041. கல்லாமை --- 02. கல்லாதான் சொல்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "கல்வி அறிவு இல்லாத ஒருவன்கற்றவர் கூடியுள்ள சபையில் ஒன்றைச் சொல்ல விரும்புதல் என்பதுஇரண்டு முலைகளும் இல்லாத பெண் ஒருத்தி,பெண்மை நலத்தை விரும்பியது போலும்" என்கின்றார் நாயனார்.

 

     கல்லாத ஒருவன் கற்றார் சபையில் ஒன்றைச் சொல்லப் புகுந்தால்அது முடிவு பெறாது. முடிவு பெற்றாலும் நகைப்புக்கு இடம் ஆகும். அதுபோலவேமுலை இரண்டும் இல்லாத பெண் ஒருத்திபெண் தன்மையை விரும்பிய போதுஅது முடிவு பெறாது. முடிவு பெற்றதாக இருந்தாலும்அது இறுதியில் நகைப்புக்கு இடமாகும். உண்மை இன்பமாக இராது.

 

     கண் இரண்டும் குருடு. கால் இரண்டும் நொண்டி என்பது போல. இரண்டும் என்று முற்றும்மை கொடுத்தார்.

 

     பேடி என்பது பெண் உருவம் பெருகி நிற்பது. அலி என்பது ஆண் சாயல் மிகுந்து நிற்பது. கல்லாத பேதை பொல்லாத பேடி.

 

திருக்குறளைக் காண்போம்...

 

கல்லாதான் சொல் காமுறுதல்முலை இரண்டும்

இல்லாதாள் பெண் காமுற்று அற்று.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     கல்லாதான் சொல் காமுறுதல்--- கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்

 

     முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று--- இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.

            

      ('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின்தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவிய வழிக் கடைப் போகாதுபோகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....

 

தலை தண்டம் ஆகச் சுரம்போதல் இன்னா;

வலைசு மந்து உண்பான் பெருமிதம் இன்னா;

புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா;இன்னா

முலை இல்லாள் பெண்மை விழைவு.   --- இன்னா நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     தலை தண்டம் ஆக சுரம் போதல் இன்னா --- தலை அறுபடும்படிகாட்டு வழியில் செல்லுதல்துன்பமாம்வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா --- வலையைச் சுமந்துஅதனால் உண்டு வாழ்வானதுசெருக்குதுன்பமாம்புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா --- புலால் உண்ணுதலைவிரும்பிவாழ்வது மக்கள் உயிர்க்குத் துன்பமாம். முலை இல்லாள் பெண்மை விழைவு இன்னா --- முலையில்லாதவள் பெண் தன்மையைவிரும்புதல்துன்பமாம். 

 

     கல்லாதான் சொல் காமுறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண் காமுற்று அற்றுஎன்பது காண்க.

 

நுண்ணுணர்வு இன்மை வறுமைஅஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; -எண்ணுங்கால்

பெண்ணவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண்ணவாத் தக்க கலம்.               ---  நாலடியார்.

 

     எண்ணுங்கால் --- ஆராயுமிடத்துநுண் உணர்வு இன்மை வறுமை --- ஒருவனுக்கு நுட்ப அறிவில்லாமையே வறுமையாவது;அஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் --- அந் நுட்ப அறிவினை உடையவனாயிருத்தலே ஒருவனுக்கு மிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்;பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் --- பெண்ணியல்பு மிகுந்து இருந்துஆண் இயல்பு நீங்கிய பேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளுதல் உண்டு அல்லவா! அதனை ஒத்ததேகல்விஅறிவில்லாதவர் ஏனைச் செல்வம் உடையராய் இருந்து மகிழ்தல் ஆகும்.

 

போக்குஅறு கல்வி புலம் மிக்கார் பால்அன்றி

மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா;- தாக்குஅணங்கும்

ஆணவாம் பெண்மை உடைத்துஎனினும்,பெண்நலம்

பேடு கொளப்படுவது இல்.         --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     தாக்கு அணங்கும் --- தாக்கி வருத்துகின்றஆணவாம் பெண்மை --- ஆண்மக்கள் அவாவக் கூடிய பெண்மைத் தன்மையைஉடைத்து எனினும் --- உடையது என்றாலும்பெண் நலம் --- அப் பெண்ணின் இன்பம்பேடு கொளப்படுவது இல் --- பேடுகளால் கொள்ளப்படுவது இல்லை. (அதுபோல)போக்கு அறு கல்வி --- குற்றமற்ற கல்விபுலம் மிக்கவர்பால் அன்றி --- அறிவு மிக்கவரிடத்தில் அல்லாமல்மீக்கொள் நகையினார்வாய் --- விளையாட்டுத் தன்மையே மிகுதியும் மேற்கொண்டு இருப்பவர்களிடத்தில்சேரா --- சேர மாட்டாவாம்.

 

     ஆன்ற அறிவும் அருளும் உடைய பெரியோரெல்லாரும் மிக ஆழ்ந்து ஆராய்ந்து காட்டிய கல்விப்பொருளை அவரைப் போலவே மிக அமைந்த நோக்கமும் ஆழ்ந்த கருத்தும் உடையராய்பிறவற்றில் நெஞ்சம் செல்லுதல் இன்றிப் பெருந்தன்மை பொருந்திக் கற்பார். ஆதலினால் அப்பெருந்தன்மை வாய்க்காது,விளையாட்டில் பொழுது கழிக்கும் வீணர்களிடம் அக்கல்விப் பொருள்கள் சேராது என்றார்.

 

     “பெண்மக்களின் இயற்கையழகுஆண்மக்களின் அறிவு ஆற்றல் முதலியவைகளைத் தாக்கிஅவர் நெஞ்சத்தைத் தன் கீழ்ப்படுத்தி வருத்தலால் வருத்துவதோர் அணங்கு” என்று பொருளுரைப்பர் ஆசிரியர் பரிமேலழகர். 

 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி.             ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

     கல்லாதான் கற்ற கவி --- கற்கவேண்டியவற்றை (முறைப்படக்) கல்லாதவன்கற்றோர் கூறுவதைக் கேட்டு,தானும் ஒரு கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல்கானம் மயில் ஆட --- காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆடகண்டு இருந்த வான் கோழி --- அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானதுதானும் அதுவாகப் பாவித்து --- தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக்கொண்டுதானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும் --- தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினால் போலும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...