அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மின்னார் பயந்த (முள்வாய்)
முருகா!
அடியேன் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கவேண்டும்.
தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த
தன்னா தனந்த தந்த ...... தனதான
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
வெவ்வே ழன்று ழன்று ...... மொழிகூற
விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
மென்னா ளறிந்த டைந்து ...... உயிர்போமுன்
பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து
பொய்யார் மனங்கள் தங்கு ...... மதுபோலப்
பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு
புன்னா யுளுங்க வின்று ...... புகுவாயே
பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
பன்னா கணைந்து சங்க ...... முறவாயிற்
பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று
பண்ணூ துகின்ற கொண்டல் ...... மருகோனே
முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
முன்னோர் பொருங்கை யென்று ...... முனையாட
மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு
முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மின்னார்,பயந்த மைந்தர்,தன்நாடு,இனம் குவிந்து
வெவ்வேறு உழன்று உழன்று ...... மொழிகூற,
விண்மேல் நமன் கரந்து மண்மேல் உடம்பு ஒருங்க,
மென் நாள் அறிந்து அடைந்து,...... உயிர்போமுன்,
பொன்ஆர் சதங்கை,தண்டை,முந்நூல்,கடம்பு அணிந்து,
பொய்யார் மனங்கள் தங்கும் ...... அதுபோலப்
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து,அழுங்கு
புன்நாய் உளும் கவின்று ...... புகுவாயே.
பல்நாள் இறைஞ்சும் அன்பர் பொன்நாடு உற அங்கை தந்து,
பன்னாகம் அணைந்து,சங்கம் ...... உறவாயில்
பல்நூல் முழங்கல் என்று,விண்ணோர் மயங்க நின்று,
பண் ஊதுகின்ற கொண்டல் ...... மருகோனே!
முன்ஆய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து
முன்ஓர் பொருங்கை என்று ...... முனை ஆட,
மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம் மாதர் வந்து இறைஞ்சு
முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே.
பதவுரை
பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை தந்து --- பல நாட்களாக வணங்கி வரும் அன்பர்களாகிய தேவர்கள் தங்கள் பொன்னுலகத்தை மீள அடைய அவர்களுக்கு, மேலான அழகிய அருட்திருக்கரத்தை உதவியவரே!
பன்னாக(ம்) அணைந்து--- பாம்பணையில் பள்ளி கொண்டு இருந்து,
வாயில் சங்கம் உற--- திருவாயில் பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினை வைத்து,
பன்னூல் முழங்கல் என்று--- பல சாத்திர நூல்கருத்துக்களும் சங்கநாதத்தில் பொருந்துமாறு,
விண்ணோர் மயங்க நின்று--- தேவர்கள் தம்மை மறந்து நின்று கேட்கும்படியாக,
பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே --- இசையோடு ஊதுகின்ற மேகவண்ணன் ஆகிய திருமாலின் திருமருகரே!
முன்னாய் மதன்--- மன்மதன் முன் நின்று,
கரும்பு வில் நேர் தடம் தெரிந்து--- கரும்பு வில்லைத் தொடுக்கவேண்டிய இடம் தெரிந்து,
முன் ஓர் பொரும் கை என்று முனை ஆட--- முன்னதாகவே போர் புரியும் தொழிலை மேற்கொண்டது போல நெருங்கிப் போர் புரிய,
மொய் வார் நிமிர்ந்த கொங்கை --- சேர்த்துக் கட்டியுள்ள கச்சு அற நிமிர்ந்த கொங்களைகளை உடைய,
மெய்ம் மாதர் வந்து இறைஞ்சு--- உண்மைத் தன்மைகளைக் கொண்ட பெண்கள் வந்து வழிபடுகின்ற,
முள்வாய் விளங்க நின்ற பெருமாளே--- முள்வாய் என்னும் திருத்தலத்தில் விளக்கமுற நிற்கும் பெருமையில் மிக்கவரே!
