அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
போத நிர்க்குண (பொது)
முருகா!
தேவரீரைப் பாடித் துதி செய்து,
பதமலர் பணிந்து மாயையில் விழாது உய்வுபெற அருள் செய்வீர்.
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநட
நாத புத்திர பாகீ ரதீகிரு
பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டரீகா
வேத வித்தக வேதா விநோதகி
ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல
வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி
நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
போத நிர்க்குண போதா! நமோ நம,
நாத நிஷ்கள நாதா! நமோ நம,
பூரணக் கலை சாரா! நமோ நம,...... பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா! நமோ நம,
நீப புஷ்பக தாளா! நமோ நம,
போக சொர்க்க புபாலா! நமோ நம,...... சங்கம்ஏறும்
மா தமிழ் த்ரய சேயே! நமோ நம,
வேதன த்ரய வேளே! நமோ நம,
வாழ் ஜக த்ரய வாழ்வே! நமோ நம ...... என்று,பாத
வாரிஜத்தில் விழாதே,மகா உததி
ஏழ் பிறப்பினில் மூழ்கா,மனோபவ
மாயையில் சுழி ஊடே விடாது ...... கலங்கல்ஆமோ?
கீத நிர்த்த வெதாள அடவீ நட
நாத புத்திர! பாகீரதீ கிரு-
பா சமுத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா!
கேகயப் பிரதாபா! முலாதிப!
மாலிகைக் குமரேசா! விசாக! க்ரு
பாலு வித்ரும காரா! ஷடானன ...... புண்டரீகா!
வேத வித்தக வேதா! விநோத
கிராத லக்ஷ்மி கிரீடா! மகா அசல
வீர! விக்ரம! பார அவதான ...... அகண்டசூரா!
வீர நிட்டுர! வீராதி காரண
தீர! நிர்ப்பய தீர! அபிராம வி-
நாயக ப்ரிய! வேலாயுதா! சுரர் ...... தம்பிரானே.
பதவுரை
கீத நிர்த்த வெதாள அடவீ நட நாத புத்திர--- இசையுடன் கூடிய திருநடனத்தைச் சுடுகாட்டில் புரிகின்ற சிவபெருமானுடைய திருக்குமாரரே!
பாகீரதீ கிருபா சமுத்திர--- கங்கா நதிக்கு மகனாக வந்த கருணைக் கடலே!
ஜீமூத வாகனா தந்தி பாகா--- மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின் மகளாகிய தெய்வயானை அம்மையாரை ஒரு பக்கத்தில் கொண்டவரே!
கேகயப் பிரதாபா--- மயிலின் மீது எழுந்தருளி வரும் பெருமை உடையவரே!
முல அதிப--- முதன்மையான தலைவரே!
மாலிகைக் குமரேசா --- மாலைகளை அணிந்த இளம்பூரணரே!
விசாக--- விசாக மூர்த்தியே!
க்ருபாலு--- கருணை மிக்கவரே!
வித்ரும ஆகாரா--- பவளம் போன்ற சிறந்த வடிவினரே!
ஷடானன புண்டரீகா--- தாமரை மலர் போன்ற ஆறுதிருமுகங்களை உடையவரே!
வேத வித்தக--- வேதத்தில் வல்லவரே!
வேதா விநோத--- பிரமதேவனோடு பிரணவப் பொருள் கேட்டு விளையாடியனவரே!
கிராத லக்ஷ்மி கிரீடா--- வேடர்குலத் திருமகளாகிய வள்ளிபிராட்டியுடன் ஆடல் புரிகின்றவரே!
மகா அசல வீர--- பெரிய மலைகளில் எழுந்தருளி உள்ளவரே!
விக்ரம--- பெரும் ஆற்றல் உடையவரே!
பார அவதான அகண்ட--- பெரிய அவதானத்தைச் செய்யும் அகண்டரே!
சூர வீர நிட்டுர--- சூரனாகிய வீரனுக்கு நிட்டூரம் செய்தவரே!
வீரா --- வீரரே!
ஆதி காரண --- முதன்மையான காரணப் பொருளே!
தீர நிர்ப்பய தீர... பயமற்ற தீராதி தீரரே!
அபிராம--- மிகுந்த அழகு உடையவரே!
விநாயக ப்ரிய--- விநாயகமூர்த்திக்கு அன்புள்ளவரே!
வேலாயுதா --- வேலாயுதத்தை உடையவரே!
சுரர் தம்பிரானே--- தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவரே!
