வாகை மாநகர் --- 0997. ஆலையான மொழிக்கும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஆலையான மொழிக்கும் (வாகைமாநகர்)

 

முருகா! 

விலைமாதர் மயலில் உழலாமல் ஆண்டு அருள்.

 

 

தான தான தனத்ததான தான தனத்த

     தான தான தனத்த ...... தனதான

 

 

ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு

     மால கால விழிக்கு ...... முறுகாதல்

 

ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு

     மார பார முலைக்கு ...... மழகான

 

ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு

     மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி

 

ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி

     லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ

 

வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு

     மீறு காத லளிக்கு ...... முகமாய

 

மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து

     மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது

 

மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து

     வாயி லூறல் குடித்து ...... மயல்தீர

 

வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற

     வாகை மாந கர்பற்று ...... பெருமாளே.

 

 

                  பதம் பிரித்தல்

 

 

ஆலை ஆன மொழிக்கும்,ஆளை ஊடு கிழிக்கும்

     ஆல கால விழிக்கும்,...... உறுகாதல்

 

ஆசை மாதர் அழைக்கும் ஓசை ஆன தொனிக்கும்,

     ஆர பார முலைக்கும்,...... அழகான

 

ஓலை மேவு குழைக்கும்,ஓடை யானை நடைக்கும்,

     ஓரை சாயும் இடைக்கும் ...... மயல்மேவி,

 

ஊறு பாவு உறுப்பில் ஊறல் தேறு கரிப்பில்,

     ஊர ஓடு விருப்பில் ...... உழல்வேனோ?

 

வேலை ஆக,வளைக்கை வேடர் பாவை தனக்கு

     மீறு காதல் அளிக்கும் ...... முகமாயம்

 

மேவு வேடை அளித்து,நீடு கோலம் அளித்து,

     மீள வாய்மை தெளித்தும்,...... இதண்மீது

 

மாலை ஓதி முடித்து,மாது தாள்கள் பிடித்து,

     வாயில் ஊறல் குடித்து,...... மயல்தீர

 

வாகு தோளில் அணைத்து,மாகம் ஆர் பொழில் உற்ற

     வாகை மாநகர் பற்று ...... பெருமாளே.

 

பதவுரை

 

            வேலை ஆக --- (வள்ளியம்மையை ஆட்கொள்ள) நினைத்த வேலை ஆகும் பொருட்டு,

 

           வளைக்கை --- கைவளையல் விற்கும் செட்டியாக வந்து,

 

           வேடர் பாவை தனக்கு---  வேடர் மகளாகிய வள்ளிநாயகிக்கு,


            மீறு காதல் அளிக்கும்--- உள்ளத்தில் மிக்கு எழுந்த காதலைக் காட்டுகின்,

 

           முகமாயம் மேவு வேடை அளித்து--- காமநோயால் முகத்தில் உண்டாகும் மாற்றத்தை அம்மையாருக்கு உண்டுபண்ணி,

 

நீடு கோலம் அளித்து--- (வேடனாகவும்,  வேங்கை மரமாகவும்,வளையல் செட்டியாகவும்,கிழவாரகவும்இறுதியில் தெய்வ வடிவாகவும்) பலவிதமான கோலங்களைக் காட்டி (ஆட்கொண்டு),

 

மீள வாய்மை தெளித்தும்--- இறுதியில் தான் யார் என்பதைக் காட்டிவள்ளியம்மை யார் என்பதை தெளிவுபடுத்தியும், 

 

இதண் மீது--- பரண் மீதில் இருந்த வள்ளியின்,

 

மாலை ஓதி முடித்து--- கூந்தலில் மலர்மாலையை முடித்தும்,

 

மாது தாள்கள் பிடித்து--- அம்மையின் திருப்பாதங்களை வருடியும்

 

வாயில் ஊறல் குடித்து--- அம்மையாரின் வாயிதழில் ஊறும் எச்சிலைக் குடித்தும்,

 

