041. கல்லாமை --- 01. அரங்கின்றி

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றிசிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்களின் வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும்பல நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால்சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின்கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழித்து,பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

 

     "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குkf காலத்தில்நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும்இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கிஉண்மைப் பொருளை உணர்ந்துஉணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால் உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும். 

 

     கற்ற வழியில் நிற்றல் என்பதுஇல்லறத்தில் வழுவாது நின்று,மனைவியோடு போகம் புசித்து,கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கிதுறவறத்தில் நின்றவரானால்,தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்துஅவா அறுத்துசிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும். 

 

     இவ்வாறு கற்றலின் சிறப்பை முந்தைய அதிகாரத்தில் உடன்பட்டு அருளிய நாயனார்இந்த அதிகாரத்தில் கற்றலைச் செய்யாமையால் வரும் இழிவை எதிர்மறையாக அறிவுறுத்துகின்றார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தான் அறிவால் நிரம்புதற்கு உரிய நூல்களைக் கல்லாதுஅவையில் ஒருவன் பேச முற்படுதல்அரங்கம் இல்லாமல் சூது ஆடியது போல் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     அரங்கு என்பது ஆடுதற்கு வகுத்த இடம். வட்டு என்பது உண்டை. கோட்டி என்பது சபை.

 

திருக்குறளைக் காண்போம்....

 

அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றேநிரம்பிய

நூல் இன்றி கோட்டி கொளல்.         

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     அரங்கு இன்றி வட்டு ஆடி அற்று--- அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும்

 

     நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கோளல்--- தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.

            

            (அரங்கு - வகுத்த தானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டிஎன்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகுமார பாரதி என்பார் "திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் பாடியருளிய பாடல்...

 

மைவைத்த கண்டர் மறைவாக்கினால் புகழ்ந்த

சைவத் தலைவர் அன்பு சாற்றுதல்,யான் - கைவைத்து

அரங்கின்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்.              

 

இதன் பொருள் ---

 

     கரிய நஞ்சைக் கண்டத்திலே கொண்ட சிவபெருமான் வேத சிவாகமங்களை ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அருளிச் செய்த தமது திருவாக்கினாலேதம்முடைய திருத்தொண்டர்களது அடிமைத் திறத்தைப் பாடும்பொருட்டு அருள் செய்தருளிய சைவ மெய்யடியார்களுடைய பத்தி நிலையை நான் சொல்லத் துணிந்த தன்மையானதுவட்டாடுதற்கு வகுத்த தானத்தை அமைத்துக் கொள்ளாமல் வட்டு ஆடினாற்போலும். தான் அறியவேண்டுவன எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண்ணே ஒன்றனைச் சொல்லுதல் என்றவாறு.

                                                                        

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கிற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...    

 

ஞானசம் பந்தருடன் நன்றாய்ச் சமணர்எதிர்த்து

ஈனம்உற்றார் அன்றோ?இரங்கேசா! --ஆன

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்.         

 

இதன் பொருள்---  

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சமணர் --- மதுரையில் சமணர்கள்ஞானசம்பந்தருடன் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரோடு,நன்றாய் --- (தமது அறியாமையை அறியாமையால்) தைரியமாய்எதிர்த்து --- எதிர்வாதம் செய்துஈனம் உற்றார் அன்றோ --- அவமானம் அடைந்தார்கள் அல்லவா, (ஆகையால்இது) நிரம்பிய நூல் இன்றி --- நிறைந்த நூலுணரச்சி இன்றிகோட்டி கொளல் --- சபையில் பேசுதல்ஆன அரங்கு இன்றி --- தகுதியான வகுப்பிடம் இன்றி (அதாவது) காயை வகுத்து வைக்கும் வீட்டிடம் இன்றிவட்டு ஆடி அற்று --- பாய்ச்சிகை உருளையை உருட்டினது போலாகும் (என்பதை விளக்குகின்றது).

 

       கருத்துரை--- அரைக் கல்வி கொண்டு அம்பலம் ஏறாதே.