போத நிர்க்குண போதா நமோநம--- ஞான வடிவாகி, குணங்களைக் கடந்த ஞானகுருவே! போற்றி! போற்றி!
நாத நிஷ்கள நாதா நமோநம--- நாத வடிவாகி, வடிவம் கடந்த தலைவரே! போற்றி! போற்றி!
பூரணக்கலை சாரா நமோநம--- நிறைந்த வேதாகமங்களின் சாரமாக விளங்குபவரே! போற்றி! போற்றி!
பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம--- ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனுடைய மைத்துனரே பூமியைப் பாதுகாப்பவரே! போற்றி! போற்றி!
நீப புஷ்ப அக தாளா நமோநம--- கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவரே! போற்றி! போற்றி!
போக சொர்க்க புபாலா நமோநம--- போகத்தைத் தருகின்ற சுவர்க்க பூமியைக் காக்கின்றவரே! போற்றி! போற்றி!
சங்கம் ஏறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம --- சங்கப்பலகை மீது ஏறிய பெருமை மிக்க முத்தமிழ் விநோதராகிய குமாரக் கடவுளே! போற்றி! போற்றி!
வேதனத்ரய வேளே நமோநம--- மூன்று வேதங்களாகிய இருக்கு யசுர் சாமம் என்ற மும்மறைகளின் உட்பொருளாகிய உபகாரியே! போற்றி! போற்றி!
வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம--- வாழுகின்ற மூவுலகங்களின் வாழ்வாக உள்ளவரே! போற்றி! போற்றி!
என்று--- என்றெல்லாம் துதித்துப் போற்றி
பாத வாரிஜத்தில் விழாதே--- உமது திருவடிக் கமலத்தின் மீது விழுந்து வணங்காமல்
மகா உததி ஏழ் பிறப்பினில் மூழ்கா--- பெரிய கடல் போன்ற எழுவகையான பிறப்பினுள் அழுந்தி,
மனோபவ மாயையில் சுழி ஊடே--- மனத்தில் தோன்றும் விபரீத உணர்வாகிய சுழியில் கிடந்து,
விடாது கலங்கலாமோ --- அதனை உதறித் தள்ளமுடியாமல் கலங்கி அல்லல் படலாமோ?
பொழிப்புரை
இசையுடன் கூடிய நடனத்தைச் சுடுகாட்டில் செய்யும் சிவபெருமானுடைய திருக்குமாரரே!
கங்கா நதிக்கு மகவாக வந்த கருணைக் கடலே!
மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின் மகளாகிய தெய்வயானை அம்மையாரை ஒரு பக்கத்தில் கொண்டவரே!
மயிலின் மீது எழுந்தருளி வரும் பெருமை உடையவரே!
முதன்மையான தலைவரே!
மாலைகளை அணிந்த இளம்பூரணரே!
விசாக மூர்த்தியே!
கருணை மிக்கவரே!
பவளம் போன்ற சிறந்த வடிவினரே!
தாமரை மலர் போன்ற ஆறுதிருமுகங்களை உடையவரே!
வேதத்தில் வல்லவரே!
பிரணவப் பொருள் கேட்டு, பிரமதேவனோடு விளையாடியனவரே!
வேடர்குலத் திருமகளாகிய வள்ளிபிராட்டியுடன் ஆடல் புரிகின்றவரே!
பெரிய மலைகளில் எழுந்தருளி உள்ளவரே!
பெரும் ஆற்றல் உடையவரே!
பெரிய அவதானத்தைச் செய்யும் அகண்டரே!
சூரனாகிய வீரனுக்கு நிட்டூரம் செய்தவரே!
வீரரே!
முதன்மையான காரணப் பொருளே!
பயமற்ற தீராதி தீரரே!
மிகுந்த அழகு உடையவரே!
விநாயகமூர்த்திக்கு அன்புள்ளவரே!
வேலாயுதத்தை உடையவரே!
தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவரே!
ஞான வடிவாகி, குணங்களைக் கடந்த ஞானகுருவே! போற்றி! போற்றி!
நாத வடிவாகி, வடிவம் கடந்த தலைவரே! போற்றி! போற்றி!
நிறைந்த வேதாகமங்களின் சாரமாக விளங்குபவரே! போற்றி! போற்றி!
ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனுடைய மைத்துனரே பூமியைப் பாதுகாப்பவரே! போற்றி! போற்றி!
கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவரே! போற்றி! போற்றி!