மயல் தீர --- மோகம் தீருமாறு,

 

வாகு தோளில் அணைத்தும்--- அழகிய திருத்தோள்களில் அம்மையாரை அணைத்தும், (திருவிளையாடல்களைப் புரிந்து)

 

மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே --- (இக்காலத்தில் அன்பர்கள் வழிபட்டு உய்ய) வானத்தை அளாவிய மரங்கள் இருக்கும் சோலைகள் சூழ்ந்துள்ள வாகை மாநகரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            ஆலை ஆன மொழிக்கும்--- கரும்பு போல் இனிக்கும் பேச்சுக்கும்,

 

ஆளை ஊடு கிழிக்கும் ஆல கால விழிக்கும் --- ஆளையே ஊடுருவி அறுக்கும் ஆலகால விஷம் போன்ற கண்களுக்கும்,

 

 உறு காதல் ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும்--- காம ஆசையைக் கொண்ட விலைமாதர்கள் அழைக்கின்ற ஓசை கொண்ட குரலின் தொனிக்கும்

 

ஆர பார முலைக்கும்--- முத்துமாலை அணிந்த பருத்த முலைகளுக்கும் 

 

அழகான ஓலை மேவு குழைக்கும்--- அழகிய காதோலைக்கும்,பொருந்திய குண்டல அணிக்கும்,

 

ஓடை யானை நடைக்கும்--- நெற்றிப்பட்டம் அணிந்துள்ள பெண் யானை போன்ற நடைக்கும்,

 

ஓரை சாயும் இடைக்கும்--- ஒசிந்து சாய்ந்துள்ள இடுப்புக்கும் 

 

மயல் மேவி--- மோகம் கொண்டவனாகி

 

ஊறு பாவு அவ் உறுப்பில்--- காம ஊறல் பரவும் அந்த இதழாகிய உறுப்பிலும்,

 

ஊறல் தேறு(ம்) கரிப்பில் ஊர--- அந்த ஊறலை அறியும் காரமான அநுபவத்திலும் நினைவு கொண்டு 

 

ஓடு விருப்பில் உழல்வேனோ --- விரைந்த ஆசையிலேயே அடியேன் அலைச்சல் உறுவேனோ

  

பொழிப்புரை

 

 

     வள்ளியம்மையை ஆட்கொள்ள எண்ணி வந்த வேலை ஆகும் பொருட்டு,கைவளையல் விற்கும் செட்டியாக வேடமிட்டு வந்து, வேடர் மகளாகிய வள்ளிநாயகிக்குஉள்ளத்தில் மிக்கு எழுந்த காதலைக் காட்டுகின்,காமநோயால் முகத்தில் உண்டாகும் மாற்றத்தை அம்மையாருக்கு உண்டுபண்ணிவேடனாகவும்,  வேங்கை மரமாகவும்வளையல் செட்டியாகவும்,கிழவாரகவும்இறுதியில் தெய்வ வடிவாகவும்,பலவிதமான கோலங்களைக் காட்டி ஆட்கொண்டுஇறுதியில் தான் யார் என்பதைக் காட்டிவள்ளியம்மை யார் என்பதை தெளிவுபடுத்தியும்,பரண் மீதில் இருந்த வள்ளியின்கூந்தலில் மலர்மாலையை முடித்தும்அம்மையின் திருப்பாதங்களை வருடியும்,  அம்மையாரின் வாயிதழில் ஊறும் எச்சிலைக் குடித்தும்மோகம் தீருமாறுஅழகிய திருத்தோள்களில் அம்மையாரை அணைத்தும் திருவிளையாடல்களைப் புரிந்துஇக்காலத்தில் அன்பர்கள் வழிபட்டு உய்ய. வானத்தை அளாவிய மரங்கள் இருக்கும் சோலைகள் சூழ்ந்துள்ள வாகை மாநகரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

