பெண்மையைப் போற்றுவோம்

 


பெண்மையைப் போற்றுவோம்

-----

 

     ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.அன்னையர் தினம்,தந்தையர் தினம்,மகளிர் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகின்ற எல்லோரும்இவர்களால் எல்லா வகையிலும் அனுபவத்தைப் பெற்றவர்களே ஆவர். இந்தக் கொண்டாட்டங்களால் அறிவு விளங்கி இருந்தால்அன்னை தந்தையர்களைப் புறக்கணிக்கும் நிலை வந்திருக்காது. பெண்களை இன்னமும் போகப் பொருளாகவும்,அடிமையாகவும் எண்ணும் நிலை தொலைந்து இருக்கவேண்டும்.

 

     நமது வீட்டுப் பெண்மக்களைஉறவுகளை "வாடி" "போடி" என்றாவது பேசாமல், "அம்மா" என்று வாயார அழைப்போம்.

 

     அறநிலையில் நின்று ஒழுகுவதில் ஆண்களைக் காட்டிலும்,பெண்கள் உறுதி குலையாதவர்களாக இருந்தார்கள் தமிழப் பெண்கள். எனவேதான்,

 

"பெண்ணின் பெருந்தக்க யா உளகற்பு என்னும்

திண்மை உண்டாகப் பெறின்"

 

என்று பெண்மையைச் சிறப்பித்துப் போற்றினார்.

 

     "அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். செல்வர்களின் வளர் செல்வம் நான்" என்று கூறிய கண்ணன், "பெண்மைகளுள் நான் புகழ்,திருசொல்நினைவுஅறிவுதிண்மைபொறையாக இருக்கின்றேன்" என்று (பகவத் கீதைஅத்.10 - பாடல் 34) கூறியுள்ளதை எண்ணிப் பார்த்தல் நலம்.

 

     "பார்த்தா! கீழான பிறவியர்களாய் இருக்கின்ற பெண்பாலர்வைசியர்சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்து இருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்" என்று (பகவத் கீதை அத்.9பாடல். 32) கண்ணன் கூறியதில் இருந்து பெண்களை மட்டுமல்லாதுபிற வருணத்தாரையும்கீழானவர்களாக மதித்து வந்தமை புலனாகின்றது. 

 

     உலகில் எந்த நிலையிலும் உயர்ந்தவர்களும்தாழ்ந்தவர்களும் விரவியே இருப்பர். ஏனெனில்இது "மிச்சிர லோகம்" (மிச்சிரம் என்றால் கலப்பு என்று பொருள்) புண்ணியலோகம் ஆகிய சுவர்க்கத்தில்புண்ணியமே செய்தவர்களே இருப்பார்கள். பாவம் செய்தவர்களுக்கு வாழிடமாகிய நரகத்தில் பாவத்தையே பயின்றவர்கள் இருப்பார்கள். பாவம் புண்ணியம் இரண்டும் கலந்து அனுபவிக்க வேண்டியவர்கள் இந்த மண்ணுலகில்அவரவரது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப வந்து பிறப்பார்கள்.

 

     பிறக்கும்போது எல்லோரும் நல்லவரே. அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும் சூழலுக்கும்செயலுக்கும் ஏற்ப வாய்க்கும்.

 

     பெண்ணின் பெருமையைத் திருவள்ளுவ நாயனார் போற்றியதோடு,பெண்ணின் இலக்கணம் குறித்தும் பேசி இருப்பார்.

 

     பெண்ணின் இலக்கணத்தைப் பேசும் பாடல் ஒன்றை நீதிவெண்பாவில் காணலாம்.

 

"அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்

பொன்னின் அழகும்,புவிப்பொறையும், — வண்ணமுலை

வேசி துயிலும்,விறல் மந்திரி மதியும்,

பேசில் இவை உடையாள் பெண்".