போகத்தைத் தருகின்ற சுவர்க்க பூமியைக் காக்கின்றவரே! போற்றி! போற்றி!
சங்கப்பலகை மீது ஏறிய பெருமை மிக்க முத்தமிழ் விநோதராகிய குமாரக் கடவுளே! போற்றி! போற்றி!
மூன்று வேதங்களாகிய இருக்கு யசுர் சாமம் என்ற மும்மறைகளின் உட்பொருளாகிய உபகாரியே! போற்றி! போற்றி!
வாழுகின்ற மூவுலகங்களின் வாழ்வாக உள்ளவரே! போற்றி! போற்றி!
என்றெல்லாம் துதித்துப் போற்றி, உமது திருவடிக் கமலத்தின் மீது விழுந்து வணங்காமல், பெரிய கடல் போன்ற எழுவகையான பிறப்பினுள் அழுந்தி,மனத்தில் தோன்றும் விபரீத உணர்வாகிய சுழியில் கிடந்து, அதனை உதறித் தள்ளமுடியாமல் கலங்கி அல்லல் படலாமோ?
விரிவுரை
போத நிர்க்குண போதா ---
போதம் --- ஞானம். நிர்க்குணன் --- குணம் இல்லாதவன். போதா --- உபதேசிக்கின்றவரே! (போதிக்கின்றவன்)
குணம் என்ற சொல்லுக்குக் கட்டுவது என்பது பொருள். பந்தத்திலே கட்டுவது குணம். அவை முக்குணம் எனப்படும். சத்துவம்,இராஜசம், தாமதம் என்பவை. இக் குணங்கள் நீங்கினால்தான், உயிர்கட்கு இன்பம் உண்டாகும். "முக்குணம் மாள" என்று திருச்செந்தூர்த் திருப்புகழில் அருணகிரிநாதர் கூறியிருக்கின்றனர். முக்குணங்கள் தள்ளத் தக்கவை. அருட்குணங்கள் கொள்ளத் தக்கவை. இறைவனிடம் எட்டு அருட்குணங்கள் இருக்கின்றன.
"கோள்இல் பொறியில் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை".
என்னும் திருவள்ளுவ நாயனார் வாக்கினாலும்,
"பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ, எண்குண பஞ்சரனே".
என்னும் கந்தர் அநுபூதித் திருவாக்கினாலும் இறைவனுடைய எட்டு குணங்களைப் பற்றி அறிக.
தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை.
இதை வடநூலார், சுவதந்திரத்வம், விசுத்ததேகம், நிராமயான்மா, சர்வஞ்ஞத்வும், அநாதிபோதம், அலுப்தசக்தி, அநந்தசக்தி, திருப்தி என மொழிவர்.
நிர்குணன் --- மேலே கூறிய பிராகிருத குணங்களாகிய முக்குணங்கள் இல்லாதவன் இறைவன்.
நாத நிஷ்கள நாதா ---
நாதவடிவாக இறைவன் விளங்குகின்றான். நிஷ்களம் --- வடிவின்மை. இறைவனுக்கு மாயாமயமான இந்த வடிவம் இல்லை. அவர் வடிவம் இல்லாதவர். ஆனால் அருளே ஒரு வடிவாகக் கொண்டு வருவார். அவ்வாறு வரும் வடிவம் நமது வடிவம் போன்ற ஏழு தாதுக்களால் ஆகியது அன்று.
இறைவன் நாத வடிவினன் என்று இங்கே உரைத்தது போல், திருவானைக்காத் திருப்புகழிலே, இறைவியை "நாத வடிவி, அகிலம் புரந்தவள்" என்று அடிகள் கூறியிருப்பதையும் காண்க.
பூரணக் கலை சாரா---
வேதாகமங்கள் நிறைவுள்ள கலைகள். அவைகள் இறைவனுடைய தன்மைகளைக் கூறுகின்றன. அவைகள் அபர ஞானங்களாகும். அவைகளின் சாரம் பரஞானம். இறைவன் பதிஞானத்தால் அறியத்தக்கவன். அதனால், பூரணக்கலை சாரா என்று கூறியருளினார்.
கலை --- அறியாமையை அகழ்ந்து கலைப்பது. கல் (பகுதி) --- தோண்டுவது.
"உவமைஇலாக் கலைஞானம் உணர்வுஅரிய மெய்ஞ்ஞானம்"
என்று இருஞானங்களையும் சேக்கிழார் பெருமான் கூறுகின்ற அழகையும் காண்க.
