பிறரைப் பழி கூறும் முன், தன்னிடத்து உள்ள பழியை எண்ணிப் பார்க்க வேண்டும்
-----
திருக்குறளில் "புறங்கூறாமை" என்னும் ஓர் அதிகாரம். பிறரைக் கண்டபோது அவரைப் புகழ்ந்து பேசுவதும், காணாத இடத்தில், அவரை இகழ்ந்து பேசுவதும் குற்றம் ஆகும். புறம் பேசுதல் "புறங்கூறுதல்" ஆகும். பொறாமை காரணமாகப் பிறர் பொருளைக் கவர விருப்பம் கொள்ளுதல் மனத்தின் குற்றம் ஆகும். புறம் பேசுதல் என்பது மனத்தின் குற்றத்தை அடுத்து, வாக்கின் குற்றமாக வருவது.
இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறள், "பிறன் ஒருவனைக் காணாத இடத்து, மற்றொருவனிடத்தில் அவனைப் பழித்துக் கூறுகின்றவன், தன்னிடத்திலும் அவ்விதமான குற்றங்கள் உள்ளதை ஆராய்ந்து, பின்னர் அவனும் சொல்லுவான் என்பதை உணரவேண்டும்" என்கின்றது.
தன்னைக் காணாத இடத்தில், பிறன் ஒருவனைப் பழித்துக் கூறியதைக் கேட்டவனும், பின்னர் தன் மீது பழியினைக் கூறுவான் என்பதை அறிதல் வேண்டும்.
புறங்கூறுபவரின் உறவை விட்டொழிக்க வேண்டும் என்பதால், "உள் ஒன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்றருளினார் வள்ளல்பெருமான்.
"பிறன் பழி கூறுவான், தன் பழி உள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்".
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
சங்கு அறுக்கும் சாதிசொ(ல்)லும் சங்கரனை,நக்கீரன்
அன்றுபழி சொன்னதுபோல் ஆர்சொல்வார்? --- என்றும்
பிறன் பழி கூறுவான், தன் பழி உள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.
இதன் பொருள் ---
சங்கு அறுக்கும் சாதி சொல்லும் சங்கரனை --- சங்கை அறுக்கின்ற இழிந்த சாதியில் பிறந்தவன் நக்கீரன் என்று பழித்துக் கூறும் சிவபெருமானை. அன்று --- தருமிக்காகச் சிவபெருமான் புலவராகி வந்த அந்நாளில். பழி சொன்னது போல் --- நக்கீரரைப் பழித்துக் கூறிய சிவபெருமான் மீது நக்கீரர் பழித்துக் கூறியது போல், ஆர் சொல்லுவார் --- வேறு யார் சொல்லமுடியும்?
(எனவே, இந்த நிகழ்வு)
என்றும் --- எக்காலத்திலும், பிறன் பழி கூறுவான் --- பிறரைப் பழித்துக் கூறுகின்றவன்,தன் பழி உள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் --- தன்னிடத்தில் உள்ள குற்றங்களையும் ஆராய்ந்த பின்னர் கூறவேண்டும் (என்னும் திருக்குறளை ஒத்து இருக்கின்றது)
நக்கீரரைப் பழித்துச் சிவபெருமான் கூறியதாக வரும் செய்யுள் வருமாறு ---
அங்கம் குலுங்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கம் பட இரண்டு கால் பரப்பிச் --- சங்கு அதனை
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என் கவியைப்
பாரில் பழுது என்பவன்.
அதற்கு மாறாக நக்கீரர், சிவபெருமானைப் பழித்துப் பகர்ந்த பாட்டும் கீழ் வருவதாகும்...
சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
பங்கம்உறச் சொன்னால் பழுது ஆமோ? ---சங்கை
அரிந்து உண்டு வாழ்வோம், அரனாரைப் போல்
இரந்து உண்டு வாழ்வது இ(ல்)லை.
இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்தில், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் வருகிறது.