 

இதன் பொருள் --- சொல்லப் போனால்தாயைப் போன்ற அன்பும்,வேலைக்காரியைப் போலத் தொண்டும்,தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற அழகும்நிலத்தைப் போலப் பொறுமையும்,அழகிய தனங்களை உடைய வேசியைப் போலத் துயில் இன்பம் தரும் திறனும்வெற்றி மிக்க அமைச்சரைப் போல அறிவும்,ஆகிய இந்த ஆறு இயல்புகளையும் உடையவளே பெண் என்று சொல்லத் தக்கவள்.

 

இதற்கு நேர் மாறான பாடல் ஒன்றும் அதில் உண்டு.

 

"பெண்ஒருத்தி பேசில் பெரும்பூமி தான் அதிரும்,

பெண்இருவர் பேசில்விழும் வான்மீன்கள்,– பெண்மூவர்

பேசில் அலைசுவறும்,பேதையே! பெண் பாலர்தாம்

பேசில் உலகு என்னாமோ பின்".

 

இதன் பொருள் --- பெண் ஒருத்தி பேசினால் இந்தப் பெரிய நிலவுலகம் நடுங்கும். பெண்மக்கள் இருவர் பேசுவாரானால்விண்மீன்கள் உதிர்ந்து கீழே விழும். பெண்மக்கள் மூவர் பேசினாலோகடல் நீர் வற்றி வறண்டு விடும். பெண்மக்கள் பலர் பேசத் தொடங்கி விட்டால்பின்னர் இந்த உலகம் என்ன ஆகுமோ?

 

     இது எதைக் காட்டுகிறது என்றால்உருவத்தில் ஒத்து இருந்தாலும்நல்ல பெண்களும் உண்டு. அல்லாத பெண்களும் உண்டு. விதி இது என்றால்,விதிவிலக்கும் இருக்கும்.

 

இதற்கும்அந்த நூலில் ஒரு பாடல் உண்டு....

 

"கற்பூரம் போலக் கடல் உப்பு இருந்தாலும்,

கற்பூரம் ஆமோ கடல் உப்பு;- பொற்பு ஊரும்

புண்ணியரைப் போல இருந்தாலும்புல்லியர்தாம்

புண்ணியர் ஆவாரோ புகல்". 

 

     கடல் நீரில் உண்டாகும் உப்புஉருவத்தால் கற்பூரத்தைப் போலவே வெண்மையாக இருக்கும். நிறத்தில் வெண்மையாக இருந்தாலும்அந்த உப்புதனது தன்மையில் கற்பூரம் ஆகிவிடுமோஆகாது. அதுபோலதீவினையாளர் அழகு மிகுந்த நல்வினையாளரைப் போலவே இருந்தாலும்,தன்மையிலும் நல்வினையாளராக ஆவாரோ

 

     இவை எல்லாம் பெண்மக்களுக்கு வைத்துப் பாடப்பட்டு இருந்தாலும்ஆண்மக்களுக்கும் பொருந்தும் என்று கொள்ளவேண்டும்.

 

     எங்கெல்லாம் அவன் என்று குறிப்பிடப்படுகிறதோஅங்கே அவள் என்பதையும் கொள்ளவேண்டும். எங்கெல்லாம் அவள் என்று குறிப்பிடப்படுகிறதோஅங்கே அவன் என்பதையும் கொள்ளவேண்டும்.

 

     திருக்குறளில் பல இடங்களில் "ஒருவன்" என்ற சொல் வரும். அது ஒருத்தி என்பவருக்கும் பொருந்துமாறு கொள்ளவேண்டும்.

 

     பன்மையில் ஒருவர் என்று வருகின்ற இடங்களில்இருபாலருக்கும் பொருந்துவதாகக் கொள்ளவேண்டும். திருக்குறள் சமயம் கடந்அற்புதத் திருநூல் என்றாலும்உரை கூறவந்த சிலர்அதற்குச் சமயச் சாயம் பூசியதும் உண்டு.

 

பெறும் அவற்றுள் யாம்அறிவது இல்லை,அறிவுஅறிந்த

மக்கள் பேறு அல்ல பிற.               