முருகப் பெருமான் சகலகலாவல்லவர். "கல்வி கரை கண்ட புலவோனே" என்று வள்ளிமலைத் திருப்புகழில் அடிகளார் கூறி உள்ளார்.
பஞ்ச பாண பூபன் மைத்துன---
பஞ்சபாண பூபன் - மன்மதன். அவன் திருமாலுடைய மனதில் பிறந்தவன். அதனால் இப்பேர் பெற்றனன். சித்தசன் எனவும் பெறுவான். திருமால் மருகன் என்று முருகப் பெருமானைக் கூறுவதனால், மன்மதனுக்கு மைத்துனன் என்று கூறப்பட்டது.
மூவர் தேவாதிகள் தம்பிரானாகிய முழுமுதற்கடவுள் முருகப் பெருமான் என உணர்க. அவர், அரிபிரமர் அளப்பரிய பதக் கமலம் உடையவர்.
அவரை, கங்காபு தல்வர், கார்த்திகை மைந்தர், திருமால் மருகர், தேவ சேனாபதி என்றெல்லாம் கூறுவது சாமானிய வழக்கு எனத் தெளிக.
"கங்கையின் புதல்வன்என்றும், கார்த்திகை மைந்தன்என்றும்
செங்கண்மால் மருகன்என்றும் சேனையின் செல்வன்என்றும்
பங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை
இங்குஇவை பலவும் சொல்வது ஏழைமைப் பாலது அன்றோ".
நீப புஷ்பக தாளா---
நீபம் --- கடம்பு. புஷ்ப அகதாள் --- கடப்ப மலருக்கு உறைவிடமான திருவடி. முருகனுக்கு உவந்த மலர் கடப்பம். அது உருத்திராக்க வடிவில் இருக்கும்.
போக சொர்க்க புபாலா---
சொர்க்கம் என்பது புண்ணிய பூமி. அது புண்ணியம் செய்த ஆன்மாக்கள் போகங்களை நுகர்வதற்கு என்று அமைந்தது. "பூபாலா" என்றது சந்தத்தை நோக்கி, குறுகல் விகாரம் பெற்று, புபாலா என்று வந்தது. அப் புண்ணிய பூமியை முருகவேள் பாதுகாக்கின்றனர்.
சங்கம் ஏறும் மா தமிழ் த்ரய ---
முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்தன. ஆங்கு சங்கப்பலகை இருக்கும். அது தெய்வத் தன்மை பொருந்தியுள்ள தமிழ்ப் புலவர்கட்கும், குற்றமில்லாத செந்தமிழ் நூல்கட்குமே இடம் தரும்.
கடல்கோளால் அழியப் பெற்ற பகுதிகளாகிய குமரியாற்றுக்கும், பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட பகுதிகளில், 49நாடுகளுடன், 700காவதம் பரப்பு உடையதாக இருந்தது பழந்தமிழகம். அத் தமிழகத்தின் தலைநகரம் தென்மதுரை. அந்த மதுரையில் இருந்தது முதற்சங்கம்.
பின்னர் காவாடபுரத்தில் இடைச் சங்கம் விளங்கியது. பின்னர் அதுவும் கடல் கோளால் அழிந்தது.
இப்போதுள்ள மதுரையில் மூன்ராவது சங்கம் இருந்தது. இவ்வாறு விளங்கிய முச்சங்கங்களிலும் முத்தமிழ் வளம் பெற்றது. அதனால்,அது சங்கத் தமிழ் எனப்பட்டது. தமிழ் ஒன்றே சங்கம் என்ற அடை கொடுத்து பேசப்படுகின்றது. ஏனைய மொழிகள் அவ்வாறு பேசப்படுவதில்லை.
துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீஎனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா...
என்ற ஔவையார் திருவாக்காலும் அறிக.
தமிழ்த் த்ழயம் என்பது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் குறிக்கும்.
சேய்---
சேய் --- குழந்தை. என்றும் குழந்தையாக இருப்பவர்.
சேய் --- செம்மைப் பண்பு உடையவர்.
சேய் --- நமது அறிவாற்றலுக்கு நெடுந் தூரத்தில் இருப்பவர்.
வேதன த்ரய வேளே---
வேதனம் - வேதம். வேதம் மூன்று எனப்படும். அதர்வணம் என்ற நான்காவது வேதம் மூன்றின் கலப்பே ஆகும். வேதங்கள் மூன்றுக்கும் தலைமையானவர் முருகவேள்.