மின்னார் --- மின்னல் கொடி போன்ற பெண்கள்,
பயந்த மைந்தர்--- பெற்ற புதல்வர்கள்,
தன் நாடு --- தான் பிறந்த நாடு,
இனம் --- தன் இனத்தைச் சார்ந்தவர்களும்,
குவிந்து --- ஒன்று கூடியும்,
வெவ்வேறு --- தனித்தனியாகவும்,
உழன்று உழன்று மொழி கூறி --- இங்கும் அங்குமாகச் சென்றுஎன்னைப் பற்றி(வீட்டில் உள்ள) பெண்டிர், பெற்ற மக்கள், தான் பிறந்த நாடு, சுற்றத்தினர் யாவரும் கும்பலாகக் கூடியும், தனியாகவும் அங்கும் இங்கும் சென்று சென்று (என்னைப் பற்றிப் பலவிதாகப்) பேச்சுக்கள் பேசி,
விண்மேல் நமன் கரந்து--- ஆகாயத்தில் எனது கண்ணுக்குத் தெரியாமல் இயமன் மறைந்து இருந்து,
மண்மேல் உடம்பு ஒருங்கு அம் மெல்நாள் அறிந்து அடைந்து--- இந்த மண்மேல் எனது உடம்பில் இருந்து உயிர் அடங்கும் அந்த இறுதி நாளை அறிந்து, என்னை அடையவும்,
உயிர் போம் முன்--- எனது உயிர் போகும் முன்பாக,
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து --- அழகிய பொற்சதங்கை, தண்டை, முப்புரிநூல், கடப்பமலர் மாலை ஆகியவற்றை அணிந்து கொண்டு,
பொய்யார் மனங்கள் தங்கும் அது போல--- பொய்யாத வாய்மையாளர்களின் மனத்தில் தங்கி இருந்து அவர்களுக்கு அருள் புரிவது போல,
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து---பொல்லாதவன் ஆகிய நான் உம்மை வழிபட்டு வேண்டிய சொற்களைப் பொருட்படுத்தி,
அழுங்கு புல் நாய் உ(ள்)ளும் கவின்று புகுவாயே--- வருந்துகின்ற இழிந்த நாயேன் ஆகிய அடியேன் உள்ளத்திலும் அழகுறப் புகுந்து அருள் புரிவாயாக.
பொழிப்புரை
பல நாட்களாக வணங்கி வரும் அன்பர்களாகிய தேவர்கள் தங்கள் பொன்னுலகத்தை மீள அடைய அவர்களுக்கு, மேலான அழகிய அருட்திருக்கரத்தை உதவியவரே!
பாம்பணையில் பள்ளி கொண்டு இருந்து, திருவாயில் பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினை வைத்து,பல சாத்திர நூல்கருத்துக்களும் சங்கநாதத்தில் பொருந்துமாறு, தேவர்கள் தம்மை மறந்து நின்று கேட்கும்படியாக,இசையோடு ஊதுகின்ற மேகவண்ணன் ஆகிய திருமாலின் திருமருகரே!
மன்மதன் முன் நின்று, கரும்பு வில்லைத் தொடுக்கவேண்டிய இடத் தெரிந்து, முன்னதாகவே போர் புரியும் தொழிலை மேற்கொண்டது போல நெருங்கிப் போர் புரிய,சேர்த்துக் கட்டியுள்ள கச்சு அற நிமிர்ந்த கொங்களைகளை உடைய,உண்மைத் தன்மைகளைக் கொண்ட பெண்கள் வந்து வழிபடுகின்ற,முள்வாய் என்னும் திருத்தலத்தில் விளக்கமுற நிற்கும் பெருமையில் மிக்கவரே!
மின்னல் கொடி போன்ற பெண்கள், பெற்ற புதல்வர்கள், தான் பிறந்த நாடு, தன் இனத்தைச் சார்ந்தவர்களும், ஒன்று கூடியும், தனித்தனியாகவும், இங்கும் அங்குமாகச் சென்று (என்னைப் பற்றிப் பலவிதாகப்) பேச்சுக்கள் பேசவும், ஆகாயத்தில் எனது கண்ணுக்குத் தெரியாமல் இயமன் மறைந்து இருந்து,இந்த மண்மேல் எனது உடம்பில் இருந்து உயிர் அடங்கும் அந்த இறுதி நாளை அறிந்து, என்னை அடையவும், எனது உயிர் போகும் முன்பாக, அழகிய பொற்சதங்கை, தண்டை, முப்புரிநூல், கடப்பமலர் மாலை ஆகியவற்றை அணிந்து கொண்டு, பொய்யாத வாய்மையாளர்களின் மனத்தில் தங்கி இருந்து அவர்களுக்கு அருள் புரிவது போல, பொல்லாதவன் ஆகிய நான் உம்மை வழிபட்டு வேண்டிய சொற்களைப் பொருட்படுத்தி, வருந்துகின்ற இழிந்த நாயேன் ஆகிய அடியேன் உள்ளத்திலும் அழகுறப் புகுந்து அருள் புரிவாயாக.
விரிவுரை
மின்னார்---
மின்னல் கொடி போன்ற பெண்கள்,
பயந்த மைந்தர்---
பெற்ற புதல்வர்கள்,
குவிந்து வெவ்வேறு உழன்று உழன்று மொழி கூறி ---
"மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க" பிறிதொரு திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, வயது முதிர்ந்த, நாடி நரம்புகள் எல்லாம் ஒடுங்கி,பிறரை நாடியே வாழவேண்டும் என்னும் நிலை வரும்போது, எல்லோரும் வெறுக்கத் தான் செய்வார்கள். தனியாகவும், ஒன்று கூடியும் பழித்துப் பேசுவார்கள்.