     கரும்பு போல் இனிக்கும் பேச்சுக்கும்ஆளையே ஊடுருவி அறுக்கும் ஆலகால விஷம் போன்ற கண்களுக்கும்காம ஆசையைக் கொண்ட விலைமாதர்கள் அழைக்கின்ற ஓசை கொண்ட குரலின் தொனிக்கும்முத்துமாலை அணிந்த பருத்த முலைகளுக்கும்அழகிய காதோலைக்கும்,பொருந்திய குண்டல அணிக்கும்நெற்றிப்பட்டம் அணிந்துள்ள பெண் யானை போன்ற நடைக்கும்,ஒசிந்து சாய்ந்துள்ள இடுப்புக்கும் மோகம் கொண்டவனாகி காம ஊறல் பரவும் அந்த இதழாகிய உறுப்பிலும்அந்த ஊறலை அறியும் வெம்மையான அநுபவத்திலும் நினைவு கொண்டுவிரைந்த ஆசையிலேயே அடியேன் அலைச்சல் உறுவேனோ

 

 

விரிவுரை

 

 

ஆலை ஆன மொழிக்கும்--- 

 

ஆலை --- கரும்புகருப்பஞ்சாறு.

 

விலைமாதரின் பேச்சுக்கள் காமவேட்கை கொண்டோருக்குகருப்பஞ்சாறாக இனிக்கும்.

 

ஆளை ஊடு கிழிக்கும் ஆல கால விழிக்கும் --- 

 

ஆலகால விழி --- ஆலகால விடத்தைப் போன்ற கண்கள்.

 

விடமானது உண்டாரை மட்டுமே கொல்லும். ஆனால்,பெண்களின் கண்களானவை கண்டாரையும் கொல்லுபவை.

 

ஆர பார முலைக்கும்--- 

 

ஆரம் --- முத்து. முத்துமாலையை கழுத்தில் அணிந்துள்ளதால்அது முலைகளின் மேல் தவழும். 

 

பார முலை --- பருத்த முலை.

 

ஓடை யானை நடைக்கும்--- 

 

ஓடை --- நெற்றிப்பட்டம்.

 

பெண்யானையின் நடையினை ஒத்ததாபெண்களின் நடை இருக்கும். "மாதர் மடப்பிடியும்மட அன்னமும் அன்னது ஓர் நடை" என்றார் திருஞானசம்பந்தர்.

 

வேலை ஆக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாயம் மேவு வேடை அளித்துநீடு கோலம் அளித்து,மீள வாய்மை தெளித்தும்இதண் மீதுமாலை ஓதி முடித்துமாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்துமயல் தீரவாகு தோளில் அணைத்தும்  --- 

 

நாரதர் சொன்னதைக் கேட்டுவள்ளியம்மையை ஆட்கொள்ள வேண்டி எந்தை கந்தவேள் திருத்தணிகையில் இருந்து வள்ளிமலைக்கு வந்தருளினார். பலப்பல வேடங்களைத் தாங்கினார்.

 

வேடனாக வந்தார் ---

 

நெருங்கு மால் கொண்டு,

அடவியில் வடிவு கரந்து போய்ரு

     குறமகள் பிறகு திரிந்த காமுக!        --- திருவண்ணாமலை திருப்புகழ்.

 

காலில் கட்டிய கழலன்,கச்சினன்,

மாலைத் தோளினன்,வரிவில் வாளியன்,

நீலக் குஞ்சியன்,நெடியன்,வேட்டுவக்

கோலத் தைக்கொடு குமரன் தோன்றினான்.    --- கந்தபுராணம்..

 

 

வேங்கை மரமாய் நின்றார் ---

 

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட,மாமுனியும்

     வேங்கையுமாய் மறமின் ...... உடன்வாழ்வாய்!  --- திருவேங்கடத் திருப்புகழ்.

                            

வனசரர் ஏங்க,வான முகடுஉற ஓங்கி,ஆசை

     மயிலொடு பாங்கிமார்கள் ...... அருகாக

மயிலொடு மான்கள் சூழ,வளவரி வேங்கை ஆகி,

     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே!   --- சீகாழித் திருப்புகழ்.