 

என வரும் திருக்கிறளுக்குப் பரிமேலழகர்,'அறிவறிந்தஎன்ற அதனால், 'மக்கள்என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது என்று விளக்கம் அளித்தார்.

 

     திருவள்ளுவர் பெண்களுக்கு அளித்த ஏற்றம்பரிமேலழகர் உரையில் இல்லை. இது பெண்மைக்கு இழுக்கைத் தரும் கருத்து என்று தேவநேயப் பாவாணர் முதலாகிய பெரும்புலவர்கள் மறுத்து உள்ளனர். 

 

     பெற்றவர் இறந்தால்கொள்ளி வைப்பதற்கு ஒரு ஆண்மகன் வேண்டும் என்று ஒரு வழக்கம் தமிழ்நாட்டு மக்களை எப்படியோ தொற்றிக் கொண்டுவிட்டது. ஆண்மகன் இருந்துஅவன் கொள்ளி வைத்தால்தான் மோட்சம் என்று ஒரு நம்பிக்கை. இது தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும் மாறான கருத்து.

 

     பொறுமைக்கும்அன்புக்கும் இலக்கணமாகத் திகழ்பவர்கள் பெண்கள். பக்குவப்பட்ட உயிர்களே பெண் பிறவிக்கு வரும்.

 

     பிறந்த வீட்டிலே சர்வ சுதந்திரத்தோடு வாழ்ந்து இருந்த ஒரு பெண்தனக்கு மணமான பிறகு,தனக்கு அதுவரை இருந்து வந்த சுதந்திரம் எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிட்டு,தன்னந் தனியாகப் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கின்றார். புகுந்த வீட்டில் உள்ள எல்லோரையும் புரிந்து கொண்டுஅவரவருக்கு ஏற்ப பக்குவத்தோடு பழகிபுகுந்த வீட்டை விளங்கச் செய்கின்றார். அதனால்தான் பிறந்த வீட்டிற்கும் பெருமையைச் சேர்க்கின்றார். அவருக்குக் கணவனாக வாய்த்தவர்தனது வீட்டில் அதுவரை அனுபவித்து வந்த எதையும் இழக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதுதான் மனைமாட்சி ஆகும்.

 

"மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின்வாழ்க்கை

எனைமாட்சித்து ஆயினும் இல்".        

 

என்பது திருக்குறள்.

 

மனையாள் இல்லாத வீடு காடு ஆகும்.

 

"மழைதிளைக்கும் மாடமாய்,மாண்பு அமைந்த காப்பாய்,

இழைவிளக்கு நின்று இமைப்பின் என்னாம்? - விழைதக்க

மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்

காண்டற்கு அரியதோர் காடு".              

 

என்று நாலடியார் கூறுகின்றது.

 

இதன் பொருள் ---

 

மழைமேகங்கள் வந்து கவியும் அளவுக்கு உயர்ந்து ஓங்கிய மாடங்களும்மிகச் சிறந்த பாதுகாப்பு அமைப்புகளும்ஒளி வீசும் அழகிய விளக்குகள் பலவும் இருந்து என்ன பயன்அன்பும் நல்ல குணமும் கொண்ட இல்லத்தரசி இல்லாத வீடு ஒரு வீடாஅது எவரும் அண்ட முடியாத காடு போன்றது.

 

"தாரம் மாணாதது வாழ்க்கை அன்று". 

 

என்கின்றது முதுமொழிக் காஞ்சி என்னும் நூல்.

 

மனையாள் மாட்சிமைப்படாத மனைவாழ்க்கை மனைவாழ்க்கை அல்ல என்பது இதன் பொருள்..

 

"வான்தரு கற்பின் மனையுறை மகளிர்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

பெய் எனப் பெய்யும் பெருமழை என்ற அப்

பொய்யில் புலவன் பொருள் உரை தேறாய்".