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து ---
"எழுத அரிய அறுமுகமும், அணி நுதலும், வயிரம் இடை
இட்டுச் சமைந்த செஞ்சுட்டிக் கலன்களும், ...... துங்க நீள் பன்-
னிரு கருணை விழிமலரும், இலகு பதினிரு குழையும்,
ரத்நக் குதம்பையும், பத்மக் கரங்களும், ......செம்பொன் நூலும்,
மொழிபுகழும் உடைமணியும், அரைவடமும், அடி இணையும்,
முத்தச் சதங்கையும், சித்ரச் சிகண்டியும், ......செங்கைவேலும்,
முழுதும் அழகிய குமர! கிரிகுமரி உடன் உருகு
முக்கண் சிவன்பெரும் சற்புத்ர! உம்பர் தம் ...... தம்பிரானே".
--- திருப்புகழ்.
பொய்யார் மனங்கள் தங்கும் அது போல---
சர்வ அலங்காரங்களோடு முருகப் பெருமான்,பொய்யாத மனத்தை உடைய அடியவர்களின் இதயமாகி குகையில் தங்கி இருந்து அவருக்கும், அவர்களைச் சார்ந்தவர்க்கும் அருள் புரிகின்றார்.
பின்வரும் பிரமாணங்களைக் காண்க...
ஒல்லைஆறி உள்ளம்ஒன்றிக் கள்ளம் ஒழிந்துவெய்ய
சொல்லை ஆறித் தூய்மைசெய்து காமவினை அகற்றி
நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம் மேயவனே.
"மெய்யர்ஆகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து
செய்யர் ஆனார் சிந்தையானே"தேவர்குலக் கொழுந்தே
நைவன்நாயேன் உன்தன் நாமம் நாளும்நவிற் றுகின்றேன்
வையம் முன்னே வந்துநல்காய் வலிவலம் மேயவனே. --- திருஞானசம்பந்தர்.
துன்பக் கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே
பொன்பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யுமப் "பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே".
"மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை"
வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
கண்ணானைக் கண்மூன்று உடையான் தன்னைப்
பைஆடு அரவம் மதி யுடனே வைத்த
சடையானைப் பாய்புலித்தோல் உடையான் தன்னை
ஐயானை ஆவடுதண் துறையுள் மேய
அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே.
கையாற் கயிலை எடுத்தான் தன்னைக்
கால்விரலால் தோள்நெரிய ஊன்றி னான்காண்
மெய்யின் நரம்புஇசையால் கேட்பித் தாற்கு
மீண்டே அவற்குஅருள்கள் நல்கி னான்காண்
"பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான்காண்"
போர்ப்படையான் காண்பொருவார் இல்லா தான்காண்
மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. --- அப்பர்.
"பொய்யாத வாய்மையால் பொடிபூசிப்
போற்றி இசைத்துப் பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும்
அந்தணர்"தம் கருப்ப றியலூர்க்
கொய்உலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயில்ஆலுங் கொகுடிக் கோயில்
ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே. --- சுந்தரர்.
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து, அழுங்கு புல் நாய் உ(ள்)ளும் கவின்று புகுவாயே---
நல்லவர்கள் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனை, பொல்லாதவன் ஆகிய நானும் உம்மை வழிபட்டு வேண்டிய சொற்களைப் பொருட்படுத்தி, நன்னெறியில் செல்லாமையால், இப்போது உள்ளம் வருந்திப் புழுங்குகின்ற அடியேனையும் பொருட்படுத்தி, எனது உள்ளத்திலும் எழுந்தருள வேண்டும் என்றார் அடிகளார்.
பன்னாக(ம்) அணைந்து---
பன்னகம் --- பாம்பு. பன்னாகம் என நீட்டல் விகாரம் பெற்றது.
வாயில் சங்கம் உற,பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே---
சங்கம் --- பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினை உடையவர் திருமால்.
முள்வாய் விளங்க நின்ற பெருமாளே---
முள்வாய் என்னும் திருத்தலம், ஆந்திர மாநிலம் சித்துரிலிருந்து பலமனேரி போகும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது என்பர். தமிழ்நாட்டில், அரக்கோணம் என்னும் நகருக்கு அருகிலும் முள்வாய் என்று ஓர் ஊர் உள்ளது. ஆனால், அங்கு முருகன் திருக்கோயில் ஏதும் இல்லை.
கருத்துரை
முருகா! அடியேன் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment