திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 040 -- கல்வி
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "கண்களை உடையவர் என்று உயர்த்திச் சொல்லப்படுவோர் கற்றவரே. கல்லாதவர் தமது முகத்தில் இரண்டு புண்களை உடையவர் ஆவார், (கண்ணில்லாதவராகவே கருதப்படுவார்)" என்கின்றார் நாயனார்.
எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் உள்ளவற்றைக் காணும் ஞானக்கண் (அறிவுக்கண்) உடைமையால், கற்றோரைக் கண் உடையவர் என்றும், அந்த ஞானக்கண் இல்லாமையால்,நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக் கண்ணையே உடையவர் என்பதால், கல்லாவதரை, முகத்தில் இரண்டு புண்களை உடையவர் என்றார்.
இதற்கு முந்திய திருக்குறளில் எண்ணும் எழுத்தும் கண்களைப் போன்றவை என்று நாயனார் அறிவுறுத்தியது போலவே, "எண் எழுத்து இகழேல்" என்று ஆத்திசூடியும், "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்று கொன்றைவேந்தனும் அறிவுறுத்தியது கருதுக.
பொருள் நூல்கள் என்று பரிமேலழகர் குறித்தவை, அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்கள்.
கருவி நூல்கள் என்றது, கணிதமும், இலக்கணமும் உணர்த்தும் நூல்கள்.
திருக்குறளைக் காண்போம்...
கண் உடையர் என்பவர் கற்றோர்,முகத்து இரண்டு
புண் உடையர் கல்லா தவர்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கண் உடையர் என்பவர் கற்றோர்--- கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே,
கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர்--- மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்
(தேயம் இடையிட்டவற்றையும்,காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண் உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணே உடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார். மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும் கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக் கூறப்பட்டன.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திருநாவுக்கரசு நாயனாரின் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் பாடி அருளிய ஒரு பாடல்...
விண்களிப்பக் காணா வியன்கயிலை வாழ்வை அப்பர்
கண்களிப்ப ஐயாற்றில் கண்டுஉவந்தார் --- எண்களிப்பக்
கண்உடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையார் கல்லா தவர்.
விண்ணுலகத்தாராலும் மகிழ்ந்து காணமுடியாத திருக்கயிலாயச் சிறப்பினைத் திருநாவுக்கரசு சுவாமிகள் திருவருளால் திருவையாற்றிலே ஊனக் கண்களும் பெற்ற பயனை அடையுமாறு தரிசித்துச் சிவானந்தப் பேற்றில் திளைத்து இருந்தார்.
கண் உடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுபவர் கற்றவரே. மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண் உடையர், கண் இலர் என்று திருவள்ளுவ நாயனார் கூறினார்.
தேசம் இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண் உடைமையின் கற்றாரைக் கண்உடையர் என்றும், அவ்வாறு அல்லாமல், நோய் முதலியவற்றால் துன்பம் செய்கின்ற ஊனக்கண்ணே உடைமையின் கல்லாதவரைப் புண்உடையர் என்றும் கூறினார் என உரைவிளக்கம் கூறினார் பரிமேலழகர்.
திருநாவுக்கரசர் திருக்கயிலைக் காட்சி கண்ட வரலாறு
திருநாவுக்கரசர், திருவண்ணாமலை, திருவோத்தூர், திருக் கச்சியேகம்பம்,திருமாற்பேறு, திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவோற்றியூர், திருப்பாசூர், திருவாலங்காடு முதலான திருப்பதிகளை வழிபட்டு, திருக்காளத்தி அடைந்து, ஆண்டவனை வணங்கித் தமிழ் மாலை சூட்டி,கண்ணப்பரைத் தொழுது இருந்தார்.
தென்கயிலையாகிய திருக்காளத்தி, அப்பருக்கு வடகயிலையை நினைவூட்டியது. வடகயிலையைக் காண உறுதி கொண்டு புறப்பட்டார். காடுகளையும், மலைகளையும் கடந்து இடையில் இருந்த திருத்தலங்களில் இறைவனை வழிபட்டு, திருக்கயிலையை நோக்கி நடந்தார். உண்பதையும் மறந்தார். பாதங்கள் தேய்ந்தன. கைகாளல் தாவிச் சென்றார். கைகளும் தேய்ந்தன. மார்பினால் ஊர்ந்தார். மார்பும் தேய்ந்து எலும்புகளும் தேய்ந்தன. மெல்ல நகர முயன்றார். அதற்கு மேல் செயலற்றவர் ஆனார்.
