி மேல்--- குதிரையின் மீதும்,

 

           பல சேனை போற்றிட--- பலவிதமான படைகளும் சூழ்ந்து போற்றி வர,

 

           வீட்டொடு--- வீட்டிலும்,

 

           அநேக நாட்டொடு--- பல நாடுகளிலும்,

 

          காட்டொடு தடுமாறி--- காடுகளிலும் உழன்று தடுமாற்றத்தை அடைந்து,

 

            பூவைமார்க்கு உருகா--- பெண்கள் மயக்கில் உள்ளம் ஈடுபட்டு,

 

           புதிதான கூத்தொடு பாட்டொடு--- புதுமையான ஆடல்களிலும்பாடல்களிலும்,

 

            பூவின் நாற்றம் அறாத் தன கிரி தோயும்---. மலரின் நறுமணம் நீங்காதமலை போன்றமார்பகங்களில் தோய்ந்து இருக்கின்ற

 

            போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு--- இன்ப நுகர்வுக்கு உரிய ஊடல் கூடல்களில்கருத்தைச் செலுத்தி,

 

           இராப் பகல் போது போக்கி--- இரவும் பகலும்வீணாகப் பொழுது போக்கி இருந்து,

 

            என் ஆக்கையை விடலாமோ--- எனது உடம்பை வீணாகும்படியாக விட்டு விடுதல் நல்லது ஆகுமா?  (ஆகாது).

 

பொழிப்புரை

 

            பார்வதிதேவியோடு கூடிய மேலான பரிசுத்த மூர்த்தியாகிய சிவபிரானுக்குநனவில் உயிர்ப்பு அடங்குகின்ற நிலையில்அறிவுறுத்துவதானஉபதேச முறைகளையும்விளக்கங்களையும்முழுதுமாக ஓதி அருளியவரே!

 

            ஞானசூரியரே!

 

            திருஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்துநாற்கவிகளையும் பாடி அருளிய அழகரே!

 

            மோட்ச நிலையை (வீடுபேற்றை) உயிர்களுக்கு அருளும் தியாகமூர்த்தியே!

 

            இரவிலே சுடர்விடும் விண்மீன்களாகிய கார்த்திகைப் பெண்கள் பெற்ற பெருஞ்செல்வமே!

 

            விரும்பி வழிபடுபவர்க்கு அருளை வழங்கும்பன்னிரு திருக்கண்களை உடையவரே!

 

     ஆறெழுத்து வடிவானவரே!

 

            கிரவுஞ்ச மலையை வீழ்த்திய வல்லமை பொருந்திய கூரிய வேலாயுதரே!

 

            வீரரே!

 

            அரக்கர்கள் ஆரவாரித்து எழவும்வேதத்தில் வல்லவன் ஆகிய பிரமதேவன் (பிரவணத்தின் பொருளைக் காறுமுடியாதபடி) நாக்கு அடங்கிப் போகவும்கடல் அலறும்படி வேலாயுதத்தை விரைந்து விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            உயிரை ஈடேறும்படியாகக் காத்துக் கொள்வது மேலான தகுதிமிக்க செயலாதலால்உயிர்க்கு உறுதியைத் தருகின்ற உறுதிப் பொருள்கள் அறம்,பொருள்இன்பம் வீடு என்னும் நான்கே என்று உணர்ந்து,மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளத் தலைப்படாமல்யானையின் மீதும், குதிரையின் மீதும், பலவிதமான படைகளும் சூழ்ந்து போற்றி வர,வீட்டிலும்பல நாடுகளிலும், காடுகளிலும் உழன்று தடுமாற்றத்தை அடைந்துபெண்கள் மயக்கில் உள்ளம் ஈடுபட்டுபுதுமையான ஆடல்களிலும்பாடல்களிலும்,மலரின் நறுமணம் நீங்காதமலை போன்றமார்பகங்களில் தோய்ந்து இருக்கின்றஇன்ப நுகர்வுக்கு உரிய ஊடல் கூடல்களில் கருத்தைச் செலுத்தி,இரவும் பகலும்வீணாகப் பொழுது போக்கி இருந்து,

எனது உடம்பை வீணாகும்படியாக விட்டு விடுதல் நல்லது ஆகுமா?  (ஆகாது).