                                                                                                            

என்று "மணிமேகலை"என்னும் காப்பியத்திலும்,திருக்குறள் கருத்து எடுத்து ஆளப் பெற்று உள்ளது. மணிமேகலை ஆசிரியர், "வான் தரு கற்பு" என்றார். வான் என்றதுஇங்கே வானம் தரும் மழையைக் குறித்து நின்றது. ஆககற்பு நெறியில் நின்ற பெண்டிர் வேண்ட மழைபெய்யும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

 

"கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி,

கொண்டன செய்வகை செய்வான் தவசிகொடிதுஒரீஇ

நல்லவை செய்வான் அரசன்இவர் மூவர் 

பெய்யெனப் பெய்யும் மழை".

 

என்கின்றது"திரிகடுகம்" என்னும் நூல்இதன்படிதன்னைக் கொண்டவனுடைய குறிப்பினை அறிந்து அதன்படி ஒழுகுகின்ற மனைவிதான் மேற்கொண்ட விரதங்களை முறைப்படி கடைப்பிடிக்கின்ற தவசிதீயவற்றை விலக்கி,மக்களைக் காத்து,நன்மை பயக்கும் செயல்களை மேற்கொள்ளுகின்ற அரசன் ஆகிய இந்த மூவரும் பெய் என்றால் மழை பெய்யும் எனப்பட்டது.

 

"வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை,

நீதி மன்னர் நெறிமுறைக்கு ஓர் மழை,

மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை,

மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே".

 

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

 

கந்தபுராணம் மார்க்கண்டேயப் படலத்தில்பின்வருமாறு ஒரு பாடல் வருகின்றது...

 

"காண் தகைய தம் கணவரைக் கடவுளார் போல

வேண்டல் உறு கற்பினர் தம் மெய்யுரையில் நிற்கும்

ஈண்டை உள தெய்வதமும் மாமுகிலும் என்றால்,

ஆண்தகைமை யோர்களும் அவர்க்கு நிகர் அன்றே".

 

கணவனைக் கடவுள் போல் எண்ணி வழிபடும் கற்பு உடைய மகளிரின் சொல்வழி தெய்வமும்மழைமேகமும் நிற்கும் என்னும்போதுஅப் பெண்களுக்கு ஆடவர்கள் நிகர் ஆகார் என்கின்றது இப் பாடல்.

 

பெரிய புராணத்தில்,மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றில்தெய்வச் சேக்கிழார் பெருமான்பின் வருமாறு பாடுகின்றார்...

 

"குழைக்கு அலையும் வ டிகாதில்

            கூத்தனார் அருளாலே

மழைக்கு உதவும் பெருங் கற்பின்

            மனைக் கிழத்தியார் தம்பால்

இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த

            இப் பிறவிக் கொடுஞ்சூழல்

பிழைக்கும் நெறி தமக்கு உதவப்

            பெண்கொடியைப் பெற்று எடுத்தார்".

 

     குழையை அணிந்ததால் அசைகின்ற அழகிய காதுகளை உடைய கூத்தப்பெருமான் திருவருளால்மழை வேண்டும் பொழுதுஅதனை உடன் உதவுதற்கு உரிய பெரும் கற்பினை உடைய தமது மனைவியார் திருவயிற்றில்ஒழிவு இன்றிப் பெருகிவரும் வினைப் பயன்களால் வரும் பிறவி என்னும் கொடிய சுழற்சியில் இருந்து,தப்பிப் பிழைக்கின்ற நல்ல நெறியினைத் தமக்கு உதவ வல்லது ஒரு பூங்கொடி போலும் சாயலை உடைய பெண் குழந்தையை மானக்கஞ்சாற நாயனார் பெற்றெடுத்தார் என்கின்றது இப் பாடல்.

 

     இதனால் மழை வேண்டும் கற்பினை உடையவர் பெண்கள் என்பது மட்டுமல்ல. ஆண்மகனால் மட்டுமே ஒருவன் வீடுபேறு அடையமுடியும் என்னும் கருத்து மறுக்கப்பட்டது. பெண்ணைப் பெற்றால்அவள் தனக்கு நீர்க்கடன் அறிக்கவில்லை என்றாலும்வீடுபேற்றை அடையலாம் என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது.

 

பெண்மையைப் போற்றுவோம்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...