 

       விளக்கவுரை--- ஒரு காலத்தில் சமண் காடு மூடியிருந்த மதுரைக்குத் திருஞானசம்பந்தர் அடியார் கூட்டத்தோடு சென்றுஅங்கொரு மடத்தில் தங்கி இருந்தார். அப்போது அமண் காட்டுத் தீ பற்றி எரிந்தபடி,அவர் மடத்தைச் சமணர் கொளுத்தினார்கள். அது கண்ட நாயனார்தமது தேவார விசேடத்தால் அந் நெருப்பைச் சுர நோயாக்கிப் பாண்டியனைப் பற்றுவித்தார். "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" என்பதனால்சமணர் செய்த பிழைக்குப் பாண்டியன் தண்டனை அடைந்தான். நோய் பொறாமல் வருந்தும் பாண்டியன் சமணர் செய்த சிகிச்சை பலியாதது கண்டுதிருஞானசம்பந்தரை வரவழைத்தான். அவர் வந்தது பொறாத சமணர் அவரோடு வாதம் செய்ய வந்தார்கள். பாண்டியன் சுரநோயை வலப்புற நோய்இடப்புற நோய் என்று இருபங்கு ஆக்கிஒருபுறம் திருஞானசம்பந்தரும்மறுபுறம் தாமும் தீர்ப்பதென ஏற்படுத்தி முதல் வாதந் தொடங்கினார்கள். தாமே நோய்க்குக் காரணராகையால்திருஞானசம்பந்தர் தமது புற நோயை விரைவில் போக்கி அருளினார். நோயெல்லாம் திரண்டு சமணர் பக்கம் சேர்ந்து பாண்டியனை வருத்தியது. சமணர் தோற்றார்கள். பிறகு திருஞானசம்பந்தரே முற்றும் குணப்படுத்தினார்.

 

       இரண்டாம் முறை அனல்வாதம் தொடங்கின சமணர்தம் மந்திரங்களை ஏடுகளில் எழுதி நெருப்பில் இட்டார்கள்.  திருஞானசம்பந்தரும் தமது தேவார ஏட்டை அதில் இட்டார். சம்பந்தர் ஏடு பச்சென்றிருந்தது. சமணர் ஏடுகள் வெந்து சாம்பராயின.

 

       மூன்றாம் முறை புனல்வாதம் தொடங்கினார்கள். மந்திர ஏடுகளைச் சமணர் வைகையில் இட்டார்கள். திருஞானசம்பந்தரும் அப்படியே தமது ஏட்டை வெள்ளத்தில் விட்டார். சமணர் ஏடுகள் வெள்ளம் சென்ற வழியே பள்ளத்தில் ஓடின. திருஞானசம்பந்தர் இட்ட ஏடு மிதந்து வெள்ளத்திற்கு எதிரேறி ஓடிற்று. அனல்வாத புனல்வாதங்களிலும் சமணர் தோற்க திருஞானசம்பந்தர் வெற்றி பெற்றார். ஞான நூல் கல்லாத சமணர் விவேகமின்றி வீண்வாதம் செய்ததனால் மும்முறையும் தோற்று அவமானம் அடைந்து கழுவேறி மாண்டார்கள்.

 

     இத் திருக்குறளுக்கு ஒப்பாகப் பின்வரும் பாடல்களை அமைந்துள்ளமை காணலாம்...

 

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து

நல் அறிவாளர் இடைப் புக்கு --- மெல்ல

இருப்பினும் நாய் இருந்த அற்றேஇராஅது

உரைப்பினும் நாய்குரைத்து அற்று.          ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கல்லாது நீண்ட ஒருவன் --- கல்வியறிவு பெறாமல் வளர்ந்து விட்ட ஒருவன்உலகத்து நல்லறிவாளரிடைப் புக்கு மெல்ல இருப்பினும் நாய் இருந்தற்று --- உலகத்தில் உயர்ந்த அறிவாளிகளின் அவையில் நுழைந்து இருக்குமிடம் தெரியாமல் இருந்தாலும் அந்நிலை ஒரு நாய் இருந்தாற் போன்ற தன்மையை உடையதாகும்இராது உரைப்பினும் நாய் குரைத்தற்று --- அவ்வாறு அடக்கமாக இராமல் ஏதானும் ஒன்று வாய் திறந்து கூறினும் அது நாய் குரைத்தால் போன்ற தன்மை உடையதாகும்.

 

            கல்வி அறிவு பெறாதோர் நாயின் நிலையில் வைத்துக் கருதப்பட்டார்.

 

புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி

கல்லா ஒருவன் உரைப்பவும்,கண்ணோடி

நல்லார் வருந்தியும் கேட்பரேமற்றவன்

பல்லாருள் நாணல் பரிந்து.            ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் --- பொருந்தாக் கல்வியை உடைய மெய்யுணர்வு இல்லாத வீணோர் அவையில் கல்வியறிவு நிரம்பப் பெறாத ஒருவன் உரையாடவும்கண்ணோடி நல்லார் வருந்தியும் கேட்பர் அவன் பல்லாருள் நாணல் பரிந்து --- மேன்மக்கள் கண்ணோட்டம் கொண்டு,  உள்ளம் வருந்தியுங் கேட்டுக் கொண்டிருப்பர்தாம் கேளாது ஒழியின் அவன் பலர் இடையில் நாணம் கொள்ள நேர்தற்கு இரங்கி..