 

விரிவுரை

 

ஆவி காப்பது மேற்பதம் ஆதலால்--- 

 

மேல் பதம் --- மேல் நிலை. பக்குவ நிலை.

 

மேல்நிலையைப் பெற்று உய்வதற்காகவேசூக்கும நிலையில் இருந்த உயிரை,உடம்பினுள் புகுத்தி அருள் புரிகின்றான் இறைவன். 

 

புருடார்த்தம் இது ஆம் எனா--- 

 

அர்த்தம் --- பொருள். இந்த உடம்பை எடுத்ததன் பொருள்அறம் பொருள்இன்பம்வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கினையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

 

பரமார்த்தம் அது உணராதே--- 

 

பரம அர்த்தம் --- மேன்மையைத் தரும் பொருள்.

 

புருடார்த்தங்களை உணர்ந்து தெளிதலே உயிருக்கு மேன்மையைத் தருவது என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

 

புருடர் வடிவை எடுத்தால் போதாது. புருடார்த்தம் பொருந்த வேண்டும் என்பதால், "புருடர் வடிவானதே அன்றிபுருணார்த்தம் ஏதும் இல்லேன்" என்றார் தாயுமான அடிகளார்.

 

போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப் பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ--- 

 

போகம் --- இன்பம்.  போக்கியம் --- இன்ப நுகர்வு.

 

பராக்கு --- கவனம் இன்மைகவனம் மாறுதல், மறதி.

 

வம்பு அறாச் சில கன்னம் இடும்,சம-

     யத்துக் கத்துத் ...... திரையாளர்,

வன் கலாத்திரள் தன்னை அகன்று,

     மனத்தில் பற்றுஅற்று,...... அருளாலே,

 

தம் பராக்கு அற,நின்னை உணர்ந்துஉரு-

     கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,

தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு

     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?   --- திருப்புகழ்.

 

அராப்புனை வேணியன்சேய் அருள்வேண்டும்அவிழ்ந்த அன்பால்

குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டும்கொடிய ஐவர்

பராக்குஅறல் வேண்டும்,  மனமும் பதைப்புஅறல்வேண்டும்என்றால்

இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.     ---  கந்தர் அலங்காரம்.

                                                                                                                                                                                                                     

திருவருள் நாட்டம் தலைப்படில்உலகநாட்டம் அறுபடும். விழித்து இருந்தும் குருடர் ஆவார். உலகத்தில் இருந்தும் உலக வாசனை இன்றிப் பரவசமாக நிற்பார்.

 

தேவி பார்ப்பதி சேர்ப் பரபாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீட்சைபரீட்சைகள் அற ஓதும் தேவ--- 

 

நனவுகனவுஉறக்கம்பேருறக்கம்உயிர்ப்பு அடங்கல் என்பன ஆன்மாவின் ஐந்து நிலைவேறுபாடுகள் அல்லது அவத்தைகள் எனப்படும். அவை முறையே சாக்கிரம் சொப்பனம்சுழுத்திதுரியம்துரியாதீதம் என வழங்கும். நிலை வேறுபாட்டை வடமொழியில் அவத்தை என்பர். இந்த நிலை வேறுபாடுகள் கருவிகள் உயிரோடு கூடுவதாலும் பிரிவதாலும் ஏற்படுகின்றன. இவற்றால் ஆன்மா நிலை வேறுபாடுகளை அடைகிறது. இறைவனும் இவ்வுலகத்தைத் தோற்றுவித்து நிலை நிறுத்தி ஒடுக்கும் போது இலயம் போகம் அதிகாரம் என்ற மூன்று நிலை வேறுபாடுகளை அடைகிறான் என்பர்.சாக்கிரம்சொப்பனம்சுழுத்திதுரியம்துரியாதீதம் என்பன உயிர்க்கு உரிய அவத்தை நிலைகள். 

 

     சாக்கிரம் என்பதுபொதுவாக உள்ள விழிப்பு நிலை. இந்நிலையில் ஆன்மாவுக்கு இருப்பிடம் புருவமத்தி ஆகும். சாக்கிராதீதம் என்பது புருவமத்தியிலேயே துரியாதீத்ததை அனுபவிக்கும் நிலை. இது சொல்லித் தெரிவது இல்லை. திருவருளாலும்குருவருளாலும் அனுபவத்தினால் உணர்ந்து தெளிய வேண்டியது.