வங்கிய சூடாமணி பாண்டியன் என்பவன் மதுரையைத் தலைமைப் பதியாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்தான். அவன் மீனாட்சியம்மை உடனாய சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நந்தவனம் அமைத்து பல வகையான மரங்களையும், மலர்ச் செடிகளையும் வைத்து பராமரித்தான். அந்த நந்தவனத்தில் செண்பகப் பூச் செடிகளை அதிகம் வைத்து அந்தப் பூக்களை இறைவனுக்கு அணிவித்து வந்தான். அதிகமாக செண்பக மாலையிலேயே இறைவன் காட்சியளித்தமையால், "செண்பகசுந்தரர்" என்று அழைக்கப்பட்டார். மன்னன் "செண்பகப் பாண்டியன்" என்று அழைக்கப்பட்டான்.
செண்பக தோட்டத்தில் மன்னன் தன்னுடைய மனைவியுடன் இருந்தபோது, அவளுடைய கூந்தலில் இருந்து மணம் வருவதை அறிந்தான். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா? செயற்கையாக பூக்களை வைப்பதால் மணம் வருகிறதா? என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது. தன்னுடைய சந்தேகத்தினைத் தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவிக்க செய்து, சபையின் முன்பு அந்த பொற்கிழியையும் தொங்க விட்டான்.
மதுரை சொக்கநாதரை வணங்கும் தருமி என்ற ஆதிசைவர் இருந்தார். அவர் உறவுகள் இல்லாத அனாதையாக இருந்தார். அவருக்கு திருமணம் செய்து, இறைவனைப் பூசித்து, இறைவன் அடி சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. காரணம், திருமணம் ஆகாதவர் இறைவன் திருமேனியைத் தொட்டுப் பூசனை புரிய ஆகமத்தில் உரிமை இல்லை. இன்றைய காலத்தில், அந்த முறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை. திருவிளையாடல் புராணத்தைக் கருத்தூன்றிப் படித்தால் இது விளங்கும். ஆனால், தருமி என்னும் ஏழை அந்தணர், காசுக்கு ஆசைப்பட்டு அலைவதைப் போலக் காட்டப்பட்டது வருந்தத் தக்கது.
பின் வரும் திருவிளையாடல் புராணப் பாடல்கள் இதனைத் தெளிவிக்கும்.
தந்தை தாய் இ(ல்)லேன்,தனியன் ஆகிய
மைந்தனேன்,புது வதுவை வேட்கையேன்,
சிந்தை நோய் செயும் செல்லல் தீர்ப்பதற்கு
எந்தையே இது பதம் என்று ஏத்தியே.
இதன் பொருள் ---
எமது தந்தை ஆகிய சொக்கலிங்கப் பெருமானே! தந்தை தந்தை தாய் அற்றவனாய், ஒரு பற்றுக்கோடும் இல்லாதவனாய் உள்ள சிறியேன்ஆகிய நான், திருமணம் புரியும் விருப்பம் கொண்டுள்ளேன். அது முடித்தற்கு என்னிடம் பொருள் இல்லாமையால் நான் வருந்துகின்றேன். எனது மனத்தை வருத்தும் வறுமைத் துன்பத்தைப் போக்குதற்கு நீக்குவதற்குஇது நல்ல தருணம் என்று கூறித் துதித்து. (தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றான் தருமி)
நெடிய வேதநூல் நிறைய ஆகமம்
முடிய ஓதிய முறையில் நிற்கு எ(ன்)னும்
வடு இல் இல்லற வாழ்க்கை இன்றி,நின்
அடி அருச்சனைக்கு அருகன் ஆவனோ?.
இதன் பொருள் ---
உயர்ந்த வேத நூல்கள் முழுமையும், ஆகமங்கள் முழுமையும், ஓதி அறிந்த முறையில் நிற்பேன் எனினும், குற்றமில்லாத இல்லற வாழ்க்கை இல்லாமல், தேவரீரின் திருவடியை அருச்சிப்பதற்கு உரியன் ஆவனோ (ஆகேன்).
குறிப்பு --- இல்லற வாழ்க்கை உற்றோரே சிவபெருமானை அருச்சித்தற்கு உரியவர் என்பது வேதாகமங்களின் துணிபு என்பது இதனால் அறியப் பெறும்.