அப்பர் சுவாமிகள் வாயிலாக இன்னும் தமிழ்மறை வெளிவருதல் வேண்டும் என்னும் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அவருக்கு வடகயிலைக் காட்சியை அருளத் திருவுள்ளம் பற்றவில்லை. சிவபெருமான் ஒரு முனிவராய் வடிவெடுத்து, ஒரு பொய்கையை உண்டாக்கி, அப்பர் முன் தோன்றி, "உறுப்புக்கள் எல்லாம் தேய்ந்து சிந்த, இந்தக் கொடுமையான காட்டு வழியில் நீர் வந்ததன் நோக்கம் என்ன?"என்று கேட்டார். அந்த முனிவர் திருக்கோலத்தைக் கண்டதும், அப்பருக்குச் சிறிது பேசும் ஆற்றல் பிறந்தது. தனது கருத்தை அம் முனிவரிடம் தெரிவித்தார். முனிவர், "கயிலைக் காட்சியா?அது தேவர்களுக்கும் கிட்டுதல் அரிது. மனிதர்களுக்கு எவ்வாறு கிட்டுதல் கூடும். நீர் திரும்புவதே நலம்" என்றார். அதற்கு அப்பர் பெருமான், "ஆளும் நாதன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என்றார். உடனே,சிவபரம்பொருள் தமது திருவுருவைக் கரந்து, "நாவுக்கரசனே! எழுந்திரு" என்று அருளினார். திருநாவுக்கரசர் தீங்கு நீங்கி, ஒளி திகழ் மேனியோடு எழுந்தார். எழுந்து,
"அண்ணலே! எனை ஆண்டுகொண்டு அருளிய அமுதே!
விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே!
கண்ணினால் திருக் கயிலையில் இருந்தநின் கோலம்
நண்ணி, நான்தொழ நயந்துஅருள் புரி" எனப் பணிந்தார்.
அடியார்கள் வேண்டுவதை வேண்டியவாறே அருளும் சிவபெருமான், "நாவுக்கரசனே! இப் பொய்கையில் மூழ்கு. திருவையாற்றில் நமது கயிலைக் கோலத்தைக் காண்பாய்" என்று அருளினார். திருவைந்தெழுத்து ஓதி, பொய்கையில் முழுகினார். திருவையாற்றில் ஒரு குளத்திலே தோன்றினார். அத் திருத்தலத்தில் சராசரங்கள் எல்லாம் சத்தியும் சிவமுமாய்க் காட்சி தரக் கண்டார். உள்ளம் குளிரக் கண்டு உவந்து, திருக்கோயிலுக்குச் சென்றார். திருக்கோயில் திருக்கயிலை மலையாக விளங்கியது. அத் திருக்காட்சி கண்டு மகிழ்ந்து பரவசமாகி, அப்பர் பெருமான் திருப்பதிகத்தை "கண்டேன் அவர் திருப்பாதம்,கண்டு அறியாதன கண்டேன்" என்று அருளிச் செய்தார். திருக்கோயில் பழையபடி ஆனது.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.
கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே. --- திருமந்திரம்.
இதன்பொழிப்புரை ---
கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ் வறிவால் கருதியுணருகின்ற காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லுகின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.
குறிப்புரை : "பாம்பறியும் பாம்பின்கால்" (பழமொழி நானூறு) என்றபடி, கற்றாரது நிலைமையைக் கற்றவரே உணர்வரல்லது மற்றவர் உணர மாட்டார் ஆதலின், `கற்றறிவாளர் கருதிய காலத்து ... ... கண்ணுண்டு` என்றார். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்` (மூதுரை) என ஔவையாரும் கூறினார். `ஓர் கண்` என்றது, பலர்க்கும் முகத்தின்கண் உள்ள ஊனக் கண்ணல்லாத வேறொருவகைக் கண் என்றவாறு. அது ஞானக்கண். ஞானக்கண்ணே சிறப்புடைத்தாதலை,
கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர். --- திருக்குறள்.
எனத் திருவள்ளுவரும் குறித்தருளினார். .
இதனால், கல்வியின் சிறப்பும், அது, தன்னை உடையார்க்கே அன்றிப் பிறர்க்கும் பயன் தருதலும் கூறப்பட்டன.
கண் இரண்டே யாவர்க்கும், கற்றோர்க்கு மூன்றுவிழி,
எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு, --- நண்ணும்
அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழியென்று அறி. --- நீதிவெண்பா.
இதன் பொருள் ---
மக்கள் எல்லார்க்கும் இரு கண்களே உள்ளன. நன்கு கற்றவர்களுக்கு ஊனக் கண்கள் இரண்டோடு அறிவுக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுப்பவர்களுக்கு அவர்களுடைய நகக் கண்கள் ஐந்தோடு சேர்த்து, கண்கள் ஏழாகும். பொருந்துகின்ற நல் தவத்தால் அருள்ஞானம் பெற்றவர்க்கு அளவில்லாத கண்கள் உண்டு.
(அநந்தம் தவம் --- அழியாத தவம். அநந்தம் விழி --- அளவில்லாத கண்கள். மூன்று விழி --- ஊனக்கண் இரண்டும் அறிவுக்கண் ஒன்றும். விழி ஏழாவன --– ஊனக்கண் இரண்டும், கொடுக்கும் கையில் உள்ள நகக்கண் ஐந்தும்.)
No comments:
Post a Comment