                                   

செய்யவன் குமரி முன்னந் திருநெடுங் குமரன் நின்று

மையலின் மிகுதி காட்டி மற்றிவை பகரும் எல்லை,

எய்யுடன் உளியம் வேழம் இரிதர விரலை யூத

ஒய்யென எயினர் சூழ ஒருதனித் தாதை வந்தான். 

 

ஆங்கது காலை தன்னின்,அடிமுதல் மறைகளாக,

ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூல தாக,

பாங்கமர் கவடு முற்றும் பல்கலை யாக,தானோர்

வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்.  --- கந்தபுராணம்.

                                     

 

வளையல் செட்டியாக வந்தது ---

 

செட்டி என்று வன மேவி,இன்ப ரச

     சத்தியின் செயலினாளை அன்பு உருக

     தெட்டி வந்துபுலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே.   --- சிதம்பரத் திருப்புகழ்.

                                    

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,

செட்டி என்று எத்தி வந்துடி நிர்த்தங்கள் புரி

    சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ......எங்கள் கோவே!  --- சிதம்பரத் திருப்புகழ்.

                                   

செட்டி வடிவைக் கொடு தினைப்புனம் அதில்சிறு கு-

     றப்பெண் அமளிக்குள் மகிழ் செட்டி! குரு வெற்பில்உறை

     சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர்புகழ் .....தம்பிரானே.   --- சுவாமிமலைத் திருப்புகழ்.

 

தவக் கிழவராக வந்தது ---

 

குறவர் கூட்டத்தில் வந்து,கிழவனாய்ப் புக்கு நின்று,

     குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,

குணமதாக்கிசிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த

     குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.  --- காஞ்சிபுரம் திருப்புகழ்.                                

 

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்

     வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய்.   --- திருவேங்கடத் திருப்புகழ்.

                               

புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்

     புணர் காதல் கொண்ட அக் ......    கிழவோனே!   --- பழநித் திருப்புகழ்.

                                   

ஓடும் இனி என்றவள் உரைத்தமொழி கேளா,

நீடுமகிழ்வு எய்தி அவண் நின்ற குமரேசன்,

நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த

வேடம் அது கொண்டுவரும் வேடர் எதிர் சென்றான்.

 

சென்று கிழவோன் குறவர் செம்மல் எதிர் நண்ணி,

நின்று பரிவோடு திருநீறு தனை நல்கி,

வன்திறல் மிகுத்திடுக,வாகை பெரிதாக,

இன்றியமையாத வளன் எய்திடுக என்றான். --- கந்தபுராணம்.

 

மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டியது ---

 

மால் உற நிறத்தைக் காட்டி,வேடுவர் புனத்தில் காட்டில்,

     வாலிபம் இளைத்துக் காட்டி,...... அயர்வாகி,

மான்மகள் தனத்தைச் சூட்டி,ஏன் என அழைத்துக் கேட்டு,

     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.   --- பொதுத் திருப்புகழ்.

                                    

கந்த முருகன் கடவுட் களிறுதனை

வந்தனைகள் செய்து வழுத்திநீ வந்திடலால்

 புந்தி மயல் தீர்ந்தேன்,புனையிழையுஞ் சேர்ந்தனளால்,
 
எந்தை பெருமான்! எழுந்தருள்க மீண்டு என்றான்.


என்னும் அளவில் இனிது என்று யானைமுக
முன்னிளவல் ஏக,முகம் ஆறுடைய பிரான்
 
கன்னி தனை ஓர் கடிகாவினில் கலந்து,
 
துன்னு கருணைசெய்து,தொல் உருவம் காட்டினனே.

முந்நான்கு தோளும்,முகங்கள் ஓர் மூவிரண்டும்,
 
கொன்னார் வைவேலும் குலிசமும்,ஏனைப்படையும்
 
பொன்னார் மணிமயிலும் ஆகப் புனக்குறவர்
 
மின்னாள் கண்காண வெளி நின்றனன் விறலோன். --- கந்தபுராணம்.