ஐய! யாவையும் அறிதியே கொலாம்,
வையை நாடவன் மனக் கருத்து உணர்ந்து
உய்ய ஓர்கவி உரைத்து,எனக்கு அருள்
செய்ய வேண்டும் என்று இரந்து செப்பினான்.
இதன் பொருள் ---
ஐயனே, எல்லாவற்றையும் (இல்வாழ்க்கையில் ஈடுபட்டே, உனது திருவடியை அர்ச்சனை புரியவேண்டும் என்பதையும், அதற்கேற்ப, நான் மணம் முடிப்பதற்குப் பொருள் இல்லாது வருந்தி இருத்தலையும்) நீ அறிவாய். வைகை நாட்டை உடைய பாண்டியனது உள்ளக் கருத்தை ஆராய்ந்து, நான் உய்தி பெற, ஒரு கவியினைப் பாடி, அடியேனுக்கு அருள் செய்யவேண்டும் என்று, (ஆலவாய்ச் சொக்ககேசப் பெருமானிடம்) குறையிரந்து கூறினான்.
தருமி என்னும் அந்தணன், தந்தைதாய் இல்லாதவனாகவும், வேதாகமங்களை முறைப்படி கற்று இருந்தும், இல்வாழ்க்கை அமையாமையால், இறைவனைத் தான் கற்றறிந்த வேதாகமங்களின் வழி நின்று பூசிக்க முடியாமல் வருத்தம் கொண்டு இருந்தார்.ஏழையாக இருந்தமையாலும், அனாதையாக இருந்தமையாலும் பெண் கிடைக்காமல் சிரமம் கொண்டார். தன்னுடைய மணவாழ்க்கைக்காக காத்திருந்தவருக்கு மன்னன் அறிவித்த ஆயிரம் பொற்காசுகள் போட்டியைப் பற்றிய செய்தி தெரிந்து, இறைவனிடம் முறையிட்டார். தருமி தன் மீது கொண்டிருந்து பத்திக்கு இரங்கி, சொக்கநாதர், ஒரு புலவராக மாறி வந்து, ஒரு ஓலையை தருமிக்குத் தந்தார். இதை மன்னிடம் கொடுத்தால் பரிசு கிடைக்கும் எனக் கூறினார்.
தருமியும் மன்னரின் அவைக்கு சென்று இறைவன் கொடுத்த பாடலைப் படித்தார். அதில் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்ற செய்தி மறைமுகமாக கூறப்பட்டிருந்தது. தருமியின் பாடல் மன்னன் கொண்டிருந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது. மன்னன் பரிசினை தருமிக்குக் கொடுத்தான். ஆனால் அவையிலிருந்த புலவர் நக்கீரர் என்பவர்,தனக்கே அனைத்துப் புலமையும் தெரியும் என்ற ஆணவத்தால்,அந்தப் பாடலில் பொருட்குற்றம் இருப்பதாக கூறி பரிசினைத் தருவதைத் தடுத்துவிட்டார்.
ஏழை அந்தணர் ஆகிய தருமி சொக்கநாதர் திருக்கோயில் சென்று,இறைவன் திருமுன்னிலையில் நடந்ததைக் கூறி முறையிட, இறைவன் மீண்டும் புலவராக வந்து தருமியுடன் இணைந்து பாண்டியனுடைய அவைக்குச் சென்றார். அங்கு நக்கீரனுடன் வாதம் செய்தார். நக்கீரன் இயற்கையாக கூந்தலுக்கு மணமில்லை என்று மறுத்தே கூறிவந்தார். அதனால் கோபம் கொண்ட சொக்கநாகப் புலவர், "இறைவியின் கூந்தலுக்குமா மணமில்லை?" என்று கேட்க, "ஆம் இறைவியின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை" என்றார் நக்கீரர். பிழையான செய்தியை நக்கீரர் தன்னுடைய ஆணவத்தினால் சரியானது என்றே மறுப்பு தெரிவித்து வந்தார். அதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணால் அவரை எரித்தார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
குந்திமகார் பேறு உரைத்த கொற்றவனும் தன்வரவும்
சிந்தை செயாது உற்றான், சிவசிவா! - நிந்தை
பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
இதன் பொருள் ---
துரியோதனன் தனது பிறப்பின் இயல்பினை எண்ணாது,
குந்திதேவியின் மக்களான பாண்டவர்களின் பிறப்பு இயல்பை பழித்துக் கூறினான். பிறரைப் பழி கூறுவதற்கு முன்னர், தன்னிடத்து உள்ள பழியை ஒருவன் எண்ணிப் பார்க்கவேண்டும்.