 

     உயிர்ப்பு அடங்கியமேலான விழிப்பு நிலையில்உயிர்க்கு உபதேசித்து அருளவேண்டிய தீட்சை முறைகளைஉயிர்கள் உணர்ந்து உய்யும்பொருட்டு சிவபரம்பொருள் தான் ஒரு மாணவ பவாத்தில் இருந்துகொண்டுதனக்குத் தானே ஒரு மகனாகி குருமூர்த்த நிலையில் இருந்து உணர்த்தி அருளிய அருள் விளையாடல் இது ஆகும். 

 

பாற்கர--- 

 

பாற்கரன் --- சூரியன். இங்கு ஞானசூரியனாக உள்ள முருகப் பெருமானைக் குறித்தது.

 

மோட்ச தியாக--- 

 

மோட்சம் --- வீடு பேறு.

 

ராத் திகழ் கார்த்திகை பெறு வாழ்வே--- 

 

ராத் திகழ் --- இரவிலே திகழ்கின்ற.

 

"உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க,அவர்

ஒருவர் ஒருவர்க்கு அவண்ஒர் ஓ ர்புத்ரன் ஆனவனும்".  --- வேடிச்சி காவலன் வகுப்பு.

                           

 

மேவினார்க்கு அருள் தேக்கு துவாதச அட்ச---

 

மேவுதல் --- அடைதல்விரும்புதல்.

 

துவாதச அட்ச --- பன்னிரண்டு கண்கள்.

 

"மறுவு அறு கடல் என மருவு பன்னிருவிழி
வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்.." --- கொலு வகுப்பு.

 

தன்னைச் சரணாக அடைந்து,தம்மையே விரும்பி வழிபடுகின்ற அடியவர்க்குத் தனது பன்னிரு திருக்கண்களாலும் அருளை வாரி வழங்குபவர் புருகப் பெருமான்.

 

ஷடாக்ஷர--- 

 

ஆறெழுத்து வடிவானவர் முருகப் பெருமான்.

 

மேரு வீழ்த்த பராக்ரம வடிவேலா --- 

 

மேரு --- இங்கே கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.

 

பராக்கிரமம் -- வல்லமை.

 

வடி வேல் --- கூரிய வேல்.

 

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கிகிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்துகிரவுஞ்ச மலையைப் பிளந்துஅதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

 

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

 

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்துஅண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி,அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

 

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

 

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம்கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்துஅவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

 

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

 

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடியநீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடிநமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

 

வேத தாட்சகன் நாக் கெட--- 

 

தாட்சகன் --- அரசன். வேத தாட்சகன் --- பிரமதேவன்.

 

பிரமன்தான் வேதங்களில் வல்லவன் என்று இறுமாந்து இருந்தான். அவனது இறுமாப்பை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான் திருமுன்னர், 'ஓம்என்று தொடங்கி வேதத்தை ஓதலானான். பொருள் தெரிந்து ஓதுகின்றானா இல்லையா என்பதைக் காட்டஓம் என்னும் பொருளின் உண்மையைச் சொல்லுமாறு முருகப் பெருமான் கேட்டருளினார். பொருள் தெரியாமல் விழித்தான் பிரமதேவன். பொருள் தெரியாமையால்அவனது நாக்கு எழவில்லை. "வேதங்களுக்கு எல்லாம் முதல் எழுத்தாக விளங்கும் குடிலையின் பொருள் தெரியாத நீ படைப்புத் தொழிலைச் செய்வது தகாது" என்று அவனுக்கு அறிவு விளங்குமாறுஅவனது தலையில் குட்டிஅவனைச் சிறையில் இட்டார் முருகவேள்.

 

வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே--- 

 

"சூரன் உடல் அவாரி சுவறிட வேலை விட வல்ல பெருமாளே" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடியுள்ளது காண்க.

 

கருத்துரை

 

முருகா! மாதர் மயலில் உழன்றுஎனது ஆவி சாவி ஆகாமல்ஈடேற அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...