வேதம் --- அறிவு நூல். வித் --- பகுதி.
வேதநெறி தழைத்து ஓங்கவேண்டும். நமது நாடு வைதிக நாடு. நமது சமயம் வைதிக சமயம்.
நம்பியாரூரர் திருமணக் கோலம் கொண்டதைக் கூற வந்த சேக்கிழார் அடிகள், "மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க" என்கின்றார்.
ஜக த்ரய வாழ்வே ---
த்ரயம் - மூன்று. பூதலம், மீதலம், பாதலம் என்பவை. பூதலம் துன்பமும் இன்பமும் கலந்த உலகம். மீதலம் இன்பமே நிறைந்த உலகம். பாதலம் துன்பமே நிறைந்த உலகம். இந்த மூன்று உலகங்களிலும் வாழுகின்ற உயிர்கட்கு வாழ்வாக இருந்து அருள் புரிகின்றவர் கந்தவேள்.
என்று பாத வாரிசத்தில் விழாதே---
வாரிசம் --- தாமரை. முருகவேளை உருகிய உள்ளத்துடன் துதிசெய்து, அவருடைய திருவடித் தாமரை மீது வணங்குதல் வேண்டும்.
அப் பெருமானைத் துதித்து, வாழ்த்திய வாய் அமுதும், தேனும், பாலும், நெய்யும், சீனியும் அருந்துகின்ற வாய் என்று அறிக.
"ஐய, நின்சீர் பேசு செல்வர் வாய், நல்லதெள்
அமுது உண்டு உவந்த திருவாய்". --- வள்ளலார்.
அப் பரம கருணாநிதியாகிய பன்னிருகைப் பரம்பொருளை வாழ்த்தாத பேயர்களுடைய வாய் உப்பு இல்லாக் கூழும் கிடைக்காமல் விடாயால் வருந்தி இடர்ப்படும்.
"எந்தை, நினை வாழ்த்தாத பேயர்வாய், கூழுக்கும்
ஏக்கற்று இருக்கும் வெறுவாய்".
என்று வள்ளல்பெருமான் இனிது கூறுகின்றனர்.
வடிவேலிறைவனை வாழ்த்தாத வாய் என்ன வாய் என்று புலவர் திலகம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறுகின்றனர்.
கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்து
படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பரனை
முடியாத முதலோனை மூவர் பெருமானை
வடிவேலன் தனைப் பேசா வாய் என்ன வாயே
வள்ளிமணாளனைப் பேசா வாய் என்ன வாயே.
மனோபாவ மாயை ---
மாயை --- ஒன்றை ஒன்றாகக் காட்டும் திரிபு உணர்ச்சி. அது மனதில் தோன்றுவது. அது ஞானத்தினால் விலகும். துன்பம் இன்பமாகவும், இன்பம் துன்பமாகவும், நன்மை தீமையாகவும், தீமை நன்மையாகவும், அருள் மருளாகவும், மருள் அருளாகவும், நித்தம் அநித்தமாகவும், அநித்தம் நித்தமாகவும் தோன்றும். ஞானபண்டிதனாம் கந்தவேள் கருணையினால், திருவருள் ஞானம் பெற்றோர், இம் மாயையின் மயங்காது தியங்காது நிற்பர்.
விடாது கலங்கலாமோ---
மாயா பாசத்தில் பட்டு இடைவிடாது அதிலேயே மயங்கி அடியேன் கலங்கலாகுமோ அவ்வாறு கலங்கக் கூடாது. கலங்க வைக்காது காத்தருள் என்பது குறிப்பு.
கீத நிர்த்த வேதாள அடவீ நட நாத புத்திர ---
கலைகளுக்கு எல்லாம் உயர்ந்த கலை நடனக்கலை. அது இன்பத்தை விளைவிப்பது. ஆன்மகோடிகளுக்கு இன்பத்தை ஊட்டுவிக்கும் பொருட்டு,இறைவன் பூதகணங்களுடன் அநவரத தாண்டவம் புரிகின்றான். மயானத்தில் ஆடுகின்றான் என்பது உட்கிடை. எல்லாம் ஒடுங்கிய இடத்தில் இன்பம் உண்டாகும். இன்பத்தின் மிகுதி நட னம் என உணர்க.
பூத இனப் படைநின்று இசை பாடவும் ஆடுவர். --- திருஞானசம்பந்தர்.
விசாக---
விசாக நட்சத்திரத்தில் சோதி வடிவாகத் தோன்றியவர். ஆதலின், விசாகன் என்ற திருநாமம் தாங்கினார்.