 

வள்ளிநாயகியின் திருக்கையையும்திருவடியையும் பிடித்தது...

 

பாகு கனிமொழி மாது குறமகள்

     பாதம் வருடிய ...... மணவாளா! --- சுவாமிமலைத் திருப்புகழ்.

 

கனத்த மருப்பு இனக் கரி,நல்

     கலைத் திரள்கற்புடைக் கிளியுள்

     கருத்து உருகத் தினைக்குள் இசைத்து,...... இசைபாடி

கனிக் குதலைச் சிறுக் குயிலைக்

     கதித்த மறக் குலப் பதியில்

     களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.  --- பொதுத் திருப்புகழ்.

                                    

 

வள்ளிநாயகியைக் கன்னமிட்டுத் திருடியது....

 

கன்னல் மொழி,பின்அளகத்துன்னநடை,பன்ன உடைக்

     கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்

     கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!  --- கண்ணபுரத் திருப்புகழ்.

                                

 

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது ...

 

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு

     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!

உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,

     ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!               --- திருவருணைத் திருப்புகழ்.

                                

 

வள்ளிநாயகியை முருகப் பெருமான் வணங்கி,சரசம் புரிந்தது.....

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ....அணைவோனே

                                                                    --- திருவருணைத் திருப்புகழ்.

 

தழை உடுத்த குறத்தி பதத் துணை

     வருடி,வட்ட முகத் திலதக் குறி

     தடவி,வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே

தரள பொன் பணி கச்சு விசித்துரு

     குழை திருத்தி,அருத்தி மிகுத்திடு

     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே.

                                                                        --- திருத்தணிகைத் திருப்புகழ்.

 

மீள் வாய்மை தெளித்தது ---

 

தான் யார் என்றும்வள்ளியம்மை யார் என்றும் முருகப் பெருமான் தெளிவுபடுத்தியது...

 

கூரார் நெடுவேல் குமரன் திருவுருவைப்

பாரா,வணங்கா,பரவல் உறா,விம்மிதமும்

சேரா,நடுநடுங்கா,செங்கை குவி ஆவியரா,

ஆராத காதலுறா,அம்மை இது ஓதுகின்றாள்.

 

மின்னே அனையசுடர் வேலவரே! இவ்வுருவம்

முன்னே நீர் காட்டி முயங்காமல்,இத்துணையுங்

கொன்னே கழித்தீர்! கொடியேன் செய் குற்றமெலாம்

இன்னே தணித்தே,எனை ஆண்டு கொள்ளும் என்றாள்.

 

உம்மை அதனில் உலகம் உண்டோன் தன்மகள்நீ,

நம்மை அணையும்வகை நற்றவஞ் செய்தாய்அதனால்

இம்மை தனில் உன்னை எய்தினோம் என்று,எங்கள்

அம்மை தனைத் தழுவி ஐயன் அருள்புரிந்தான். 

 

எங்கள் முதல்வன் இறைவி தனைநோக்கி,

உங்கள் புனந்தன்னில் உறைந்திடமுன் ஏகுதியால்,

மங்கை நல்லாய்! யாமும் வருவோம் எனவுரைப்ப

அங்கண் விடைகொண்டு அடிபணிந்து போயினளே.   --- கந்தபுராணம்.

                                    

 

மாகம் ஆர் பொழில் உள்ள வாகை மாநகர் ---

 

வாகை மாநகர் என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளதொரு ஊர் என்பர் ஒரு சாரார். திருப்புள்ளிருக்கு வேளூர் அருகில் உள்ளதிருவாளப்புத்தூர் என்று இக்காலத்தில் வழங்கப்படுகின்ற திருவாழ்கொளிப் புத்தூர் தான் இந்த ஊர் என்பர் ஒரு சாரார்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மயலில் உழலாமல் ஆண்டு அருள்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...