கொற்றவன் --- துரியோதனன். தன்வரவு --- துரியோதனனுடைய பிறப்பியல்பு.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்திருத்தலைக் காணலாம்...
இழுக்கல் இயல்பிற்று இளமை, பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை, --- யாண்டும்
செறுவொடு நிற்கும் சிறுமை,இம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார். --- திரிகடுகம்.
இதன் பதவுரை ---
இளமை இழுக்கல் இயல்பிற்று --- இளமைப் பருவம், வழுவுதலை இயல்பாக உடையது; பேதைமை பழித்தவை சொல்லுதல் வற்று ஆகும் --- அறியாமை உடையவர்கள் அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைச் சொல்லுதலில் வல்லவர்களாக இருப்பார்கள். சிறுமை யாண்டும் செறுவொடு நிற்கும் --- ஈனத் தன்மை எக்காலத்தும் சினத்தோடு நிற்பதாகும் (ஆதலால்), இ மூன்றும் அறிவு உடையார் குறுகார் --- இம் மூவகையினையும், மேல் விளைவை அறிதலை உடையார் நெருங்கார்.
இயல்பாக தவறுதல் செய்யும் இயல்பினை உடையது இளமைப் பருவம்; அறிவு உடையோர் வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்; எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை; இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர் அவனைச் சேரார்.
நம்மைப் பிறர்சொல்லும் சொல் இவை,நாம் பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே
களைகணது இல்லா தவர். --- அறநெறிச்சாரம்.
இதன் பதவுரை ---
நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை --- நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்லவேண்டும் என்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் எண்ணாது பிறரைச் சொல்லும் இழுக்கு இவை --- நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை, என்று எண்ணி --- என்று ஆராய்ந்து உரைகள் பரியாது உரைப்பாரில் --- தாம் பிறர்பால் இரங்காது கடுஞ்சொல் கூறுவராயின் அவரைப் போல், யாரே களைகணது இல்லாதவர் --- பற்றுக் கோடு (ஆதரவு) இல்லாதவர் பிறர் யார்? ஒருவரும் இல்லை.
பொல்லாத சொல்லி மறைத்து ஒழுகும் பேதை, தன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும், - நல்லாய்!
மணல்உள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும். --- பழமொழி நானூறு.
இதன் பதவுரை ---
நல்லாய் --- நற்குணம் உடையவளே!, மணல் உள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் --- மணலுள் பதிந்து மறைந்திருக்கும் தவளையும், தன் வாயால் கெடும் --- தன் குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு இறந்து ஒழியும், (அதுபோல) பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை --- தீயனவற்றைக் கூறி ஒளித்து நிற்கும் அறிவில்லாதவன், தன் சொல்லாலே தன்னைத் துயர் படுக்கும் --- தான் கூறும் சொற்களாலேயே தன்னைத் துன்பத்தின்கண் அகப்படுத்திக் கொள்வான்.
புறங்கூறுதலால் தன் இயல்பைத் தானே வெளிப்படுத்திக் கொள்வதால், அது காரணமாக வரும் தீங்கு தன்னால் செய்து கொள்ளப்பட்டமையின், 'தன் சொல்லாலே தன்னைத் துயர்ப் படுக்கும்' என்றார்.
குறை இல்லாதவன் மனிதன் இல்லை. ஒருவரிடத்தில் உள்ள குறை பிறரிடத்தில் இருக்காது. குறை என்பது ஏதாவது ஒரு விதத்தில் இருக்கும். பிறரைப் பழி கூறத் தொடங்கும் முன், ஒருகணம், தம்மிடத்தில் பிழை ஏதும் இல்லையா என்பதை ஆராயவேண்டும்.
No comments:
Post a Comment