 

       மேன்மக்கள் கல்வியறிவும் மெய்யுணர்வும் வாய்ந்து அவையில் அடக்கமும் கண்ணோட்டமும் உடையராயிருப்பர்.

 

 

மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ் வழிவிட்டு ஆங்கோர்

அஞ்ஞானம் தந்திட்டு அதுஆங்கு அறத்துழாய்க்

கைஞ்ஞானங் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர்முன்

சொல் ஞானஞ் சோர விடல்.      --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ் வழி விட்டு --- உண்மை அறிவினை உடைய கூட்டத்திற் கலந்து அவர் வழி நின்று ஒழுகுதலை விடுத்துஆங்கு ஓர் அஞ்ஞானம் தந்திட்டு அது அறத்துழாய் --- அதற்கு மேலும் அம் மெய்ஞ்ஞானம் உடையாரிடையே தமது ஓர் அறியாமைக் கருத்தையும் உரைத்துஅதனையே மிகவும் பன்னிப் பன்னிப் பேசிகைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர் முன் --- இவ்வாறு தமது சிற்றறிவே பற்றி ஒழுகுகின்ற மயக்க அறிவினர் எதிரில்சொல் ஞானம் சோரவிடல் --- புகழ்தற்குரிய தமது ஞானப் பெருமையினைக் காட்டிக்கொள்ளாமல் தளர்த்துக் கொள்க.

 

            தமது சிற்றறிவையே பேரறிவாகக் கொண்டு அடங்காது ஒழுகுவாரிடம்,சான்றோர் தமது ஞானப் பெருமையை வெளிப்படுத்திக் கொள்ளார்.

 

 

நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார் போல்செறிக்குந்

தீப்புலவற் சேரார் செறிவு உடையார்; -தீப்புலவன்

கோட்டியுள் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்

தோட்புடைக் கொள்ளா எழும்.         --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நாப் பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும் தீப்புலவன் சேரார் செறிவுடையார் --- தாம் இதற்கு முன் நெட்டுருச் செய்த பாடங்களை அப்படியே சொல்லிக் காட்டி ஏதோ பொருள் நயம் உணர்வார் போல் நடித்துத் தம் அறியாமைக் கருத்துக்களை அவற்றில் செறித்துக் கூறும் போலிப் புலவனை அவ் ஆரவாரமில்லா மெய்ப்புலவோர் அணுகார்; (ஏனென்றால்,) தீப்புலவன் கோட்டியுள் குன்ற --– மெய்ப் புலவோராகிய தமது வருகையால் அப் போலிப் புலவன் அவையில் பெருமை கெடுதலால்குடிப்பழிக்கும் --- அவன் தமது குடிப்பிறப்பைப் பற்றிப் பழித்துப் பேசுவான்அல்லாக் கால் தோட்புடைக் கொள்ளா எழும் --- அல்லாவிட்டால் தன் தோளைத் தட்டிக் கொண்டு வலுச் சண்டைக்கு எழுவான் என்க.

 

      போலிப் புலவரோடு மெய்ப்புலவர் சேர்ந்து பெருமை குன்றுதலாகாது.

 

கல்லாதான் ஊருங் கலிமாப் பரிப்பு இன்னா;

வல்லாதான் சொல்லும் உரையின் பயன்இன்னா;

இல்லார்வாய்ச் சொல்லின் நயம்இன்னா;ஆங்குஇன்னா

கல்லாதான் கோட்டி கொளல்.         --- இன்னா நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     கல்லாதான் ஊரும் கலிமா பரிப்பு இன்னா --- (நடத்த வேண்டிய முறையைக்) கல்லாதவன் ஏறிச் செலுத்தும் மனம் செருக்கிய குதிரை(அவனைச்) சுமந்து செல்லுதல் துன்பமாம்வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா --- கல்வி இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம்இல்லார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா --- செல்வம் இல்லாதவருடைய வாயிலிருந்து வரும் சொல்லினதுநயமானது துன்பமாம்ஆங்கு --- அவ்வாறேகல்லாதவன் கோட்டி கொளல் இன்னா --- கல்வியில்லாதவன் கற்றவர் அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாம்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...