பட்சியாகிய மயலில் வியாபிக்கின்றவர் என்றும் பொருள்படும்.
க்ருபாலு---
கருணை மிகுந்தவர். எப்போதும் கருணையே செய்கின்றவர். அவருடைய மூவிரு முகங்களிலும் கருணை அருவி பொழிகின்றது.
பன்னிரு கண்மலர்களில், கடல் போன்ற கருணை வழிந்துகொண்டே இருக்கின்றது.
மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி கருணை போற்றி. --- கந்தபுராணம்.
மறுஅறு கடல்என மருவு பனிருவிழி
வழிந்த அருளே பொழிந்தது ஒருபால். --- கொலு வகுப்பு.
வித்ரும ஆகாரா ---
வித்ருமம் --- பவளம். ஆகாரம் --- திருமேனி. பவளம் போன்ற வடிவத்தை உடையவர் முருகப் பெருமான். சிவபெருமானுடைய திருமேனியும் அவ்வாறே என அறிக.
"பனித்த சசையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்" --- அப்பரடிகள்.
பவளம் நல்ல சிவப்பு. சிவந்த வடிவு உடையவர். ஆதலின், செவ்வேள் என்பர்.
"அம்பவளத் திருமேனியும் ஆடிட ஆடுக செங்கீரை" என்பது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்.
வேதா விநோத---
திருக்கயிலை மலையில் சிறிது அகந்தையுடன் சென்ற அயனை, பிரணவப் பொருள் வினாவி, பொருள் தெரியாது விழித்த அவன் தலையில் குட்டி நெட்டி விளையாடி அருளினார்.
வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யே,குடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா... --- (காணொணாதது) திருப்புகழ்.
நாலுமுகன் ஆதிஅரி ஓம்எனஅ தாரம்உரை
யாதபிர மாவைவிழ மோதி,பொருள் ஓதுகஎன
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடும் ......இளையோனே..
--- (வாலவயதாகி) திருப்புகழ்.
….. ….. ….. படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்,
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறைஇருத்தும் கோமானே... --- கந்தர் கலிவெண்பா.
விநாயக ப்ரிய ---
நாயகன் - தலைவன். வி - அன்மை விகுதி. தனக்குமேல் தலைவன் இல்லாதவர் விநாயகர். தந்து இல்லாதவர் விதந்து. மலம் இல்லாதவன் விமலன் என வரும் சொற்களையும் காண்க.
முழுமுதற் கடவுளாய், காரிய முதல்வராய், விக்கினம் களைபவராய், வினை தீர்ப்பவராய், வித்தக மருப்பு உடையவராய் விளங்கும் விநாயகர், தனது தம்பியான அறுமுகப் பெருமானிடம் அளவற்ற அன்புள்ளவர். பலகாலும் தம்பியைத் தழுவி மகிழ்வர்.
ஆதரவாய் அடியவருக்கு அருள்சுரக்கும்
ஐங்கரத்தோன் அன்பு கூர்ந்த,
மாதவமே எனஅழைத்துப் புயத்துஅணைக்க
திருவுளத்து மகிழும் கோவே,
ஏதம்உறாது அடியேனைக் காத்துஅளிப்பது
உன்கடன்ஆம் இசைப்பது என்னே,
போதமலர்க் கற்பகமே, போரூர்வாழ்
ஆறுமுகப் புனித வேளே. --- சிதம்பர சாமிகள்.
மம விநாயகன்,நஞ்சு உமிழ் கஞ்சுகி
அணி கஜானன விம்பன், ஒர் அம்புலி
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் ......இளையோனே! --- (கமலமாதுடன்) திருப்புகழ்.
இப முகவனுக்கு உகந்த இளையவ! மருக் கடம்ப!
எனது தலையில் பதங்கள் ...... அருள்வோனே! --- (களபமுலையை) திருப்புகழ்.
கரிமுகன் எம்பி முருகன் என்,அண்டர்
களி மலர் சிந்த,...... அடியேன் முன்
கருணை பொழிந்து,முகமும் மலர்ந்து,
கடுகி நடம் கொடு ...... அருள்வாயே. --- (இருவினை அஞ்ச) திருப்புகழ்.
கருத்துரை
முருகா! தேவரீரைப் பாடித் துதி செய்து, பதமலர் பணிந்து மாயையில் விழாது உய்வுபெற அருள் செய்வீர்.
No comments:
Post a Comment